ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

ஷேர்லக் - சிறுமுதலீட்டாளர்களை பதம் பார்த்த அரசாங்கம் !

ஷேர்லக் - சிறுமுதலீட்டாளர்களை பதம் பார்த்த அரசாங்கம் !

##~##

''ஹேப்பி நியூ இயர்'' என்றபடி உள்ளே நுழைந்தார் ஷேர்லக். ''தமிழ் வருடப் பிறப்புக்கான வாழ்த்தை இப்போதே சொல்லிவிடுகிறீர்களா?'' என்றோம். ''அதற்கு நேரம் இருக்கிறது. நான் சொன்னது புதிதாகப் பிறக்கப் போகும் நிதி ஆண்டுக்கான வாழ்த்து. வரும் நிதி ஆண்டு நாணயம் விகடன் வாசகர்களுக்கெல்லாம் லாபமாக அமையட்டும்!'' என்று வாழ்த்திவிட்டு, செய்திகளுக்கு வந்தார்.

''இந்த நிதி ஆண்டு (2012-13) ஒருவழியாக முடிந்து விட்டது. பங்குச் சந்தை கிட்டத்தட்ட எஃப்.டி. வருமானம்போல் 10 சதவிகிதம் தந்திருக்கிறது. இந்த வருமானத்துக்கு ஓராண்டு கடந்தால் வரி இல்லை என்பதால் லாபம் என்று சொல்லலாம். சில இண்டெக்ஸ்கள் சென்செக்ஸையும் தாண்டி வருமானம் தந்திருக்கிறது. பி.எஸ்.இ. எஃப்.எம்.சி.ஜி இண்டெக்ஸ் சராசரியாக 32.35 சதவிகிதமும், பி.எஸ்.இ. ஹெல்த்கேர் இண்டெக்ஸ்  சராசரியாக 24.23 சதவிகிதமும் வருமானம் தந்திருக்கிறது. அதேநேரத்தில் மெட்டல் இண்டெக்ஸ் 20.5 சதவிகிதமும், பவர் இண்டெக்ஸ் 20 சதவிகிதமும் வீழ்ச்சி கண்டிருக்கிறது. சந்தையைத் தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் நஷ்டத்திலிருந்து தப்பித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்றவருக்கு, வேகவைத்த கடலையை ஒரு தட்டில் வைத்துத் தந்தோம். ''எண்ணெய் பலகாரங்களுக்கு இந்த இயற்கை உணவு எவ்வளவோ மேல்'' என்று கமென்ட் அடித்தபடி சாப்பிட ஆரம்பித்தார்.  

''ரிலையன்ஸ் பங்கின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறதே?'' வாசகர்களின் கவலையை ஷேர்லக்கிடம் கேள்வியாகக் கேட்டோம்.

''ரிலையன்ஸுக்கு இது போதாதகாலம்தான். நிதி ஆண்டு இறுதியில் அதன் பங்குகளின் விலை தொடர்ந்து பத்து வர்த்தக தினங்களாக இறங்கி வந்திருக்கிறது. இதனால் சென்செக்ஸ் குறியீட்டில் இதன் வெயிட்டேஜ் இன்ஃபோசிஸ், ஐ.டி.சி பங்குகளைவிட குறைந்து மூன்றாவது இடத்தில் 8.57 சதவிகிதமாக உள்ளது. இதன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு ஒரு பேரலுக்கு 5 டாலரிலிருந்து

ஷேர்லக் - சிறுமுதலீட்டாளர்களை பதம் பார்த்த அரசாங்கம் !

4 டாலராக குறைந்துள்ளது. மேலும் கேஜி6 பிளாக்கிலிருந்து உற்பத்தியாகும் நேச்சுரல் கேஸும் 37 % குறைந்துள்ளது. ஒரு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு கொட்டிகொடுத்த ரிலையன்ஸ் இப்போது அவர்களின் ராடாரில் இல்லை. இந்தப் பங்கை வைத்திருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்'' என்றார்.

''அண்மையில் ஆஃபர் சேல் மூலம் செயில் பங்கு விற்பனை வெற்றிகரமாக முடிந் திருக்கிறதே?'' என்றோம்.

''எல்லாம் எல்.ஐ.சி. அண்ணன் செய்த உதவிதான். அண்மைக்காலமாக எல்.ஐ.சி. நிறுவனம் பங்குச் சந்தையில் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறது. செயில் பங்கு விற்பனையில் 70.57 சதவிகிதப் பங்குகளை ரூ.1517 கோடிக்கு எல்.ஐ.சி. வாங்கி இருக்கிறது. அதேசமயம், ஏழு பொதுத்துறை நிறுவனங்களின் ஆஃபர் சேலினால் அவற்றின் பங்கு விலை குறைந்ததில், மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் 50,000கோடி ரூபாய் குறைந்துள்ளது. இது அரசாங்கத்துக்குக் கிடைத்த 24,000 கோடி ரூபாயைப்போல் இரண்டு மடங்காகும். ஆக, பற்றாக்குறையைத் தீர்க்க சிறுமுதலீட்டாளர்கள் தலையில் அரசாங்கம் கைவைத்தது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இப்படி அரசு நடக்க ஆரம்பித்தால் பங்குச் சந்தை பக்கம் மக்கள் எப்படி வருவார்கள்?'' என்று பொருமினார்.

ஷேர்லக் - சிறுமுதலீட்டாளர்களை பதம் பார்த்த அரசாங்கம் !

''அண்மைக்காலமாக ரியல் எஸ்டேட் கம்பெனிகள் செய்திகளில் அதிகம் அடிபட ஆரம்பித்திருக்கிறதே..?'' என்று இழுத்தோம், அவருக்கு ஏலக்காய் டீ தந்தபடி.

''முதலீட்டாளர்களிடமிருந்து வாங்கும் பணத்தில் (கலெக்டிவ் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீம்ஸ்) இடம் வாங்கி, அதில் வீடு கட்டி, அதிக விலைக்கு விற்று லாபம் தருவதாகப் பொய்யான வாக்குறுதி தந்தன சில நிறுவனங்கள். ஆனால், அதன்படி நடக்காத  நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் செபி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. நைசர் கிரீன் ஃபாரஸ்ட், பி.ஜி.எஃப். உள்ளிட்ட சுமார் ஐம்பது நிறுவனங்களை செபி விசாரிக்க ஆரம்பித்திருப்பதாகத் தகவல். இந்த கம்பெனிகள், இந்தியாவின் வட மற்றும் மேற்கு மாநிலங்களில் இயங்கி வருகின்றன. ரியல் எஸ்டேட் மந்தநிலை சீராகாத நிலையில், இதுபோன்ற வாக்குறுதிகளைத் தரும் நிறுவனங்களில் முதலீடு செய்யவேண்டாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்'' என்றார் ஷேர்லக்.

''இன்சைடர் டிரேடிங் பிரச்னையை ஒழித்துக் கட்டவும் செபி நடவடிக்கை எடுத்திருக்கிறதே?'' என்றோம்.

''புது நிதி ஆண்டில் பங்குச் சந்தையில் அதிக ஏற்றம் மற்றும் இன்சைடர் டிரேடிங் உள்ளிட்ட பல விஷயங்களை கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது செபி. இதன் ஒரு பகுதியாக நான்கு பங்குகளின் விலை அதிகரிப்புக்கு கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கிறது. அதாவது, எஸ்ஸார் ஆயில், சுஸ்லான் எனர்ஜி, எஜுகாம் மற்றும் கோர் எஜுகேஷன் பங்குகளின் விலை ஒரு நாளில் அதிகபட்சம் 10 சதவிகிதம் மட்டுமே மாறுவதற்கு  அனுமதிக்கப்படும். எனவே, அந்தப் பங்கை வாங்குகிறவர்கள் இனி ஜாக்கிரதையாக இருப்பது நல்லது'' என்றார்.

''சமீபத்தில் வட்டி விகிதம் குறைக்கப்பட்ட தினால் என்ன பாதிப்பு உருவாகியிருக்கிறது?'' என்றோம்.  

''வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும், கடனுக்கான வட்டி விகிதம் பெரும்பாலும் குறையவில்லை. அதிக வட்டிக்கு கடன் வாங்கி பிஸினஸ் செய்வது என்பது இப்போது முடியாத காரியம். மேலும், இந்தியாவின் பல மேக்ரோ எக்கனாமிக் இண்டிகேட்டர்களும் சரி இல்லை. 2008-ம் ஆண்டு நெருக்கடி வந்தபோது, குரூட் ஆயில் விலை குறைவாக இருந்தது. அதனால் நாம் இறக்குமதி செய்வதற்கு அதிகம் செலவாகவில்லை. ஆனால், இப்போது குரூட் ஆயில் விலை 100 டாலர் என்ற அளவிலே இருக்கிறது. மேலும், 2008-ல் சுமார் 20 பில்லியன் டாலர் அளவுக்குதான் தங்கத்தை இறக்குமதி செய்தோம். ஆனால், இப்போது 50 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்கிறோம். நாம் அதிகமாக இறக்குமதி செய்வதால் நடப்பு கணக்குப் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இதனால் ரூபாய் தொடர்ந்து சரிந்து வருகிறது. நெருக்கடி வந்தபோது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 45 ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது 54 ரூபாய்.

மேலும், 2007-ம் ஆண்டு இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்திருந்தபோது, சுமார்

78 பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்க டாலரை வாங்கியது ரிசர்வ் வங்கி. ஆனால், ரூபாய் சரிய சரிய, கொஞ்சம் கொஞ்சமாக விற்று ரூபாயின் சரிவை தடுத்தது. அப்போது வாங்கிய தொகையில் சுமார் 18 பில்லியன் டாலர்கள் மட்டுமே இப்போது ரிசர்வ் வங்கியிடம் இருக்கிறது. இதற்கு மேலும் ரூபாய் சரியும்போது ரிசர்வ் வங்கியால் தடுக்க முடியாது. எனவே, இனி ரூபாயின் மதிப்பு இன்னும் வேகமாக குறையலாம். அப்படி நடந்தால் இன்னும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும்''என்றவர், விரைவில் எலெக்ஷன் வரும் என்று எதிர்பார்ப்பு கூடுவதால் சந்தையில் அந்நிய முதலீடுகள், ரிசல்ட் வரும்வரை தள்ளிப்போகலாம்  என்று சொல்லிவிட்டு, புறப்படத் தயாரானார்.

''புதிய நிதி ஆண்டில் ஷேர் டிப்ஸ் இல்லையா...?'' என்று கேட்டோம்.

''அடுத்த வாரத்தில் சந்தை கொஞ்சம் ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கும் என்பதால் டிப்ஸ் வேண்டாமே!'' என்றார். அவர் சொன்னால் அது சரியாகத்தானே இருக்கும்!