Published:Updated:

சிதம்பரம்... உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் !

சிதம்பரம்... உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் !

ஊர் ஜாதகம்

##~##

சிதம்பரம் என்றாலே சட்டென நினைவுக்கு வருவது நடராஜர் கோயிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும்தான். கூடவே, சுற்றுலாத் தலமான பிச்சாவரமும் சிதம்பரத்தின் இன்னொரு அடையாளம். இந்த நகர வளர்ச்சிக்கு இம்மூன்றும்தான் முக்கிய வருமான ஆதாரங்கள். இதுதவிர, விவசாயத்திலும் சிதம்பரம் பெயர் சொல்லும்படியாக விளங்கி வருகிறது. குறிப்பாக, நகரத்தைச் சுற்றியுள்ள வீராணம் கால்வாய்கள் மூலம் நெல், கரும்பு, வாழை, மல்லிகை என விவசாயப் பொருளாதாரத்துக்கு உரம் போட்டு ஊட்டி வளர்ப்பதில் சளைக்கவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இருந்தாலும், முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த நகரம் என்ன நிலையில் இருந்ததோ அதே தான் இன்றைக்கும் இருக்கிறது என்று வருத்தப்படுகின்றனர் நகரவாசிகள். மேலும், இந்நகரத்தின் மக்கள்தொகை சுமார் ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது. ஆனால், அதற் கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமலே இருக்கிறது என்கிறார்கள் மக்கள். இந்த நிலையில் சிதம்பரம் நகர வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்? என இந்த நகரத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் மக்களிடம் கேட்டோம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு வெளிமாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் வந்து படிப்பதால், குடியிருப்பு மற்றும் உணவுத் தேவைகள் அதிகரித்துள்ளது. தவிர, வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்துகொண்டிருப்பதால் ஹோட்டல் தொழிலும் இங்கு எப்போதுமே சுறுசுறுப்பாகவே இருக்கிறது. இதுதொடர்பாக அத்துறையின் வளர்ச்சி மற்றும் பங்களிப்பு எப்படியிருக்கிறது என பல்கலைக்கழகம் அருகில் ஹோட்டல் நடத்திவரும் ராஜாவிடம் பேசினோம்.

சிதம்பரம்... உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் !

''சிதம்பரம் நகரத்தைப் பொறுத்தவரை, ஒரு சாபக்கேடு, மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நகரமன்ற தலைவரும், சட்டமன்ற உறுப்பினரும் இங்கு எதிர்க்கட்சியினராகவே   அமைந்துவிடுகிறார்கள். அதனால் நகர வளர்ச்சி என்பது மட்டுபட்டுதான் உள்ளது. ஆனால், சுற்றுலா மற்றும் ஆன்மிகப் பயணிகள் வருடம் முழுவதும் சிதம்பரத்திற்ரு வந்து குவிவதால் ஹோட்டல் மற்றும் லாட்ஜ் நன்கு நடக்கிறது.

ஆனால், நகர வளர்ச்சிக்கு இது மட்டுமே போதாது. கடலூரில் தொழிற்பேட்டை அமைத்து நகர வளர்ச்சியை ஊக்குவிப்பதுபோல சிதம்பரத்திலும் தொழில்வளர்ச்சியை ஏற்படுத்த  நடவடிக்கைகள் வேண்டும். குறிப்பாக, இந்தப் பகுதியில் மல்லிகை அதிகம் விளைவதால் அதை மையமாக வைத்து நறுமணப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்தால் தொழில் வாய்ப்புகள் பெருகும்.

சிதம்பரம்... உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் !

தவிர, கவரிங் நகைத் தொழில் இந்த ஊரில் சிறப்பான ஒன்று. பாரம்பரியமான இந்தத் தொழில் இன்று அழிந்துவரும் நிலையில் உள்ளது. அத்தொழிலாளர்களுக்கு அரசு கடனுதவியுடன், மூலப்பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தால், பல ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழில்வாய்ப்பு கிடைக்கும்'' என்றார்.

நாம் அடுத்து சந்தித்தது சிதம்பரம் நகர மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளர் நடராஜன். ''பல நகரங்களுக்கு எடுத்துக்காட்டாக 1965-ல் சிதம்பரத்தில் பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போதைய காலகட்டத்திற்கும், மக்கள்தொகைக்கும் ஏற்ப திட்டம் வடிவமைக்கப்பட்டது. ஆனால், நாற்பது வருடங்களுக்குப் பிறகும் இன்றும்கூட அதே உள்கட்டமைப்பு வசதிதான் உள்ளது. இப்போதைய மக்கள்தொகைக்கு ஏற்றவாறு புதிய பாதாளச் சாக்கடை திட்டத்தை அமைக்க வேண்டும். மேலும், சமீப காலமாக, மக்கள் குடிநீர் பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக, சிதம்பரம் கிழக்குப் பகுதி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் கிடைக்கிறது. ஆனால், இதை நகரத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தவேண்டும். நடராஜர் கோயில் சுற்றுலாத் தலம் என்பதால் வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு ஏற்ப கோயிலைச் சுற்றி கழிப்பிட வசதியுடன் கூடிய தங்கும் இடவசதி செய்து தரவேண்டும். இதுபோன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உடனடித் தேவை'' என்றார்.

அடுத்து நாம் சந்தித்தது ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியர் வெங்கடேஷனை. ''சுற்றுலாத் தலமாக இருக்கிற நடராஜர் கோயிலையும், பிச்சாவரத்தையும் இணைத்து சுற்றுலாத் திட்டங்களை கொண்டுவர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இரண்டு வகையிலும் வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.  மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது சிதம்பரத்திற்கு ரயில் சேவை சிறப்பாக இருந்தது. ஆனால், அகல ரயில்பாதைத் திட்டம் வந்தபிறகு ரயில் வசதி அடிக்கடி இல்லை. தவிர, இப்போதைய பேருந்து நிலையம் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதை சமாளிக்க உடனடியாக புதியதாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.

சிதம்பரம்... உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் !

உயர்கல்விக்கு என்றால்  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைதான் நாடமுடியும். கல்லூரிப் படிப்புக்கு எனில், சிறப்பான வசதிகள் இல்லை. குறிப்பாக, பெண்களுக்கு என்று தனிக் கல்லூரி கிடையாது. இவற்றையும் கவனத்தில்கொண்டு ஏற்பாடுகளைச் செய்தால் நகரம் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும்'' என்றார்.

இவருக்கு அடுத்து நாம் சந்தித்தது ஆட்டோ சங்கத் தலைவர் தில்லைகுமாரை. ''நடராஜர் கோயிலை மையமாக வைத்து, அதனை சுற்றியிருக்கிற குளங்களையும், வாய்க்காலையும் சுத்தப்படுத்தி தூர்வார வேண்டும். வீட்டுக் கழிவுகளை கால்வாயில் கலக்கவிடாமல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்தம் செய்து பின்பு அவற்றை விவசாயத்திற்கு பயன் படுத்தவதுபோல திட்டம் போடவேண்டும்.

சிதம்பரம்... உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் !

நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், நடைபாதை கடைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். கோயிலைச் சுற்றி தேர் வருகிற நான்கு வீதிகளைத் தவிர, நகரத்தில் மற்ற வீதிகளில் மரக் கன்றுகளை நட்டு வளர்த்து இன்னும் சில வருடங்களில் பசுமை நகரமாக மாற்ற வேண்டும். பல வருடங்களாக இழுத்தடித்து வந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக பிரச்னை ஒரு தீர்வுக்கு வந்துள்ள இந்நிலையில், இப்பகுதி மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து சேர்த்துக் கொண்டால் நகர வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்'' என்றார்.

சிதம்பரத்தைச் சுற்றி பத்தாண்டுகளுக்கு முன்பு நல்ல வருமானம் தரும் தொழிலாக இருந்த இறால் மீன் வளர்ப்பு இன்று குறைந்துள்ளது. மேலும், விவசாய நிலப்பரப்பு பகுதிகள் வெகுவாக குறைந்து வருவதால் விவசாய வருமானமும் குறைந்து வருவதாகச் சொல்கின்றனர். மேற்கண்ட வகைகளில் உள்கட்டமைப்பு வசதிகள், பொருளாதார மேம்பாட்டு திட்டங்களைக் கொண்டுவந்தால் சிதம்பரம் மேலும் வளர்ச்சி காண வாய்ப்புள்ளது.

- க.பூபாலன், படங்கள்: எஸ்.தேவராஜன்.