Published:Updated:

9 கேரட் தங்கம்: தில்லுடன் வாங்கும் திருச்சி மக்கள் !

பி.விவேக் ஆனந்த், படங்கள்: தே.தீட்ஷித்.

9 கேரட் தங்கம்: தில்லுடன் வாங்கும் திருச்சி மக்கள் !

பி.விவேக் ஆனந்த், படங்கள்: தே.தீட்ஷித்.

Published:Updated:
##~##

தங்கம் விற்கும் விலையில் இனி அதை வாங்க முடியுமா என்கிற கவலையில் பலரும் பரிதவிக்க, சிலர் 9 கேரட் தங்கத்தை வாங்கி திருப்தி அடைய ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழகத்தில் பல நகரங்களில் இந்த 9 கேரட் தங்கம் அரசல்புரசலாக விற்பனையானாலும், திருச்சி நகர மக்கள் தில்லாக வாங்கி வருகிறார்கள். அது என்ன 9 கேரட் தங்கம், மக்கள் ஏன் இதை வாங்குகிறார்கள் என சிறு வியாபாரிகளிடம் கேட்டோம்.

''தூய தங்கம் என்பது பொதுவாக நகைகள் செய்ய பயன்படாது. ஏனெனில், அதில் உறுதித்தன்மை இருக்காது. மென்மைத்தன்மை அதிகமாக இருக்கும். அதனால்தான் தங்கத்துடன், தாமிரம், கேட்மியம் போன்றவற்றை சேர்த்து நகைகளாகச் செய்வோம். 22 கேரட் என்பது 91.6 சதவிகிதம் தங்கத்தைக் கொண்டிருப்பதாகும். ஹால் மார்க் முத்திரை இடப்பட்ட இந்தத் தங்கம்தான் பொதுவாக மக்களால் விரும்பப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

9 கேரட் தங்கம்: தில்லுடன் வாங்கும் திருச்சி மக்கள் !

ஆனால், சிலர் எங்களுக்கு நகையின் எடை அதிகமாக இருக்கவேண்டும். அதே சமயம், விலை குறைவாக இருக்கவேண்டும் என்ற கோரிக்கை யுடன் கேட்கும்போது, அப்படிப்பட்டவர்களின் வசதிக்கு ஏற்றாற்போல 9, 14 கேரட்களில் நகை செய்து தருவோம். 9 கேரட் தங்கம் என்பது பொதுவாக நல்ல கெட்டித்தன்மை கொண்டிருக்கும் என்பதால் நீடித்து உழைக்கும். இந்த 9 கேரட் தங்கம் என்பது 24 கேரட் தங்கத்தில் 37.5 சதவிகிதமாகும். இந்த 9 கேரட்  நகைகளை நாங்கள் வெளிப்படையாக கடை களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்வதில்லை. யாராவது வற்புறுத்திக் கேட்டால் மட்டுமே செய்து தருவோம்'' என்றனர்.

9 கேரட் தங்கம்: தில்லுடன் வாங்கும் திருச்சி மக்கள் !

9 கேரட்டில் செய்யப்படும் நகைகளை வாங்கும் சரஸ்வதி என்பவரிடம் பேசினோம். ''எனக்கு கவரிங் நகைகளை அணிய விருப்பமில்லை. அதற்கு மாறாக இவற்றை தேர்வு செய்கிறேன். இந்த நகைகளின் பளபளப்பு குறையும்போதெல்லாம் தங்கமுலாம் பூசிக்கொள்வேன். இதனால் எனக்கு குறைந்த செலவில் தங்க நகை போட்டுக்கொண்ட திருப்தி கிடைக்கிறது. மற்றபடி இதன் தரம் பற்றியெல்லாம் நான் கவலைப்பட்டு யாரிடமும் விசாரித்தது கிடையாது'' என்றார்.

9 கேரட் தங்கம்: தில்லுடன் வாங்கும் திருச்சி மக்கள் !

இந்த 9 கேரட் தங்க நகையை வாங்குவது சரியானதுதானா என திருச்சி நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் மோதி. தண்டாயுதபாணியிடம் கேட்டோம். ''தங்கம் வாங்குபவர்களின் முக்கிய நோக்கம் அதை அணிகலனாக அணிவது மட்டும் கிடையாது, பிற்காலத்தில் அடமானம் வைக்க, பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்க எனப் பல வழிகளில் பயன்படும் என்று நினைத்துதான் வாங்குகிறார்கள். ஆனால், 9 கேரட் தங்கத்தை மறுவிற்பனை செய்யும்போது 80 சதவிகிதம் வரை பணத்தை இழக்க நேரிடும்.

இந்த வகை நகைகள் ஒன்றும் புதிதல்ல. 300 மில்லி கிராமுக்கு குறைவான அளவில் சின்ன சின்ன நகைகள், உதாரணமாக தங்கக் கடிகாரங்களில் பயன் படுத்தப்படும் முட்கள், மூக்குத்தி மற்றும் காதணிகள் போன்றவை செய்யபடுகின்றன. இவை இந்தியா முழுவதும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், 9 கேரட்டில் நகை செய்யும்போது ஜிங்க், சில்வர், தாமிரம் போன்றவற்றை அதிகளவு சேர்க்க நேரிடும். இதனால் ஒரு சிலருக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்புண்டு. இந்த வகை நகைகள் குளிர்பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துவரும். ஏனெனில் அங்கு நகையின் பொலிவுத்தன்மை மாறாது. ஆனால், நம் நாட்டில் வெயில் அதிகம் என்பதால் 9 கேரட் நகைகள் சீக்கிரத்திலேயே பளபளப்பு குறைந்து, கறுத்துவிடும். இதற்கு கவரிங் நகையே வாங்கிவிடலாம். ஒரு கிராம் 9 கேரட் நகை 1,600 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஆனால், அதை திரும்ப விற்றால் 200 - 400 ரூபாய்தான் கிடைக்கும்'' என்றார் அவர்.

24 கேரட் விலையோடு ஒப்பிடும்போது அதிக விலை, தரக்குறைவு, பொலிவில்லை, அடமானம் வைக்க முடியாது, திரும்ப விற்கப்போனால் அடிமாட்டு விலை என ஆயிரம் பிரச்னைகள் இருக்கும் 9 கேரட் தங்கத்தை விஷயம் தெரிந்த யாரும் இனியாவது வாங்காமல் இருப்பதே நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism