Published:Updated:

இ.எல்.எஸ்.எஸ்.: வரிச் சலுகை நல்ல லாபம்!

வா.கார்த்திகேயன்.

இ.எல்.எஸ்.எஸ்.: வரிச் சலுகை நல்ல லாபம்!

வா.கார்த்திகேயன்.

Published:Updated:
##~##

செய்யும் முதலீட்டுக்கு வரிச் சலுகை; நல்ல லாபம்; அந்த லாபத்துக்கும் வரிக் கட்டவேண்டிய அவசியமில்லை என மூன்று அற்புதமான வசதிகள் இ.எல்.எஸ்.எஸ். என சுருக்கமாக அழைக்கப்படும் வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இருக்கிறது. இதில் 80சி பிரிவின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் வரை மொத்தமாகவும் எஸ்.ஐ.பி. முறையிலும் ஒருவர் எளிதாக முதலீடு செய்யமுடியும்.  

இ.எல்.எல்.எஸ். ஃபண்ட் திட்டங்களில் பல உண்டு. இதில் அதிக வருமானம் தரும் இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டை எப்படி தேர்ந்தெடுப்பது, நீண்டகாலத்தில் சிறப்பாகச் செயல்படும் ஃபண்டுகள் எவை என்பது குறித்து வேல்யூ இன்வெஸ்ட் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குநர் வெங்கடேஷிடம் கேட்டோம். விளக்கமான பதில் தந்தார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இ.எல்.எஸ்.எஸ். திட்டத்தில் செய்யப்பட்ட முதலீட்டை மூன்றாண்டுகளுக்குப் பிறகு பலரும் திரும்ப எடுத்துவிடுகிறார்கள். ஆனால், இதில் செய்த முதலீட்டை குறைந்தபட்சம் 7 முதல் 10 வருடங்களுக்காவது வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் அந்த முதலீடு நல்ல லாபம் தரும். இதை நான் சொல்லக் காரணம், கடந்த ஐந்து வருடங்களில் இ.எல்.எஸ்.எஸ். திட்டங்கள் தந்த வருமானம் 6 சதவிகிதம் என்ற அளவில்தான் இருக்கிறது. இந்த 6 சதவிகிதம் என்பது வரிச் சேமிப்பு போக கிடைத்திருக்கிறது என்றாலும்கூட, நீண்டகாலத்தில் முதலீட்டைத் தொடரும்போது இன்னும் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இ.எல்.எஸ்.எஸ்.: வரிச் சலுகை  நல்ல லாபம்!

எப்படித் தேர்ந்தெடுப்பது?

முதல் விஷயம், பெரிய ஃபண்ட் நிறுவனமாக இருக்கவேண்டும். அந்த இ.எல்.எஸ்.எஸ். திட்டம் குறைந்தபட்சம் 5 வருடங்களுக்கு மேல் செயல்பட்டிருக்கவேண்டும். அந்த ஃபண்ட் தோராயமாக 1,000 கோடி ரூபாய் அளவுக்காவது சொத்து மதிப்பினை கையாளவேண்டும். எல்லாவற்றுக்கும் மேல், நல்ல வருமானம் தந்திருக்கவேண்டும். இதை வைத்துப் பார்த்தால், நமக்கு 4 ஃபண்டுகள்  கிடைக்கிறது.

பிரித்து முதலிடுங்கள்!

எவ்வளவு தொகை முதலீடு செய்வதாக இருந்தாலும் சரி, இரண்டு, மூன்று இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வது நல்லது. காரணம், இந்த முதலீட்டை குறைந்தது மூன்று வருடங்கள் வரை கண்டிப்பாக வைத்திருக்கவேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட ஃபண்டில் என்ன  மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

இ.எல்.எஸ்.எஸ்.: வரிச் சலுகை  நல்ல லாபம்!

ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்ய  இன்னொரு காரணமும் உண்டு. இந்த ஃபண்டுகள் ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகள் என்றாலும், சில ஃபண்டுகளில் மிட் கேப் பங்குகளில் அதிகமாக முதலீடும், சில ஃபண்டுகளில் லார்ஜ் கேப் பங்குகளில் அதிக முதலீடும் இருக்கும். பல ஃபண்டுகளாக நாம் பிரித்து முதலீடு செய்யும்போது நம் ரிஸ்க் குறைய வாய்ப்பிருக்கிறது'' என்றார்.

இ.எல்.எஸ்.எஸ்.: வரிச் சலுகை  நல்ல லாபம்!

'புதிய நேரடி வரி விதிப்புத் திட்டம் வந்தபிறகு இத்திட்டத்துக்கு வரிச் சலுகை கிடைக்குமா?’ என அவரிடம் கேட்டோம்.

''நேரடி வரி விதிப்புத் திட்டம் பற்றிய அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பில்லை.  அநேகமாக அடுத்த வருட பட்ஜெட்டில் வரலாம். அப்போதுகூட,  இ.எல்.எஸ்.எஸ். ஃபண்ட் முதலீட்டுக்கு விலக்குத் தரப்படும் என்றே நினைக்கிறேன். இதற்கு இரண்டு காரணங்கள். தற்போது மக்கள் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில்தான் அதிகம் முதலீடு செய்கிறார்கள். இந்த இரண்டுமே வருமானம் ஈட்டாதச் சொத்துகள். நிதிச் சந்தையில் மக்கள் அதிக அளவில் முதலீடு செய்வதை மத்திய அரசு ஊக்குவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. தவிர, சிறு முதலீட்டாளர்கள் எளியமுறையில் முதலீடு செய்யமுடியும் என்பதால் இதற்கு வரிச் சலுகை தொடர்ந்து கிடைக்கும்'' என்றார்.

இ.எல்.எஸ்.எஸ். திட்டங்களைப் பயன்படுத்தி வரிச் சலுகையோடு லாபம் பார்ப்போமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism