Published:Updated:

சரியும் தங்கம்...வாங்கும் தருணமா?

பானுமதி அருணாசலம்,படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், ஜெ.வேங்கடராஜ்.

பிரீமியம் ஸ்டோரி

முதலீடு

##~##

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு விழ ஆரம்பித்தத் தங்கம் இன்றுவரை ஒரு அவுன்ஸுக்கு (சுமார் 31 கிராம்) 220 டாலர் வரை விலை குறைந்திருக்கிறது. தங்கத்தின் விலை குறைந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த மக்கள், மீண்டும் தங்க நகைகளை வாங்கத் தொடங்கி இருக்கிறார்கள். எனினும் இன்னும் விலை குறையுமோ என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை இறங்க என்ன காரணம்?, விலை இன்னும் இறங்குமா, இல்லை ஏறுமா? மக்கள் மனதில் இருக்கும் கேள்விகளுக்குப் பதில் பெற பல நிபுணர்களுடன் பேசினோம்.

என்ன காரணம்?

முதலில் கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் தங்கம் விலை குறைவதற்கான காரணங்களை அடுக்கினார்.  

"1. கடந்த ஆறு மாத காலமாக சர்வதேச விலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,790 டாலரிலிருந்து 1,585 டாலர் என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதாவது, கடந்த ஆறு மாதத்தில் தங்கம் 10% விலை குறைந்துள்ளது. அதேநேரத்தில், டாலரின் மதிப்பு அதிகரித்தது. 2008-க்குப் பிறகு எடுக்கப்பட்ட தொடர் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்காவில் வேலை  இல்லாதவர்களின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி மாதத்தில் 7.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. நுகர்வோர் செய்யும் செலவு எதிர்பார்த்ததைவிட அதிகரித்ததால், மொத்த விற்பனையும் அதிகரித்தது. இதனால் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்ட தங்கத்தில் முதலீடு செய்வதைத் தவிர்த்து ரிஸ்க் அதிகமுள்ள பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர் மக்கள்.    

சரியும் தங்கம்...வாங்கும் தருணமா?

2. ஜனவரி மாதத்தில் சர்வதேச இ.டி.எஃப். நிறுவனங்கள் சுமார் 140 டன்கள் வரை தங்கத்தை விற்றுள்ளன. ஆனால், இந்தியாவில்

1.5 சதவிகிதம் அளவுக்கு இ.டி.எஃப். நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி இருக்கிறது.  

3. 2012 நவம்பரில் உலக கோல்டு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் தங்கத்தின்

சரியும் தங்கம்...வாங்கும் தருணமா?

மீதான முதலீடு குறைந்தாலும், சீனா அந்த இடத்தைப் பூர்த்தி செய்யும் என்று அறிவித்தது.  ஆனால், சீனாவின் மத்திய வங்கியோ தனது அந்நியச் செலாவணிக் கையிருப்பில் தங்கத்தின் மீதான முதலீடு 2 சதவிகிதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.

4. 2013-ல் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவிகிதமாக இருக்கும் என சர்வதேச நிதி ஆணையம் அறிவித்துள்ளது.

விலை குறையுமா?

அமெரிக்காவில் இந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட ஃபிஸ்கல் கிளிஃப் நடவடிக்கைகள் காரணமாக 7,50,000 பேருக்கு வேலை இழப்பு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் குறைவதற்கு முன்பாக வட்டி விகிதங்களை அதிகரிப்பது அவ்வளவு சுலபமில்லை என்று சொல்லப் படுகிறது. இதன் எதிர்மறையான தாக்கங்களை வரும் மூன்று மற்றும் நான்காவது காலாண்டுகளுக்கான ஜி.டி.பி.-யில் நமக்குத் தெரியவரும்.

அடுத்து, ஐரோப்பிய பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி 0.8 சதவிகிதம் இந்தாண்டு குறைவதற்கான வாய்ப்புகள் இருப்ப தாகவும் கூறப்படுகின்றது. சீனாவில் பணவீக்கமானது கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவிற்கு 3.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.  

இந்தக் காரணங்களால் தங்கத்தின் விலை மேல்நோக்கி செல்லவே வாய்ப்புண்டு. 2008-ல் முதன்முறையாக 1,000 டாலரைத் தொட்டு அதிலிருந்து 750 டாலர் வரை சரிந்தது. அதிலிருந்து மீண்டு

சரியும் தங்கம்...வாங்கும் தருணமா?

ஒரே வருடத்தில் 1,000 டாலருக்கு மேல் ஏற்றம் கண்டது. அதேபோல், சமீபத்திய உச்சமான 1,900 டாலரிலிருந்து 25% குறைந்தால், 1,425 டாலரில் நல்ல ஏற்றம் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது' என்றார்.

அடுத்து, ஐ.எஃப்.ஐ.என். ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் நிறுவனத்தின் கமாடிட்டி டீலர் ஸ்ரீனிவாசனிடம் பேசினோம்.

''இந்தியாவைப் பொறுத்தவரை, தங்கத்தின் மீது மக்களுக்கு அலாதி பிரியம். காரணம், தங்கத்தை ஆபரணத் தேவைக்காகவும், சேமிப்பு மற்றும் முதலீட்டுக் காரணங்களுக்காகவும் மட்டும் வாங்கவில்லை. அவசரகாலத்தில் ஏற்படும் பணநெருக்கடியைச் சமாளிக்கவே வாங்குகின்றனர். இதனால் மத்திய அரசு எதிர்பார்ப்பது போல் தங்கத்தின் இறக்குமதி குறைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

இந்தியாவின் நிலைமையோ இப்படி இருக்க, அமெரிக்காவில் பொருளாதாரம் சீராகும் வரை பாண்ட் வாங்கும் திட்டங்கள் தொடரும் என ஃபெடரல் வங்கி அறிவித்திருக்கிறது. இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது. தவிர, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்து வந்தாலும் இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்தே உள்ளது. காரணம், இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனாலும் தங்கத்தின் விலை உயரவே செய்யும்'' என்றார் அவர்.

அடுத்து, மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜனுடன் பேசினோம்.

''தங்கத்தின் விலை சமீபகாலமாக குறையக் காரணம், பெரிய நிறுவனங்கள் தங்கள் கைவசம் இருக்கும் தங்கத்தை விற்றதே.  இதனால் மற்ற சிறு முதலீட்டாளர்களும் தங்கத்தை விற்று வருகிறார்கள். மேலும், அமெரிக்காவில் சமீபத்தில் வெளியாகும் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் நல்லபடியாக இருப்பதால் டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

தங்கத்தின் விலை இறக்கம் இன்னும் சில மாதங்கள் தொடரும். சர்வதேச சந்தையில் 1,525 டாலர் ஒரு சப்போர்ட் நிலையாகவும், அதைத் தாண்டி இறங்கினால் 1,450 டாலர் அடுத்த சப்போர்ட் நிலையாகவும் கொள்ளவும். இந்தியாவில் ரூபாயின் மதிப்பைப் பொறுத்து தங்கத்தின் விலை இருக்கும். வரும் நாட்களில் ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதால், இந்தியாவிலும் தங்கத்தின் விலை இறங்க வாய்ப்பிருக்கிறது. எம்.சி.எக்ஸ். தங்கம் பத்து கிராம் 29,000 ரூபாய் முதல் சப்போர்ட்டாகவும், இதனைத் தாண்டி விலை இறங்கினால் 28,300 - 28,200 ரூபாய் வர வாய்ப்பிருக்கிறது'' என்றார்.

சரியும் தங்கம்...வாங்கும் தருணமா?

தங்கம் விலை குறைந்திருப்பதால் மக்கள் அதிகமாக நகைகளை வாங்குகிறார்களா என்ன என திருச்சி வேதா ராதா நகைக் கடையின் உரிமையாளர் மோகன்குமாரிடம் கேட்டோம்.

''கடந்த வருடத்தில் ஒரு கிராம் 3,000 ரூபாய் வரை சென்றது, தற்போது 2,700 - 2,750 ரூபாய் என்ற அளவில்  விற்பனையாகி வருகிறது. எனினும், இதுவரை சுமார் 10 சதவிகிதம்தான் விலை குறைந்துள்ளது. ரூ50,000-க்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு எண் தரவேண்டும் என அரசு சொல்வதால், முதலீட்டு அடிப்படையில் தங்கத்தை வாங்க முடியாமல் தவிர்க்கிறார்கள் மக்கள்.  இப்போதைக்கு அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே மக்கள் தங்கம் வாங்குகிறார்கள். குறைந்தபின்பும் தங்கம் வாங்க ஆர்வம்காட்டவில்லை. விலை இன்னும் இறங்கும் என்கிற எதிர்பார்ப்பில் மக்கள் இருக்கிறார்கள்'' என்றார்.

சமீபத்தில் கே.யூ.பி.ராவ் தலைமையிலான குழு ரிசர்வ் வங்கிக்கு அளித்துள்ள பரிந்துரையில், தங்க அடமான கடன் மக்களுக்குச் சாதகமாக உள்ளதாகவும், வங்கிகள் தங்கத்தின் மதிப்பில் தற்போது கொடுக்கும் 60 சதவிகித கடனை 75 சதவிகிதமாக அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளது. இதனால் அனைவருக்கும் நிதிச் சேவை என்பது சாத்தியமாகும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.  

ஆக மொத்தத்தில், தங்கத்தின் விலை குறையும்பட்சத்தில் இன்னும் அதிகமானவர்கள் அதை வாங்குவார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு