ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

அக்ரி கமாடிட்டி !

பானுமதி அருணாசலம்.

##~##

இந்த வாரம் மஞ்சளின் விலை ஏற்ற, இறக்கம் குறித்து சொல்கிறார் ஜியோஜித் காம்ட்ரேட் நிறுவனத்தின் இயக்குநர் சி.பி.கிருஷ்ணன்.

''2012-ம் வருடத்தின் மத்தியில் இருந்த விலையிலிருந்து மீண்டு தற்போது நல்ல நிலையில் வர்த்தகமாகி வருகிறது மஞ்சள். அப்போதிருந்த குறைந்த விலையான 3,474 ரூபாயிலிருந்து மீண்டு 110 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் துவங்கியதிலிருந்து சுமார் 19 சதவிகிதம் வரை விலை அதிகரித்துள்ளது.

என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் லாங்க் பொசிஷன் போகிறவர்களுக்கு 10 சதவிகிதம் வரை சிறப்பு மார்ஜின் விதித்தும் இந்த விலை அதிகரிப்பு கண்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்திக் குறைவு உள்ளிட்ட பலமான அடிப்படை காரணங்களால் மஞ்சள் விலை  உயர்ந்துள்ளது.

கடந்த வருடத்தைவிட சுமார் 40 முதல் 50 சதவிகிதம் வரை மஞ்சள் உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த வருடத்தில் மஞ்சளின் விலை வரலாறு காணாத அளவுக்கு குறைந்ததால் விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டுள்ளனர். மேலும்,

மஞ்சள் அதிகம் விளையும் பகுதி களான ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மழை சரிவர பெய்யாததும் உற்பத்தி குறைய மற்றுமொரு காரணமாக அமைந்து விட்டது.

எனினும், அடிப்படைக் காரணங்கள் பலமாக இருப்பதால் மஞ்சளின் விலை வரும்நாட்களில் அதிகரித்தே வர்த்தகமாகும். தற்போதிருக்கும் விலையிலிருந்து உடனடியாக 7,200 ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. இந்த விலை வந்தபிறகு 9,000 மற்றும் 11,000 என்ற விலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி !

தற்போது விலை குறைய வாய்ப்பில்லை என்றாலும் 5,900 ரூபாய் என்ற விலை வந்தால் மஞ்சளை விற்றுவிடுவதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளவும். 5,200 ரூபாய் விலை வந்தால் அதன்பிறகு இன்னும் விலை குறைந்து 4,800 வரை போகும்.

இதை எச்சரிக்கையாகவே கொள்ளவேண்டும். அடிப்படைக் காரணங்களைக்கொண்டு பார்க்கும்போது, வரும் நாட்களில் மஞ்சளின் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது.''

மிளகு! (Pepper)

அக்ரி கமாடிட்டி !

உள்நாட்டு டிமாண்ட் குறைந்த தும், வரத்து சென்ற வாரத்தில் அதிகமாக இருந்ததாலும் மிளகு விலை வார ஆரம்பத்தில் குறைந்து வர்த்தகமானது. தவிர, குடோன்களில் அதிகமான மிளகு ஸ்டாக் உள்ளதாக கூறப்பட்டதாலும், பிராஃபிட் புக்கிங் செய்ததாலும் விலை குறைந்தது. மேலும், 34 டன் மிளகு, உணவுப் பாதுகாப்பு ஆணையத்திலிருந்து அனுமதிக்காக காத்துக்கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ சுமார் 348 ரூபாய்க்கு வர்த்தகமானது. வரும் வாரத்திலும் வரத்து அதிகமாக இருக்கும்பட்சத்தில் விலை குறைந்து வர்த்தகமாக வாய்ப்புண்டு.

ஜீரகம்!   (Jeera)

அக்ரி கமாடிட்டி !

ஏற்றுமதிக்கான தேவை அதிகமாக இருந்ததால் சென்ற வாரத்தில் ஒரு சதவிகிதம் வரை விலை அதிகரித்து வர்த்தகமானது. என்.சி.டி.இ.எக்ஸ். ஏப்ரல் கான்ட்ராக்ட் குவிண்டாலுக்கு 120 ரூபாய் அதிகரித்தும், மே கான்ட்ராக்ட் 80 ரூபாய் அதிகரித்தும் வர்த்தகமானது. எனினும், ஆண்டுக் கணக்கு முடிவு மற்றும் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் சந்தை மூடப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் மாதத்தில் 5,24,690 டன் ஜீரகம் ஏற்றுமதியாகி உள்ளது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிதி ஆண்டில் சென்ற ஆண்டைவிட ஏற்றுமதி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீரகம் உற்பத்தியும் சென்ற ஆண்டைவிட 20-25 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. வரும் வாரங்களிலும் டிமாண்ட் அதிக மாகவும், ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதால், விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புண்டு.

கடுகு விதை! (Mustard seed)

அக்ரி கமாடிட்டி !

ஸ்பாட் சந்தையில் வரத்து குறைவாக இருந்ததும், டிமாண்ட் அதிகரித்ததாலும் சென்ற வாரத்தில் விலை அதிகரித்து வர்த்தகமானது. சராசரியாக இந்த மாதத்தில் 7,00,000 பைகள் வரவேண்டிய இடத்தில், தற்போது 5,00,000 - 5,50,000 பைகள் என்ற ரீதியில் வரத்து வந்துகொண்டிருக்கிறது. வரத்து குறைந்துள்ளதும், நல்ல டிமாண்ட் இருப்பதாலும் வரும் வாரத்தில் விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

மிளகாய்! (Chilli)

அக்ரி கமாடிட்டி !

புதிய மிளகாய் சந்தைக்கு வந்ததால் சென்ற வாரத்தில் விலை குறைந்தது. எனினும், உற்பத்திக் குறைவாக உள்ளதாக தகவல் வந்ததால், விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் குண்டூர் சந்தையில் சிவப்பு மிளகாய் குறைந்த அளவிலே வர்த்தகமானது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது குண்டூர் சந்தையில் மிளகாய் உற்பத்தி 25-30 சதவிகிதம் குறைந்துள்ளது. குண்டூர் பகுதிகளில் இந்த வருடம் சுமார் 70-75 லட்சம் பைகள் மிளகாய் விளைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரத்தில் வருடக் கணக்கு முடிவு மற்றும் விடுமுறை நாட்கள் வந்ததால் வர்த்தகம் பெரியளவில் சூடு பிடிக்கவில்லை. புதிய வரத்து வந்ததாலும், உற்பத்தி குறைந்துள்ளதாலும் வரும் வாரத்தில் விலை அதிகரித்து வர்த்தகமாக வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அக்ரி கமாடிட்டி !