Published:Updated:

மோசடி குற்றச்சாட்டு : அடி சறுக்கிய ஆம்வே!

பானுமதி அருணாசலம்.

பிரீமியம் ஸ்டோரி

 பிரச்னை

##~##

இத்தனை நாளும் எந்த பெரிய சர்ச்சையிலும் சிக்காமல் செயல்பட்டுவந்த ஆம்வே நிறுவனம்கூட இப்போது சிக்கலில் மாட்டி இருக்கிறது. நேரடி விற்பனை மூலம் பொருட்களை விற்கும் இந்நிறுவனம் மோசடி செய்ததாக கூறி கேரளாவில் புகார்கள் கிளம்பவே, அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. வில்லியம் ஸ்காட் பின்கினி மற்றும் சஞ்சய் மல்கோத்ரா, அன்சூ புத்ராஜா ஆகிய இரண்டு இயக்குநர்கள் ஆகியோரை கேரள மாநிலம் கோழிக்கோடு போலீசார் கைது செய்தனர்.

விசாலாட்சி எனும் பெண் கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய் வரை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் இழந்துள்ள தாக புகார் கூறியுள்ளார். காவல் துறையினரும் இந்தப் பிரச்னை பற்றி விசாரித்ததில், எம்.ஆர்.பி. விலையைவிட பத்து மடங்கு அதிகமாக ஆம்வே பொருட்கள் விற்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.  மேலும், பரிசுச் சீட்டு மற்றும் பணச் சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டத்திற்கு எதிராக பணம் வசூலித்ததாகவும் புகார் செய்யப்பட்டுள்ளது.  

மோசடி குற்றச்சாட்டு : அடி சறுக்கிய ஆம்வே!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் 80 நாடுகளில் தனது பொருட்களை விற்பனை செய்கிறது. டூத்பேஸ்ட், ஷாம்பூ, சோப்பு, டயட் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விநியோகஸ்தர்கள் மூலம் நேரடி விற்பனை செய்கிறது. இந்த விநியோகஸ்தர்கள் இந்நிறுவனத்தின் பணியாளர்கள் அல்ல. இந் நிறுவனம் விற்கும் பொருட்கள் அதன் எம்.ஆர்.பி. விலையைவிட அதிகமாக விற்க கூடாது என்று சொன்னாலும் இந்த விதி மீறப்பட்டுள்ளதாகச் சொல்கிறது கேரள போலீஸ்.

ஒரு விநியோகஸ்தர் ஒரு மாதத்திற்கு எவ்வளவு பொருட்கள் வாங்குகின்றனரோ, அதன்  அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும்.  குழுக்களாகப் பிரித்து ஆட்களைச் சேர்த்து அதற்கு கமிஷன் தரும் திட்டமும் இருக்கிறது. இப்படி செய்வதால் இது எம்.எல்.எம். நிறுவனமோ என்கிற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இந்நிறுவனத்தின் சி.இ.ஓ. கைதானது பற்றி ஆம்வே நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் ஹெட் சுதீப் சென்குப்தாவைத் தொடர்புகொண்டு கேட்டோம்.

''வாடிக்கையாளர்கள் எங்களது நேரடி விற்பனை முறையைத் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவுதான் இது. 2011-ம் ஆண்டில் அளித்த புகாருக்கு இப்போது கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். இந்த புகார் குறித்து எந்தவித அறிவிப்பையும் எங்களுக்குத் தராமல் திடீரென கைது செய்துள்ளனர். தவிர, இது எங்கள் நிறுவனத்தினால் ஏற்பட்ட பிரச்னை கிடையாது. நேரடி விற்பனை துறைக்கான சட்டங்கள் இன்னும் சரியான முறையில் வகுக்கப்படாமல் இருப்பதே காரணம். என்றாலும், எங்கள் தயாரிப்புகள் உலகத் தரம் வாய்ந்தது என்பதால் எங்கள் சேவையைத் தொடர்ந்து விநியோகஸ்தர்களுக்கு வழங்குவோம்'' என்றார்.

கைதான ஆம்வே அதிகாரிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்நிறுவனத்திற்கு எதிராக பெரிய குற்றச்சாட்டு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், அதிக கமிஷன் என ஆசைக்காட்டி, அடைய முடியாத இலக்குகளை நிர்ணயம் செய்யும்

நிறுவனங்களிடம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு