Published:Updated:

கரம் கொடுக்குமா உரம்..?

கரம் கொடுக்குமா உரம்..?

ரிசர்ச்

##~##

வரும் ஆண்டு தேர்தல் ஆண்டு; எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் விவசாயிகள் காட்டில் மழைதான். வட்டிக் குறைப்பு, கடன் தள்ளுபடி, சலுகைகள் என வாரி வழங்கும் வள்ளலாக மாறுவிடும் மத்திய அரசாங்கம்.

விவசாயிகள் கையில் பணம் சேர்ந்தால் என்ன செய்வார்கள்? வேறு என்ன, மீண்டும் விவசாயம் தான். இதனால் விவசாயிகள் பலனடைகிறார்களோ இல்லையோ, உர உற்பத்தி நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்தான். அந்தவகையில், பூச்சிக்கொல்லி மருந்து, யூரியா உள்ளிட்ட அக்ரோ கெமிக்கல் இண்டஸ்ட்ரி சார்ந்த பங்குகளை இந்த வாரம் அலசுவோமா..!

ராலிஸ் இந்தியா போன்ற ஒன்றிரண்டு நிறுவனங்களைத் தவிர, முதலீட்டாளர்களுக்குப் பெரிய வளர்ச்சியைத் தந்த நிறுவனங்கள் இத்துறையில் அதிகம் இல்லை. புரிந்துகொள்ளக் கடினமான / சிக்கலான விலை மற்றும் மானிய நிர்ணயங்கள், அரசின் தலையீடு ஆகியவை இத்துறையின் வளர்ச்சிக்கும் தளர்ச்சிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

அரசுக் கட்டுப்பாடும் மானியங்களும் !

கடுமையான அரசுக் கட்டுப்பாடுகளைக்கொண்ட துறை இது; உர விலைகளைக் கட்டுப்படுத்த 1977-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆர்.பி.எஸ். என்னும் 'ரிடென்ஷன் பிரைஸிங் ஸ்கீம்’ இன்றும் தொடர்கிறது. பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள் மீதான விலைக் கட்டுப்பாடுகள் 1992-லேயே தளர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இவற்றின் விலை கடும் ஏற்றத்தைச் சந்தித்தது. எனவே, இவற்றைப் பயன்படுத்துவதற்கு பதில், வேறு வகை உரங்களைப் பயன்படுத்தத் துவங்கினார்கள் விவசாயிகள். குறிப்பாக, யூரியா பயன்பாடு அதிகரித்தது.

கரம் கொடுக்குமா உரம்..?

மொத்த உர பயன்பாட்டில் இன்று யூரியா 50 சதவிகிதத்துக்கு மேல். 2010-ல் என்.பி.எஸ். எனும் 'நியூட்ரியன்ட் பேஸ்டு சப்சிடி’ அறிமுகமானபோதும் யூரியாவின் மீது மட்டும் கைவைக்கவில்லை அரசாங்கம்; யூரியாவின் மீதான கட்டுப்பாடு எப்போது நீங்கும் என்றும் தெரியவில்லை. மானியம் அதிகம்; விலையும் குறைவு என்பதால் வேறு காம்ப்ளெக்ஸ் உரங்கள் தேவைப்படும் இடங்களில்கூட யூரியாவே பயன்படுத்தப்படுகிறது. இது மிகப் பெரிய தவறு!  

அரசாங்கமானது உர மானியத்தை எப்படி வழங்குகிறது? சிம்பிளாகச் சொன்னால், சந்தையில் விற்கவேண்டிய சில்லறை விலை ஒரேமாதிரியாக நிர்ணயிக்கப்பட்டு, அந்த விலையில் சுமார் 12 சதவிகிதம் வரிக்குப் பிந்தைய லாபம் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது. டி.ஏ.பி. உள்ளிட்ட யூரியா அல்லாத உரங்களைப் பொறுத்தவரையில் இது மாறுபடும். ஏப்ரல் 2011 முதல் நடைமுறையில் உள்ளபடி, சந்தையில் விற்கும் விலையில் யார் தலையீடும் இருக்காது. சந்தையின் தேவையைப் பொறுத்து நிறுவனங்கள் முடிவு செய்துகொள்ளலாம். ஆனால், மானியம் என்பது முன்னரே தீர்மானித்த அளவிலே இருக்கும்.

கரம் கொடுக்குமா உரம்..?

டி.ஏ.பி உள்ளிட்ட யூரியா அல்லாத ஏனைய உரங்கள் மீதான மானியத்தை சென்ற வாரம் மேலும் குறைத்தது மத்திய அரசாங்கம். இதனால் உர நிறுவனங்களுக்கு பாதிப்புதான். இதனால்தான், உரங்களை மட்டுமே நம்பியிராமல், விவசாயம் சார்ந்த பலதரப்பட்ட பொருட்களை உற்பத்தி மற்றும் வர்த்தகம் செய்யும் ராலீஸ் இந்தியா, டாடா கெமிக்கல்ஸ் பங்குகளில் அதிகம் கவனம் செலுத்தலாம்.  

அதுமட்டுமல்ல; இன்னொரு விஷயத்தையும் மத்திய அரசாங்கம் சொல்லியிருக்கிறது.  சர்வதேச விலைகள் எல்லாம் இறங்குமுகத்தில் இருக்கையில், உள்ளூர் விலைகள் அதற்குத் தக்க இறங்கவில்லை என்பதால், இவ்விஷயத்தில் சில நிறுவனங்கள் ஏதும் தில்லுமுல்லு செய்கின்றனவா எனக் கவனிக்கத் துவங்கியுள்ளது. இறக்குமதி விலைக் குறைவினால் கிடைக்கும் பலனை விவசாயிகளுக்குத் தரவில்லை எனில், அரசு தரும் மானியங்களையும் குறைத்துவிடும் எனச் சொல்லி எச்சரித்திருக்கிறது. இதை உறுதி செய்ய, இறக்குமதி விலையை உறுதி செய்யும் சான்றிதழ் கோரப்படலாம் எனத் தெரிகிறது. முறையாகச் செயல்படும் நிறுவனங்களுக்கு இதனால் பாதிப்பு பெரிதாக இருக்காது என்றாலும் ஏனைய நிறுவனங்களின் லாபம் இனி கணிசமாக குறையலாம்.  

டாலர் பிரச்னை !

கரம் கொடுக்குமா உரம்..?

யூரியா தேவையில் 25 சதவிகிதத்துக்கு மேலும், டி.ஏ.பி. தேவையில் மூன்றில் இரண்டு பங்கும், அமோனியா மற்றும் பாஸ்பரிக் ஆசிட் உள்ளிட்டவைகளும் இறக்குமதியையே பெருமளவு நம்பி இருக்கிறது. எனவே, டாலர் மதிப்பு உயர்வது இத்துறைக்குச் சிக்கல். எனினும், இனி புதிய ஆலைகள் மற்றும் விரிவாக்கம் நடக்கும்போது டாலர் மதிப்பு உயர்வதைப் பற்றி அதிகம் கவலைகொள்ளத் தேவை இருக்காது.

நடப்பு நிலவரம்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் உர நிறுவனங் களின் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாப விகிதங்கள் குறைந்தே வருகிறது (பார்க்க  எதிர்பக்கத்தில் மேலே உள்ள சார்ட்).  கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்த மூலப்பொருட்களின் விலை, குறைந்துவந்த தேவை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்புக் குறைவு, அதிக உரக் கையிருப்பு ஆகியவற்றின் காரணமாக லாபம் குறைந்தது. எனினும், அமோனியா, பாஸ்பரிக் ஆசிட், பொட்டாஷ் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் குறையத் துவங்குவதற்கான அறிகுறிகள் தெரிவது சாதகமான அம்சம்.  

நேரடி மானியமும், எதிர்காலமும்!

அரசு தரும் மானியம் காலதாமதமாக வந்துசேரும் பிரச்னைக்கு, ஒரு தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 'டைரக்ட் பெனிஃபிட் டிரான்ஸ்ஃபர்’ எனப்படும் நேரடி மானிய முறை. உண்மையான பயனாளிகளான விவசாயிகளின் கையில்  மானியத்தை நேரடியாகக்கொண்டு சேர்ப்பது இதன் இலக்கு. இதனால் விவசாயம் இன்னும் சிறப்பாக நடக்கும்!

முதலீட்டிற்கேற்ற பங்குகள்!

1. டாடா கெமிக்கல்ஸ், 2. ராலிஸ் இந்தியா,

3. யுனைடெட் பாஸ்பரஸ்.

இறக்கத்தின்போது கவனிக்கவேண்டியவை:

1. சம்பல் ஃபெர்டிலைஸர் - கெமிக்கல்ஸ், 2. குஜராத் ஸ்டேட் ஃபெர்டிலைஸர் - கெமிக்கல்ஸ், 3. கொரமண்டல் இன்டர்நேஷனல், 4. தீபக் ஃபெர்டிலைஸர் அண்டு பெட்ரோகெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன், 5. தனுகா அக்ரிடெக் என பல நிறுவனங்கள் இருந்தாலும் இரண்டு நிறுவனங்களை மட்டும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

டாடா கெமிக்கல்ஸ்!

இந்நிறுவனம் உற்பத்தி செய்யும் முக்கிய பொருட்களில் ஒன்று, சோடா ஆஷ்; பொருளாதாரச் சிக்கல் காரணமாக அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் நிலவும் தேக்க நிலை ஒரு பின்னடைவு. விற்பனைக் குறைவோடு லாபமும் குறைந்தாலும் உள்ளூர் சந்தை ஓரளவுக்குப் பரவாயில்லை.  

காம்ப்ளெக்ஸ் உரங்களின் விற்பனை குறைவுதான் என்றாலும், யூரியா விற்பனையில் தொடர்ந்து முன்னேற்றம்தான் இந்நிறுவனத்துக்கு. தவிர, சந்தையில் விற்கும் பிராண்டட் உப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு டாடா சால்ட்தான். ஆண்டுக்கு 6% வளர்ச்சி விற்பனையில்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள யூரியா இன்வெஸ்ட்மென்ட் பாலிசியின் அடிப்படையில், இத்துறையில் புதிதாகச் செய்யப்படும் முதலீடு களுக்கு 12-லிருந்து 20% உறுதியளிக்கப்பட்ட லாபம் உண்டு என்பதால், தனது உற்பத்தியை இரு மடங்காக விஸ்தரிக்கத் திட்டமிட்டிருக்கிறது டாடா கெமிக்கல்ஸ். தனது வெளிநாட்டு துணை நிறுவனங்கள் வழியாக வட அமெரிக்காவில் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் இடத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

கரம் கொடுக்குமா உரம்..?

பாதகமான செய்திகளையெல்லாம் உள்ளடக்கி, சந்தையில் தற்போது குறைந்த விலையிலேயே வர்த்தகமாகிறது இப்பங்கு. அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என சர்வதேச அளவில் கால் பதித்து இயங்கி வரும் இந்நிறுவனத்தை ஒரு மல்டி நேஷனல் கார்ப்பரேஷன் என்றே சொல்லலாம். நீண்டகால அடிப்படையில் ஒவ்வொரு போர்ட்ஃபோலியோவிலும் இருக்க வேண்டிய பங்கு இது.  

ராலிஸ் இந்தியா:

நெல், சோளம், பயறு வகைகள், காய்கறிகள் என பலதரப்பட்ட விதைகளை ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்துவருவதும், ஏற்றுமதி என பல நல்ல அம்சங்களைக்கொண்ட நிறுவனம் இது என்றாலும், இதன் தற்போதைய விலை கொஞ்சம் அதிகம்தான்.

தொடர் வளர்ச்சி, ஆரோக்கியமான நிர்வாகம், நல்ல செயல்பாடுகள், 2,500 டீலர்கள், 35,000 சில்லறை வர்த்தகர்கள் மூலம் விநியோகம் ஆகியவை காரணமாக, விலை இறங்கும்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிச் சேர்க்கலாம்.

(அலசுவோம்)