Published:Updated:

மூலதனப் பொருட்கள் துறை... முன்னேற்றம் உண்டா..?

வி.நாகப்பன்

மூலதனப் பொருட்கள் துறை... முன்னேற்றம் உண்டா..?

வி.நாகப்பன்

Published:Updated:
##~##

பொதுவாக, வாரம் ஒரு துறை என்கிற அளவில் நாம் இதுவரை அலசி வந்தோம். இந்த வாரம் கேப்பிட்டல் கூட்ஸ் மற்றும் மீடியா என இரு துறைகளைப் பற்றி அலசப் போகிறோம். முதலில் கேப்பிட்டல் கூட்ஸ் துறையைப் பற்றி பார்ப்போம்.

நாட்டின் பொருளாதார உற்பத்தி அதிகரிக்க, தொழிற்சாலைகள் அதிகரிக்கவேண்டும். அந்தத்  தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்கள், உதிரிபாகங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இதனால் அதிகப் பலனடைபவை. தொழில் உற்பத்தி பெருகப் போகிறது என்பதை முன்கூட்டியே நமக்குக் கட்டியம் கூறும்விதமாக அமைவது மூலதனப் பொருட்கள் துறையின் பெர்ஃபார்மென்ஸ். அந்த விதத்தில், இத்துறையின் வளர்ச்சி என்பது சீராக இல்லாமல், பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன், மிக்ஸ்டு ஆகவே இருந்து வந்திருக்கிறது இதுவரை. இனியும் அப்படிதான் தொடருமா என்பது முக்கியமான கேள்வி. அந்தக் கேள்விக்கான பதிலை இப்போது பார்ப்போம்.    

மூலதனப் பொருட்கள் துறை என்பது பரந்து விரிந்து எல்லாத் துறைகளையும் உள்ளடக்கியது எனச் சொல்லலாம். ஜவுளித் துறை, மின்சாரம், சிமென்ட்/சர்க்கரை/எஃகு ஆலைகள், விவசாயம், கட்டுமானம் என சொல்லிக்கொண்டே போகலாம். உதாரணமாக,  

 ஜவுளித் துறைக்குத் தேவையான யார்ன் மெஷினரி, சூயிங் மெஷினரி, வீவிங் மெஷினரி உள்ளிட்ட இயந்திரங்கள்.

மூலதனப் பொருட்கள் துறை... முன்னேற்றம்  உண்டா..?

 மெட்டல் வொர்க்கிங் லேத், மெட்டல் ஃபார்மிங் மெஷின் டூல்ஸ், உதிரிபாகங்கள் உள்ளிட்ட மெஷின் டூல்ஸ் ஆகியவை.

மின் துறைக்குத் தேவையான ஸ்டீம் பாய்லர், ஸ்டீம் டர்பைன், டீசல் இன்ஜின், டிரான்ஸ்ஃபார்மர், சுவிட்ச் கியர், மோட்டார், ஜெனரேட்டர், பிஸ்டன் இன்ஜின் உள்ளிட்ட எலெக்ட்ரிக்கல் அண்டு பவர் எக்யூப்மென்ட்.

 கட்டுமானத் துறையில் பயன்படும் எர்த் மூவிங் அண்டு கன்ஸ்ட்ரக்‌ஷன் எக்யூப்மென்ட்ஸ்.

மூலதனப் பொருட்கள் துறை... முன்னேற்றம்  உண்டா..?

ப்ரஷர் வால்வு, கூலிங் டவர், ஃபர்னேஸ், ஹீட் எக்ஸ்சேஞ்சர் உள்ளிட்ட ப்ராசஸ் ப்ளான்ட் எக்யூப்மென்ட்கள்.

 சென்ட்ரிஃப்யூகல் பம்ப்ஸ், ஏர்பம்ப் ஆகியவற்றின் உதிரிபாகங்கள், விவசாயத்திற்குத் தேவையான அறுவடை இயந்திரங்கள், ஆகியவை  

ஒரு நுகர்வோராக இத்துறையோடு நமக்கு நேரடித் தொடர்பு ஏதும் இல்லையென்றாலும், நம் அன்றாட வாழ்வில் நம்மோடு ஒன்றி உறவாடும் ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்யத் தேவையான இயந்திரங்கள் இவை என்பது இப்பட்டியலைப் பார்த்தாலே தெரியும்.இத்துறையின் சாதக, பாதகங்களைப் பட்டியலிடலாம்.

பலம்:

இத்துறையின் முக்கிய பலமே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதே. ஒரு காலத்தில் எல்லாவற்றையும் இறக்குமதி செய்துகொண்டிருந்தது மாறி, இப்போது பெரும்பாலான இயந்திரங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கத் துவங்கியிருக்கிறோம். எனவே, முன்பு தந்துவந்த அதீத இறக்குமதி வரிகள் எல்லாம் இப்போது கிடையாது. அவ்வப்போது கொஞ்சம் ஏற்ற இறக்கங் களுடன் இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் நம் பொருளாதாரம் வளர்ந்து வருவது இத்துறைக்கு வலு சேர்க்கிறது.

