Published:Updated:

சீட்டு நிறுவன மோசடிகள்...

சிக்காமல் தப்பிக்க வழிகள் ! வா.கார்த்திகேயன், படம்: பா.கார்த்திக்.

சீட்டு நிறுவன மோசடிகள்...

சிக்காமல் தப்பிக்க வழிகள் ! வா.கார்த்திகேயன், படம்: பா.கார்த்திக்.

Published:Updated:
##~##

'இந்தியாவில் இந்த மாதம் எந்த மோசடியும் நடக்கவில்லை’ என்று செய்தி வந்தாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு பெரிய மோசடி நடந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில்தான் சஹாரா நிறுவனம் உச்சநீதிமன்றம், செபி என்று வழக்கு களில் சிக்கியது. அந்த சூடு ஆறுவதற்குள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாரதா குழுமம் இன்னுமொரு பெரிய மோசடியில் இறங்கி, எல்லோரையும் கதிகலங்க வைத்திருக்கிறது.

சாதாரண ரியல் எஸ்டேட் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட சாரதா குழுமத்தில் இன்றைக்கு 160-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல், கல்வி, பொழுதுபோக்கு, சுற்றுலா, ஏற்றுமதி என பல பிரிவுகளில் இந்த குழுமம் இயங்கி வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து பணியாளர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கொடுக்கவில்லை. கடந்த மூன்று மாதங்களாக சம்பளமே தரவில்லை. மேலும், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களும், இவர்களுக்காகப் பணிபுரிந்த ஏஜென்ட்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தவே, ஏப்ரல் மாத ஆரம்பத்தில் (தோராயமாக 13-ம் தேதியில் இருந்து) இந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் தலைமறைவானார். பல மாநில போலீஸார் தீவிரமாகத் தேடியதில் கடைசியில் ஜம்மு காஷ்மீரில் கைதாகி, 14 நாள் காவலில் வைக்கப்பட்டார். இவர் மட்டுமல்ல, இவரது தகப்பனார் 1980-களில் ஒரு சிட் ஃபண்ட் நிறுவனத்தை ஆரம்பித்து சில கோடிகளைச் சுருட்டிவிட்டு பத்து வருடத்துக்கு முன்பு தலைமறைவாகிவிட்டார் என்ற செய்தியும் மேற்கு வங்க வட்டாரத்தில் உலாவுகிறது.

சுதிப்தா சென்னைத் தொடர்ந்து சாரதா குழுமத்தின் செயல் இயக்குநர் தெப்ஜனி முகர்ஜியும் கைதாகி இருக்கிறார். 2007-ம் ஆண்டு வாக்கில் இந்த நிறுவனத்தில் ரிஷப்ஷனிஸ்டாகச் சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீட்டு நிறுவன மோசடிகள்...

என்ன மோசடி, எவ்வளவு மோசடி?

எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டது என்பது குறித்து இன்னும் சரியான தகவல்கள் தெரியவில்லை. இவ்வளவு ஏன், இந்த நிறுவனத்தின் இணையதளத்தில்கூட சுதிப்தா சென்னின் புகைப்படம் இல்லை. வசூலிக்கும் தொகைக்கு குறைந்தபட்சம் 15 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை வருமானம் தருவதாகச் சொல்லியதாகச் சொல்கிறார்கள். இதன்படி பார்த்தால், 1,200 கோடி முதல் 4,000 கோடி ரூபாய் வரை அப்பாவி மக்களின் பணம் சூறையாடப் பட்டிருப்பதாகச் சொல்கிறது ஒருதரப்பு. இது குறைவு, கொள்ளை அடிக்கப்பட்ட மக்கள் பணம் சுமார் 7,000 கோடி ரூபாய்க்குமேல் இருக்கும் என்கிறது இன்னொரு தரப்பு.

இந்த நிறுவனத்தில் சுமார் 2.5 லட்சம் பேர் ஏஜென்ட்களாக வேலை பார்த்திருக் கிறார்கள். இவர்கள் வசூலிக்கும் தொகைக்கு 15 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை கமிஷன் தந்திருக்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும்போது, இது ஒரு பொன்ஸி திட்டமாகவே தெரிகிறது. அதாவது, ஒருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு, எங்கேயும் முதலீடு செய்யாமல் அடுத்தவரிடம் கொடுப்பது. ஒருகட்டத்தில் இப்படியே தொடர்ந்து செய்யும்போது, அதிகப்படியான நபர்கள் பணத்தைக் கேட்டால், பணத்தைத் தரமுடியாதச் சூழ்நிலை ஏற்படும். இந்த செய்தி கசிந்து இன்னும் அதிக நபர்கள் பணம் கேட்க, கடைசியில் குட்டு வெளிப்பட்டுவிடும். கோவை, திருப்பூர் வட்டாரங்களில் நடக்கும் அதேகதைதான் இதிலும் நடந்திருக்கிறது.

இந்த நிலையில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி இந்தப் பிரச்னையில் தலையிட்டது. சாரதா குழுமம் தன்னுடைய அனைத்து முதலீட்டுத் திட்டங்களையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு, இன்னும் மூன்று மாதங்களுக்குள் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பி தரவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

சீட்டு நிறுவன மோசடிகள்...

இதற்கிடையில், இந்தப் பிரச்னையில் அரசியலும் புகுந்து குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.பி.களுக்கு இந்த மோசடி நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாகச் செய்தி வெளியாகி பரபரப்பை உண்டு பண்ணியது.  

ஒரு எம்.பி. 15 லட்சம் ரூபாய் சம்பளத்தில் சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இன்னொரு எம்.பி. 20 லட்சம் ரூபாய்க்கு பிராண்ட் அம்பாஸிடர் என்ற பெயரில் நியமனம் ஆகியிருக்கிறார். இன்னொரு அதிர்ச்சியான செய்தி, சாரதா நிறுவனத்தின் இரண்டு கிளைகளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்திருக்கிறார் என்பதுதான்.

இந்தச் செய்திகளால் பரிதவித்துப்போன திரிணாமுல் கட்சி, காங்கிரஸுக்கும் சாரதா குழுமத்துக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியது. மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கும் இந்த நிறுவனத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சி.பி.ஐ.க்கு எழுதிய கடிதத்தில் சென் கூறியிருப்பதைக் கேட்டு, திரிணாமுல் கட்சிக் காரர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள்.

சீட்டு நிறுவன மோசடிகள்...

மேலும், ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர் களுக்கு நிவாரணத் தொகை தருகிற மாதிரி சிகரெட்டுக்கு கூடுதலாக 10 சதவிகித வரி விதித்து, 500 கோடி ரூபாயைத் திரட்டப் போவதாகச் சொல்லி இருக்கிறார் மம்தா. ஏதோ ஒரு நிறுவனம் மக்களை ஏமாற்றினால், அதை ஈடுசெய்ய ஏன் புதிய வரி போடவேண்டும்? அந்த நிறுவனத்தின் வசம் இருக்கும் சொத்துகளைப் பறிமுதல் செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திரும்பத் தரலாமே! மோசடி நிறுவனத்துக்காக மம்தா பானர்ஜி இப்படி செய்வது என்ன நியாயம்? இதனால் மக்களை ஏமாற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தானே செய்யும்! என பலவாறாக கேள்வி எழுந்துள்ளது. சாரதா குழுமத்துடன் எந்தெந்த அரசியல் கட்சிக்கு தொடர்பு என பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பரபரப்பாகப் பேசுவது ஒருபக்கமிருக்க, இதுபோன்ற மோசடி நிறுவனங்களிடம் சிக்கி சீரழியாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பது குறித்து 27 ஆண்டுகளாக சென்னையில் செயல்பட்டுவரும் ஸ்ரீமதி சிட் ஃபண்ட்ஸ் செயல் இயக்குநர் ராஜாராமனை சந்தித்துக் கேட்டோம். அவர் சொன்னார்:

''முதலில், இது சிட் ஃபண்ட் மோசடி அல்ல; நிதி நிறுவன மோசடி என்றுதான் சொல்ல வேண்டும். பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்கள், சீட்டு பிஸினஸை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. எங்களைப்

சீட்டு நிறுவன மோசடிகள்...

போன்றவர்களின் ஒரே வேலை சீட்டு நடத்துவதுதான். பல வருடங்களுக்கு முன்பு 'சீட்டு மற்றும் ஃபைனான்ஸ்’ என பல நிறுவனங்கள் பெயர் வைத்திருந்தன. ஆனால், 1982-ம் ஆண்டுக்குப் பிறகு சீட்டு நிறுவனங்கள் அந்த பிஸினஸை மட்டுமே செய்யவேண்டும். எந்த சிட் ஃபண்ட் நிறுவனமும், கிடைக்கும் பணத்தை வேறு இடங்களில் முதலீடு செய்யமுடியாது.

தவிர, ஒவ்வொரு மாதமும் வசூலாகும் தொகையை சீட்டு எடுத்த நபருக்கு கொடுத்தாக வேண்டும். ஒருவேளை சீட்டு எடுத்த நபர் உத்தரவாதம் கொடுக்கத் தவறினால், அந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டுமே தவிர அதை சீட்டு நடத்தும் நிறுவனங்கள் எடுத்து பயன்படுத்த முடியாது'' என்றவர், முதலீட்டாளர் சரியான சீட்டு நிறுவனத்தை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது குறித்து விளக்கினார்.

''ஒரு சீட்டு நிறுவனத்தில் சேரும் முன்பு, கடந்த காலத்தில் அவர்கள் எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று விசாரியுங்கள். இரண்டாவது, ஒரு லட்சம் ரூபாய் சீட்டு நடத்துகிறார் என்றால் (உதாரணத்துக்கு 10 பேர், பத்து மாதம்) அந்த ஒரு லட்சம் ரூபாயை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்திருக் கிறார்களா என்பதைப் பாருங்கள். அதற்கு முன் ஒப்பளிப்பு ஆணை (prior sanction letter) கொடுப்பார்கள். அதைக் காண்பித்த பின்புதான் சீட்டில் சேர ஆட்களைப் பிடிக்க முடியும். ஆட்களைச் சேர்த்தபின் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்தபின்பு இதற்கு ஓர் எண் கொடுப்பார்கள். இந்த இரண்டு எண்களும் உங்களுடைய பில்களில் இருக்கிறதா என்று பாருங்கள். சமயங்களில் பில் ஒரு பெயரில், கம்பெனி ஒரு பெயரிலும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், நீங்கள் முதலீடு செய்யும் சீட்டு நிறுவனத்தில், அதே கிளையில் அதே பெயரில் வேறு பிஸினஸ் இருக்கிறதா என்று பாருங்கள். உதாரணத்துக்கு, நீங்கள் சீட்டு சம்பந்தமாகவும், ஃபைனான்ஸ் சம்பந்தமாகவும் ஒருவரிடமே பேசுகிறீர்கள் என்றால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.

மேலும், தற்போதைய விதிமுறைப்படி அதிகபட்சம் 40 சதவிகிதம் மட்டுமே தள்ளுபடி செய்து ஏலம் கேட்க முடியும். இதையும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள். தவிர, சீட்டு சம்பந்தமாக ஒவ்வொரு தகவலையும் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அந்த நடைமுறைகள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். இதைத் தாண்டியும் எதாவது பிரச்னை ஏற்பட்டால் அந்த நிறுவனம் எந்த ரிஜிஸ்டர் அலுவலக எல்லையில் வருகிறதோ, அங்கு போய் புகார் கொடுக்கலாம்'' என்றார்.

சீட்டு நிறுவன மோசடிகள்...

நடுத்தர மக்கள், சிறு தொழில் செய்பவர்கள் சீட்டு எடுப்பதன் மூலம் பல தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும். ஆனால், அதிக வட்டிக்கு பேராசைப்பட்டு மொத்தத்தையும் இழந்துவிடும் நிலைக்கு மக்கள் சென்றுவிடக் கூடாது. அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப் படாத சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லை என்பதையும் முதலீட்டாளர்கள் உணரவேண்டும். பேராசை பெரும் நஷ்டம் என்பதைப் படித்துகொண்டிருக்கிறோமே தவிர, அதை முழுதாக நாம் உணர்ந்ததுபோல தெரியவில்லை. இனியாவது உணர்வோமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism