Published:Updated:

ஆதார் அட்டை...ஏன் தாமதம் ?

இரா.ரூபாவதி, படம்: பா.கார்த்திக்.

பிரீமியம் ஸ்டோரி

விளக்கம்

##~##

மானிய விலையில் சமையல் கேஸ் வேண்டுமா? உடனே ஆதார் அட்டையை வாங்குங்க! என்கிற நெருக்குதல் ஒருபக்கம்; வங்கி ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கப் போனால், உங்களுக்கான ஆதார் அட்டையை வாங்கியாச்சா? இல்லை எனில் உடனே வாங்குங்க என்கிற அறிவுறுத்தல் இன்னொரு பக்கம்.

இப்படி ஆதார் அட்டையை வாங்கச் சொல்லி, பல முனைகளிலிருந்தும் வற்புறுத்தல்கள் வந்தாலும், இதை எங்கே போய் வாங்குவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள் தமிழகம் முழுக்க உள்ள அப்பாவி மக்கள். இந்த ஆதார் அட்டையைப் பெறுவது எப்படி? இதற்காக யாரைத் தொடர்புகொள்வது? எல்லோருக்கும் இந்த ஆதார் அட்டை கிடைப்பதில் என்ன தாமதம்? என்கிற கேள்விகளுக்கு

ஆதார் அட்டை...ஏன் தாமதம் ?

மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறையின் இணை இயக்குநரான எம்.ஆர்.வி. கிருஷ்ணராவை சந்தித்துக் கேட்டோம்.

''ஆதார் அட்டை பெறுவது மிகச் சுலபம்.  தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால்போதும், நீங்களும் ஆதார் அட்டையைப் பெறலாம். வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் பெரும்பகுதியினருக்கு இந்த ஆதார் அட்டையைத் தந்துவிடுவோம்'' என்றவர், இந்த அட்டையைப் பெற என்ன செய்யவேண்டும் என்பதையும் விளக்கினார்.

''அரசாங்கம் வழங்கும் ஆதார் அட்டை மூலமாக பொதுமக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும். மேலும், மக்களுக்கு நேரடியாக மானியமும் அளிக்கப்படும். இதனால், ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த அட்டையைப் பெறுவது அவசியம். இந்த அட்டைக்காக உங்கள் கைரேகை, கண் கருவிழி,  புகைப்படம் என அனைத்தும் பதிவு செய்யப்படும். மேலும், இதில் உங்களின் முழுப்பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, நிரந்தர முகவரி, தற்போதைய முகவரி, உங்கள் கையெழுத்து ஆகிய தகவல்களைத் தரவேண்டும்.

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (National Population Register - NPR) துறையிலிருந்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் ஆதார் அட்டை வழங்குவதற்கான முகாமை நடத்தி வருகிறோம். இந்த முகாம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து ஒரு விண்ணப்பப் படிவத்தைத் தருவார்கள். இதைப் பூர்த்தி செய்து முகாமிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த முகாம் நடத்தும் ஒவ்வொரு பகுதியையும் பல பிளாக்குகளாக பிரிக்கிறோம். 150 வீடுகள் கொண்டது  ஒரு பிளாக். ஒரு பிளாக்கிற்கு ஒரு கணினி மூலம்  பதிவு செய்யப்படும்.  இப்படி பதிவு செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிறுவனம்தான் அனைத்து தகவல்களையும் நிர்வகிக்கும். இத்தகவல்களை யூ.ஐடி.ஏ.ஐ.க்கு (Unique Identification Authority of India) அனுப்பி வைக்கும். அதன்பிறகு உங்களுக்கான தனிப்பட்ட ஆதார் அட்டை இரண்டு, மூன்று வாரங் களுக்குள் தபாலில் உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்.

ஆதார் அட்டை...ஏன் தாமதம் ?

இந்த ஆதார் அட்டையில் 12  இலக்கங்களைக்கொண்ட ஆதார் எண், பார்கோடு, க்யூ.ஆர்.கோடு, அட்டைக்குச் சொந்தக்காரரின் போட்டோ போன்ற விவரங்கள் இருக்கும். இந்த அட்டை, காகிதத்தை விட சற்று தடியான அட்டை போலிருக்கும். பான் கார்டு, ஓட்டுநர் அட்டைபோல பிளாஸ்டிக் கார்டாக இருக்காது.

மேற்சொன்ன முகாமில் கலந்துகொள்ள 2010-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட ரசீதை கையில் வைத்திருப்பது முக்கியம். இதில் உள்ள வரிசை எண்படிதான் பதிவுகள் நடைபெறும். ஒருவேளை உங்களிடம் ரசீது இல்லை என்றாலும் கவலை இல்லை. அரசு வழங்கிய ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஒட்டுநர் உரிமம் என எதையாவது ஒன்றை கொடுத்து ஆதார் அட்டைக்கான பதிவை செய்து கொள்ளலாம். உங்களிடம் இந்த ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும், இவை எதுவும் இல்லை என்று சொல்லி மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துதரலாம்.  

கடந்த சில ஆண்டுகளில் தமிழகம் முழுக்க இருபது லட்சம் பேருக்கு ஆதார் அட்டை தரப்பட்டுள்ளது. இவர்களும் நாங்கள் நடத்தும் முகாமில் கலந்துகொண்டு, ஏற்கெனவே பெற்ற ஆதார் அட்டையையும் எண்ணையும் தந்து, பதிவு செய்துகொள்ளவேண்டும். இவர்களுக்கு கைரேகை, கண்கருவிழி போன்றவை எடுத்திருப்பார்கள் என்பதால், மீண்டுமொருமுறை எடுக்கமாட்டோம்.

ஆதார் அட்டை...ஏன் தாமதம் ?

சொந்த ஊரில் முகாம் நடக்கும்போது போக இயலாதவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் தங்களைப் பற்றிய தகவல்களை தந்து ஆதார் அட்டை பெற பதிவு செய்துகொள்ளலாம். ஆனால், சொந்த ஊரில் பதிவு செய்து ஆதார் அட்டை வாங்கியபிறகு, தற்போது வசிக்கும் முகவரியில் இன்னொருமுறை பதிவது கூடாது. இப்படி இருமுறை பதிவு செய்பவர்களை நாங்கள் உடனே கண்டுபிடித்து, இரண்டாவதுமுறை செய்த பதிவை நீக்கிவிடுவோம். எனவே, ஒருவர் ஒருமுறை மட்டும் பதிவு செய்தாலே போதும்.  

நீங்கள் பதிவு செய்யும் தகவல்களில் ஏதாவது மாற்றம் இருந்தால் அடுத்த 48 மணி நேரத்தில் நீங்கள் பதிவு செய்த முகாமிற்கே சென்று மாற்றங்களைத் தெரிவிக்கலாம். உங்களின் பெயர் எப்படி அட்டையில் வரவேண்டும் என்பதை இதில் குறிப்பிட முடியும். மேலும், இதுகுறித்த தகவல்களை 044-24912993 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் அந்த மாதம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில், எந்த தினத்தில் முகாம் நடக்கும் என்கிற தகவலை பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறோம். இதை பார்த்து முகாமில் கலந்துகொள்ளலாம். தவிர, ஆதார் அட்டை பற்றி புகார் பதிவு செய்ய, ஆதார் அட்டை குறித்த தகவல்களைப் பெற என அனைத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு ஆதார் அலுவலகத்தை அமைத்து, குறைகளை நீக்கப் போகிறோம்.  

ஆதார் அட்டை...ஏன் தாமதம் ?

ஏற்கெனவே பெற்ற ஆதார் அட்டை தொலைந்துவிட்டால், முகாமில் நீங்கள் கலந்து கொண்டபோது ஒப்புகை சீட்டு ஒன்றைத் தந்திருப்பார்கள். அதில் உள்ள எண் அல்லது ஆதார் எண்ணை யூ.ஐடி.ஏ.ஐ-க்கு கடிதம் அனுப்பி புதிய அட்டையைப் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு