Published:Updated:

ஷேர்லக் : சந்தையை சரித்த ஆர்.பி.ஐ. அறிவிப்பு !

ஷேர்லக் : சந்தையை சரித்த ஆர்.பி.ஐ. அறிவிப்பு !

பிரீமியம் ஸ்டோரி
##~##

''அட, அடுத்த இதழில் அதிரடியான மாற்றங்களை அறிவித்துவிட்டீரே! 'பணவளக்கலை’ அருமையான தலைப்பு. 'எதிர்கொள்’ இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்கவேண்டிய பகுதி. பிசினஸ் தந்திரம், காஸ்ட் மேனேஜ்மென்ட் என அடுத்த ரவுண்டு விருந்துக்கு வாசகர்கள் தயாராகவேண்டியதுதான்'' - நம் டேபிளில் இருந்த அடுத்த வாரத்துக்கான நாணயம் விகடன் அறிவிப்பைப் பார்த்துவிட்டு, நம்மைப் பாராட்டினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, நம் அதிர்ச்சி கேள்வியை முன்வைத்தோம்.

''சந்தை ஒரேநாளில் 500 புள்ளிகள் வரை குறைந்து, எல்லோரையும் பதற வைத்துவிட்டதே?''

''எல்லாம் ஜி.டி.பி. டேட்டாவின் கைங்கர்யம் தான். கடந்த காலாண்டைவிட 0.1 புள்ளிகள் உயர்ந்து 4.8 சதவிகிதமாக வந்திருக்கிறது ஜி.டி.பி. நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் குறைந்திருக்கிறது. மான்டேக்சிங் அலுவாலியா போன்றவர்கள் இதுபற்றி மகிழ்ச்சி தெரிவித் திருக்கிறார்கள். ஆனால், சந்தை இதை ரசிக்கவே இல்லை. குறிப்பாக, வெளிநாட்டு முதலீடு இனி இந்தியாவை நோக்கி வருவது குறையும் என சந்தையில் முக்கிய புள்ளிகள் நினைத்ததால், பதறியடித்துக்கொண்டு பங்குகளை விற்க ஆரம்பித்தார்கள்.

இந்தப் போக்கு அடுத்த வாரமும் தொடர்ந்தால் சந்தை இன்னும்கூட இறங்கும். ஏதாவது நல்ல செய்தி வந்து, நிஃப்டி 6300 புள்ளிகளுக்குமேல் தொடர்ந்து சில வாரங்கள் நிலைத்து நின்றால் மட்டுமே கரடியின் பிடியிலிருந்து முழுவதுமாக நாம் வெளியே வந்து, காளையின் மீது சவாரி செய்யப் போகிறோம் என்று அர்த்தம். அதுவரை சந்தை ஏற்றமும் இறக்கமுமாக இருக்கப் போவதை வேறு வழியில்லாமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்'' என்றார்.

''வெள்ளிக்கிழமை அன்று சந்தை குறைந்ததற்கு ஆர்.பி.ஐ.யின் அறிவிப்பும் ஒரு காரணம் என்கிறார்களே?'' என்றோம்.

''உண்மைதான். வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு கடந்த வியாழனன்று ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ் ஒரு சம்மட்டி அடி தந்தார். பணவீக்கம் இன்னும் குறையவில்லை; மேலும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் அதிகமாக இருப்பதால் வட்டி குறைப்பு என்பது சாத்தியமே இல்லை என்று அவர் பேசப் போக, இது மிகப் பெரிய நெகட்டிவ் நியூஸ் என்று நினைத்து, பங்குகளை விற்க ஆரம்பித்தார்கள். இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதற்கு பதில், வட்டி குறைப்பு கிடையாது, ஜூன் மாத மீட்டிங் கேன்சல் என்று நேரடியாகச் சொல்லி இருக்கலாம்'' என்றார் கொஞ்சம் வெறுப்போடு.

ஷேர்லக் : சந்தையை சரித்த ஆர்.பி.ஐ. அறிவிப்பு !

''ரிலையன்ஸ் பங்கின் விலை சரிவது கொஞ்சம் குறைந்திருக்கிறதே! என்ன காரணம்?'' என்று விசாரித்தோம்.

''2011, 12, 13 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் ரிலையன்ஸின் வருமானம் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆனால், இந்த மூன்று ஆண்டுகளில் இதர வருமானம் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஒரு புதிய கேஸ் ஃபீல்டினை கண்டுபிடித்திருக்கிறது ரிலையன்ஸ்.

மேலும், 2014-ல் இந்த நிறுவனத்தின் விற்கும் விலையில் மாற்றம் வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் இப்போதே சில அந்நிய முதலீட்டாளர்கள் இந்தப் பங்கினை குறிவைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான் இந்தப் பங்கு பெரிய அளவில் சரியாமல் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சரிந்த ரிலையன்ஸ் இன்னும் இரண்டு வருடங்களில் 1,500 ரூபாய்க்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது'' என்று சொன்னார்.

''நீர் சொல்கிறபடி நடந்துவிட்டால், பலரும் உமது வாயில் சர்க்கரை போடுவார்கள். நல்ல நிறுவனம் என ஆயிரம் ரூபாய்க்குமேல் வாங்கி விட்டு, பிறகு விலை குறைந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். அது சரி, நால்கோ நிறுவனப் பங்கின் விலை பயங்கரமாக குறைந்துள்ளதே?'' என்றோம் மீண்டும் ஆச்சரியமாக.

''கடந்த வியாழனன்று அந்தப் பங்கின் விலை அதன் 52 வார குறைந்தபட்ச விலைக்கு கீழே இறங்கி உள்ளது. ஒருங்கிணைந்த மெட்டல் தயாரிப்பு நிறுவனமான இதன் நிகர லாப வரம்பு கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருவதால் லாபம் கணிசமாக குறைந்துள்ளது. இது இந்தப் பங்கின் விலையிலும் எதிரொலித்து வருகிறது. இப்போதைக்கு இந்தப் பங்கை உடனடியாக வாங்காமல், கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்து வாங்குவது நல்லது!'' என்று பதில் சொன்னார்.

''பவர்  ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பெயர் பத்திரிகைகளில் பெரிய அளவில் அடிபட ஆரம்பித்திருக்கிறதே..?''

''இதன் நிகர லாபம் 46 சதவிகிதம் அதிகரித்து 4,420 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதன் கைவசம் அதிக ரொக்க கையிருப்பு இருக்கிறது. அதனை பயன்படுத்தி பொதுத் துறை வங்கி ஒன்றின் பெருவாரியான பங்குகளை வாங்க இருப்பதாக இந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

பஞ்சாப் அண்டு சிந்த் பேங்க், இந்தியன் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ரா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப்

ஷேர்லக் : சந்தையை சரித்த ஆர்.பி.ஐ. அறிவிப்பு !

இந்தியா ஆகிய ஐந்து பொதுத் துறை வங்கிகள் மீது பி.எஃப்.சி. கண் வைத்திருப்பதாகத் தகவல். வங்கியில் நிர்வாக பொறுப்பில் பங்கேற்கும் வகையில் 5 சதவிகித அளவுக்கு பங்குகளை வாங்க பி.எஃப்.சி. திட்டமிட்டுள்ளது'' என்றும் சொன்னார்.

''ஆயிலை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் நஷ்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர லாபம் முடிந்த காலாண்டில் 26.5 சதவிகிதம் அதிகரித்து 5,005 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம், மத்திய, மாநில அரசுகள் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுக்கான மானியத்தைத் தந்ததுதான்'' என்றவருக்கு, சில்லென்று பாதாம் பால் தந்தோம்.

அதை ரசித்துக் குடித்தவரிடம் ''கோப்ரா போஸ்ட் வெளியிட்ட தகவல்களுக்கு என்னதான் நடவடிக்கை?'' என்று கேட்டோம்.

''ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட வங்கிகள் பான் கார்டு, கே.ஒய்.சி. விதிமுறைகளை பின்பற்றாமல் டெபாசிட்களை பெற்ற விவகாரத்தில் ஆர்.பி.ஐ. தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. கோப்ரா போஸ்ட் இணையதளம் சொன்ன புகார்களில் சில உண்மை இருப்பதாக ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ் சொல்லிவிட்டார். சில வங்கிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்று சொல்லி இருக்கிறார். எனவே, இந்த வங்கிகள் மீது கொஞ்சம் கவனம் அதிகம் இருப்பது நல்லது'' என்றார்.

''நம் நாட்டில் போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், அரசு நிறுவனமான

எம்.டி.என்.எல். நிறுவனத்தில் மட்டும் எப்படி இழப்பு ஏற்படுகிறது?'' என்றோம்.

''தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் எம்.டி.என்.எல். நிறுவனத்தின் லாபம் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 2011-12-ல் இந்நிறுவனத்தின் நிகர இழப்பு 1,374 கோடி ரூபாயாக இருந்தது. இந்த இழப்பு 2012-13-ல் 1,986 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், பணியாளர் களுக்கான செலவு அதிகரித்ததே. இந்த நிறுவனத்தின் மொத்த நிகர இழப்பு ரூ.5,321-ஆக உள்ளது. இதனை அடுத்து இந்தப் பங்கின் விலை வியாழக்கிழமை மட்டும் சுமார் 3 சதவிகிதமாக குறைந்து ரூ.19.75-க்கு வர்த்தகமானது. தெரிந்தோ, தெரியாமலோ இந்தப் பங்கை வைத்திருப்பவர்கள் ஒரு பெரிய வணக்கம்போட்டுவிட்டு, பேசாமல் இருந்துவிட வேண்டியதுதான்'' என்றார்.

''சந்தை இன்னும் வீக்கான நிலையிலேயே இருக்கிறது. எனவே, இந்த வாரமும் ஷேர் டிப்ஸ் எதுவும் வேண்டாம்'' என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு