Published:Updated:

ஷேர்லக் : எக்ஸ்பைரி அன்று எகிறிய சந்தை!

ஷேர்லக் : எக்ஸ்பைரி அன்று எகிறிய சந்தை!

ஷேர்லக் : எக்ஸ்பைரி அன்று எகிறிய சந்தை!

ஷேர்லக் : எக்ஸ்பைரி அன்று எகிறிய சந்தை!

Published:Updated:
##~##

'நேற்று பெய்த கோடை மழையில் லேசாக நனைந்ததில் எனக்கு ஜலதோஷமாகிவிட்டது. எனவே, செய்திகளை போனிலேயே சொல்லிவிடவா?'' என்று வெள்ளிக்கிழமை மாலை போன் செய்தார் ஷேர்லக். ''நோ ப்ராப்ளம்'' என்றபடி, அவர் சொன்ன தகவல்களைக் குறிப்பெடுக்க ஆரம்பித்தோம்.

''2013-ல் இந்திய பங்குச் சந்தை வளர்ச்சி காணும் என 83 சதவிகித இந்திய முதலீட்டாளர்கள் நம்பிக்கைக் கொண்டிருப்பதாக ஆசிய பசிபிக் நாடுகளில் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் நடத்திய சர்வே முடிவில் தெரியவந்துள்ளது. அவர்கள் நடப்பு நிதி ஆண்டில் சுமார் 15% வருமானத்தை எதிர்பார்ப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இது நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை நிறைவேறலாம்; நிறைவேறாமலும் போகலாம்'' என்றார் ஷேர்லக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நம்பிக்கைதானே வாழ்க்கை! முன்னணி வங்கிப் பங்குகளின் விலை, நடப்பு ஏப்ரல் மாதத்தில் மட்டுமே சுமார் 15 முதல் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதே?'' என்றோம்.

''குறிப்பாக, எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ஆக்ஸிஸ் பேங்க், ஓரியன்டல் பேங்க், கனரா வங்கி, யெஸ் பேங்க், கர்நாடகா பேங்க் ஆகிய பங்குகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆர்.பி.ஐ., வருகிற மே 3-ம் தேதி நடத்தும் பொருளாதார ஆய்வுக் கூட்டத்தில் கடனுக்கான வட்டியைக் குறைந்தபட்சம் 0.25 சதவிகிதமாவது குறைக்கும் என்கிற எதிர்பார்ப்புதான் இதற்கு காரணம். தவிர, நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவிக்க இருக்கும் வங்கிகள் கணிசமான டிவிடெண்ட் அறிவிப்பை வெளியிடும் என்கிற எதிர்ப்பும் இதனோடு சேர்ந்துவிட்டது. குறிப்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி., ஆக்ஸிஸ் பேங்க் ஆகிய பங்குகள் மீதான வர்த்தகம் ரொக்கச் சந்தை மற்றும் எஃப் அண்ட் ஓ வர்த்தகத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் வரும் வாரத்திலும் வங்கிப் பங்குகளின் விலை உயர வாய்ப்புள்ளது'' என்றார்.

''சில பங்குகளில் எஃப்.ஐ.ஐ.கள் மிக அதிகமாக முதலீடு செய்திருப்பதாகச் சொல்கிறார்களே?'' என்று கேட்டோம் உற்சாகமாக.

''சரியாகத்தான் சொன்னீர்கள். 2012-13-ல் நிஃப்டி 50 பட்டியலில் உள்ள 18 நிறுவனங்களில் எஃப்.ஐ.ஐ.களின் முதலீடு வரலாறுகாணாத வகையில் மிகவும் அதிகமாக உள்ளது. குறிப்பாக, ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, என்.டி.பி.சி., ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் டி.எல்.எஃப். நிறுவனப் பங்குகளில் முடிந்த மார்ச் காலாண்டில் மிக அதிகமாக எஃப்.ஐ.ஐ.கள் முதலீடு செய்திருக்கிறார்கள். எஃப்.ஐ.ஐ.கள் ஏற்கெனவே வைத்துள்ள பங்கு மூலதனத்தோடு ஒப்பிடும்போது, மார்ச் காலாண்டில் மட்டும் சுமார் 15 சதவிகித முதலீட்டை உயர்த்தியுள்ளன. கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக ரூ.1.4 லட்சம் கோடியை (2,580 கோடி டாலர்) இந்திய பங்குச் சந்தையில் எஃப்.ஐ.ஐ.கள், 2012-13-ல் முதலீடு செய்திருக்கிறார்கள். வங்கி, எஃப்.எம்.சி.ஜி., பார்மா, கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், ஐ.டி., மின் உற்பத்தி, சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகளில் அதிக முதலீட்டை மேற்கொண்டுள்ளன. ஐ.பி.சி.ஏ. லேபாரட்டரீஸ், சிப்லா, வொக்கார்ட், பயோகான், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ், டெக் மஹிந்திரா மற்றும் எம்பசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் எஃ.ஐ.ஐ.களின் முதலீடு 4 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது'' என எஃப்.ஐ.ஐ.கள் பற்றி பல தகவல்களைச் சொன்னார் ஷேர்லக்.

ஷேர்லக் : எக்ஸ்பைரி அன்று எகிறிய சந்தை!

''சஹாரா - செபி மோதல் இன்னும் முடியவில்லை போலிருக்கிறதே?'' என்று கேட்டோம்.

''நாளுக்கு நாள் அது அதிகமாகிக்கொண்டே தான் போகிறது. சஹாராவின் துணை நிறுவனம் சஹாரா பிரைம் சிட்டி. இந்நிறுவனம் ஐ.பி.ஓ. வருவதற்காக மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தது. மொத்தம் 3,450 கோடி ரூபாயைத் திரட்டத் திட்டமிருந்த நிலையில், பல விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதால் இந்த ஐ.பி.ஓ. விண்ணப்ப மனுவை தள்ளுபடி செய்துவிட்டது செபி'' என்றார்.

''அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) பங்கு விலை ஒரே நாளில் 13.5% அதிகரித்து 52 வார உச்சபட்ச விலைக்குச் சென்றுவிட்டதே..?'' என்றோம் ஆச்சரியத்துடன்.

ஷேர்லக் : எக்ஸ்பைரி அன்று எகிறிய சந்தை!

''சமீனா கேப்பிட்டல் உள்ளிட்ட பிரைவேட் ஈக்விட்டி நிதி நிறுவனங்களுக்கு ஆர்.காம் பங்குகளை விற்பது தொடர்பான டீல் முக்கிய நிலையை எட்டியதை அடுத்து பங்கின் விலை ஒரேநாளில் இவ்வளவு அதிகரித்தது. என்றாலும், இந்தப் பங்கை வாங்குவது பற்றிய முடிவை கொஞ்சம் யோசித்துதான் எடுக்கவேண்டும்'' என்றார்.

''சில வாரங்களுக்கு முன்பு இன்ஃபோசிஸ் பங்கு விலை குறையும் முன்பே எல்.ஐ.சி. விற்றதாக சொன்னீர்கள் இல்லையா! இன்ஃபோசிஸ் மட்டுமல்ல, வேறு சில நிறுவனங்களின் பங்குகளையும் எல்.ஐ.சி. விற்றதாகச் சொல்லப் படுகிறதே?'' என்று இழுத்தோம்.

''உண்மைதான். சமீபத்தில் முடிந்த மார்ச் காலாண்டில் சென்செக்ஸ் 30 நிறுவனங்களில் 17 நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டில் 8,000 கோடி ரூபாய்க்கு மேல் விலக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ரீஸ், இன்ஃபோசிஸ், ஓ.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ., ஹெச்டி.எஃப்.சி. பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனப் பங்குகளை கணிசமாக விற்றுள்ளது. இதேபோல் பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுசூகி, சன் பார்மா, சிப்லா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், எல் அண்ட் டி நிறுவனப் பங்குகளையும் விற்றுள்ளது'' என்று புள்ளிவிவரமாகப் பதில் சொன்னார்.

''கடந்த வியாழன் அன்று எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி-ன்போது கடைசி அரை மணி நேரத்தில் சந்தை எகிறியதைக்  கவனித்தீரா?'' என்று கேட்டோம்.

''கவனித்தேன். ஆனால், இதை செபி கவனிக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. ஏதோ ஒன்றிரண்டு சமயம் இப்படி நடந்தால் தற்செயலான நிகழ்ச்சி என்று விட்டுவிடலாம். ஒவ்வொரு மாதமும் இதேபோலத்தான் நடக்கிறது. ஏற்றி இறக்குகிற இந்த வேலையை யார் செய்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டிய கடமை செபிக்கு உண்டல்லவா? இதனால், சிறு முதலீட்டாளர்கள் நிறைய பாதிக்கப்படுகிறார்களே!'' என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்த ஷேர்லக்,

''சந்தை கொஞ்சம் உயர்ந்த மாதிரி தெரிந்தாலும் மீண்டும் இறங்கலாம் என்கிற சந்தேகம் இருப்பதால், ஷேர்டிப்ஸ் எதுவும் வேண்டாமே!'' என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism