நடப்பு
Published:Updated:

செக்டார் அனாலிசிஸ் !

பவர் பங்குகள்... ஒளி வீசுமா?

ரிசர்ச்

##~##

மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் இருட்டில் தவிக்கிறார்கள்! சுமார் 35 சதவிகித இந்திய வீடுகளில் மின்சார வசதி இல்லை என்கிறது ஒரு தகவல். ஒருபக்கம் இது சோகமான செய்திதான் என்றாலும், இத்துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவையையும் இது காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம் அல்லவா!?

ஆனால், மின் உற்பத்தியில் அதற்கேற்ற வளர்ச்சி இருக்கிறதா என்றால் இல்லை. முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், கடந்த மார்ச் மாதத்தோடு முடிவடைந்த காலாண்டில் மின் உற்பத்தி 1.7 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக மோசமான அளவுக்கு குறைவான உற்பத்தி இந்தக் காலாண்டில்தான். இத்தனைக்கும் இதே காலகட்டத்தில் உற்பத்தித் திறன் 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இத்துறைப் பங்குகளின் விலையோ தொடர்ந்து இறக்கத்தில்! 18 முன்னணிப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தையின் 'பவர் இண்டெக்ஸ்’, கடந்த ஓராண்டில் மட்டுமே 15 சத விகிதத்துக்கு மேல் இறங்கியுள்ளது. இத்துறைப் பங்குகளில் 100 ரூபாய் ஏழு ஆண்டுகளுக்கு முன் முதலீடு செய்திருந்து, அதை சென்செக்ஸ் வளர்ச்சியோடு ஒப்பிட்டால் எவ்வளவு  கிடைக்கும்? சென்செக்ஸ் முதலீடு ரூ.250-ஆகவும், பவர் செக்டார் முதலீடு ரூ.188-ஆகவும் இருந்திருக்கும். இது, சென்ற ஆண்டு நிலைமை. இந்த ஆண்டோ இன்னும் மோசம்.  

செக்டார் அனாலிசிஸ் !

முதலீடு செய்யலாமா?

1970-71 தொடங்கி கடந்த நாற்பது ஆண்டுகளில், நம் நாட்டின் எரிசக்தித் தேவை தொடர்ந்து வளர்ந்து வந்திருக்கின்றது என்கிறது நமது பொருளாதார ஆய்வு அறிக்கை. நிலக்கரி மூலம் 5.30%, பழுப்பு நிலக்கரி மூலமாக 6.05%, கச்சா எண்ணெய்யின் (பெட்ரோலியப் பொருட்கள்) மூலமாக 11.25%, அனல், புனல் மற்றும் அணுமின் மூலமாக 6.63% என சராசரி வளர்ச்சி இருந்திருக்கிறது.  

ஒருகாலத்தில் மின் விளக்குகளுக்கும் வானொலிப் பெட்டிக்கு மட்டுமே மின் தேவை இருந்தது வீடுகளில்; இன்றைக்கு மொபைல் போன் சார்ஜர், டி.வி.டி. ப்ளேயர், லேப்டாப், மின் அடுப்பு, கெய்சர், ஒவ்வொரு ரூமிலும் ஏ.சி. என மின் தேவையை அதிகரிக்க ஏகத்துக்கு பெருக்கிக்கொண்டுவிட்டோம். தொழில் வளர்ச்சியும் பிரமாண்டம்தான். ஆக, மின்தேவை குறைவதற்கான சாத்தியம் இல்லவே இல்லை.  

ஆனால், மக்களின் அத்தியாவசியத் தேவை என்பதால், அரசின் கடுமையான சட்ட திட்டங்களும் கட்டுப்பாடுகளும் இத்துறையைக் கட்டிப்போடும் மூக்கணாங்கயிறாக இருக்கிறது. நாட்டின் தேவை முழுவதையும் அரசே பூர்த்தி செய்யமுடியாத நிலையில் தனியாரையும் துணைக்கழைத்தது அரசு. நீரில் இருந்து புனல் மின்சாரமும், நிலக்கரியில் இருந்து அனல் மின்சாரமும், அணுசக்தியின் மூலம் அணுமின்சாரமும் உற்பத்தி செய்வதோடு மாற்று எரிசக்தி மூலமாகவும் மின் உற்பத்தி களைகட்டுகிறது இப்போது. காற்றாலை மட்டுமல்லாது, பயோ கேஸ், சூரியசக்தி, கரும்புச் சக்கை ஆகியவற்றால் மின்சார உற்பத்தி என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது சந்தையில்.  

இத்தனைக்கும் இடையே கட்டணங்களை உயர்த்தும் சி.இ.ஆர்.சி.யின் சமீபத்திய உத்தரவு இத்துறைக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கப் படுகிறது. தற்காலிகமாக கட்டணங்களை உயர்த்த அனுமதி அளித்தது மத்திய மின்சார ஒழுங்குமுறை கமிஷன் (சென்ட்ரல் எலெக்ட்ரிசிட்டி ரெகுலேட்டரி கமிஷன்). இதைத் தொடர்ந்து டாடா பவர் உள்ளிட்ட சில பங்குகள் விலை அதிகரிக்கத் துவங்கியிருக்கின்றன. இதேபோக்கு தொடரும் என நிச்சயமாகச் சொல்ல முடியாது என்றாலும், அரசின் தலையீட்டை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு நீண்டகால அடிப்படையில் அலசிப் பார்த்தால், மக்களின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ய எத்தனிக்கும் இத்துறைக்கு நிச்சயம் ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.  

செக்டார் அனாலிசிஸ் !

இத்துறையில் பல முக்கிய பங்கு நிறுவனங்கள் உள்ளன. டாடா பவர், பவர் கிரீட், நெய்வேலி லிக்னைட், பி.டி.சி. இந்தியா, என்.டி.பி.சி., பி.ஹெச்.இ.எல்., ஏ.பி.பி., சீமென்ஸ். இதில் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பி.ஹெச்.இ.எல்.) பங்கை மட்டும் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

பி.ஹெச்.இ.எல்.!

கால் நூற்றாண்டுக்கு மேலாக தொடர்ந்து நல்ல லாபத்தை ஈட்டித் தரும் பொதுத் துறை நிறுவனம். மின் உற்பத்தி மற்றும் விநியோகம், தகவல் தொலைதொடர்பு, போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை, பாதுகாப்புத் துறை, புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆகிய பல துறைகளுக்குத் தேவையான நூற்றுக்கணக்கான இயந்திரங்கள், உதிரிபாகங்கள், தளவாடங்கள் ஆகியவற்றை வடிவமைத்து உற்பத்தி செய்யும் நிறுவனம். இன்று இந்தியாவின் மின் உற்பத்திக்குப் பயன்படும் இயந்திரங்களில் 60% இந்நிறுவனத்தின் தயாரிப்பே.  

செக்டார் அனாலிசிஸ் !

வெறும் உற்பத்தியோடு நிற்காமல் அவற்றைக் கட்டமைத்து நிறுவுவது, சோதனை செய்வது ஆகிய சேவைகளிலும் ஈடுபட்டுள்ளது. 75 நாடுகளில் பரவி வியாபித்திருக்கிறது இதன் தொழில். குறைந்த பங்கு மூலதனம்; ஆனால் அதிக ரிசர்வ் தொகை கையிருப்பு இதன் பலம்.  

பி.எஸ்.இ. பவர் இண்டெக்ஸ்:

செக்டார் அனாலிசிஸ் !

 18 முன்னணிப் பங்குகளை உள்ளடக்கியது; மும்பை பங்குச் சந்தையின் மொத்தச் சந்தை மதிப்பில் சுமார் 6 சதவிகிதமாக இத்துறைப் பங்குகள் வகிக்கின்றன.

 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதியைத் துவக்க தேதியாகக்கொண்டு 2007 நவம்பர் 9-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி தொட்ட உச்சம் 4929.34-தான் ஆல்டைம் ஹை; அதே ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி தொட்ட 1274.88-தான் ஆல்டைம் லோ.  

 இப்போது 1,750 அளவில்; கடந்த 52 வார உச்சம் 2113.73 (2012, அக்டோபர் 5-ம் தேதி அன்று); 52 வார குறைவு 1622.06 (2013, மார்ச் 28 அன்று.)

(அலசுவோம்)