நடப்பு
Published:Updated:

செக்டார் அனாலிசிஸ் - சிமென்ட் துறை...ஸ்ட்ராங்கான லாபம் !

செக்டார் அனாலிசிஸ் - சிமென்ட் துறை...ஸ்ட்ராங்கான லாபம் !

##~##

உலக சிமென்ட் உற்பத்தியில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்! முதல் இடம் யாருக்கு? சீனாவுக்குத்தான். உலகின் அனைத்து நாடுகளின் மொத்த உற்பத்தியையும்விட அதிகமாக உற்பத்தி செய்கிறது சீனா. அதேமாதிரி பயன்படுத்தவும் செய்கிறது. சர்வதேச அளவில் மொத்த உற்பத்தியில் சுமார் 50 சதவிகிதம் சீனாவிலும் அதற்கு அடுத்த இடமாக சுமார் 7 சதவிகிதம் இந்தியாவிலும் உற்பத்தியாகிறது. ஆண்டுக்கு 320 மில்லியன் டன் உற்பத்தித் திறன், 148 பெரிய ஆலைகள், 365 மினி ஆலைகள் என இந்திய சிமென்ட் துறை கொடிகட்டிப் பறக்கிறது.

பொருளாதாரத்தின் அடிப்படை!

பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், தனிநபர் மற்றும் குடும்பங்கள் குடியிருக்க வீடு, பயணம் செய்ய சாலைகள், பாலங்கள், தண்ணீரைத் தேக்கி வைக்க அணைகள், பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் என கட்டுமானப்பணிகளில் ஆதாரத் தேவை சிமென்ட்.

தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் சிமென்டை சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல ஆகும் போக்குவரத்துச் செலவு அதிகம். எனவே, உற்பத்தியாகும் ஆலைகளுக்கு மிக அருகாமையிலே இருக்கும் சந்தையிலேயே விற்பது லாபகரமானதாக அமையும். இதனால், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என இன்றும் பிராந்திய அளவிலேயே பெரும்பாலும் பிரிக்கப்பட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

செக்டார் அனாலிசிஸ் - சிமென்ட் துறை...ஸ்ட்ராங்கான லாபம் !

தேவையும் உற்பத்தியும் !

நாட்டின் மொத்த சிமென்ட் உற்பத்தியில் தென்னிந்தியாவின் பங்களிப்பு கணிசமானது. அதிலும், ஆந்திரா முதல் இடத்திலும் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. அடுத்ததாக கர்நாடகம்; கேரளாவில் சொல்லிக்கொள்ளும்படியான உற்பத்தி இல்லை. தனது தேவைகளுக்கு அண்டை மாநிலங்களை நம்பியே இருக்கிறது. வட மாநிலங்களை எடுத்துக்கொண்டால், இமாச்சலப் பிரதேசத்திலும், கிழக்கில் சட்டீஸ்கர் மற்றும் ஒடிஷாவிலும், மேற்கில் மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத்திலும், மத்திய இந்தியாவில் உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேசத்திலும் உற்பத்தி அதிகம்.  

தற்போதைய மொத்த தேவை எனப் பார்த்தால், ஏறத்தாழ உற்பத்தியை ஒட்டியே இருக்கிறது. பருவகால மாறுதல்கள், உள்கட்டுமானப் பணிகளில் தேக்கநிலை என அவ்வப்போது ஏற்படும் சூழலுக்கு ஏற்ப இது மாறுபட்டாலும், டிமாண்ட் மற்றும் சப்ளை எனப் பார்த்தால் கிட்டத்தட்ட ஒன்றுக்கொன்று அருகருகே இருப்பதால் பெரிய வித்தியாசம் இல்லை. சராசரியாக 5-10% வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி இருக்கிறது. வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து இதே வளர்ச்சி இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, ஜூன் மாதத்திற்குப் பின்னர் பருவநிலை மாற்றம் காரணமாக விற்பனையில் ஒரு தேக்க நிலை ஏற்படும்.  

துறை எப்படி?

செக்டார் அனாலிசிஸ் - சிமென்ட் துறை...ஸ்ட்ராங்கான லாபம் !

நம் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி யான ஜி.டி.பி. குறைவு என்பது இத்துறையைப் பொறுத்தவரையில் இப்போதைக்கு நல்ல செய்தியல்ல. உள்கட்டுமானப் பணிகளுக்கான செலவு குறைந்தது, புதிதாகச் சேர்ந்த கூடுதல் உற்பத்தித் திறன் போன்ற செய்திகளும் நல்லதல்ல. இவையெல்லாம் பத்தாது என்பதுபோல சென்ற ஆண்டு காம்பெட்டீஷன் கமிஷன் மூலமாக ஓர் இடி தாக்கியது.

சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்குள் பேசிவைத்துக்கொண்டு மறைமுகமாக சிமென்டின் சந்தை விலையைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள் என்பது குற்றச்சாட்டு. இல்லை என சிமென்ட் உற்பத்தியாளர்கள் மறுத்தாலும் காம்பெட்டீஷன் கமிஷன் ஒப்புக்கொள்ளாமல் கோடிக்கணக்கில் அபராதம் விதித்தது. இது ஒருவகையில் இந்நிறுவனங்களின் கைகளைக் கட்டிப்போட்டது. அதீத லாபம் ஈட்டும் வாய்ப்பையும், கனவையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. இது எத்தனை நாளைக்கு என்பது போகப்போகத் தெரியும்.  

சமீப காலமாகப் புதிய வாய்ப்புகளும் உருவாகி வருகிறது இத்துறையில். கட்டட வேலை நடக்கும் இடங்களில், இடப்பற்றாக்குறை காரணமாகவும் ரெடிமிக்ஸ் காங்க்ரீட் என வேல்யூ ஆடட் புராடக்ட்ஸ் அதிக விற்பனை ஆகிறது கடந்த பத்து ஆண்டுகளில். இதன் மூலம் லாபம் அதிகம் கிடைக்கிறது. எனவே, பல நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன.  

பிரச்னைப் பட்டியல் !

உற்பத்திச் செலவில் பெரும்பகுதி, அதாவது 30 சதவிகிதம், உற்பத்திக்குத் தேவையான மின்சாரம் மற்றும் நிலக்கரிக்கு என செலவாகிறது. எனவே, சொந்தமாக மின்னுற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உற்பத்திச் செலவுகள் குறைவாக இருக்கும் என்பதோடு, மின்சார பற்றாக்குறை காரணமாக ஏற்படும் மின்தடைகளால் உற்பத்தி பாதிக்கப்படாமலும் இருக்கும்.

அதற்கு அடுத்ததாக உற்பத்திச் செலவின் பெரும்பகுதி சுண்ணாம்புக் கற்கள் உள்ளிட்ட மூலப் பொருட்களுக்கு ஆகும் என்பதால், மூலப் பொருள் கிடைக்கும் இடத்துக்கு அருகில் இருக்கும் ஆலைகளுக்கு அதற்கான சரக்குப் போக்குவரத்து செலவு மிச்சம் அல்லது குறைவு.

முன்பு இருந்த வெட் ப்ராசஸ் மாற்றப்பட்டு ட்ரை ப்ராசஸுக்கு எல்லா சிமென்ட் ஆலைகளும் மாறியபின் 'பிராண்ட் லாயல்ட்டி’ என்பது குறைந்துவிட்டது. எது விலை குறைவோ, அதை வாங்குவது என்பதே மொத்தமாக வாங்கும் பல்க் கன்ஸ்யூமர்களின் வழக்கமாகிவிட்டது.

புதிய ஆலைகள் வருவதற்கு தடைக்கற்கள் எனப் பார்த்தால், என்ட்ரி பேரியர் எனச் சொல்லக்கூடிய மூலப் பொருட்களுக்கான உரிமம், மின்சாரம், தேவைப்படும் அதிக மூலதனம் ஆகியவற்றைச் சொல்லலாம்.

சிமென்ட் பங்குகள் !

சிமென்ட் பங்குகள் வாங்கும்முன் கவனிக்க வேண்டியவை:

மூலப் பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு அருகேயே தொழிற்சாலையும் அமைந்துள்ளதா?

விற்பனை செய்யப்போகும் சந்தைக்கு அருகேயே ஆலைகள் அமைந்துள்ளனவா?

அதே இடத்திற்கு அருகே பலமான வேறு போட்டி நிறுவனங்களின் ஆலைகள் உள்ளனவா?

அரசையே மட்டும் நம்பியிராமல் தனது தேவைக்கான மின்சாரத்தை, சொந்தமாக உற்பத்தி செய்யும் திறன் எவ்வளவு?

ரெடி மிக்ஸ் காங்க்ரீட் போன்ற வேல்யூ ஆடட் புராடக்ட்ஸ் அதிகமா?

வரிச் சலுகைகள் ஏதும் உள்ளதா, அவை எப்போது முடியும் ?

டிசம்பர் 2012 காலாண்டில் விற்பனை குறைவு, விலையும் குறைவு. ஆனால், நடப்புக் காலாண்டில் சிமென்ட் விலை அதிகரித்து மூட்டை ஒன்று சராசரியாக ரூ.290-லிருந்து ரூ.300 வரை வர்த்தகமாகிறது. பன்னாட்டு நிறுவனமான ஹோல்சிமினின் இந்திய நிறுவனங்களான அம்புஜா சிமென்டும் ஏ.சி.சி.யும் மற்றும் அல்ட்ராடெக் சிமென்டும் இனி பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்புக் குறைவு என மார்கன் ஸ்டான்லி கருத்து சொல்லி இருப்பதைக் கவனத்தில்கொள்ளவேண்டும். என்றாலும், இது ஒரு சைக்ளிக்கல் தொழில் என்பதால், எப்போதெல்லாம் விலை கணிசமாக இறங்குகிறதோ அப்போதெல்லாம் இத்துறை சார்ந்த நல்ல பங்குகளை வாங்கி, நீண்ட கால அடிப்படையில் இந்த சைக்கிள் மாறும்போது நல்ல லாபத்தைப் பார்க்கலாம்.

மெட்ராஸ் சிமென்ட்:

செக்டார் அனாலிசிஸ் - சிமென்ட் துறை...ஸ்ட்ராங்கான லாபம் !

ஆரம்பகாலம் முதல் தனது சொந்தக் காலில் நிற்கும் நிறுவனம் இது. தனது வளர்ச்சிக்கென இதுவரை முதலீட்டாளர்களிடமிருந்து ஒரு பைசாகூட வாங்காத நிறுவனம். ஈட்டிய லாபத்தையே புதிய தொழிற்சாலைகள் துவங்க பயன்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயையும், ஆதாயத்தையும் டிவிடெண்ட் மூலமாகவும் போனஸ் பங்குகள் மூலமாகவும் வழங்கி வரும் திறமையான நிர்வாகம். இப்போதைய விலை கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், நீண்ட கால அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாக எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்யத் துவங்கலாம்.  

இந்தியா சிமென்ட்:

ரிஸ்க் எடுக்கத் தயாரானவர்களுக்கு இது ஒரு மல்டி பேகராக அமையலாம். டோனி இந்நிறுவனத் தின் துணைத் தலைவராகச் சேர்ந்திருப்பது அவர் இதன் பிராண்ட் அம்பாசிடராகிறார் என்பதைக் காட்டுகிறது. எனவே, வட இந்தியாவிலும் சர்வதேச சந்தைகளிலும் மேலும் வளர்வதற்கு இது உதவியாக இருக்கும். கவனித்து விலை இறங்கும்போது வாங்கிச் சேர்க்கலாம்.

கவனிக்கவேண்டிய இதர நிறுவனங்கள்: அம்புஜா சிமென்ட், அல்ட்ராடெக், ஏ.சி.சி.

(அலசுவோம்)

 ஸ்வாட் அனாலிசிஸ்!

பலம்:

ஏனைய பொருட்களைப்போல இல்லாமல், சிமென்டுக்கு மாற்றுப் பொருள் என்பது சந்தையில் இன்று வரை இல்லை. தவிர, உள்கட்டுமானத் துறைக்கு அரசு கொடுத்துவரும் முக்கியத்துவம்.

பலவீனம்:

உற்பத்தியைப் பாதிக்கும் அளவுக்கு சில மாநிலங்களில் நிலவும் கடும் மின்பற்றாக்குறை, சிமென்ட் விலையில் அவ்வப்போது அரசு தலையீடு, உள்கட்டுமானத் திட்டங்களில் அவ்வப்போது ஏற்படும் தேக்கநிலை, பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் விற்பனை பாதிப்பு.

வாய்ப்பு:

தனிநபர் பயன்பாடு எனப் பார்க்கையில் சர்வதேச அளவில் தலைக்கு 250 கிலோவுக்கு மேல் இருக்கிறது. இந்தியாவோ மிகவும் பின்தங்கி, தலைக்கு 150 கிலோவை ஒட்டியே பயன்பாடு இருக்கிறது. மிடில் க்ளாஸ் வளர்ச்சியால் இந்த பெர்காபிடா கன்சம்ஷன் எதிர்காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.  

100 சதவிகித நேரடி அந்நிய முதலீடு சாத்தியம் என்பதால் எதிர்காலத்தில் பெரிய அளவில் வெளிநாட்டு முதலீடு வரலாம். அப்படி வரும்போது, புதிதாக தொழிற்சாலைகளைத் துவங்குவதைவிட ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஆலைகளை டேக் ஓவர் செய்வது எளிதானது என்பதால், இப்போது இருக்கும் சில நிறுவனங்கள் டேக் ஓவர் டார்கெட் ஆக மாறலாம். அப்போது அப்பங்குகளின் விலை அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.

அச்சுறுத்தல்:

100 சதவிகித நேரடி அந்நிய முதலீட்டில் வரும் நிறுவனங்களின் போட்டி ஆரம்பத்தில் நல்லதுதான் என்றாலும், பின்னர் அதுவே ஏகதேச உரிமைக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவும் முடியலாம். தவிர, ஆலைகளின் விரிவாக்கம் சிமென்ட்க்கு மாற்று இல்லை என்பதால், வேறு எதுவும் த்ரெட் என்று தனியாகச் சொல்ல முடியாது. ஆனால், குறைந்துவரும் நமது ஜி.டி.பி. ஒரு கவலை அளிக்கும் அம்சம் எனச் சொல்லலாம்.