Published:Updated:

கோல்டு டெபாசிட் திட்டம்...உங்களுக்கு லாபமா?

இரா.ரூபாவதி.

கோல்டு டெபாசிட் திட்டம்...உங்களுக்கு லாபமா?

இரா.ரூபாவதி.

Published:Updated:

தங்கம்-முதலீடு

##~##

ஆண்டுக்காண்டு அதிகரித்துவரும் தங்கத்தின் அளவு அரசாங்கத்துக்குப் பெரும் தலைவலியாக மாறிவிட்டது. தங்கத்தின் இறக்குமதியை எப்படி குறைக்கலாம் என்று யோசித்த அரசாங்கம், இறக்குமதி வரியை உயர்த்தியது.  வேறு எந்த வகையிலெல்லாம் தங்கம் இறக்குமதி செய்வதைத் தடுக்கலாம் என யோசித்ததன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளைவு, எட்டு ஆண்டு காலத்துக்கு முன்பு போட்ட தங்க டெபாசிட் திட்டத்தை இப்போது மீண்டும் தூசிதட்டி பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இந்த தங்க டெபாசிட் திட்டம் தற்போது எஸ்.பி.ஐ. வங்கியில் மட்டும்தான் உள்ளது. எனவே, இத்திட்டம் குறித்து எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தோம்.  

''தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்கவும், வீட்டில் வைத்திருக்கும் தங்கத்தை மறுசுழற்சிக்குக் கொண்டுவரவும் கடந்த 2005-ல் தங்க டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்தது அரசு. இடையில் இத்திட்டத்தை நிறுத்திவைத்த மத்திய அரசாங்கம் மீண்டும் 2008-ல் அமலுக்குக் கொண்டுவந்தது. தங்க கட்டிகளைத்தான் இதில் டெபாசிட் செய்யவேண்டுமென்பதில்லை. தங்க நகைகளையும் டெபாசிட் செய்யலாம். தேவைக்கு அதிகமாக இருக்கும் தங்க நகைகள் மூலம் வருமானம் ஈட்ட நினைப்பவர்களுக்கு இத்திட்டம் உதவும்.  

மதிப்பீடு..!

இத்திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் தங்க நகைகளை வங்கியில் உள்ள ஒரு நகை மதிப்பீட்டாளர் மதிப்பீடு செய்வார்.

22 கேரட் தங்க நகையை 24 கேரட்டாக சுத்தம் செய்து மதிப்பீடு செய்வார். இந்த மதிப்பீடு சரி என்று ஒப்புக்கொண்டால், தங்கத்தை டெபாசிட் செய்யலாம். (வங்கி செய்யும் இந்த மதிப்பீட்டிற்கு ரூ.200 முதல் ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது!) டெபாசிட்டாகப் பெறப்படும் தங்க நகைக்கு ஒரு ரசீதும் தரப்படும். இதன்பிறகு இந்த தங்க நகை மும்பையில் உள்ள புல்லியன் கிளைக்கு அனுப்பப்படும். அங்கு மீண்டும் நகையை மதிப்பீடு செய்வார்கள். அதன்பிறகு அந்த நகையை உருக்கி அந்த மதிப்புக்கு சான்றிதழ் தருவார்கள். இதற்கு ஒரு மாதகாலம் ஆகும்.

கோல்டு டெபாசிட் திட்டம்...உங்களுக்கு லாபமா?

இதில் கவனிக்கவேண்டிய விஷயம், டெபாசிட் ஆகும் தங்கத்தை உருக்கிவிடுவோம். அதேபோல கல் வைத்த நகைகளில் உள்ள கல்லை நீக்கிவிட்டு தான் மதிப்பீடு செய்வோம். எஸ்.பி.ஐ. வங்கியில் வாங்கிய தங்க காயின்களாக இருந்தால், அதை அப்படியே வாங்கிக்கொள்வோம். வேறு வங்கியில் வாங்கிய காயின் என்றால் அதையும் உருக்கி மதிப்பீடு செய்தே எடுத்துக்கொள்வோம்.

நீங்கள் டெபாசிட் செய்யும் தங்க நகை மீண்டும் உங்களுக்குக் கிடைக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இதில் கோயில்கள், நிறுவனங்கள், தனிநபர் என யார் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். நாமினி வசதியும் உண்டு. மேலும், இதை ஒருவரின் பெயரிலிருந்து மற்றொருவரின் பெயருக்கு மாற்றம் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. அதேபோல டெபாசிட்டை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் வசதியும் உண்டு.  

ஆவணங்கள்..!

இத்திட்டத்தில் டெபாசிட் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஏதாவது ஒன்றைத் தரவேண்டும். மேலும், சமீபத்தில் எடுத்த புகைப்படம், முகவரி சான்றிதழையும் தரவேண்டும். சென்னையில் தி.நகர், அண்ணா சாலை ஆகிய எஸ்.பி.ஐ. வங்கிக் கிளைகளிலும் தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் இந்தியாவில் மொத்தம் 55 இடங்களில் இந்தச் சேவை உள்ளது.

எவ்வளவு வட்டி?

குறைந்தபட்சம் 500 கிராம், அதிகபட்சம் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் இதில் டெபாசிட் செய்யலாம். 3, 4, 5 வருடங்கள் என டெபாசிட் செய்யலாம் என்றாலும், குறைந்தபட்சம் மூன்று வருடமாவது டெபாசிட்டை வைத்திருக்கவேண்டும்.

3 வருட டெபாசிட்க்கு 0.75 சதவிகித தங்கமும் 4, 5 வருட டெபாசிட்டிற்கு 1 சதவிகித தங்கமும் வட்டி கிடைக்கும். இந்த வட்டி ஒவ்வொரு வருடமும் மார்ச் 31-ம் தேதி கணக்கிடப்படும். டெபாசிட்டை இடையில் எடுத்தால் அபராதம் உண்டு. 0.25 சதவிகிதத்திலிருந்து 0.5 சதவிகிதம்  வரை அபராதம் இருக்கும்.

500 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், இதற்கான வட்டியாக வருடத்திற்கு

5 கிராம் தங்கத்தின் மதிப்புக்கு சமமான ரூபாய் கிடைக்கும். இந்தக் கணக்கு வட்டி கொடுக்கும் தேதியன்று இருக்கும் தங்கத்தின் விலையில் கணக்கிடப்படும்.  

கடன் வசதி..!

நீங்கள் டெபாசிட் செய்யும் தங்கத்தின் மதிப்பில் 70-லிருந்து 80 சதவிகிதம் வரை கடன் வாங்கிக்கொள்ள முடியும். இதற்கு டெபாசிட் சான்றிதழை அடமானம் வைத்து கடன் வாங்கலாம். தங்கத்தை டெபாசிட் செய்த வங்கியில்தான் இதற்கான கடனும் தரப்படும். மற்ற வங்கிகளிலும் கடன் வாங்க முடியும் என்றாலும், பல வங்கிகள் அதை செய்வதில்லை. ஆனால் டெபாசிட்டிற்கு கிடைக்கும் வட்டி அப்படியே இருக்கும். இந்தக் கடனுக்கான வட்டி, நகைக் கடன் வட்டி அளவிலேயே இருக்கும்.

சான்றிதழ்..!

மொத்தமாக 2,500 கிராம் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், இதற்கு அதிகபட்சம் ஐந்து சான்றிதழ்கள் வாங்கிக்கொள்ளலாம். அதாவது, குறைந்தபட்சம் 500 கிராமிற்கு ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதிகபட்சம் ஐந்து சான்றிதழ்கள் வரை வாங்கிக்கொள்ளலாம். இப்படி செய்யும்போது இடையில் தங்கம் அல்லது பணம் தேவைப்பட்டால் சான்றிதழ் தந்து பணம் வாங்கிக்கொள்ளலாம். இதனால் அபராதம் குறையும்.  

வரிச் சலுகை..!

இத்திட்டத்தில் தங்கத்தை டெபாசிட் செய்து அதில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி கிடையாது. அதேபோல இப்படி டெபாசிட் செய்யும் தங்கத்திற்கு செல்வ வரியும் இல்லை. மேலும் மூலதன ஆதாய வரியும் கிடையாது.

இன்ஷூரன்ஸ்..!  

டெபாசிட் செய்யும் தங்கத்தை மும்பையின் உள்ள புல்லியன் கிளைக்கு அனுப்பும்போது ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் அதற்கான இழப்பீடு உங்களுக்குக் கிடைக்கும். இந்தக் காலத்திற்கு வங்கி இன்ஷூரன்ஸ் எடுத்து வைக்கும்.  

திரும்ப எடுக்கும்போது!

டெபாசிட் செய்த தங்கம் அதன் முதிர்வின் போது தங்க கட்டிகளாக அல்லது பணமாகத்தான் கிடைக்கும்.  உங்களுக்கு எந்தவிதத்தில் வேண்டும் என்பதை ஒரு மாதத்திற்கு முன்பே வங்கிக்குத் தெரிவிக்கவேண்டும். மேலும், இதை முன்கூட்டியே தெரிவித்திருந்தாலும் அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், கடைசி மூன்று மாதத்தில் இதை செய்ய முடியாது. இதில் தங்கமாக வேண்டும் என்றால் 500 கிராம் தங்கத்தை

10 கிராம் பார்களாக மொத்தம் 50 பார்களாகத் திரும்பத் தருவார்கள். மேலும், பத்து கிராமிற்கு குறைவான தங்கத்திற்கு பணம் மட்டும்தான் தருவார்கள்.

வரவேற்பு எப்படி?

இத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பு குறைவாகவே உள்ளது. நகையை நம் மக்கள் அழித்து கட்டிகளாக வைத்துக்கொள்ள விரும்பு வதில்லை. கணக்கில் வராமல் இருக்கும் தங்கமே அதிகமாக இருப்பதால் வங்கியில் டெபாசிட்-ஆக வைக்க யாரும் விரும்புவதில்லை. தவிர, இத்திட்டம் மூலம் கிடைக்கும் வட்டி மிக மிக குறைவு. காயினாகவோ அல்லது தங்கக் கட்டிகளாகவோ வைத்திருப்பவர்களுக்கு இத்திட்டம் பாதுகாப்பையும் , சிறிய வருமானத் தையும் தரும்.

மறுசீரமைப்பு..!

தற்போது இத்திட்டத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதத்தில் மீண்டும் அமலுக்கு வரும் எனவும் வங்கி அதிகாரிகள் சொல்கிறார்கள். அப்போது குறைந்தபட்ச டெபாசிட் அளவு 200 கிராமாகக் குறையும் எனவும், டெபாசிட் காலம் ஆறு மாதங்களாக குறைக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்கள்.

சேதாரம் எவ்வளவு..?

கோல்டு டெபாசிட் திட்டம்...உங்களுக்கு லாபமா?

22 கேரட் நகையை 24 கேரட் தங்கமாக மாற்றும்போது எவ்வளவு சேதாரம் ஏற்படும் என்று ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெயினிங் சென்டர் இயக்குநர் சுவாமிநாதனிடம் கேட்டோம்.

''தங்க நகை டெபாசிட் திட்டத்தில் வாடிக்கையாளர் தரும் 22 கேரட் நகையை உருக்கி 24 கேரட்டாக மாற்றும்போது 8 சதவிகிதம்  சேதாரம் ஏற்படும். அதே நகையை நீங்கள் கடைகளில் கொண்டுபோய் தந்தால்,

24 கிராமிற்கு 2 முதல் 3 கிராம் வரை சேதாரத்தைக் கழித்துவிடுவார்கள். அதாவது, 8 கிராம் கொண்ட 24 கேரட் தங்கத்தில்

1 கிராம் செப்பு கலந்து நகை செய்வார்கள். அந்த நகையை மீண்டும் உருக்கும்போது அந்த ஒரு கிராம்தான் கழிவு போகும். அதே 916 தர நகை என்றால் அது 84 மில்லி செப்பு கலந்திருப்பார்கள், அதை கழித்து மதிப்பீடு செய்வார்கள். 916 கே.டி.எம். நகை என்றால் விற்கும்போது கழிவு கிடையாது என நகைக் கடைக்காரர்கள் சொன்னாலும் பெரும்பாலான கடைகளில் 24 கிராமிற்கு 2-லிருந்து 3 கிராம் வரை சேதாரத்தைக் கழிக்கவே செய்கிறார்கள்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism