Published:Updated:

உள்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக தேவை !

கோ.செந்தில்குமார்,படங்கள்: பா.கந்தகுமார்.

##~##

தமிழ்நாட்டில் உள்ள ஆன்மிக நகரங்களில் திருவண்ணாமலைக்கு முக்கிய இடம் உண்டு. வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும்கூட திருவண்ணாமலையைத் தேடி வருகிறார்கள். சமீப காலமாக பௌர்ணமி நாட்கள் மட்டுமல்லாமல் இதர நாட்களிலும் கிரிவலம் வரும் மக்களைப் பார்க்க முடிகிறது.

ஆன்மிக நகராக விளங்கினாலும், பட்டு நெசவு தொழிலும், விவசாயமும் இன்னொரு அடையாளமாக இருக்கிறது. தவிர, பல்வேறு ஆசிரமங்களும், பொற்கோவிலும் திருவண்ணாமலை நகரத்தை எப்போதும் பிஸியாகவே வைத்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நகரத்தின் இன்றைய தேவைகள் என்ன என்பதற்காக நாம் முதலில் சந்தித்தது எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் சேர்மன் கருணாநிதியை. ''தொழில் வளர்ச்சியில் உள்ள நகரங்கள்தான் அந்நிய செலாவணி ஈட்டித் தரும் என்பார்கள். ஆனால், எந்தவிதமான தொழிற்பேட்டைகளும் இல்லாமல் திருவண்ணாமலை அந்நிய செலாவணி ஈட்டி வருகிறது.

வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்கள் இங்கு நாட்கணக்கிலும், மாதக்கணக்கிலும் தங்கிச் செல்கின்றனர். இவர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவது முக்கியமான உடனடித் தேவை; மாதாமாதம் ஒரேநாளில் லட்சக்கணக்கான மக்கள் குவியும்போது நகரம் திண்டாடிவிடுகிறது. நகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். தவிர, திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள மலைக் காடுகளில் மூலிகை, பூக்கள் மற்றும் மலைத் தேன் போன்ற இயற்கை விளைபொருட்கள் ஏராளமாக கிடைக்கின்றன. இவற்றைக் கண்டுபிடித்து சந்தைப்படுத்துவதற்கு திருவண்ணாமலை மையமான நகரம்.

உள்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக தேவை !

அங்குள்ள மலைவாழ் மக்களைக்கொண்டு, சுய உதவிக் குழுக்களை உருவாக்கி அவர்கள் மூலம் பல்வேறு வகையில் இயற்கை பொருள் அங்காடிகளை இங்கே உருவாக்கி விற்பனை செய்யலாம். அதன்மூலம் மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன் நகரத்திற்கும் இன்னொரு அடையாளம் கிடைக்கும்.  விவசாய உற்பத்திப் பொருட்களை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்ய மையங்களை உருவாக்கவேண்டும். அவற்றை பதப்படுத்தவோ, பாதுகாக்கவோ கிடங்குகள் அமைத்துத் தர வேண்டும். இதன்மூலம் திருவண்ணாமலை சார்ந்து ஆன்மிகம் செழிக்கவும், தொழில்கள் பெருகவும் செய்யும்போது சில்லறை பொருளாதாரம் மேம்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இயற்கை உணவுப் பொருட்களுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தேவையும், மதிப்பும் சமீப காலமாக உருவாகியுள்ளது. அதற்கேற்ப இங்குள்ள விவசாயிகள் கேழ்வரகு, திணை, சாமை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானிய வகைகளைப் பயிரிடுகின்றனர். அவற்றை அரசே கொள்முதல் செய்து  சந்தைப்படுத்தலாம். இதற்கேற்ப விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள் அதிக அளவில் இங்கு உற்பத்தி ஆகிறது. இவற்றையும் மேம்படுத்தவேண்டும். இதற்கேற்ப இங்கு பால் பதப்படுத்தும் மையம் தொடங்கவேண்டும். பல வருடங்களாக இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

உள்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக தேவை !

மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நமது பாரம்பரிய களிமண் பாண்டங்கள், ஜாடிகள், விளக்குகள் போன்ற வற்றை உற்பத்தி செய்தால், இந்தக் கலைகளை அழியாமல் பாதுகாப்பது மட்டுமல்ல, அந்நிய செலாவணியை மேலும் அதிகரிக்கலாம்'' என்று ஒரு பட்டியலே நமக்குக் கொடுத்தார்.

உள்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக தேவை !

புதிய தொழில்வாய்ப்புகள், ஆன்மிகம் வளர்ச்சி போன்றவற்றில் அடுத்து செய்யவேண்டியது என்ன என்று விளங்கினாலும், அதற்கு ஈடுகொடுக்க திருவண்ணாமலை நகரத்தால் முடியுமா? உள்கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கிறது எனப் பார்த்தோம். இதுகுறித்து முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரனிடம் பேசினோம்.

''எத்தனைபேர் வந்தாலும் அனைவரையும் அணைத்துக் கொள்ளும் சக்தி இந்த நகரத் திற்கு இருக்கிறது. எந்த நேரத்தி லும் போக்குவரத்து வசதி இருக்கிறது. மைய நகரம் வாகன நெரிசல்கள் இருந்தாலும், புறவழிச்சாலை இருப்பதால் ஆன்மிக சுற்றுலாவாசிகளுக்குச் சிக்கல் இல்லை. ஆனால், திருவண்ணாமலை பழைய நகரம் என்பதால் குறுகலான சாலைதான். அதனால்தான் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இரண்டாவது கோயில் நகரம் என்பதால், ஆக்கிரமிப்புகளும் அதிகம். இதை சரிசெய்தாலே ஓரளவு தீர்வு கிடைக்கும்'' என்று அவரது கருத்துகளை முன்வைத்தார்.

திருவண்ணாமலைக்கு வருபவர்களில் பலர் இங்கே இரண்டொரு நாட்கள் தங்கி அருகில் இருக்கும் சாத்தனூர் அணை, ஜவ்வாது மலை மற்றும் பொற்கோயில் போன்ற இடங்களுக்குச் சென்றுவிட்டுதான் திரும்புகின்றனர். எனவே, அதற்கேற்ப சுற்றுலாத் துறை சார்பில் ஏற்பாடுகளைச் செய்துதரவேண்டும்'' என்றும் பல்வேறு தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

ரயில் வசதி தாராளமாக இருந்தால் நகர வளர்ச்சிக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும் என்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்த நகர வளர்ச்சியையும், தேவையையும் கருத்தில்கொண்டு உடனடியாக கூடுதல் ரயில்களை இயக்கவேண்டும் என்பது மக்களின் மனநிலையாக இருக்கிறது.

உள்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக தேவை !

இதுதவிர, புகழ்வாய்ந்த ஆரணி பட்டும், களம்பூர் அரிசியும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவைதான். இந்தத் தொழிலை விரிவாக்கவும், புகழ் பரப்பவும், இந்த நகரத்தை மையமாக வைத்து மையங்களைத் தொடங்கலாம்.

''இன்றைய நிலவரப்படி, காஞ்சிபுரத்தைவிட ஆரணியில்தான் பட்டு உற்பத்தி அதிகமாக இருக்கிறது. ஆனால், இந்த மாவட்டத்திற்கு பட்டு உற்பத்தி தொடர்பாக எதையும் அரசாங்கம் செய்யவில்லை. நெசவாளர் சேவை மையம்கூட காஞ்சிபுரத்திலும், சென்னையிலும்தான் இருக்கிறது. நாங்கள் ஏதாவது புதிய டிசைன்கள் மற்றும் தொழில்நுட்பத்தையோ தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாங்கள் அங்குதான் போயாகவேண்டும். அதேபோல், நெசவாளர் சேவை மையத்தை திருவண்ணாமலையில் அமைத்து அதன்மூலம் பட்டு வளர்ப்பு, பட்டுச் சேலை உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களைச் சொல்லித்தர ஏற்பாடு செய்ய வேண்டும். இங்கே ஒரு பட்டுப் பூங்காவை அமைத்துத் தருவதன் மூலம், நெசவாளர்களின் வாழ்வு உயருவதுடன் இந்நகரம் மற்றும் மாவட்டத்தின் வருவாயும் கண்டிப்பாக அதிகரிக்கும்'' என்றார், பட்டுப் புடவை வடிவமைப் பாளரான ஜெயராஜ்.

உள்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக தேவை !

அரிசி ஆலை அதிபரான சரவண ராஜ், ''இந்த மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இருக்கிறது. சீஸனில் மட்டுமே இங்குள்ள மில்கள் இயங்குகின்றன. மற்ற நாட்களில் வேலையில்லாமல் இருக்கின்றன. எனவே, அரவைக் காக நெல்களை சேமித்து வைக்க சரியான கிடங்கு வசதி இல்லை. திருவண்ணாமலையை மையமாக வைத்து இதற்கான வசதிகளை செய்துகொடுக்கவேண்டும். இப்படி செய்வதன் மூலம் அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்துகூட அரவைக்கு நெல் வாங்கி வந்து சேமிக்க வசதியாக இருக்கும்'' என்றார்.

அண்ணாமலையார் பக்தரான ஆறுமுகமோ, ''நகரத்தின் வளர்ச்சிக்குத் தடையாகவும் இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இங்கே, எங்கு பார்த்தாலும் ஒருவழி பாதையாக மாற்றி இருக்கிறார்கள். இதனால் தினந்தோறும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். வெளியூர்களில் இருந்துவரும் மக்கள் சிரமப்படுகிறார்கள். அதற்கு மாவட்ட நிர்வாகம் ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டும். நகருக்குள் பேருந்துகளை அனுமதிக்காமல் மினி பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யவேண்டும். லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்லும் கோயிலைச் சுற்றி அடிப்படை வசதிகளைச் செய்தும், அதிகளவில் கழிவறைகளையும் கட்டவேண்டும்'' என்றார்.

ஆன்மிகம் தேடிவரும் அன்பர் களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதும், விவசாய உற்பத்தியைப் பெருக்க வாய்ப்புகளை ஏற்படுத்துவதும், முக்கிய நகரங்களுக்குக் கூடுதல் ரயில் போக்குவரத்து வசதிகளைக் கொண்டுவருவதும்தான் இந்த நகரத்தை அடுத்தக்கட்ட  வளர்ச்சிக்குக் கொண்டுச் செல்லும்.