Published:Updated:

தங்கம் விலை... சரிவு இன்னும் தொடரும் !

பானுமதி அருணாசலம், க.முகமது அபுதாஹீர்,படங்கள்: ஜெ.வேங்கடராஜ், எஸ்.கேசவசுதன், தே.தீட்ஷித்.

தங்கம் விலை... சரிவு இன்னும் தொடரும் !

பானுமதி அருணாசலம், க.முகமது அபுதாஹீர்,படங்கள்: ஜெ.வேங்கடராஜ், எஸ்.கேசவசுதன், தே.தீட்ஷித்.

Published:Updated:
##~##

மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையம், அலுவலகம், வங்கி, வீடு என எங்கும் பேசப்படும் சப்ஜெக்ட்-ஆக மாறிவிட்டது தங்கத்தின் சமீபத்திய விலைச் சரிவு. 'தங்கம் விலை 20% குறைஞ்சுடுச்சு. பேசாம ரெண்டு, மூணு பவுன்ல ஒரு நகை வாங்கிக் குடுங்க’ என்று வீட்டுக்கு வீடு பெண்கள் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் அரண்டுபோய்க் கிடக்கிறார்கள் ஆண்கள். தங்கம் விலை இன்னும் இறங்குமா, இப்ப வாங்கலாமா, இன்னும் கொஞ்சம் காத்திருந்து விலை இறங்கியபின் வாங்கலாமா என்கிற கேள்விகள்தான் எல்லோரது மனதிலும். இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

என்ன காரணம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்கம் விலை இறங்க என்ன காரணம் என ஜியோஜித் பி.என்.பி. பரிபாஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குநர் சி.பி.கிருஷ்ணனிடம் கேட்டோம்.

''அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேறி வருவதால் டாலரின் மதிப்பு அதிகரித்து அங்குள்ள பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டுவருகிறது. இதன்காரணமாக பாதுகாப்பான முதலீடாக கருதிய தங்கத்தில் முதலீடு செய்திருந்த பணத்தை எடுத்து பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர் முதலீட்டாளர்கள்.  கோல்டு இ.டி.எஃப்.லிருந்து ஈக்விட்டி ஃபண்டுகளில் தங்களது முதலீட்டை மாற்றி வருகின்றனர். சைப்ரஸ் தனது பொருளாதாரப் பிரச்னையைச் சமாளிக்க தங்கத்தை விற்க முடிவெடுத்துள்ளதாலும் இந்த விலை இறக்கம் ஏற்பட்டுள்ளது.

கோல்டு சாக்ஸ் நிறுவனம் 2014-ம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,350 டாலரைத் தொடுமென சொன்னது, முதலீட்டாளர்களை மாற்று வழி முதலீடுகளை நோக்கி ஓட வைத்தது. இதனால் பிராஃபிட் புக் செய்ய தங்கத்தை விற்றனர்.  

தங்கம் விலை... சரிவு இன்னும் தொடரும் !

இந்த விலை இறக்கம் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் சீரடைந்து வருவது தங்கத்தின் விலை அதிகரிப்பை தடுக்கும்

தங்கம் விலை... சரிவு இன்னும் தொடரும் !

காரணியாக அமையும். அதேநேரத்தில், இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 50 ரூபாய் வரை வர வாய்ப் பிருக்கிறது. அப்படி வரும்பட்சத்தில் தங்கத்தின் விலை இந்தியாவில் இன்னும் குறையும். போர் அல்லது ஏதாவது பெரிய பொருளாதாரப் பிரச்னை எதிர்பாராமல் ஏற்பட்டால் மட்டுமே தங்கத்தின் விலை உயரும். மற்றபடி விலை குறையவே வாய்ப்புண்டு'' என்றார் அவர்.

கடந்த 12-ம் தேதி நள்ளிரவில் அதிரடியாக விலை குறைய துவங்கியது தங்கம். அதன்பிறகு இந்த விலை இறக்கம் குறித்து தெரியவர, மக்கள் நகைக் கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். நகைக் கடைகளில் விற்பனை எப்படி உள்ளது என பரவலாக விசாரித்தோம். கடந்த ஒருவார காலமாக சாதாரண நாட்களில் வரும் கூட்டத்தைவிட அதிகமாக கூட்டம் அலைமோதுவதாகவும், விற்பனை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

தங்கம் விலை... சரிவு இன்னும் தொடரும் !

அலைமோதிய கூட்டம்!

மதுரை தங்கமயில் நகைக் கடையின் மேலாளர் வேல்பாண்டி மகிழ்ச்சிக்களிப்பில் இருந்தார். அவரிடம் பேசினோம். ''வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, எங்களுக்கும் இந்த விலை இறக்கம் மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. கடந்த சில வருடங்களாக இந்த விலை இறக்கத்திற்காக காத்துக்கொண்டிருந்தோம். இந்தப் போக்கு இன்னும் ஒருமாத காலத்திற்காவது நீடிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

வாங்கிக் குவித்த பெண்கள்!

இந்த விலைச்சரிவைப் பயன்படுத்தி நகை வாங்கிக் குவிக்கின்றனர் பெண்கள். மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வைஷ்ணவியிடம் பேசினோம். ''வருடத்திற்கு ஒருமுறையாவது நகை வாங்கிவிடுவது என் பழக்கம். சென்ற வருடத்தைவிட இந்த வருடம் பவுனுக்கு சுமார் மூவாயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி முதலீட்டு அடிப்படையிலும் நகை வாங்க வந்துள்ளோம். சில பேர் இன்னும் விலை குறையும் என்கிறார்கள். ஆனால், இந்த விலை இறக்கம் எத்தனை நாட்கள் நீடிக்கும் என சொல்லமுடியாது. எனவே அதிகம் யோசிக்காமல் நகை வாங்க வந்துவிட்டேன்'' என்றார்.

திருச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியும் கடன் வாங்கி நகை வாங்க வந்திருந்தார். ''நான் இதுவரை எந்தக் கடனும் வாங்கியதில்லை. ஆனால்,  இந்த விலை இறக்கத்தில் என் மகளுக்காக தங்கம் வாங்கலாம் என்ற ஆசையில் கடன் வாங்கி, அதில் நான்கு பவுன் நகை வாங்கிவிட்டேன்'' என்றார்

தங்கம் விலை... சரிவு இன்னும் தொடரும் !

மகிழ்ச்சியாக.

இனி என்னவாகும்?

தங்கம் விலை இனி என்னவாகும் என மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாக ராஜனிடம் கேட்டோம்.

''கடந்த 12 ஆண்டுகளாக விலை அதிகரித்தது உண்மையான தேவையான அடிப்படையில் அல்ல. விலை ஏறும் என்ற யூகத்தின் அடிப்படையிலேயே நடந்தது.

கடந்த சில மாதங்களாக அதிக பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஐரோப்பிய நாடு களில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரக் குளறுபடி, வட, தென் கொரியா நாடுகளுக்கிடையே போர் வரும் சூழல் போன்ற காரணங்களால் தடுமாறிக்கொண்டே இருந்தது தங்கம்.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக கி.யூ.3 பாலிசியை அமல்படுத்த துவங்கியது. இதன்காரணமாக டாலரின் மதிப்பு குறைய தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாக கருதியும், பணவீக்கத்தை சரிக்கட்டி வருமானம் தரும் என்ற நம்பிக்கையிலும் தங்கத்தில் முதலீடு செய்தனர் முதலீட்டாளர்கள்.

எனினும், சில ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்னைகள், முதலீட்டாளர்களை  தங்கத்தை நோக்கி போக வைத்தது. சைப்ரஸ் தனது கடன் பிரச்னையை சமாளிக்க தன்வசம் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்ய முடிவெடுக்க இதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் தங்கத்தை விற்றுவிடுமோ என்ற பயத்தில் முதலீட்டாளர்கள் கைவசம் இருந்த தங்கத்தை விற்க வைத்தது. மேலும், அமெரிக்கா மற்றும் சீனா பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் கண்டு வருவதும் தங்கத்திலிருந்து விலக முதலீட்டாளருக்கு சரியான தருணமாகத் தோன்றியது.

தங்கம் விலை... சரிவு இன்னும் தொடரும் !

இந்த விலை இறக்கம் இந்தியா வின் கல்யாண சீஸனில் நடந் திருப்பது இந்திய மக்களை பொறுத்தவரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. சென்ற வருடத்தில் இந்தியாவின் கோல்டு டிமாண்ட் 500-850 டன்னாக இருந்தது. ஆனால், இந்த வருடத்தில் 900 டன்னாக இருக்கிறது. எனினும், இந்த டிமாண்ட் எதிர்பார்த்ததைவிட குறைவானதே. காரணம், இந்திய அரசு தங்கத்தின் மீதான வரிகளை அதிகப்படுத்தியது, ஐந்து லட்சத்திற்கு மேல் தங்கம் வாங்கினால் பான் கார்டு எண் தரவேண்டும் என்கிற உத்தரவுகளால் 50 சத விகிதம் வரை டிமாண்டை குறைத்துள்ளது.

தங்கம் விலை... சரிவு இன்னும் தொடரும் !

அதிகப்படியான கெடுபிடிகளால் தங்களது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் தங்கத்தை வாங்கினர் மக்கள். ஆனால், இப்போது வந்துள்ள விலை இறக்கம் இந்தியாவில் தங்க இறக்குமதியை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இப்போதிருக்கும் விலை இறக்கத்திலிருந்து தங்கம் மேலே வரவேண்டுமென்றால், சீனாவில் புதிதாக துவங்கப்படவுள்ள பிஸிக்கலாக தங்கத்தை வாங்கும் விதத்திலான இ.டி.எஃப். ஃபண்ட், டிமாண்ட் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவதுபோன்ற காரணங்கள் தங்கத்தின் விலையை உயர்த்தும்.  

இன்னும் இறங்கும் !

இப்போது வந்திருக் கும் இந்த விலை இறக்கம் இன்னும் சில மாதங்களுக்குத் தொடரவே செய்யும். பெரியளவில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புகள் குறைவு தான். எனினும், தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த விலைச்சரிவு  அடிப்படைக் காரணங்களுக்காக நடக்கவில்லை என்பதால், நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கும். சர்வதேச சந்தையைப் பொறுத்தவரை 1,300-1,280 டாலர் வரை கீழே போக வாய்ப்புகள் உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 53-54 ரூபாய் என்ற ரீதியில் இருந்தால் பத்து கிராம் 24 கேரட் தங்கம் 24,000-22,000 ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் அதிகரிக்கும்பட்சத்தில் விலை மேலும் குறையும்'' என்றார்.

எங்க... தங்கம் வாங்க கிளம்பியாச்சா?

தங்கம் விலை... சரிவு இன்னும் தொடரும் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism