Published:Updated:

ஷேர்லக் - வட்டி விகிதம் குறையும்?!

ஷேர்லக் - வட்டி விகிதம் குறையும்?!

பிரீமியம் ஸ்டோரி
##~##

''அநீதி இழைத்தால் எந்தக் கொம்பனாக இருந்தாலும் தப்பவே முடியாது'' என்று யாரிடமோ போனில் பேசியபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ''யார் அநீதி இழைத்தது?'' என்று கேட்டோம்.

''சஹாரா நிறுவனத்தின் சுப்ரதா ராய்தான். தன் நிறுவனத்துக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி எந்த சூதுவாதும் அறியா மக்களிடம் கிட்டத்தட்ட 24,000 கோடி ரூபாயை வசூல் செய்தார் சுப்ரதா. இதுதொடர்பாக செபி கேட்ட கேள்விகளுக்குப் பொறுப்பாகப் பதில் சொல்லவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த செபி, இப்போது சுப்ரதாவை கைது செய்ய உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வருகிற ஏப்ரல் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று தெரிகிறது. மக்கள் பணத்தைத் திரும்பத் தருவதில் சஹாரா நிறுவனம் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என நிரூபிக்கப்பட்டால், அவரை கைது செய்து விசாரிக்கும் உத்தரவை நீதிமன்றம் அளித்தாலும் ஆச்சரியமில்லை''  என்று நீண்ட நேரம் பேசியவருக்கு இளஞ்சூட்டில் டீ தந்தோம். அதை ரசித்துக் குடித்தவர், வட்டிக் குறைப்பு பற்றி அடுத்தத் தகவலைச் சொன்னார்.

ஷேர்லக் - வட்டி விகிதம் குறையும்?!

''பிப்ரவரி மாதத்துக்கான பணவீக்கம் 6.6 சதவிகிதத்திலிருந்து 6.84 சதவிகிதமாக உயர்ந் திருக்கிறது. இதனால் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையில் இறங்குமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வருகிற 19-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஆர்.பி.ஐ.-ன் கூட்ட முடிவில் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 0.25 சதவிகிதமாவது குறைக்கப்படலாம் என பல அனலிஸ்ட்கள் சொல்லி வருகிறார்கள். ஆனாலும், ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்து சந்தையில் மாற்றம் இருக்கும்!'' என்றார்.  

''விற்பனைக் குறைந்த நிலையிலும் கடந்த நான்கு  காலாண்டுகளாக ஹிந்துஸ்தான் யூனிலீவர்ஸ் நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளதே..?'' என்றோம்.

''இங்கேதான் சிறு முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்நிறுவனம் வசம் 3 டஜன் பிராண்ட்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றின் விற்பனை பிரமாதமாக இல்லை. அதேநேரத்தில், ரியல் எஸ்டேட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விற்பனை மூலம் கடந்த நான்கு காலாண்டுகளில் 672 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது. இதுதான் லாப அதிகரிப்புக்கு முக்கிய காரணம்'' என்று உண்மையைப் போட்டு உடைத்தார்.

''இன்ஃபோசிஸ் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறதே?'' என்று இழுத்தோம்.

''இன்ஃபோசிஸ் வசம் ரூ.22,000 கோடி ரூபாய் உபரி பணம் இருக்கிறது. இதைக்கொண்டு புதிய நிறுவனங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கிறது. நல்ல நிறுவனம் ஏதும் கிடைக்காதபட்சத்தில் அந்தத் தொகையை பங்குதாரர்களுக்குப் பிரித்துத் தர திட்டம் இருக்கிறதாம். இந்த வேலையை அடுத்த 12 முதல் 15 மாதங்களில் செய்துமுடிக்கவும் முடிவாகி இருக்கிறதாம். இந்தச் செய்தியால் அந்தப் பங்கின் விலை கொஞ்சமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், சிறு முதலீட்டாளர்கள் இதுமாதிரியான செய்திகளை எல்லாம் நம்பி, இந்தப் பங்கை வாங்கவேண்டுமா என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும்'' என்றார்.

''நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் பி.இ. (பிரைவேட் ஈக்விட்டி) நிறுவனங்களுக்கு செபி கிடுக்கிப்பிடி போடப் போகிறதாமே?'' என்று கேட்டோம்.

''பல நிறுவனங்களில் பி.இ. முதலீட்டாளர்கள் தான் புரமோட்டர்களாக இருக்கிறார்கள். இதுபோன்ற கம்பெனிகள், ஐ.பி.ஓ. வந்து பட்டியல் இடும்பட்சத்தில் மூன்றாண்டுகளுக்குப் பங்குகளை விற்க முடியாதபடி விதிமுறையைக் கொண்டுவர செபி திட்டமிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பல பி.இ. முதலீட்டாளர்கள், ஐ.பி.ஓ. வந்த சில வாரங்களிலேயே மொத்தப் பங்கையும் விற்றுவிட்டதால், அந்தப் பங்கு களின் விலை தாறுமாறாக விலை இறங்கி, சிறு முதலீட்டாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டனர். இதைத் தவிர்க்கவே செபி இந்த நடவடிக்கையை எடுக்க இருக்கிறது.

ஷேர்லக் - வட்டி விகிதம் குறையும்?!

சிறு முதலீட்டாளர்களைக் காப்பாற்றுவதில் செபி எடுத்திருக்கும் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். செபி கடந்த மூன்று ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு 50 எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளது. குறிப்பாக, விதிமுறைகளை மீறியுள்ள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஐந்து நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஏழு நிறுவனங்களிடமிருந்து அபராதமும் வசூலிக்கப் பட்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் 30 எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்ட நிலையில் நடப்பு நிதி ஆண்டில் 6 நிறுவனங்களுக்கு மட்டுமே செபி எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறது. அதாவது, செபி நடவடிக்கையால் விதிமுறை மீறல்கள் குறைந்திருக்கிறது'' என்றவர், மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய ஒரு செய்தியையும் சொன்னார்.

''தான் செய்த தப்பை மறுபேச்சே இல்லாமல் ஒப்புக்கொண்டிருக்கும் 24 நிறுவனங்களிடமிருந்து 4.93 கோடி ரூபாய் அபராதம் செபி வசூலித்து உள்ளது. இத்தொகை முதலீட்டாளர் பாதுகாப்பு நிதிக்குச் சென்று, முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்பது நல்ல விஷயம் என்றாலும், நிறுவனங்களின் மோசடி மற்றும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு என்ன நிவாரணம் என்பதுதான்  விடை தெரியாத கேள்வி. இதற்கும் செபி நடவடிக்கை எடுத்தால் பங்குச் சந்தை மீது நம்மவர்களுக்கு இன்னும் கூடுதல் நம்பிக்கை வரும்; முதலீடும் குவியும்..'' என்றார்.

''சரி, சந்தை இந்த வாரம் நிறைய இறங்கியதே, என்ன காரணம்?'' என்று வினவினோம்.

''இதற்கு பல காரணங்கள். முதல் காரணம், முக்கியமான பொதுத்துறை பங்குகள் தொடர்ந்து சரிந்துகொண்டே வருவது. இண்டெக்ஸில் பொதுத்துறை பங்குகளின் பங்கு சுமார் 30 சத விகிதம் இருக்கிறது. ஆனால், பொதுத்துறை பங்குகள் பல சரிந்து வருகிறது. ஒரு உதாரணத்துக்கு, பி.ஹெச்.இ.எல். பங்குகள் கடந்த 319 வாரங்களைவிட (வாராந்திர முடிவு நிலைப் புள்ளிகள்) குறைவாக முடிந்திருக்கிறது. இந்தப் பங்கு இன்னும் 10 முதல் 12 சதவிகிதம் வரைக்கும் சரிய வாய்ப்பு இருக்கிறது.

மேலும், டிஸ்இன்வெஸ்ட்மென்டில் அதிக பணத்தைத் திரட்ட முடிவு செய்திருப்பதால், பல பொதுத்துறை பங்குகள் இறங்குமுகத்தில் இருக்கிறது. வெள்ளிக்கிழமைகூட நால்கோ பங்கு 8 சதவிகிதம் சரிந்திருக்கிறது. மேலும், கோல் இந்தியா பங்குகூட 10 சதவிகிதம் பங்குகளை விற்கப் போவதாகச் செய்திகள் வருகிறது. அதனால் அந்தப் பங்குகூட சரியக்கூடும்.

சந்தை சரிய இன்னொரு காரணம், பல மார்க்கெட் ஆபரேட்டர்கள் பணப் பிரச்னையில் சிக்கிக்கொண்டதே. அதனால் அவர்கள் வசம் இருக்கும் மற்ற பங்குகளையும் விற்க, சந்தை சரிய ஆரம்பித்தது'' என்றவர், புறப்படும் முன்பு ஒரு சர்ச்சை செய்தியைத் தொட்டார்.

''மூன்று தனியார் வங்கிகள் பிரச்னையில் மாட்டிக்கொண்டது பற்றிய செய்திதான் சந்தையில் இப்போதைக்கு ஹாட் டாப்பிக். அந்த மூன்று பங்குகளும் இன்னும் சில சதவிகிதம் இறங்க வாய்ப்பு இருக்கிறது. ஆக்ஸிஸ் வங்கி 1,200 ரூபாய்க்கும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 950 ரூபாய்க்கும்கூட செல்லலாம் என்கிறார்கள்'' என்றவர், சந்தையின் நிலையற்ற தன்மையால் இந்த வாரம் டிப்ஸ் இல்லை எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென எழுந்து சென்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு