Published:Updated:

சிறுதொழில் வளர்ச்சிக்கு 10 அம்சத் திட்டம்:

வெறும் அறிவிப்பாக நின்றுவிடக் கூடாது! வா.கார்த்திகேயன்

சிறுதொழில் வளர்ச்சிக்கு 10 அம்சத் திட்டம்:

வெறும் அறிவிப்பாக நின்றுவிடக் கூடாது! வா.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

சட்டசபை கூட்டத்தொடர் நடந்துவரும் இந்தச் சமயத்தில் தினசரிகளுக்கு தினமும் தலைப்பு செய்தி தருவதில் முன்னாள் முதல்வருக்கு சற்றும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் இந்நாள் முதல்வர் ஜெயலலிதா. தினமும் ஏதாவது ஒரு துறை பற்றிய அறிவிப்பு தரும் முதல்வர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, தமிழகத்தில் தொழில் துறையை ஊக்குவிக்கும் விதமாக 10 அம்சத் திட்டங்களை அறிவித்தார். இத்திட்டங்கள் பற்றி தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்முன், அறிவிப்பின் முக்கிய அம்சங்களைப் பார்த்துவிடுவோம்.

* சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு நிறுவனங்களுக்கு முதலீட்டுச் சலுகை வழங்கப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* புதிய மெஷின்களுக்கு வழங்கப்படும் 15 சதவிகித மானியம் 25 சதவிகிதமாக உயர்த்தப்படும்.

* நகர்ப்புறத்தில் இருக்கும் நிறுவனங்களை புறநகருக்கு மாற்றும்பட்சத்தில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துக்கொள்வதற்கு 75 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.

* புதிய தொழிற்பேட்டைகளின் பல்வேறு நடைமுறைகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒற்றை சாளரமுறை கொண்டுவரப்படும்.

* திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப் படும்.

சிறுதொழில் வளர்ச்சிக்கு 10 அம்சத் திட்டம்:

இந்த அறிவிப்புகளை எல்லாம் பார்க்கும்போது, சாதாரண மனிதர்களான நமக்கு தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும் என்றுதான் நினைக்கத்தோன்றும். ஆனால், தொழில் துறையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய பலரோடு பேசினோம். தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸைத் தொடர்புகொண்டோம்.

''இப்போது சொல்லப்பட்டிருக்கும் அறிவிப்பு களில் குறை ஏதும் சொல்ல முடியாது. ஆனால், இது அனைத்துமே இனி புதிதாக ஆரம்பிக்க போகும் நிறுவனங்களுக்கு மட்டும்தான். எங்களைப்போல ஏற்கெனவே இருப்பவர்களுக்கு அல்ல. ஏற்கெனவே மின்சாரப் பிரச்னை காரணமாக தொழில் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறவர்களுக்கு ஏதாவது ஒரு சலுகை தந்திருக்கலாம். உதாரணமாக, 5 சதவிகித வட்டிக்கு வொர்க்கிங் கேப்பிட்டல் கடன் கேட்டிருந்தோம். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுகிற மாதிரி எந்த அறிவிப்பும் வரவில்லை.  

அடுக்குமாடித் தொழிற்கூடம் நல்ல திட்டம் தான். ஆனால், கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங் களுக்கும் இத்திட்டத்தைக் கொண்டுவந்தால், எங்களுக்கு பெரும் நன்மையாக  இருக்கும்.  

சிறுதொழில் வளர்ச்சிக்கு 10 அம்சத் திட்டம்:

சில வருடங்களுக்கு முன்பு புறநகராக இருந்த பகுதிகள் இப்போது, குடியிருப்புகளாக மாறிவிட்டதால், தொழிலகங்களைச் சுற்றி வசிப்பவர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படுகிறது. கோவை பகுதியில் இந்தப் பிரச்னை கொஞ்சம் அதிகமாகவே இருப்பதால், இந்தத் திட்டத்தை தாராளமாக கொண்டுவரலாம்'' என்றார்.

கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்க நாதனுடன் பேசினோம். ''நகர்ப்புறத்தில் இருந்து வெளியே செல்லும் தொழிற்சாலைகளுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு இருப்பதால், ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களுக்கு இந்த அரசு சலுகை தந்திருப்பதாகவே நான் நினைக் கிறேன். மேலும், இந்தச் சமயத்தில் இப்படி ஓர் அறிவிப்பு எதிர்பார்க்கவில்லை'' என சுருக்க மாகப் பேசினார் அவர்.

இதுகுறித்து பொருளாதாரச் சிந்தனை யாளர் எம்.ஆர்.வெங்கடேஷிடம் பேசினோம். ''இத்திட்டங்கள் அனைத்தும் வரவேற்கத் தக்கதுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எந்தத் தொழிலுக்கும் அரசு அனுமதி கேட்டுப் போனாலே 25 முதல் 40 சதவிகிதம் வரை லஞ்சம் தரவேண்டியிருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும், இந்த வழக்கம்மட்டும் மாறவே மாட்டேன் என்கிறது. இதை ஒழிப்பதற்கு  நடவடிக்கை எடுக்காதவரைக்கும் எத்தனை திட்டங்களைப் போட்டாலும் அது வீண்தான்'' என்றார்.

சிறுதொழில் வளர்ச்சிக்கு 10 அம்சத் திட்டம்:

''தென் மாவட்டங்களில் தொழிற்சாலை அமைப்பது, அங்கு வளர்ச்சியை உருவாக்குவது நல்ல விஷயம்தான். ஆனால், கோவையில் சில நாட்களுக்கு முன்புகூட ஒரு குறுந்தொழில் செய்பவர் தற்கொலை செய்துகொண்டார். அதனால்,  குறுந்தொழில் செய்பவர்களுக்கு என்ன உதவி செய்யலாம் என்பது குறித்து இந்த அரசு யோசிக்கலாம். மேலும், பல சலுகைகளுக்கான அறிவிப்புகள் இருந்தாலும், அந்த சலுகைகளை உடனுக்குடன் தரும்போதுதான் பயன்படும்'' என்றார் கொடிசியா அமைப்பைச் சேர்ந்த இளங்கோ.

புதிய தொழிற்பேட்டைக்கு ஒற்றைச் சாளரமுறையைக் கொண்டுவருவது பற்றி சென்னை, சிறுசேரி தொழில் பூங்காவில் இருக்கும் ஐ.டி. நிறுவனத்தின் சி.இ.ஓ. தங்கமுத்துவுடன் பேசினோம். ''சிங்கிள் விண்டோ சிஸ்டம் ஏற்கெனவே இருக்கிறது. ஆனால், அது அந்தளவுக்கு சரியாகச் செயல்படவில்லை என்றே பலரும் சொல்கிறார்கள்'' என்றார்.

தமிழகத்தில் ஏற்கெனவே மின் பற்றாக்குறை உச்சத்தில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். தவிர, தொழிற்சாலைகளுக்குத் தேவையான சாலை வசதி, தண்ணீர் வசதி போன்றவையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இலவச அரிசி அனைவருக்கும் கிடைப்பதால், வேலை செய்வதற்கு ஆட்கள் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தமிழக முதல்வர் எந்தத் தீர்வும் சொன்ன மாதிரி தெரியவில்லை. தவிர, நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம், நிறைய மின்திட்டங்கள், சென்னை ஃபைனான்ஷியல் ஹப் என பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப் படாமலே இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் இப்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்பும், காற்றோடு கலந்துவிடக்கூடாது என்பதே வளர்ச்சியை விரும்புகிறவர்களின் எதிர்பார்ப்பு! பொதுமக்களுக்கு மறதி என்கிற நோய் இருப்பதினால், அறிவிப்புகள் மட்டுமே போதும் என்று நினைத்துவிடாமல் இவற்றை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism