Published:Updated:

செக்டார் அனாலிசிஸ் - டெலிகாம் துறை...ஓங்கி ஒலிக்குமா ..?

வி.நாகப்பன்

##~##

சென்னையில் இருக்கும் உறவினரோடு அவசரமாக போனில் பேசவேண்டுமா? கவலை வேண்டாம்; உங்கள் ஊரில் உள்ள டெலிபோன் எக்ஸ்சேஞ்சுக்கு போன் செய்து, 'மெட்ராஸுக்கு ஒரு அர்ஜென்ட் கால் புக் பண்ணுங்க சார்’னு சொன்னால், அரை மணி நேரம் கழித்து சாவகாசமாக கனெக்ட் செய்வார்கள். இதுவே ஆர்டினரி கால் எனில், எப்போது பேசலாம் என்பதற்கு எந்த நிச்சயமும் கிடையாது. உடனே பேசவேண்டுமென்றால், உங்களை லைனில் வைத்துக்கொண்டே கனெக்ட் செய்வார்கள்; அதற்கு பெயர் 'லைட்னிங் கால்’! அதற்கான கட்டணமும் மின்னலைப்போல 'லைட்னிங்’ (இடி) மாதிரி ஷாக்கடிக்கும்!

இதெல்லாம் இந்தக் காலத்து இளைஞர் களுக்குப் புரிய வாய்ப்பில்லை.  ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதுதான் தினப்படி சமாச்சாரம். எப்போது, எப்படி மாறியது இதெல்லாம்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தகவல் தொலைதொடர்புத் துறையில் தனியார் பிரவேசம் பெரிய அளவில் நடந்தது தொண்ணூறுகளின் துவக்கத்தில்; கூடவே மொபைல் புரட்சியும் சேர்ந்தது. இன்று செல்போன் இல்லாத வீடே இல்லை. ஜனவரி மாதம் 31-ம் தேதி நிலவரப்படி 89.31 கோடி இணைப்புகள் உள்ளன நம் நாட்டில் என்கிறது 'டிராய்’ என்னும் டெலிகாம் ரெகுலேட்டரி அத்தாரிட்டி ஆஃப் இந்தியா.  

நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை ஜி.எஸ்.எம்.-ல் மட்டுமே 65 கோடியே 55 லட்சம் சந்தாதாரர்கள் அல்லது தொடர்புகள் உள்ளன என்கிறது 'செல்போன் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’வின் (COAI) புள்ளிவிவரம். மாநில வாரியாகப் பார்த்தால், 5.81  கோடி  இணைப்புகளுடன் உத்தரப்பிரதேச மாநிலம் முதல் இடம் வகிக்கிறது.

செக்டார் அனாலிசிஸ் - டெலிகாம் துறை...ஓங்கி ஒலிக்குமா ..?

சேவை நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், 18.66 கோடி இணைப்புகளோடு முதல் இடம் வகிக்கிறது பார்தி ஏர்டெல் நிறுவனம்! 14.99 கோடி இணைப்புகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது வோடஃபோன் நிறுவனம். இதற்கு அடுத்தபடியாக ஐடியா செல்லுலார் நிறுவனம்.  

தொலைதொடர்புத் துறையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். அவை:

 தொலைதொடர்புச் சேவை நிறுவனங்கள்: பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலி மஹாராஷ்ட்ரா, எம்.டி.என்.எல்., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், துலிப் டெலிகாம் போன்ற நிறுவனங்கள்.

 தொலைதொடர்புத் துறைக்குத் தேவையான உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள்:

பஞ்சாப் கம்யூனிகேஷன்ஸ், ஹிமாச்சல் ஃப்யூச்சரிஸ்டிக்ஸ், நெல்கோ, ஜெமினி கம்யூனிகேஷன்ஸ், குளோபல் டெலி, ஐ.டி.ஐ. ஆகியவற்றை சொல்லலாம்

முதலில், சேவை வழங்கும் நிறுவனங் களை மட்டும் அலசுவோம்.

மார்க்கெட் ஷேர்:

GSM - என்பது குளோபல் சிஸ்டம் ஃபார் மொபைல் என்பதன் சுருக்கமே; CDMA - என்பது கோட் டிவிஷன் மல்டிபிள் அக்செஸ் என்பதன் சுருக்கம். இந்தியாவில் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பமே அதிகம் பாப்புலர். அவற்றின் செயல்பாடுகளைப் பார்க்கலாம்.

நம் நாட்டின் மொத்தச் சந்தையில் 28.47 சத விகிதத்தை ஏர்டெல் பிடித்து வைத்திருக்கிறது. 22.86 சதவிகிதச் சந்தை யோடு, இரண்டாவது இடத்தில் வோடஃபோன். அதற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் 18.19 சதவிகிதத்தோடு ஐடியா செல்லுலார் நிறுவனமும், 14.82 சதவிகிதத்தோடு 4-வதாக பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-லும் இருக்கின்றன. நம்மூர் ஏர்செல் 9.29 சதவிகிதத்துடன் 5-வது இடத்தில். யூனிநார், எம்.டி.என்.எல்., வீடியோகான், லூப் எல்லாம் இதற்குக் கீழே.

ஆர்ப்பு (ARPU - Average Revenue Per User):

செக்டார் அனாலிசிஸ் - டெலிகாம் துறை...ஓங்கி ஒலிக்குமா ..?

'ஆர்ப்பு’  என்பது தொலைதொடர்பு நிறுவனத்திற்கு ஒரு இணைப்பின் மூலம் கிடைக்கும் சராசரி வருவாய் ஆகும். இணைப்புகளின் எண்ணிக்கையும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை யும் அதிகமாகவேண்டியது எவ்வளவுக்கெவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கவ்வளவு முக்கியம் இந்த சராசரி வருவாயின் வளர்ச்சியும். சுருங்கச் சொன்னால், 'ஆர்ப்பு’  வளராவிட்டால் நிறுவனத்துக்கு ஆப்புதான்! அதனால் 'ஆர்ப்பு’ என்பது பங்கு தேர்வில் முக்கியமான புள்ளி விவரமாகும்.

டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ஒரு வாடிக்கையாளர் மூலம்  சராசரி அதிக வருமானம்  தரும் இடங்களாக டெல்லியும் மும்பையும் இருக்கின்றன. முதலிடத்தில் இருக்கும் மும்பையில் இணைப்பு ஒன்றின் மூலம் நிறுவனத்திற்குக் கிடைக்கும் சராசரி வருமானம் ரூ.181.38; இரண்டாவது இடத்தில் டெல்லி ரூ.172.65; இவையெல்லாம் அதிக வருமானம் தரக்கூடிய இடங்களாகக் கருதப்படுபவை.

செக்டார் அனாலிசிஸ் - டெலிகாம் துறை...ஓங்கி ஒலிக்குமா ..?

ரூ.150-க்கு மேலே சராசரி வருமானம் தரும் இதர இடங்களான கேரளா, ஜம்மு காஷ்மீர் ஆகியவை. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகியவையும் நல்ல வருமானம் தருபவை. சென்னையின் வருமானம் ரூ.137.87.

மேற்கு வங்கம் (ரூ.72.80), பீகார் (ரூ.84.14), மத்தியப் பிரதேசம் (ரூ.88.95) ஆகியவைதான் சராசரி வருமானம் மிகக் குறைவாகத் தரும் ஏரியாக்கள்.      

அதேசமயத்தில், முந்தைய காலாண்டோடு ஒப்பிட்டுப்பார்க்கையில், இதே காலாண்டில் சராசரி வருமானம் வளர்ச்சி எனப் பார்க்கையில், 7.62 சதவிகிதம் வளர்ச்சியுடன் மத்தியப் பிரதேசம் முதல் இடத்திலும், 7.48 சதவிகிதம் வளர்ச்சியில் அஸ்ஸாமும், 5 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சியுடன் வட கிழக்கு மாநிலங்களும், கேரளா மற்றும் உத்தரப் பிரதேசமும் அடுத்து இருக்கின்றன.

ஹரியானாவும் குஜராத்தும் 4 சதவிகிதத்துக்கு மேல் வளர்ச்சி அடைந்தன. கொல்கத்தா 0.03%, மஹாராஷ்ட்ரா 0.50%, தமிழ்நாடு 0.37%, ஹிமாச்சல பிரதேசம் 0.87 % ஆகியவை மிகக் குறைந்த வளர்ச்சி இடங்கள்.

சேவையின் அடர்த்தி:

ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் வசிக்கக்கூடிய நூறு பேரில் எத்தனைபேர் போன் இணைப்பு வைத்திருக்கிறார்கள் என அடர்த்தியைச் சொல்லும் புள்ளிவிவரமே 'டெலி-டெண்ஸிட்டி’

(Tele-density). பத்து ஆண்டுகளுக்கு முன்னர்

5 சதவிகிதத்துக்கும் கீழே இருந்த நம்  டெலி-டெண்ஸிட்டி, இப்போது 75 சத விகிதத்தைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது! ஆனால், இதே அதிவேக வளர்ச்சி இனியும் தொடருமா என்பது கேள்விக்குறிதான்.  

நம்பர் போர்ட்டபிலிட்டி (Number Portability) :

செக்டார் அனாலிசிஸ் - டெலிகாம் துறை...ஓங்கி ஒலிக்குமா ..?

முன்பெல்லாம், ஒரு நிறுவனத்தின் இணைப்பில் தொடர்ந்து பிரச்னை, திருப்திகரமான சேவை இல்லை என்றாலோ, அந்த எண்ணை அவர் களிடமே சரண்டர் செய்துவிட்டு, மற்றொரு நிறுவனத்திற்கு மாறலாம். நமது தொலைபேசி நம்பரும் மாறும். நண்பர்களுக்கெல்லாம் கூப்பிட்டு நம்பர் மாறிய தகவலைச் சொல்லவேண்டும். அல்லது குறுந்தகவல் அனுப்பவேண்டும். ஆனால், சமீபத்திய அறிமுகமான நம்பர் போர்ட்டபிலிட்டியினால் அதே நம்பரோடு சேவை நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளலாம். இதனால் பலனடையப்போவது, பரவலாக பல மாநிலங்களிலும் சேவை வழங்கும் பார்தி ஏர்டெல் போன்ற ஸ்திரமான நிறுவனங்கள். அதேசமயத்தில், பரவலாக பல இடங்களில் இல்லாத சில நிறுவனங் களுக்குப் பாதிப்பும் ஏற்படலாம்.

VSAT (Very Small Aperture Terminal), STB (Set Top Box), DTH , Broadband - என பல புதிய அறிமுகங்களால் இதுவரை அடைந்துவரும் வளர்ச்சி வேகம் இனி மட்டுப்படலாம் என்றே தோன்றுகிறது.

FDI - எனும் அந்நிய நேரடி முதலீடு, வரும் நாட்களில் இத்துறையில் பலனைத் தரலாம். மெர்ஜெர் - அக்விசிஷன் மூலமாக டேக்ஓவர் செய்யப்பட்டு நிறுவனங்கள் சில இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் சில நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிக்கலாம்.  எனினும், (Fitch)   நிறுவனத்தின் ரேட்டிங் அவுட்லுக்கின் அடிப்படையில் இந்த ஆண்டில் இத்துறையில் தேக்க நிலையும், பின்னடைவும் இருக்கும் எனத் தெரிகிறது.

செக்டார் அனாலிசிஸ் - டெலிகாம் துறை...ஓங்கி ஒலிக்குமா ..?

மொத்தத்தில் வளர்ச்சி வேகம் குறைந்தாலும்,  நீண்டகால  அடிப்படையில், பங்கின் விலை சந்தையில் இறங்கும் காலகட்டங்களில், செயல்பாடுகள் சிறப்பாக உள்ள பங்குகளை வாங்கினால், நல்ல முதலீடாக அமையும்.

(அலசுவோம்)