Published:Updated:

கறுப்புப் பண வங்கிகள்... கோப்ராபோஸ்ட் கொடுத்த அதிர்ச்சி !

வா.கார்த்திகேயன்.

கறுப்புப் பண வங்கிகள்... கோப்ராபோஸ்ட் கொடுத்த அதிர்ச்சி !

வா.கார்த்திகேயன்.

Published:Updated:

வங்கி-பிரச்னை

##~##

'கோப்ராபோஸ்ட்’ - யாருக்கும் தெரியாமல் இருந்த இந்த இணையதளம் இன்றைக்கு ஃபைனான்ஸ் மற்றும் பிஸினஸ் வட்டாரத்தில் படுபாப்புலராகிவிட்டது. காரணம், சமீபத்தில் இந்த இணையதளம் வெளியிட்ட ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்தான். வெளிநாட்டு வங்கிகளில் குவிந்துகிடக்கும் கறுப்புப் பணத்தை எப்படி கொண்டுவருவது என எல்லோரும் பேசிக்கொண்டிருக்க, நம்மூரில் இருக்கும் சில வங்கிகளே கறுப்புப் பணத்தைப் பதுக்கி நிர்வாகம் செய்வதற்கான ஆலோசனைகளையும், ஏற்பாடுகளையும் செய்துதருகின்றன என்பதுதான் அந்த அதிர்ச்சி ரிப்போர்ட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்ஸிஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய வங்கிகள் கறுப்புப் பணத்தைப் பதுக்குவதற்கு வழி சொல்லித் தருகிறது. இது ஏதோ ஒரு கிளையில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பல இடங்களிலும் நடக்கிறது என்பதை இந்த இணையதளம் வீடியோ ஆதாரத்தோடு (இந்த வீடியோ மட்டுமே 100 மணி நேரத்துக்கு மேல் ஓடுமாம்!) வெளியிட, சம்பந்தப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி, நிதித் துறை வட்டாரங்களே அரண்டுபோய்க் கிடக்கிறது.

வங்கியின் துணையோடு எப்படியெல்லாம் கறுப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்பட்டு இருக்கிறது என்பதை கோப்ராபோஸ்ட் இணையதளமே சொல்கிறது. 'பொதுவாக, 50,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு பான் கார்டு எண் தரவேண்டும். ஆனால், பணமாக முதலீடு செய்யாமல் வேறு பல வழிகளைப் பயன்படுத்தி, பான் கார்டு பிரச்னையிலிருந்து எளிதாகத் தப்பித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, வங்கிக்குக் கொண்டுவரப்படும் பணத்துக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது, தங்க நகைகளை வாங்குவது, வேறு வங்கியிலோ அல்லது அதே வங்கியிலோ பல டி.டி.களை எடுத்து வங்கிக்கு மாற்றுவது, வேறு வங்கியில் போட்டு அதன்பிறகு மொத்தமாக மாற்றுவது, கே.ஒய்.சி. விதிமுறைகளை மீறுவது, பணம் தந்து மற்றவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி, அதன்பிறகு மாற்றுவது உள்ளிட்ட பல வேலைகளை இந்த வங்கிகள் செய்துதர முயன்றுள்ளது' என சொல்கிறது கோப்ராபோஸ்ட்.

இதுமட்டுமல்லாமல், சாதாரணமாக வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம்கூட இப்படி ஒரு வழிமுறை இருக்கிறது என்பதைச் சொல்லி பேரம் பேசி இருக்கிறார்கள் இந்த வங்கி அதிகாரிகள் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது கோப்ராபோஸ்ட்.

கறுப்புப் பண வங்கிகள்... கோப்ராபோஸ்ட் கொடுத்த அதிர்ச்சி !

இந்தச் செய்தி வந்தவுடன் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சில பணியாளர்களை சஸ்பெண்ட் செய்தது. மற்ற வங்கிகளும் சில ஒழுங்குநடவடிக்கைகளை எடுத்தது. மறுபுறம் ரிசர்வ் வங்கியும் விசாரணை நடத்தி வருகிறது.

நடந்த சம்பவத்தைப் பற்றி சில முன்னணி வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரிகளிடம் பேசினோம். 'ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து எல்லா வங்கிகளுமே இப்படித்தான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது’ என்று ஆரம்பித்த அவர்கள், 'ஒவ்வொரு வங்கிக்கு உள்ளும் பல சோதனைகள் இருக்கிறது. அதை நாங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறோம். இருந்தாலும் சில திட்டங்களில் பணம்போட பான் கார்டு தேவை இல்லாததைப் பயன்படுத்தி இந்த முறைகேடு நடந்திருக்கிறது. இதற்காக எல்லாத் திட்டங்களுக்கும் பான் கார்டு அவசியம் தரவேண்டும் என்கிற நடைமுறையைக் கொண்டு வருவதிலும் சிக்கல் இருக்கிறது. வங்கிகள், ஊழியர்களுக்கு நேர்மையாக நடந்துகொள்ளும் 'பிஸினஸ் எத்திக்ஸ் பயிற்சி’ கட்டாயம் தரவேண்டும்’ என்று முடித்தார்கள்.

வங்கிக் கணக்குகள் அனைத்துக்கும் ஒரே எண் இருந்தால் இம்மாதிரி கறுப்புப் பணத்தைக் கணக்கில் கொண்டுவருவதைத் தடுக்க முடியுமா? என மற்றொரு வங்கி உயரதிகாரியிடம் கேட்டோம். ''ஒரே ஒரு வங்கிக் கணக்கு எண் என்பது நடைமுறையில் அவ்வளவு சாத்தியமல்ல. ஒரு பான் கார்டுக்கு எத்தனை வங்கிக் கணக்கு இருக்கிறதோ அத்தனை கணக்குகளையும் வங்கி மூலம்  இணைக்கலாம். ஆனால், அதிலேயும் சில பிரச்னைகள் இருக்கிறது. ஒருவரே இரண்டு, மூன்று பான் கார்டுகளை வாங்க முடியும். மேலும், பல நிதித் திட்டங்களில் பணம் போட பான் கார்டு தேவை இல்லை. ஆனால், ஆதார் கார்டு மூலம் அனைத்தையும் இணைக்கும்போது, கருவிழி, கைரேகை போன்றவற்றை சேர்த்துப் பார்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் இது சாத்தியப்படலாம்!'' என்றார் அவர்.

இந்தப் பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதேபோன்ற பிரச்னை மற்ற வங்கிகளில் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. வங்கிகள்தான் நாட்டின் முதுகெலும்பு என்பது வங்கியாளர்களுக்குத் தெரியாதது அல்ல.!

அட்டகாச அனிருத்தா !

 இந்த ஆன்லைன் பத்திரிகையின் நிறுவனர் அனிருத்தா பஹால். தெஹல்கா-வில் இருந்து விலகி 2003-ம் ஆண்டு இந்த இணையதளத்தை ஆரம்பித்தார். ஏன் இந்த மூன்று வங்கியை எடுத்துக்கொண்டீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, ''இப்போதைக்கு இந்திய வங்கிகளில் இந்த வங்கிகள்தான் உச்சத்தில் இருக்கிறது. மேலும், அதிகளவில் கிளைகளும் இருக்கிறது'' என்று சொல்லி இருக்கிறார். ''விளைவுகளை நினைத்து பயப்படவில்லை என்றாலும் எச்சரிக்கையாக இருக்கிறோம்'' என்று கூறி இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism