Published:Updated:

ஷேர்லக் - இடிந்துபோன இந்தியா சிமென்ட்ஸ்!

ஷேர்லக் - இடிந்துபோன இந்தியா சிமென்ட்ஸ்!

ஷேர்லக் - இடிந்துபோன இந்தியா சிமென்ட்ஸ்!

ஷேர்லக் - இடிந்துபோன இந்தியா சிமென்ட்ஸ்!

Published:Updated:
##~##

''என்ன, மும்பை - ராஜஸ்தான் மேட்ச் ஆரம்பமாயிடுச்சா?'' என்று கேட்டபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ''மழை காரணமாக இன்னும் ஆரம்பிக்கவில்லை'' என்று நாம் சொன்னோம்.

''ஐ.பி.எல். சூறாவளி ஓய்கிற மாதிரி தெரியவில்லை. அங்கு, இங்கு என்று இருந்த இந்தப் பிரச்னை இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பிடித்து பேய்போல உலுக்கி வருகிறது. சி.எஸ்.கே.-க்கு எல்லாமுமாக இருந்த குருநாத் மெய்யப்பனே, பெட்டிங் சர்ச்சையில் சிக்கியதால், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் என்ன செய்வதென்று தெரியாமல் இடிந்து போயிருக்கிறார். இப்போதைக்கு குருநாத்துக்கும் சி.எஸ்.கே. அணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தப்பிக்கப் பார்த்திருக்கிறார். இது முழுப்பூசணிக்காயை மறைக்கிற மாதிரி என்று சிலர் கிண்டலடிக்கிறார்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த தலைவலி ஒருபக்கமிருக்க, இந்தியா சிமென்ட் நிறுவனத்தின் காலாண்டு முடிவு வேறு சரியாக வரவில்லை. இதனால் அந்தப் பங்கின் விலை ஒரேநாளில் சடாரென விழுந்திருக்கிறது. இந்தப் பங்கின் மீது முதலீட்டாளர்கள் இப்போதைக்கு கவனம் செலுத்த வேண்டாம். பிரச்னை இன்னும் எவ்வளவு தூரம் செல்லும் என்று தெரியவில்லை. சிக்கல் அதிகமானால் இன்னும்கூட விலை சரிய வாய்ப்பிருக்கிறது. கடந்த வருடங்களில் ஐ.பி.எல்.-ல் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகள் எதுவுமே சிறப்பாகச் செயல்படவில்லை. சஹாரா, ஜி.எம்.ஆர்., கிங்ஃபிஷர், டெக்கான் கிரானிக்கிள், பாம்பே டையிங். இந்தப் பட்டியலில் இந்திய சிமென்ட்ஸ் நிறுவனமும் சேர்ந்துவிடுமோ என பலரும் பயப் படுகிறார்கள்'' என்றார்.

''குட் அப்ஸர்வேஷன்தான்'' என்று பாராட்டி விட்டு,  சில்லென்று பாதாம் பாலைத் தந்தோம். ஸ்பூனில் ஒருமுறை எடுத்துப் பருகியவர், 'அடுத்த செய்திக்கு போனார்.

ஷேர்லக் - இடிந்துபோன இந்தியா  சிமென்ட்ஸ்!

''கடந்த வாரம் வெளியான நிறுவனங்களின் காலாண்டு ரிசல்ட் எப்படி?'' என்றோம். ''ஒவ்வொன்றாகச் சொல்லவா?'' என்று கேட்டுவிட்டு, சொல்ல ஆரம்பித்தார்.

''சந்தை எதிர்பார்ப்பைத் தாண்டி, பல முன்னணி நிறுவனங்களின் நிகர லாபம் முடிந்த காலாண்டில் வீழ்ச்சி கண்டிருக்கிறது. நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ-ன் நிகர லாபம் 19 சதவிகிதம் குறைந்துள்ளது. வாராக் கடனுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் இதன் நிகர லாபம் இறங்கி உள்ளது. கடந்த ஏழு  காலாண்டுகளில் இதன் நிகர லாபம் இப்போதுதான் முதல்முறையாக குறைந்துள்ளது.

இன்ஃப்ரா திட்டங்கள் மந்தமானது, வட்டி அதிகரிப்பு, செலவு கூடியது போன்ற காரணங்களால்

எல் அண்ட் டி நிறுவனத்தின் நிகர லாபம் 7 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனாலும், அது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை அறிவித்துள்ளது. இரு பங்குகளுக்கு ஒரு போனஸ் பங்கு வழங்கப்படுகிறது.

தரமான இரும்புத் தாது கிடைக்காததால் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனத்தின் கச்சா இரும்பு உற்பத்தி 11 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும், வட்டி செலவு அதிகரிப்பால் இந்நிறுவனத்தின் நிகர லாபம் நாலாவது காலாண்டில் 24 சதவிகிதம் வீழ்ச்சி (கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது) கண்டுள்ளது. ஏற்கெனவே இரண்டு பங்குகளுக்கும் தந்த இதே ஆலோசனைதான் இவற்றுக்கும்'' என்றார்.

''சந்தை வீழ்ச்சிக் கண்டாலும் ஜஸ்ட் டயல் ஐ.பி.ஓ 12 மடங்கு அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளதே..?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டோம்.

''இது இன்டர்நெட் நிறுவனங்கள்தான் இனி வேகமான வளர்ச்சியைக் காணும் என முதலீட்டாளர்களின் சென்டிமென்டை உணர்த்துவதாக இருக்கிறது. அந்த வகையில் கூடிய விரைவில் பல இன்டர்நெட் நிறுவனங்கள் ஐ.பி.ஓ வர வாய்ப்பு உள்ளது. என்றாலும், இந்தப் பங்கின் டிரேடிங் ஆரம்பித்த ஆறு மாத காலத்துக்குப் பிறகே முதலீடு செய்யலாமா, கூடாதா என்று முடிவு செய்யலாம். அமெரிக்காவில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஏற்பட்ட அனுபவத்தை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்பதால் இப்படி சொல்கிறேன்'' என்றார்.

ஷேர்லக் - இடிந்துபோன இந்தியா  சிமென்ட்ஸ்!

''இனி பணவீக்க விகிதம் குறைந்தாலும் ஆர்.பி.ஐ. அவ்வளவு சுலபமாக முக்கிய வட்டி விகிதங்களை குறைக்காது என சந்தை ஆய்வாளர்கள் சொல்கிறார்களே?'' என்றோம்.  

''காரணம், கடந்த மே 3-ம் தேதி பெரும்பான்மையான ஆர்.பி.ஐ. அதிகாரிகளின் கருத்தை மீறிதான் வட்டி விகிதத்தை ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ் 0.25% குறைத்துள்ளதாக இப்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த அதிகாரிகள் வட்டியைக் குறைக்கக் கூடாது என்பதற்கு சர்வதேச பொருளாதார நிலவரம் பலவீனமாக இருப்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதை நிரூபிக்கும்விதமாக நடப்பு வாரத்தில் உலக நிலவரங்கள் சிக்கலாக மாறி வருகின்றன. அந்தவகையில் ஆர்.பி.ஐ. அடுத்தமுறை வட்டியைக் குறைக்குமா என்பது பெரிய கேள்விக்குறிதான்'' என்று ஆர்.பி.ஐ. திரைமறைவுத் தகவலைப் போட்டு உடைத்தார்.

''ஐ.டி.சி. நிறுவனத்தின் பங்கை வாங்கும்படி அரை டஜனுக்கும் மேலான நிறுவனங்கள் சிபாரிசு செய்துள்ளதே?'' என்றோம்.

''ஐ.டி.சி. நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகள் சிறப்பாகச் செயல்பட்டு லாபம் ஈட்டி கொடுத்து வருகின்றன. ஆனால், இந்தப் பங்கின் பி.இ. விகிதம் 37-ஆக இருப்பதால் பங்கு முதலீடு மூலம் கணிசமான லாபம் தொடர்ந்து கிடைக்குமா என்பது உறுதியில்லை. எனவே, வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' என்றவர், ஒரு முக்கிய செய்தி ஒன்றையும் சொன்னார்.

''எஸ்.டி.டி. என்கிற பங்கு பரிவர்த்தனை வரியை தேசிய பங்குச் சந்தை ஜூன் 1-ம் தேதி முதல் குறைக்கிறது. ஃப்யூச்சர்ஸ் பிரிவில் எஸ்.டி.டி 0.017% லிருந்து 0.01% ஆக குறைக்கப் படுகிறது. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான வர்த்தகத்துக்கு 0.1%லிருந்து 0.001% ஆக குறைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை மத்திய நிதி மசோதா மாற்றத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது'' என்றார்.

''ரூபாயின் மதிப்பு வேகமாக சரிந்து வருகிறதே! 56-ஐத் தாண்டியும் சென்றுவிடுமா?'' என்கிற முக்கியமான கேள்வியை முன்வைத்தோம்.

''ரூபாய் சரிந்து வருவதைப் பற்றி அரசாங்கம் பெரிய அளவில் கவலைப்படவில்லை. காரணம், 57 ரூபாய்க்குக்  கீழே ரூபாய் சரிய பெரிய அளவில் வாய்ப்பில்லை. இதைவிட முக்கியம், தங்கம் விலை சர்வதேச சந்தையில் குறைந்தாலும், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதால்தான் இந்தியாவில் தங்கம் விலை குறையாமல் இருக்கிறது. ஆனால், தங்கம் விலை குறைந்தாலும் டிமாண்ட் அதிகரித்துகொண்டே இருக்கிறது. இதை வைத்து தங்கத்துக்கான இறக்குமதி வரியை இன்னும் அதிகரிக்கலாமா என்று நினைக்கிறது அரசு. இன்னொரு விஷயம், ரூபாய் சரியும்போது அதிகளவு அந்நிய முதலீடுகளை கொண்டுவரலாம் என்று நினைக்கிறது மத்திய அரசாங்கம். முக்கியமான அனலிஸ்ட்களின் கருத்துபடி, இந்த வருடத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் சராசரி மதிப்பு 54 ரூபாயில் இருக்கலாம் என்கிறார்கள். எனவே, ஏற்றுமதி தொழிலில் இருப்பவர்கள் உஷாராக இருப்பது நல்லது'' என்றவர் கிளம்பத் தயாரானார்.

''கை தாரும், வந்தவுடனேயே உம்மை பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். பேச்சு சுவாரஸ்யத்தில் அதை மறந்தே போனேன். எதற்கு தெரியுமா? நீர் புதிதாக ஆரம்பித்திருக்கும் நாணயம் விகடன் இணையதளத்துக்காகத்தான். அற்புதமாக வந்திருக்கிறது.

இந்த இணையதளத்தில் முதலீடு, சேமிப்பு, கடன், இன்ஷூரன்ஸ், நிதித் திட்டமிடல், பிசினஸ் என ஒவ்வொரு ஏரியாவாகப் பிரித்து, ஒவ்வொரு ஏரியா பற்றியும் பல கட்டுரை வெளியிட்டிருப்பதைப் பார்த்து அதிசயித்துப் போனேன். பங்குகளின் விலை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இனி nanayam.vikatan.com என்கிற முகவரிக்கு சென்றால் போதும், வாசகர்கள் எல்லாம் தெரிந்துகொள்ளலாம்'' என்றவர், ''இந்த வாரமும் ஷேர் டிப்ஸ் இல்லை'' என்று சொல்லிவிட்டு, உடனே புறப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism