Published:Updated:

செக்டார் அனாலிசிஸ்!

செக்டார் அனாலிசிஸ்!

செக்டார் அனாலிசிஸ்!
##~##

டாடா ஸ்டீல் நல்ல பங்கா? என்ன சார் கேள்வி இது! என்பவர்களுக்கு... இந்த ஆண்டு துவக்கத்தில் தொட்ட உச்ச விலையில் இருந்து ஒன்றரை மாதத்திலேயே 20% வரை வீழ்ந்தப் பங்கு இது; அது மட்டுமா? ரூ.92-க்கு வர்த்தகமான செயில் நிறுவனப் பங்குகள் இப்போது ரூ.76-ல்! இவை மட்டுமல்ல; ஜிண்டால், பூஷன், ஹிண்டால்கோ என எந்த ஸ்டீல் மற்றும் அலுமினியப் பங்குகளை எடுத்துக்கொண்டாலும் ஏறத்தாழ நிலவரம் இப்படித்தான். 

'என்ன ஆயிற்று உலோகத் துறை நிறுவனங்களுக்கு?' என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு எழுந்துள்ளது.

இந்த ஆண்டுத் துவக்கத்தில் 11,400-க்கு மேல் இருந்த மும்பை பங்குச் சந்தையின் உலோகப் பங்குகளுக்கான குறியீடு, இப்போது 9,561 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டுமே 800 புள்ளிகளுக்கு மேல் இறங்கியுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து பார்த்தால், 16% வீழ்ச்சி!

செயல்பாடு எப்படி?

'வேர்ல்டு ஸ்டீல் அசோசியேஷன்’ என்னும் எஃகு சர்வதேசக் கூட்டமைப்பின் புள்ளிவிவரப்படி, உலக அளவில் ஸ்டீல் உற்பத்தியில் சீனா, ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யாவிற்கு அடுத்ததாக ஐந்தாவது இடம் இந்தியாவுக்கு! ஆண்டுக்கு சுமார் 75 மில்லியன் டன்கள் உற்பத்தி. கடந்த சில ஆண்டுகளாகவே

செக்டார் அனாலிசிஸ்!

8 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சி அடைந்து வருகிறது இத்துறை. அடுத்த ஐந்தாண்டுகளில் 10 சதவிகிதத்துக்கு குறையாத வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு ஆண்டிலேயே நம் உற்பத்தித் திறன் 100 மில்லியன் டன்களைத் தாண்டும். இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும்  விரிவாக்கப் பணிகளெல்லாம் முடியும்போது உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராக நாம் இருப்போம்!

'கோர் செக்டார்’ எனச் சொல்லப்படும் அடிப்படை உள்கட்டுமானத்திற்கு ஸ்டீல் தேவையானது என்பதால், நம் நாட்டினுடைய ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை ஒட்டியே இத்துறையின் ஏற்ற இறக்கங்களும் அமையும்.

அடிப்படை உள்கட்டுமானம் மட்டுமல்லாமல், ஆட்டோமொபைல், கேப்பிட்டல் கூட்ஸ் எனும் மூலதனப் பொருட்கள் துறை, மின் துறை, ரியல்ட்டி, கப்பல் கட்டுமானம், விமானக் கட்டுமானம், ரயில்வே, பாதுகாப்புத் துறை என இதர முன்னணித் துறைகளிலும் ஸ்டீலின் பயன்பாடு முக்கியமாகும்.  

ஆனால், நபர் ஒன்றுக்கான பயன்பாடோ சர்வதேச சராசரியான 215 கிலோவைவிட மிகக் குறைவாக 59 கிலோ என்ற அளவிலேயே இருக்கிறது. தொடர்ந்து வளர்ந்துவரும் பொருளாதாரமான இந்தியாவில் இத்துறை மேலும் வளர்வதற்கான சாத்தியக்கூறுகளையே இது காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

மூலப் பொருட்கள்:

இத்துறைக்குத் தேவையான மூலப் பொருட்கள் அபரிமிதமாகக் கிடைக்கும் இடம் நம் நாடு; உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருளான இரும்புத் தாது எடுப்பதற்கான சுரங்க உரிமம் பெறுவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல், தாமதமாகும் நிலக்கரி சுரங்க உரிமங்கள் கிடைப்பதில் இருக்கும் பிரச்னைகள், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக கர்நாடகா மற்றும் ஒடிஷாவில் மூடப்பட்ட சுரங்கங்களால் உற்பத்திக் குறைவு ஆகியவை இத்துறையை அதிவேகமாக முன்னேறவிடாமல் தடுக்கின்றன.

இத்துறையில் உள்ள உட்பிரிவுகளும் அதனைச் சார்ந்த நிறுவனங்களும்:

எஃகுத் துறை: டாடா ஸ்டீல், செயில். ஜிண்டால்.

அலுமினியம்: ஹிண்டால்கோ,

மைனிங்/சுரங்கத் துறை நிறுவனங்கள்: கோல் இந்தியா, சேச கோவா.

ஸ்பாஞ்ச் அயர்ன், பிக் அயர்ன் என உற்பத்தியாகும் முறை மற்றும் பயன்பாட்டைப் பொறுத்தும் வகைகள் உண்டு.

செக்டார் அனாலிசிஸ்!

மெட்டல் இண்டெக்ஸ்!

தேசிய பங்குச் சந்தையில், சி.என்.எக்ஸ். மெட்டல் இண்டெக்ஸ் என்பது 15 பங்குகளை உள்ளடக்கியது. 2011, ஜூலை 12-ம் தேதியன்று தொடங்கப்பட்டது இக்குறியீட்டில் உள்ள பங்குகளின் சந்தை மதிப்பு, தேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகும் அனைத்துப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 5% ஆகும். இங்கு வர்த்தகமாகும் அனைத்து உலோகப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 79 சதவிகிதம் ஆகும்.  

கடந்த 5 ஆண்டுகளில் சராசரி பீட்டா 1.26 சதவிகிதம்; சந்தையின் போக்கை நிர்ணயிக்கக்கூடிய முக்கியத் துறைகளில் இதுவும் ஒன்று.

எது நல்ல ஸ்டீல் பங்கு?

* மூலப் பொருட்களை எப்படி பெறுகிறார்கள்;  நிலக்கரியிலிருந்து எஃக்கு வரை, தனக்குத் தேவையான எல்லாவற்றையும் உள்ளடக்கிய இன்டகரேட்டட் உற்பத்தியாளரா? புராடக்ட் ரேஞ்ச் எப்படி? உதாரணமாக செமிஸ், லாங்க்ஸ் மற்றும் ஃப்ளாட் ஆகிய மூன்றையும் தயாரிப்பவரா எனப் பார்க்கலாம்.

* ஐரோப்பிய சந்தைகளை நம்பி இருக்கும் நிறுவனம் எனில், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலையைக் கவனிக்கவேண்டும்.

* இறக்குமதி/ஏற்றுமதித் தீர்வையில் மாற்றங் களையும் கவனிக்கவும்.

இத்துறையின் பங்குகளின் புத்தக மதிப்பைப் போல சராசரியாக 2 மடங்கு விலையில் இத்துறைக்கான குறியீடுகள் வர்த்தகமாகின்றன; அந்த விதத்தில் பார்த்தால், இத்துறைப் பங்குகளின் தற்போதைய விலை என்னவோ ஓரளவு நியாயமானதுதான்.

ஆனால், இக்குறியீட்டிலுள்ள நிறுவனங்கள் தரும் ஈவுத்தொகையான டிவிடெண்ட் யீல்டு ஆண்டுக்கு 2.40 % என்பது முதலீட்டாளர்களுக்கு பொதுவாகவே சாதகமான அம்சம். இது சென்செக்ஸ் உள்ளிட்ட பல முன்னணிக் குறியீடுகளின் யீல்டைவிட இது அதிகம் என்பதை மட்டும் கவனத்தில்கொள்ளவும்.  

இக்குறியீட்டிலுள்ள பங்குகளின் தற்போதைய சராசரி பி.இ. 13 என்பது மொத்த சந்தையின் சராசரியைவிடக் குறைவு. இப்போதைய டிரெண்ட் தொடர்ந்து, விலை மேலும் குறைந்தால், நீண்டகால அடிப்படையில் முதலீட்டிற்காக இப்பங்குகளை வாங்குவதற்கான நல்ல வாய்ப்பு எனக்கொள்ளலாம்.

டாடா ஸ்டீல்:

உலகிலேயே குறைந்த செலவில் எஃகு உற்பத்தி செய்யும் நிறுவனம். நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருகிறது.   இங்கிலாந்து, நெதர்லாந்து, தாய்லாந்து, சிங்கப்பூர், சீனா, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் தொழிற்சாலை உள்ளது. ஒளிவுமறைவில்லாத வணிகம், நீண்டகால ட்ராக் ரெக்கார்டு, போட்டியையும் சந்தையின் பல ஏற்ற இறக்கங்களைச் சாதுர்யமாகச் சமாளித்து ஏறுநடை போடும் நிறுவனம்.

இந்நிறுவனத்தின் தொழில், ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்து இருப்பதால், அங்கு தற்போது நிலவும் தேக்கநிலை காரணமாக சமீபகாலச் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனினும், ஒவ்வொரு போர்ட்ஃபோலியோவிலும் அவசியம் இருக்கவேண்டிய பங்கு இது.  

செயில்:

ஸ்டீல் உற்பத்தியில் இந்தியாவில் நம்பர் ஒன் நிறுவனம்; கடன் மீதான அதிக வட்டிச் செலவு, அதிகரித்துவரும் உற்பத்திச் செலவுகள், விரிவாக்கத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதங்களால் அதிகச் செலவுகள் ஆகியவை பாதகமாக இருந்தாலும், இப்போதைய விலை ஓரளவு இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டிருப்பதால், இனிமேலும் வீழ்ந்தால் வாங்க ஏற்ற பங்கு. குறுகியகாலத்தில் லாபம் பார்ப்பதற்கு சாத்தியம் குறைவு.

ஹிண்டால்கோ:

புத்தக மதிப்பைவிடக் குறைவான விலையில் வர்த்தகமாகிறது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நல்ல டிவிடெண்ட் தந்துவரும் நிறுவனம். தொடர்ந்து விற்பனையிலும்  லாபத்திலும் வளர்ச்சி, குறைவான கடன் (டெப்ட்ஈக்விட்டி ரேஷியோ) ஆகியவை, இப்பங்கை ஒரு சாமான்ய முதலீட்டாளருக்கான தங்கப் பங்காகக் காட்டுகிறது. நீண்டகால அடிப்படையில் மட்டுமல்லாது, இடைக்காலத்தில் ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி வாங்கி விற்கவும் ஏற்ற நல்ல பங்கு இது.

(அலசுவோம்)

ஸ்வாட் அனாலிசிஸ்:

 பலம்; அபரிமிதமான அளவில் எளிதாகக் கிடைக்கும் மூலப் பொருட்கள், குறைவான சம்பளத்தில்/கூலியில் கிடைக்கும் வேலையாட்கள், தொழில்நுட்பம் மற்றும் மூலதனம் அதிகமாகத் தேவை என்பதால் மேலும் புதிய போட்டி நிறுவனங்கள் சந்தையில் நுழைவது கடினம்.  

பலவீனம்; எளிமையான/தளர்த்தப்பட்ட இறக்குமதி விதிமுறைகள் மற்றும் மிகக் குறைவான இறக்குமதித் தீர்வை காரணமாக சுலபமான இறக்குமதியால் சர்வதேசச் சந்தையில் இருந்து அவ்வப்போது போட்டி  சாத்தியம். ஆங்காங்கே சிறிய சிறிய நிறுவனங்களாலும் போட்டி., அதிகரிக்கப்பட்டிருக்கும் ஏற்றுமதித் தீர்வை, 'சைக்ளிகல்’ இண்டஸ்ட்ரி, மைனிங் பாலிசி.

வாய்ப்பு; தொடர்ந்து வளரும் நமது பொருளாதாரம், தற்போது குறைவாக இருக்கும் நபர் ஒன்றுக்கான பயன்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு, உள்கட்டுமானத் துறை, வாகனத் துறை, மூலதனப் பொருட்கள் துறை ஆகியவற்றின் வளர்ச்சி.  

ஆபத்து; 7 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நம் பொருளாதார வளர்ச்சி திடீரெனச் சுருங்கி இப்போது 5 சதவிகிதத்தை நோக்கிப் பயணிக்கும் அபாயம் கவலை அளிக்கும் அம்சம். இறக்குமதி/ஏற்றுமதி சம்பந்தமான அரசு கொள்கைகளில் மற்றும் சுரங்க சட்டங்களில் எதிர்பாராது முளைக்கும் திடீர் மாறுதல்கள், சீனா போட்டி, கோவா மற்றும் கர்நாடகாவில் சுரங்கத் தடை இருப்பது.