ஆசிரியர் பக்கம்
நடப்பு
Published:Updated:

கிரெடிட் கார்டு மோசடிகள்...

உஷாராக இருந்தால் தப்பிக்கலாம் ! நீரை.மகேந்திரன்,படம்: பீரகா வெங்கடேஷ்.

##~##

பரபரப்பான நகரம் புனே. அங்குள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே திடீரென முளைத்தது ஒரு ஏ.டி.எம். மையம். மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பகுதியில் புதிய ஏ.டி.எம். முளைத்ததால் பணம் எடுப்பவர்கள் முண்டியடித்துக்கொண்டு வந்து கார்டை சொருகினார்கள். ஆனால், ஏ.டி.எம். திறந்த முதல்நாளிலிருந்தே இயந்திரம் வேலை செய்யவில்லை. கார்டை தேய்த்துவிட்டு, ரகசிய எண்ணை பதியும்வரை வேலை செய்யும் இயந்திரம், அதற்குமேல் வேலை செய்யாது. இப்படியாக நான்கு நாட்கள் இருந்த அந்த ஏ.டி.எம். மையம், திடீரென காணாமல் போனது.

ஆனால், ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்ற வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து பல லட்சம் ரூபாய் வரை மாயமானது. பணத்தை இழந்து பதறிப்போனவர்கள் அலறியடித்து வங்கியுடன் தொடர்புகொண்டபோது, வெளிநாடு களில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். இதன் பின்னணியில் கிரெடிட் கார்டு மோசடி கும்பல் ஒன்று, பல ஆயிரக்கணக்கான கிரெடிட் கார்டுகளின் ரகசிய எண்ணை திருடி, படுபுத்திசாலித்தனமாக தன் கைவரிசையைக் காட்டி இருந்தது கண்டு மஹாராஷ்ட்ரா போலீசே அதிர்ந்துபோனது.

இப்படிப்பட்ட மோசடி பல நகரங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தத் தவறுகள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு தடை செய்யப்பட்டாலும், புதிய புதிய வழிகளில் மோசடிப் பேர்வழிகள் முளைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதிலிருந்து தப்பிக்க நாம் எப்படி உஷாராக இருக்கவேண்டும்?

கிரெடிட் கார்டு மோசடிகள்...

''வாடிக்கையாளர்கள் எச்சரிக்கை யுடனும், விழிப்புடனும் கணக்குப் பரிமாற்றம் செய்தால், இந்த மோசடிகளிலிருந்து தப்பிக்கலாம்'' என்கிறார், சைபர் க்ரைம் பிரிவின் உதவி ஆணையர் ஜான் ரோஸ்.

''பொதுவாக, நமது வங்கிக் கணக்குப் பரிமாற்ற நடவடிக்கைகள் எல்லாமே சர்வதேச அளவில் வளர்ந்திருக்கிறது.  வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதை கிரெடிட் கார்டு மோசடி கும்பல்கள் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. இந்த கும்பலிடம் மாட்டி ஏமாறாமல் இருக்க நாம் விழிப்புடன் இருப்பது கட்டாயம்'' என்றவர், இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் சிக்காமல் இருக்க சில எச்சரிக்கை டிப்ஸ்களையும் தந்தார்.

''முதலில் உங்கள் தேவை என்ன என்பதைப் பொறுத்து டெபிட் அல்லது கிரெடிட் கார்டை வாங்குங்கள். உள்ளூர் தேவை என்றால், அதாவது இந்தியாவிற்குள் மட்டும் பயன்படுத்தும் தேவை இருந்தால் அதற்கேற்ப மட்டும் வாங்குங்கள். வெளிநாடுகளில் பயன்படுத்தும் பிளாட்டினம் கார்டை தேவைப்படுபவர்கள் மட்டும் வாங்கலாம்.

கிரெடிட் கார்டு மோசடிகள்...

வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுகிறோம் என்று கணக்கு விவரங்கள், ரகசிய குறியீடு எண்களை கேட்டுவரும் அழைப்புகளுக்குப் பதில் சொல்லாதீர்கள். வாடிக்கையாளரின் ரகசிய குறியீட்டு எண்களைக் கேட்க வங்கிகளுக்குகூட அதிகாரம் கிடையாது. எனவே, இதுபோன்ற அழைப்புகளைத் தவிர்க்கவும்.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களது ரகசிய குறியீட்டு எண்களை அடிக்கடி மாற்றிக் கொள்வது கட்டாயம். உங்கள் கணக்கின் பாதுகாப்பில் இதற்கும் முக்கிய பங்கு உள்ளது.

பணப் பரிமாற்றம் எப்போ தெல்லாம் நடக்கிறதோ, அப்போ தெல்லாம் அதுபற்றிய விவரங்கள் உங்கள் செல்போனுக்கு எஸ்.எம்எஸ். மூலம் தகவல் வருகிற மாதிரி வைத்துக்கொள்ளுங்கள். செல்போன் நம்பர் மாறினாலும்  உடனடியாக வங்கிக்குத் தெரியப் படுத்தி அப்டேட் செய்துகொள்வது அவசியம்.  

ஏ.டி.எம். மையத்திலோ அல்லது கார்டை பயன்படுத்தும் வணிக மையங்களிலோ உங்கள் கார்டின் ரகசிய எண்களை நீங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கார்டை பயன்படுத்துவதில் சிக்கல் என்றால், முன்பின் அறிமுகமில்லாதவர்களை உதவிக்கு அழைக்கவேண்டாம்.  

ஏ.டி.எம். மையங்களில் வழக்கத்திற்கு மாறாக சந்தேகப்படும்படி ஏதாவது ஒரு கருவி இருந்தால், உடனடியாக அதை சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தெரியப்படுத்துவது நல்லது'' என்று முடித்தார் ஜான் ரோஸ்.      

நவீன வசதிகள் வரவர மோசடிகளும் நவீனமயமாகி வருகிறது. எனவே, ஏமாந்தபின் புலம்புவதைவிட, எச்சரிக்கையாக இருந்து பணத்தைப் பாதுகாத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்!