ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

செக்டார் அனாலிசிஸ்!

சர்க்கரைத் துறை... இனியாவது இனிக்குமா ?

##~##

எல்லோருக்கும் இனிக்கும் சர்க்கரை, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு மட்டும் கசக்கவே செய்கிறது. இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாகவே சர்க்கரைப் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்குப் பெரும்பாலும் இழப்புதான். சர்க்கரைப் பங்குகளில் லாபம் பார்த்தவர்கள் குறைவுதான்.

ஆனால், இப்படிப்பட்ட துறையில்கூட முதலீட்டிற்கான நல்ல வாய்ப்புகள் சில இருக்கவே செய்கிறது.

சில சமயம் நெடுங்காலம் கவனிக்கப்படாமல் பாதிப்படைந்த துறைகள் மீண்டும் மேலெழும்போது வேகமாக அதிகரிக்கும். சமீபத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை இதற்கு நல்ல உதாரணம். கிணற்றில் போட்ட கல் போல கிடந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பங்குகள் இரண்டே நாட்களில்

20 சதவிகிதம் ஆதாயம் அள்ளித்தரவில்லையா?

அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டதே இதற்குக் காரணம். அப்படிப்பட்ட அதீத லாபத்தை அள்ளித்தரும் வாய்ப்பு 2013-14-ல் சர்க்கரைத் துறைக்கு இருக்கிறது.  

செக்டார் அனாலிசிஸ்!

சர்க்கரை பயன்பாட்டில் உலகின் நம்பர் ஒன் இந்தியா! உற்பத்தியிலோ உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறது நம் நாடு. உலகின் மொத்த உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதத்துக்கு மேல் பிரேசிலிலும், 15 சதவிகிதத்துக்கு மேல் இந்தியாவிலும், 6-8 சதவிகிதம் சீனா மற்றும் தாய்லாந்திலும் உற்பத்தியாகிறது. அதாவது, உலகின் மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 50%  இந்த நான்கு நாடுகளில் இருந்தே வருகிறது.

செக்டார் அனாலிசிஸ்!

பயன்பாட்டைப் பொறுத்தவரையில், சுமார் 15 சதவிகிதத்துக்கு மேல் இந்தியாவிலும், 10 சதவிகிதம் வரை சீனாவிலும், 6-7 சதவிகிதம் பிரேசில் மற்றும் அமெரிக்காவிலும் இருக்கிறது.  இப்போது தெரிகிறதா சர்க்கரை விலையில் ஏன் அரசு இவ்வளவு தலையீடு செய்கிறது என்று?

உலகின் நம்பர் ஒன் கன்ஸ்யூமராக இந்தியா இருந்தாலும், தனிநபர் பயன்பாட்டில் நாம் குறைவுதான். பிரேசில், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தனிநபர் ஒருவர் ஆண்டுக்கு சுமார் 50 கிலோவுக்கு மேல் சர்க்கரை உட்கொள்கிறார்.  தாய்லாந்து மற்றும் அமெரிக்காவில் சுமார் 30 கிலோ எனவும், இந்தியாவில் சுமார் 20 கிலோ எனவும், அண்டை நாடான சீனாவின் தனிநபர் ஒருவரின் பயன்பாடு வெறும் பத்தே கிலோதான் எனவும் ஓர் ஆய்வு சொல்கிறது.  

சமீபகாலமாக இந்தியாவின் தனிநபர் வருமானம் தொடர்ந்து உயர்வதால், சர்க்கரையின் பயன்பாடும் நபர் ஒன்றுக்கு தலா 1.50 சதவிகிதம் அதிகரித்து வருவதாகவும் மொத்தத்தில் நம் நாட்டின் பயன்பாடு ஆண்டுக்கு 3 சதவிகிதம் வரை அதிகரித்து வருவதாகவும் அதே ஆய்வு சொல்கிறது.

சர்க்கரை உற்பத்தியும் விலையும் ஸ்திரமில்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இது ஒரு 'சைக்ளிகல்’ இண்டஸ்ட்ரியாக இருப்பதே முக்கிய காரணம். இது எப்படி  நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள அடுத்தப் பக்கத்தில் கொடுத்துள்ள படத்தைப் பாருங்கள்.  

பொதுத் துறையில் அறுபதுக்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகளும், கூட்டுறவுத் துறையில் 325 ஆலைகளும், தனியார் துறையில் 275-க்கும் மேற்பட்ட ஆலைகளும் இயங்கி வருகின்றன. பெரும்பாலான ஆலைகளின்  உற்பத்தித்திறனும் செயல்திறனும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இயற்கை காரணமாக பருவநிலை, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப கரும்பு விளைச்சல் பாதிக்கப்படும். இது ஒரு சீஸனல் இண்டஸ்ட்ரி என்பது பாதகமான அம்சம்.

அரசு தலையீடு!

தவிர, அரசின் கொள்கை முடிவுகள் இத்துறையை நசிந்துபோகும் அளவுக்குப் பாதித்து வருகிறது. உதாரணமாக, இரண்டு ஆலைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 15 கிலோ மீட்டர் இடைவெளியாவது தேவை என்பது பல மாநிலங்களில் விதி. சில மாநிலங்கள் 25 கிலோ மீட்டர் இடைவெளியாக இவ்விதியை அதிகரிக்கிறது!

குறிப்பிட்ட ஏரியாவில் விளையும் விளைச்சல் முழுவதும் அருகிலேயே உள்ள குறிப்பிட்ட ஆலைக்குத்தான் விற்கப்பட வேண்டும் என்பதும் விநோதமான விதி!

செக்டார் அனாலிசிஸ்!

திடீர் திடீரெனெ ஏற்றுமதி / இறக்குமதி தடை கள்; ஓப்பன் ஜெனரல் லைசென்ஸ்; இறக்குமதி / ஏற்றுமதி தீர்வைகளில் முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் மாறுதல்: மத்திய அரசு ஒரு நியாய விலையையும், அதைவிட நியாய விலையை மாநில அரசுகளும் நிர்ணயம் செய்யும் வித்தியாசமான தொழில் இது!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2009-10-ல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.165 என இருந்த எஸ்.ஏ.பி. (State Advised Price - SAP) விலையை 2010-11-ல் ரூ.205-ஆக அதிகரித்தது (+ 24%). மீண்டும் அடுத்த ஆண்டே ரூ.40 (மேலும் +20%) அதிகரித்து ரூ.245-ஆக அறிவித்தது. இரண்டே ஆண்டுகளில் குவிண்டாலுக்கு ரூ.80, அதாவது சுமார் 50 சதவிகிதம் விலை ஏற்றம்!

செக்டார் அனாலிசிஸ்!

மத்திய அரசின் ஃபேர் அண்ட் ரெமுனரேட்டிவ் ப்ரைஸைவிட (Fair and Remunerative Price)   இது அதிகம்! இதனால் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படலாம் சர்க்கரை ஆலைகளுக்கு!

மூலப்பொருளின் விலை செயற்கையாக அதிகரிக்கும் அதேநேரம், அவர்களின் விற்பனை விலையோ செயற்கையாகக் குறைக்கப்படுகிறது அல்லது ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை.  இதற்கு ஓர் உதாரணம், லெவி கோட்டா. மொத்த உற்பத்தியில் 10 சதவிகிதத்தைப் பொதுவிநியோகத்துக்கு என மத்திய அரசு வசம், சந்தை விலையைவிடக் கணிசமாகக் குறைந்த விலைக்கு விற்கவேண்டும் என்பது விதி. இதனாலும் சர்க்கரை தயாரிப்பு நிறுவனங்களுக்கு பலத்த நஷ்டம்.

சர்வதேச சந்தைகளில் விலை ஏறும்போது ஏற்றுமதி செய்து லாபம் பார்க்கலாம் என்றால், அதற்கும் திடீர் திடீர் என சொல்லாமல்கொள்ளாமல் தடை விதித்துவிடுவார்கள்! அல்லது தீர்வையை அதிகரித்துவிடுவார்கள்; பின்னர் அங்கு விலை படுபாதாளத்திற்கு விழுந்துவிட்டதா என உறுதிசெய்துகொண்டு பின்னர் ஏற்றுமதியை அனுமதிப்பார்கள்! இது எப்படி இருக்கு?

விலை இறங்கியபின் காலதாமதமாக ஏற்றுமதியை அனுமதித்து என்ன பிரயோஜனம்? 2011-ல் சர்வதேசச் சந்தையில் முப்பது ஆண்டுகால உச்சத்தைத் தொட்டது சர்க்கரை விலை. கையிருப்போ இருபது ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக இருந்தும் உற்பத்தி குறைந்ததும் காரணம். அதனால் நம் உற்பத்தியாளர்கள் பெரிதாக பலன் ஏதும் பெற முடியாமல் போய்விட்டது.

ஏற்றுமதியை விடுங்கள். உள்ளூர் சந்தையில் நல்ல விலை ஏற்றம், லாபம் எனத் தெரிந்தால் போதும்; உடனடியாக இறக்குமதித் தீர்வையை அதிரடியாகக் குறைத்து சலுகைகள் வழங்கி இறக்குமதியை ஊக்குவித்து உள்ளூர் உற்பத்தியாளர்கள் சோற்றில் மண்ணைப் போடுவார்கள்!

இவையெல்லாம் ஒரு காலகட்டத்தில் நல்ல எண்ணத்தோடு ஏழை விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையிலும் நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்ற எண்ணத்திலும் ஏற்படுத்தப்பட்டவை என்றாலும், மாறிவரும் காலத்திற்கேற்ப இருசாராரையும் பெரிய அளவில் பாதிக்காதவண்ணம் கொள்கை முடிவுகள் எடுப்பது நீண்டகால அடிப்படையில் அனவருக்கும் நல்லது.  

ரெங்கராஜன் கமிட்டி அறிக்கை!

செக்டார் அனாலிசிஸ்!

இவற்றுக்கெல்லாம் விடிவு காண அமைக்கப் பட்ட ரெங்கராஜன் கமிட்டி ரிப்போர்ட் என்ன சொல்கிறது?

உடனடியாக டீரெகுலேஷன் / டீகன்ட்ரோல் முக்கியம் எனச் சொல்கிறது இந்த அறிக்கை. லெவி, ரீலிஸ் கட்டுப்பாடுகள் அறவே நீக்கப்பட வேண்டும்; செயற்கையான தடைகள் கூடாது; மொலாசஸ், எத்தனால், மின்சாரம் விற்பனையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்; கமாண்ட் ஏரியா ரிசர்வேஷன் நீக்கப்பட வேண்டும்; இதையெல்லாம் எவ்வளவு தூரம் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்தே இத்துறையின் வளர்ச்சி இருக்கிறது.

எத்தனால் ப்ளெண்டிங்: பல ஆண்டு காலமாகப் பேசப்பட்டு வரும் விஷயம் இது; பெட்ரோலோடு குறிப்பிட்ட அளவு எத்தனாலைக் கலக்கவேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. முதல் கட்டமாக 5 சதவிகிதமும் பின்பு 10 சதவிகிதமும் எத்தனால் கலக்கப்பட்டு விற்கப்படவேண்டும் எனச் சொன்னது அரசு. ஆனால், இன்றும் அது முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.

பெட்ரோலின் விலை உயர்வையும் சுற்றுச்சூழல் மாசுபடுதலையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எடுக்கப்பட்ட இம்முடிவு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சர்க்கரை ஆலைகளுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால், இங்கும் அரசு குறிக்கீடு இருக்கக்கூடாது. எத்தனாலை எந்த விலைக்கு விற்கலாம் என சந்தைதான் முடிவு செய்யவேண்டும்; அப்போதுதான் ஆலைகளுக்குப் பலன்.

(அலசுவோம்)