Published:Updated:

தங்கம்: பயன்பாடு முதல் முதலீடு வரை...

தகதக டிஸ்கஷன் ! தொகுப்பு: இரா.ரூபாவதி,படம்: ஜெ.தான்யராஜு.

தங்கம்: பயன்பாடு முதல் முதலீடு வரை...

தகதக டிஸ்கஷன் ! தொகுப்பு: இரா.ரூபாவதி,படம்: ஜெ.தான்யராஜு.

Published:Updated:

 கலந்துரையாடல்

##~##

தங்கம்... எப்போதுமே நம்மை விட்டு பிரிக்க முடியாத தகதக உலோகம்.  எவ்வளவுதான் விலை இருந்தாலும் தங்களால் முடிந்த அளவுக்கு தங்கத்தை ஆபரணமாகவோ, காயின்களாகவோ வாங்கி குவித்துவிட வேண்டும் என்பதுதான் நம் பெண்களின் லட்சியம்! நகைச் சீட்டு முதல் இப்போது இ.டி.எஃப். வரை தங்க முதலீடுகளில் வெளுத்துக்கட்டுவதில் இந்தியர்களுக்கு முதல் பரிசை தாராளமாகத் தரலாம். கண்ணுக்குத் தெரிந்த கவர்ச்சிகரமான முதலீடுகளில் தங்கத்துக்குத்தான் தனியிடம் என்றே சொல்லலாம். காரணம் தங்களுடைய எதிர்காலத் தேவைகளுக்கு உடனடி தீர்வாக திகழ்வது தங்கம் தான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை.  முதலீடு என்பதைத் தாண்டி தங்கத்தை ஆபரணங்களாக அணிவது நம் கலாசாரத்தில் ஊறிப்போன விஷயம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேசமயம், பளபளக்கும் தங்கத்தைப் பற்றி பலருக்கும் பல சந்தேகங்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கெல்லாம் பதில் அளிக்கும்விதமாக ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெயினிங் சென்டர் இயக்குநர் சுவாமிநாதனுடன் ஒரு கலந்துரை யாடலை ஏற்பாடு செய்தோம். நாணயம் விகடன் வாசகிகளின் சார்பாக நான்கு பெண்களை தேர்வு செய்து சுவாமிநாதனுடன் பேச வைத்தோம். இந்திரா லஷ்மி, சித்ரா மோகன்குமார், ஹரிணிஸ்ரீ மற்றும் அபூர்வா ஆகியோரின் பளீர் கேள்விகளும், சுவாமிநாதனின் பக்குவமான பதில்களும் சுடச்சுட இனி...  

தங்கம்: பயன்பாடு முதல் முதலீடு வரை...

இந்திரா லஷ்மி: முன் காலத்தில் எல்லாம் ஹால்மார்க், கேடிஎம் என்பதெல்லாம் இல்லையே;  இப்போது மட்டும் ஏன் அதெல்லாம்..?

சுவாமிநாதன்:  முன்பெல்லாம் நகைகளை பாரம்பரியமாகத் தொழில் செய்பவர்களிடம்தான்  செய்வோம். பெரும்பாலும் அவர் உள்ளூர்க்காரராக இருப்பார். ஆனால் இப்போது, பலரும் நகை வியாபாரம் மற்றும் நகை செய்யும் தொழிலுக்கு வந்து விட்டார்கள். போட்டியும் அதிகமாக உள்ளது. இதனால், சில நகைக் கடைகள் நகையின் தரத்தைக் குறைத்து, குறைவான விலையில் தங்கம் தருகிறார்கள். இதன் விளைவாக தரம் குறைந்த நகைகளை வாங்கி ஏமாறும் சூழலைத் தடுக்கவே, தரச் சான்றிதழ்களை அரசு கொண்டுவந்தது.

ஹரிணிஸ்ரீ: எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களின் எதிர்காலத்திற்காக தங்கத்தைச் சேமிக்க விரும்புகிறேன். நான் எந்தவிதத்தில் சேமிக்கவேண்டும்..?

சுவாமிநாதன்: தங்க நகைச் சேமிப்புக்கு மிகச் சிறந்த முறை, கோல்டு இ.டி.எஃப்.தான். இப்போது கோல்டு ஃபண்டுகளும் உள்ளன. இதில் வாங்கும்போதும், விற்கும்போதும் சேதாரம், செய்கூலி என எதுவும் இருக்காது. தேவைப்படும் சமயத்தில் இ.டி.எஃபை விற்று, பணமாக்கிக் கொள்ளலாம் அல்லது தங்கக் கட்டியாக டெலிவரி எடுத்துக்கொள்ளலாம். தங்கத்தை இப்போதைய தேவைக்கு வாங்குகிறீர்கள் என்றால், அதை ஆபரணமாக வாங்கிக்கொள்ளலாம். சிலர் சேமிப்புக்காக தங்க காயின்களை வாங்கி வைக்கிறார்கள். தங்க காயின் என்பது 22 கேரட் தரத்தில்தான் இருக்கும். இதில் வாங்கும்போது சேதாரம், விற்கும்போது சேதாரம் உண்டு. மேலும், எளிதில் பணமாக மாற்ற முடியாது. எனவே, காயின் வாங்குவதற்குப் பதிலாக தங்க பார்களாக வாங்கிக்கொள்ளலாம். 24 கேரட்டில் கிடைக்கும். இதில் 10, 20 கிராம்களில்கூட வாங்கலாம். இதில் கடையின் முத்திரை இருக்காது.

தங்கம்: பயன்பாடு முதல் முதலீடு வரை...

சித்ரா மோகன் குமார்: காயின்களை வாங்கி வைத்தால் அவசரத்திற்கு அடகு வைக்க முடியாதோ..?

சுவாமிநாதன்: 24 கேரட் தங்கத்தைதான் அடகுவைக்க முடியாது. ஆனால் 22 கேரட் தங்க காயின்களை அடகு வைக்க முடியும். காயின் மீது தங்கம் அல்லாத உலோகத்தினால் ஒரு லாக்கெட் வைத்து கொடுத்தால்போதும் வங்கிகளில் அடகு வைத்துக்கொள்ள முடியும். இதனால் எடையில் அதிக வித்தியாசம் ஏற்படாது. லாக்கெட்டை நகைச் செய்பவர்களிடம் கொடுத்து வைத்துக்கொள்ளலாம். இதை எளிதில் நீங்களே அகற்றிவிடலாம். இதனால் தரத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

அபூர்வா: இப்போது ஆண்டிக் நகைகள் பிரபலமாக இருக்கிறதே, இதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்..!?

சுவாமிநாதன்: பழைய கால நகைகளின் டிசைன்களில் அப்படியே செய்வதுதான் ஆண்டிக் நகைகள். 20 வருடங்களுக்கு முந்தைய பழைய நகைகளை பலரும் டிசைன் பிடிக்கவில்லை என்று விற்பனை செய்தனர். ஆனால், நகைக் கடைகள் இதை ஒரு வியாபாரமாக மாற்றி விட்டன. ஆண்டிக் நகைகளும் மற்ற நகைகளைப் போலத்தான். இதன் விலை என்பது மிக அதிகமாக உள்ளது. விலை பிரச்னை இல்லை என்கிறவர்கள் வாங்கிக்கொள்ளலாம்.  

சித்ரா: 916 நகைகள் சீக்கிரம் உடைந்துவிடும் என்கிறார்களே, இது உண்மையா?  

சுவாமிநாதன்: உண்மைதான். 916 என்பது தரம். அதாவது 91.6 சதவிகிதம் தங்கமும், மீதமுள்ள 8.4 சதவிகிதம் செம்பு, காப்பர் போன்ற உலோகம் ஆகியவற்றை கலந்து நகை செய்வார்கள். சுத்தத் தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது. குறைவான சதவிகிதத்தில் மற்ற உலோகங்கள் கலந்திருப்பதால் எளிதில் உடைந்துவிடும். அதே நேரத்தில், உங்களின் பயன்பாட்டைப் பொறுத்து தரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். தினமும் அணிந்துகொள்ளும் நகைகள் எனில் 18 கேரட் நகைகளைக்கூட வாங்கிக்கொள்ளலாம். இந்த நகைகள் அதிக நாட்களுக்கு உழைக்கும்.  

இந்திரா லஷ்மி: தினமும் அணியும் நகைகளில் எப்படி தேய்மானம் ஏற்படுகிறது. வங்கிகளில் அடமானம் வைக்கும்போது உரைக்கலில் உரசுகிறார்களே, இதில் தேய்மானம் ஏற்படாதா..?

சுவாமிநாதன்: எந்தப் பொருளுமே தேய்மானம் அடையும் தன்மைக்கொண்டதுதான். மேலும், சுத்தத் தங்கம் கண்டிப்பாக அணியும்போது தேய்மானம் ஏற்படும். சிலரின் உடல்வாகை பொருத்து தேய்மானம் இருக்கும். 5 வருடம் ஒரு செயினை அணிந்திருக்கிறீர்கள் என்றால், 500 மில்லி கிராமிலிருந்து 700 மில்லி கிராம் வரை தேய்மானம் ஏற்படலாம்.

தங்கம்: பயன்பாடு முதல் முதலீடு வரை...

ஹரிணிஸ்ரீ:  இன்று பெரும்பாலான கடைகள் குறைந்த சேதாரம் என விளம்பரம் செய்யறாங்க. எந்த வகைகளில் நகை வாங்குவது நல்லது. சேதாரம் கடைக்கு கடை வித்தியாசப்படுவது எப்படி..?

சுவாமிநாதன்: நகைகளை முடிந்தவரை உங்களுக்கு அருகில் உள்ள நம்பகமான கடைகளில் வாங்குவது நல்லது. பெரிய கடைகளில் எப்போதுமே அதிக சேதாரம் இருக்கும். பெரிய கடைகளில் செலவுகள் அதிகமாக இருக்கும். அதாவது, வாடிக்கையாளருக்கு வழங்கும் பரிசு பொருள், விளம்பரம், மின்சாரச் செலவு, பணியாளர் சம்பளம் ஆகிய அனைத்தையும் சேதாரத்திலிருந்துதான் எடுக்கிறார்கள்.

சின்ன கடைகளில், இந்தச் செலவு குறைவாக இருக்கும். இவர்களிடம் உங்களால் கேள்விக் கேட்க முடியும். உங்களுக்கான மதிப்பும் இங்கு அதிகமாக இருக்கும். விலை குறைத்தும் வாங்கிக் கொள்ளலாம். தமிழகத்தில் பெரும்பாலும் நகைகள் கையால்தான் செய்யப்படுகின்றன. இதனால், ஒவ்வொருவர் கைக்கும் சேதாரம் என்பது வித்தியாசப்படும். இரண்டு, மூன்று கடை விசாரித்து நகை வாங்குவது நல்லது.

அபூர்வா: நகைச் சீட்டுத் திட்டம் என்பது இப்போது மிகவும் பிரபலமாக உள்ளது. இ.டி.எஃப்.,  நகைச் சீட்டுத் திட்டம்; இதில் எது சிறந்ததாக இருக்கும்..?

சுவாமிநாதன்: முன்பே சொன்னது போல இ.டி.எஃப்.தான் சிறந்தது. நகை தேவை எனில், நகைச் சீட்டு சேருவது சரி. இந்த சீட்டுகள் 15 மாதத்திலிருந்து 18 மாதம் வரை உள்ளன. இந்தக் காலம் முழுவதும் பணம் கட்ட முடியும் எனில் மட்டுமே இதில் சேருங்கள். குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு விலகினால் கட்டிய பணத்திற்கு மட்டும்தான் நகைகள் வாங்கிக்கொள்ள முடியும். வேறு எந்த சிறப்பு சலுகையும் கிடைக்காது. அதேசமயம், இ.டி.எஃபை எப்போதுவேண்டுமானாலும் விற்று பணமாக்கிக்கொள்ளலாம். கடைசியாக, ஒரு டிப்ஸ்... அட்சயதிருதியை போன்ற சமயங்களில் முடிந்தவரை தங்க காயின்கள் வாங்காமல் இருப்பது நல்லது. தரம் குறைந்த காயின்களை விற்க வாய்ப்பு அதிகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism