Published:Updated:

டைம்ஷேர்: சொந்தச் செலவில் சூனியமா?

டைம்ஷேர்: சொந்தச் செலவில் சூனியமா?

டைம்ஷேர்: சொந்தச் செலவில் சூனியமா?

டைம்ஷேர்: சொந்தச் செலவில் சூனியமா?

Published:Updated:
##~##

ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்...

''ஹலோ, மிஸ்டர் ராமச்சந்திரன் வீடுங்களா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆமா, நீங்க...?''

''............. கம்பெனில இருந்து பேசுறோம். சார்கிட்ட பேசணும்.''

''சார் வெளியில் போயிருக்காரு! என்ன விஷயம் சொல்லுங்க?''

''உங்க நம்பருக்கு ஒரு கிஃப்ட் விழுந்துருக்கு?''

''அப்படியா? நீங்க கிஃப்டை வீட்ல தந்துடுங்க!''

''இல்ல மேடம், நீங்கதான் வந்து வாங்கிக்கணும். அதுவும் கணவன், மனைவி சேர்ந்து வந்துதான் வாங்கணும்!''

''சரி, அவர் வந்தவுடனே இதைப் பத்தி அவர்கிட்ட சொல்றேன்.''

''கட்டாயம் நீங்க ரெண்டுபேரும் எங்க ஆபீஸ் அட்ரஸுக்கு வந்துடுங்க மேடம்!''

இதுமாதிரியான போன்கால் உங்களுக்கு வந்திருக்கலாம். இல்லை, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு வந்திருக்கலாம். இப்படி வரும் போன்கால்களை சீரியஸாக எடுக்காமல் விட்டிருந்தால் நீங்கள் பிழைத்தீர்கள். ஏதோ கிஃப்டாமே! என்ன கிஃப்ட் என்று போய் பார்த்தால்தான் என்ன என்று கிளம்பினால்,  நீங்களே வலியப்போய் சிக்கலில் மாட்டிய கதையாக ஆகிவிடும். அப்படி என்ன செய்து விடுவார்கள் என்கிறீர்களா?

டைம்ஷேர்: சொந்தச் செலவில் சூனியமா?

''மொத்தமாக ஒரு தொகையினை எங்க ரிசார்ட்ல கட்டிடுங்க. அடுத்த 25 வருஷத்துக்கு நீங்க எப்போ வேணுமின்னாலும் எந்த வாடகையும் இல்லாம உங்கள் குடும்பத்தோட வந்து தங்கலாம். இதுக்குப் பேருதான் டைம்ஷேர்'' என்று தூண்டில் போடுவார்கள். அட, நல்லா இருக்கே என்று காதுகொடுத்து கேட்க ஆரம்பித்தீர்கள் எனில், 2 லட்சம் ரூபாயை உங்களிடம் வசூல் செய்யாமல் விடமாட்டார்கள்.

முன்பின் தெரியாத அப்பிராணிகள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து படாதபாடுபடுகிறார்கள். இத்திட்டத்தில் நடக்கும் குளறுபடிகள் பற்றியும் அசௌகரியங்களைப் பற்றியும் விளக்கமாகச் சொல்கிறார் டைம்ஷேர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வி.நாகப்பன்.

''சுமார் இரண்டு லட்சம் ரூபாய் அளவுக்கு முன்கூட்டியே பணத்தைக் கட்டிவிடும்பட்சத்தில் ஒவ்வொரு வருடமும் அந்த நிறுவனத்திடம் பல்வேறு இடங்களில் இருக்கும் ரிசார்ட்களில் சுற்றுலாச் செல்லலாம். ஒருவேளை சுற்றுலாச் செல்லாவிட்டாலும் வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் செலுத்தவேண்டும்.

நடுத்தரக் குடும்பத்தினர் இரண்டு லட்சம் ரூபாய் தந்து, அதற்கு பராமரிப்புக் கட்டணமும் செலுத்துவது தேவை இல்லாத வேலை. அதற்கு இந்தப் பணத்தை வங்கியிலோ அல்லது

டைம்ஷேர்: சொந்தச் செலவில் சூனியமா?

அஞ்சலகச் சேமிப்பிலோ முதலீடு செய்யும்போது வருடத்துக்கு சுமார் 17,000 ரூபாய் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு எளிதாக விடுமுறையைக் கொண்டாடலாம்.

சரி, ஓரளவு வசதிகொண்டவர்கள் ஏதோ ஓர் ஆர்வக்கோளாறில் பணம் கட்டிவிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சுற்றுலாச் செல்ல முடிவெடுத்து சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுக்கு போன் செய்து ரூம் இருக்கிறதா என்று கேட்டால், ''இப்ப போன் பண்ணி கேட்டா எப்படி சார், கொஞ்சம் அட்வான்ஸா கேட்டிருக்கலாம்ல'' என்று பதில் வரும். ஒருவேளை மூன்று மாதத்துக்கு முன்பு போன் பண்ணிக் கேட்டால், ''இவ்வளவு சீக்கிரம் எப்படி சார் புக் செய்யமுடியும்?'' என்பார்கள். அப்படியானால் நமக்கு எப்போதுதான் ரூம் கிடைக்கும்?

நமக்குத் தேவைப்படாத நேரத்தில் அங்கு ரூம்கள் இருக்கும். அதற்கு ஏற்றதுபோல சுற்றுலாச் செல்லும் நம் திட்டத்தை, அலுவலக விடுமுறையை, ரயில் டிக்கெட்டை  மாற்ற வேண்டும். அப்படியானால் அவ்வளவு ரூம்களும் புக்கிங்களில் இருக்குமா என்றால் அதுவும் இல்லை.

புதிதாக வருபவர்களுக்கு (அதாவது, அந்த நிறுவனத்தில் பணம் கட்டாமல் சாதாரணமாக கேட்பவர்களுக்கு) இந்த அறையினை தந்துவிடுவார்கள். நாம்தான் ஏற்கெனவே பணத்தைக் கட்டிவிட்டோமே! எனவே, புதிதாக வருபவர்களுக்கே முன்னுரிமை தருவார்கள்.

ஒருவேளை நாம் கேட்ட தேதிக்கு அறை கிடைத்து போனாலும், ஒவ்வொரு ரிசார்ட்டும் நகரத்தைவிட்டு தொலைவில்தான் இருக்கிறது. அங்கு நாம் சாப்பிட எதுவும் இருக்காது. சில வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு ரூமிலும் சமையல் செய்து சாப்பிடுவதற்கான வசதி இருந்தது. இப்போது அதையும் எடுத்துவிட்டார்கள். வேறு வழியே இல்லாமல் அங்கிருக்கும் ரெஸ்டாரன்ட்களில் சாப்பிடவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு வேளைக்கு குறைந்தபட்சம் சுமார் 200 ரூபாய் செலவாகும். இப்போதெல்லாம் பல ஓட்டல்களில் அறை எடுத்து தங்கும்போது காலை உணவை இலவசமாகவே தருகிறார்கள். ஆனால், முன்கூட்டியே பணம் கட்டினாலும்கூட அதிகத் தொகை தந்து சாப்பிடவேண்டி இருக்கிறது.

மேலும், இந்த ரிசார்ட்கள் நகரைவிட்டு வெளியே இருப்பதால், அங்கு இருக்கும்  டாக்ஸிகளை நாம் பயன்படுத்த வேண்டியிருக்கும்.  அது நிச்சயமாக வெளிமார்க்கெட்டில் இருப்பதைவிட அதிகமாகவே இருக்கும்.

தொடர்ந்து இரண்டு, மூன்று ஆண்டுகள் நாம் சுற்றுலா போய் ரூம் எடுத்துத் தங்கவில்லை. பிற்பாடு அதை மொத்தமாகச் சேர்த்து அனுபவிக்க முடியுமா என்றால், அதிலும் பிரச்னைதான். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் உங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை அனுபவித்துவிடவேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கான நேரம் வீணாகப் போய்விடும்.

இதைவிட இன்னொரு அதிர்ச்சியான செய்தி, பணவீக்கத்துக்கு ஏற்றபடி இன்னும் கூடுதல் கட்டணம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். முன்கூட்டியே பணத்தைக் கட்டிவிட்டு, நாம் கேட்ட நேரத்துக்கு ரூம் கிடைக்காமல், ஒவ்வொரு விஷயத்துக்கும் அதிக பணத்தைச் செலவழித்து இவர்களிடம் செல்வதைவிட, மாதாமாதமாகவோ, மொத்தமாகச் சேமித்தோ, நம் விருப்பப்படி, குடும்பத்தினரின் ஆசைப்படி, சிக்கனமான முறையில்கூட சுற்றுலாச் செல்லமுடியும்.

தவிர, டைம்ஷேர் நிறுவனத்திடம் நாம் தந்த இரண்டு லட்சம் ரூபாய் சில ஆண்டுகளுக்கு  மட்டும்தான். அதற்குப் பிறகு அந்தப் பணம் நமக்குத் திரும்பக் கிடைக்காது. ஆனால், அந்தத் தொகையை நாம் வங்கியில் டெபாசிட் செய்யும்பட்சத்தில், அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து, எந்தப் பிரச்னையும் இல்லாமல் நம் இஷ்டத்துக்கு சுற்றுலாச் செல்ல முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக அசலும் நம்மிடம் இருக்கும்'' என்று முடித்தார் நாகப்பன்.

பணம் நம் கையில் இருக்கும் வரைக்கும்தான் நமக்கு மரியாதை; அதை அடுத்தவரிடம் கொடுத்துவிட்டால் அவர்கள் ஊதும் மகுடிக்கு ஏற்பதான் நாம் ஆடவேண்டும்..! உஷாராக இருங்கள் சுற்றுலா விரும்பிகளே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism