ஆசிரியர் பக்கம்
நடப்பு
மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

பி.எஃப்.: வருகிறது ஆன்லைன் பரிமாற்றம் !

இரா.ரூபாவதி.

 டெக்னாலஜி

##~##

மாதச் சம்பளக்காரர்களுக்கு பி.எஃப். கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்கிற விஷயம் ஆண்டுக்கு ஒரு முறைதான் தெரிகிறது. அதுவும் பணிபுரியும் நிறுவனம் எடுத்துச் சொன்னால் தெரியும். மேலும், ஒரு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் பெயரில் பி.எஃப். பணம் கட்டுகிறதா என்பதை எல்லாம் தெரிந்துகொள்வது கடினம். இது எல்லாவற்றுக்கும் தீர்வு காணும் விதத்தில் பி.எஃப். அமைப்பு, பி.எஃப். தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைனிலே பெறும் வசதியை ஓராண்டுக்கு முன்பே கொண்டு வந்தது. இப்போது ஒருபடி மேலே சென்று, ஊழியர்கள் நிறுவனம் மாறும்போது ஆன்லைன் மூலம் பி.எஃப். கணக்கையும் மாற்றும் வசதியையும்  கொண்டுவர உள்ளது. இதுகுறித்து பி.எஃப். அமைப்பின் சென்னை மண்டல கமிஷனர் கே.வி.சர்வேஸ்வரனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

''பி.எஃப். தொகையைத் தொழிலாளர் ஓய்வு பெறும் போதுதான் எடுக்க வேண்டும். ஆனால், பலர் ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத் திற்கு வேலை மாறும்போதே எடுத்துவிடுகிறார்கள். இப்படி செய்வது தவறு. ஒருவர் இனிமேல் பணிபுரியப் போவதில்லை என்ற நிலையில்தான் இந்தப் பணத்தை எடுக்க வேண்டும். ஆனால், பலரும் நிறுவனம் மாறும்போதெல்லாம், பி.எஃப். பணத்தை எடுத்துவிடுவதால், பி.எஃப். அமைப்பின் குறிக்கோள் நிறைவேறுவதில்லை. இன்னும் சிலர் பழைய கணக்கில் இருக்கும் பணத்தைப் புதிய கணக்கிற்கு மாற்றுவதும் இல்லை. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் எடுக்கப்படாமலே கிடக்கிறது.  

பி.எஃப்.: வருகிறது ஆன்லைன் பரிமாற்றம் !

புதிதாக வேலைக்குச் சேரும் நிறுவனத்தில் பழைய பி.எஃப். கணக்கு எண்ணைக் கொடுத்து, புதிய கணக்கில் பணத்தை வரவு வைத்துக்கொள்ள முடியும். இப்படி ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பணத்தை மாற்றும்போது பல நடைமுறை சிக்கல்கள் உருவாகின்றன. ஒரு வட்டார பி.எஃப். அலுவலகத்திலிருந்து இன்னொரு பி.எஃப். அலுவலகத்திற்கு பணத்தை மாற்றுவதில் காலதாமதம் ஆகிறது. பலரும் பணத்தைப் பாதியில் எடுத்துவிடுவதால் பென்ஷன் பெறும் தகுதியை இழந்துவிடுகிறார்கள். பென்ஷன் பெறுவதற்கு குறைந்தது பத்து வருடமாவது பி.எஃப். கணக்கு செயல்பாட்டில் இருக்கவேண்டும். இதற்கு குறைவாக இருந்தால் பென்ஷன் கிடைக்காது. கணக்கில் இருக்கும் குறைவான பணத்தைத் தந்துவிடுவார்கள்.

இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காணும் விதத்தில் இந்தப் பணப் பரிமாற்றத்தை ஆன்லைனில் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம். இதை வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தொழிலாளர்களே தங்களுடைய பணத்தைப் புதிய கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும். இதனால் காலதாமதம் என்பதே இருக்காது.

இப்படி பணத்தை மாற்றும்போது படிவம் 11, 13 கொடுக்கவேண்டி இருக்கும் இந்தப் படிவத்தை ஆன்லைனிலே பதிவு செய்து கொள்ளும் வசதியும் கொண்டுவர இருக்கிறோம்'' என்று முடித்தார் அவர்.  

பி.எஃப்.: வருகிறது ஆன்லைன் பரிமாற்றம் !

இனிவரும் காலத்தில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஒரு தனிப்பட்ட பெர்மனென்ட் வருங்கால வைப்பு நிதி கணக்கு எண் உருவாக்கும் திட்டமும் பி.எஃப். அலுவலகத்திடம் உள்ளது.

இதன்படி தொழிலாளர் வேறு நிறுவனம் மாறினாலும் பி.எஃப். கணக்கு எண் மாறாது. புதிய நிறுவனம் அந்தக் கணக்கு எண்ணில்தான் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். இதற்கான வேலைகளும் பி.எஃப். அமைப்பில் நடந்து வருகிறது.

சீக்கிரமே நடக்கட்டும், இந்த நல்ல மாற்றங்கள்!