பலவீனம்:

மூலதனப் பொருட்கள் துறை... முன்னேற்றம்  உண்டா..?

சர்வதேச சந்தைகளில் உலோகம் உள்ளிட்ட கமாடிட்டி பொருட்களின் அதிரடி விலை மாற்றங்கள் இத்துறையின் லாபக் கணக்கை பாதிக்கச் செய்கிறது. அதேமாதிரி, ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு உயர்வது ஏற்றுமதி நிறுவனங்களுக்குச் சாதகமானதாக அமைந்தாலும், உதிரிபாகங்களையும் டெக்னாலஜியையும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு சமீபகாலமாக பெருத்த அடி.

மின் தட்டுப்பாடு / தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவையும் பின்னடைவை ஏற்படுத்தும் அம்சங்கள்.

தொழில் துவங்க முதலீட்டை சமாளித்துவிடலா மென்றாலும், இத்துறையில் தொழில் நடத்துவதற்குத் தேவையான (வொர்க்கிங் கேப்பிட்டல்) முதலீடு அதிகம்; அதற்கான வட்டி விகிதங்கள் அதிகம்.  

ஸ்கில்டு லேபர் கிடைப்பதில் பிரச்னை, கிடைத்தாலும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருப்பதும், அப்படியே தந்தாலும் போட்டியாளர்களிடம் அவர்களை இழப்பதும் இங்கு அதிகம்.

வாய்ப்பு:

டாலர் மதிப்பு உயர்வு ஏற்றுமதிக்கு சாதகம். மின் பற்றாக்குறை அதிகரிப்பு, விவசாயத்திற்கு அரசு கொடுக்கும் முக்கியத்துவம்.

அச்சுறுத்தல்:

சீனா, கொரியா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் போட்டி.

நட்பு நாடுகளுக்கிடையேயான எஃப்.டி.ஏ. எனும் தடையில்லா/வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாகவும் இத்துறை பாதிக்கப்படலாம்.

இத்துறையில் முதலீட்டுக்கு ஏற்ற, கவனிக்க வேண்டிய நிறுவனங்கள்:

எல் அண்ட் டி, ஏ.பி.பி., பி.ஹெச்.இ.எல்., சீமென்ஸ், தெர்மேக்ஸ், எஸ்.கே.எஃப். ஆகியவை.

எஸ் அண்ட் பி  பி.எஸ்.இ. கேப்பிட்டல் கூட்ஸ் குறியீடு:

துவக்க தேதி: ஆகஸ்ட் 9, 1999; அறிமுக தேதி: பிப்ரவரி 1, 1999

மொத்தம் 22 பங்குகள்; மும்பை பங்குச் சந்தை யில், மொத்த சந்தை மூலதன மதிப்பில் 3.50%  

நடப்பு ஆண்டில் இழப்பு: 12%; கடந்த 1 ஆண்டில் ஆதாயம் சுமார் 7%; 2 ஆண்டுகளில் 25.50%; 3 ஆண்டுகளில் 29.50%

ஒளிருமா ஊடகத் துறை..?

''ஆல் இந்தியா ரேடியோ; செய்திகள் வாசிப்பது...'' - இந்தியக் குடிமகன்களுக்கு இது ஒன்றுதான் பொழுதுபோக்கு சுமார் முப்பது  ஆண்டுகளுக்கு முன்பு.

வானொலியின் நிகழ்ச்சி நிரலை மக்கள் தெரிந்துகொள்ள 'வானொலி’ என தனியாக ஒரு பத்திரிகையை நடத்தி வந்தது இந்திய வானொலி. சில தமிழ், ஆங்கில செய்தித்தாள்கள், சிலபல பத்திரிகைகள்... இதைவிட்டால், ஒரே ஒரு தொலைக்காட்சி சேனல்; அதிலும் ஒரு சில மணி நேரமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். வாரத்திற்கு ஒரே ஒரு திரைப்படம்தான். ஞாயிறு மாலை என்ன படம் என்பதைத் தெரிந்துகொள்ள ஒவ்வொரு வாரமும் புதனன்று ஒளிபரப்பாகும் நேயர் கடிதம் நிகழ்ச்சியைப் பார்க்கவேண்டும். சினிமா பாட்டா? வாரத்தில் ஒரே ஒருநாள், அரை மணி நேரம் மட்டுமே.  

இதையெல்லாம் புரட்டிப்போட்டது 1992-ல். 'இந்தா புடி, எதுவேணுமோ எடுத்துக்கோ’ என திகட்டும் அளவுக்கு இன்று சேனல்களும் செய்தித்தாள்களும், பத்திரிகைகளும் இருப்பதன் துவக்கம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில்தான். இன்று தமிழில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட பண்பலை வானொலி நிலையங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகள், செய்தித்தாள்கள். சுமார் 40 தொலைக்காட்சி சேனல்கள் தமிழில் மட்டும். ஆன்மிகத்திற்கென, ஜோசியத்திற்கென, பெண்களுக்கென, குழந்தைகளுக்கென, பிசினஸுக்கென தனித்தனி பத்திரிகைகள் மட்டுமல்ல, தொலைக்காட்சி சேனல்களும் கடை விரித்திருக்கின்றன இப்போது!

மூலதனப் பொருட்கள் துறை... முன்னேற்றம்  உண்டா..?

ஆனால், இவை அத்தனையும் லாபத்தில் ஓடுகின்றன எனச் சொல்வதற்கில்லை. பொதுவாக இத்துறையை மூன்று விதமாகப் பிரிக்கலாம்:

அச்சில் வரும் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் - பிரின்ட் மீடியா; தொலைக்காட்சி, திரைத்துறை உள்ளிட்டவை - விஷ§வல் மீடியா;  சீரியல் தொடர்கள் போன்றவற்றைத் தயாரித்துத் தரும் சாஃப்ட்வேர் அல்லது கன்டென்ட் தரும் நிறுவனங்கள்.

இத்துறையின் சாதக, பாதகங்கள் என்னென்ன என விரிவாகப் பார்க்கலாம்.

பலம்:

இத்துறையின் இன்றைய மிகப் பெரிய பலமே, தொழில்நுட்பம்தான். குறைந்த செலவில், தரமான செயல்பாடு என்பது சாத்தியம். நம் நாட்டில், குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் என்பதும் பிரின்ட் மீடியாவுக்கு சாதகமான விஷயமாக இதுவரை இருந்து வந்திருக்கிறது. மற்ற எல்லாத் துறைகளையும் போலவே அதிகரித்துவரும் நடுத்தட்டு மக்கள் தொகையும் அவர்களது நுகர்வு கலாசாரமும் இத்துறையின் பலம்.  

மூலதனப் பொருட்கள் துறை... முன்னேற்றம்  உண்டா..?

பலவீனம்:

இத்துறையில் நிலவிவரும் கடும் போட்டிதான். 'அண்டர் கட்டிங்’ என்பார்கள் இதை வியாபாரத்தில். விலையை அதிரடியாக குறைத்து, போட்டியாளர்களை ஒழிப்பது. இத்தந்திரத்தை தன்னையே அழித்துக்கொள்ளும் அளவுக்குக் கையாள்கிறார்களோ எனும் சந்தேகமும் எழாமலில்லை. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான மீடியா நிறுவனங்கள் இயங்குவது நஷ்டத்தில்; அல்லது, குறைந்த லாபத்தில்தான் என்று சொன்னால் ஆச்சரியமாகத்தானே இருக்கும் உங்களுக்கு?

வாய்ப்பு:

இத்துறைக்கு இன்று இருக்கக்கூடிய மிகப் பெரிய வாய்ப்பு, இணையம்; இணையதளத்தின் சக்தியை முழுமையாகப் புரிந்துகொண்ட நிறுவனங்கள் மெள்ள மெள்ள ஆன்லைனுக்கு மாறத் துவங்கிவிட்டன. சர்வதேச பத்திரிகையான 'நியூஸ் வீக்’ இதற்கு நல்ல உதாரணம். இணையம், பிரின்ட், விஷ§வல் என இத்துறையின் எல்லா வழிகளிலும் கால் பதிப்பவர்கள் மட்டுமே இனி காலம்தள்ள முடியும் என்பதற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹெட் லைன்ஸ் டுடே மற்றும் சன் ஆகியவையே நல்ல உதாரணம்.

அச்சுறுத்தல்:

இணையதளத்தின் வளர்ச்சியானது இத்துறை யின் வளர்ச்சியை எதிர்காலத்தில் நிச்சயம் பாதிக்கும். ஃபேஸ்புக், டுவிட்டர், ஆன்லைன் பத்திரிகைகள் போன்றவற்றின் தாக்கமாகத்தான் இருக்கும்.

சென்ற வாரத்தில் சன் நிர்வாகம் தனது பங்குகளை ரூ.403 என்ற அளவில் விற்றது, செபியின் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுவதற்காக. பங்குச் சந்தைகளில் பட்டிய லிடப்பட்டிருக்கும் நிறுவனம் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 25% மேல், புரமோட்டர்கள் அல்லாத பங்குதாரர்களாக இருக்கவேண்டும் என்பது செபியின் விதி. புரமோட்டர்களின் பங்குகள் 75 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால்தான் பட்டியலில் தொடர முடியும்.

இன்னும் சில நிறுவனங்கள் இதை பின்பற்றலாம் என்றாலும், இத்துறையின் பங்குகள் இப்போது முழுவிலையில் அல்லது அதிகமான மதிப்பீட்டில்தான் வர்த்தகமாகின்றன என்பதால், பொறுமையாக காத்திருந்து இறக்கத்தின்போது மட்டுமே வாங்கலாம். இத்துறையில் கவனிக்கவேண்டிய முதலீட்டுக்கு ஏற்ற நிறுவனங்கள்:

ஜீ டிவி, சன் டிவி, டிவி 18 ஆகியவை (விலை இறக்கத்தின்போது மட்டுமே வாங்கவும்!).

(முற்றும்)