Published:Updated:

பணவளக்கலை - 2

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் !

பணவளக்கலை - 2

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் !

Published:Updated:
##~##

பணம் என்றவுடனேயே எல்லோருக்கும் அதன் பலாபலன்கள்தான் நினைவுக்கு வரும். இப்படி பலாபலன்கள் மட்டுமே நினைவுக்கு வருவதால் பணம் ஒருவிதமான இனம்புரியாத கலவரத்தைத்தான் மனித மனதில் உண்டு பண்ணுகின்றது.

சமீபத்தில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் இருந்து ஓர் ஆராய்ச்சி செய்தார்கள். வங்கிக்குள் வரும் மனிதர்களுடைய நடவடிக்கையை வங்கிக்குள் நுழையும்முன், வங்கிக்குள் நுழைந்தபின் என இரண்டு வகையாக பிரித்துப் பார்த்தபோது பல சுவையான விஷயங்களை கண்டறிந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வங்கி என்பது பணம் குடியிருக்கும் இடம். அந்த இடத்துக்குள் வரும்போது பலரும் ஒருவிதமான படபடப்புடன் செயல்படுகிறார்களாம். மருத்துவமனை, கோயில், பள்ளி போன்ற இடங்கள் எல்லாவற்றையும்விட வங்கிக்குள் வரும்போது மனிதர்களின் நடவடிக்கை கொஞ்சம் பரபரப்பானதாகவும், தீர்க்கமானதாகவும் மாறிவிடுகின்றதாம்.

வங்கியில் மட்டுமல்ல, கொஞ்சம் பெரிய தொகையைக் கையாளும்போதே நமக்குள் ஒரு படபடப்பு வந்துவிடுவது நிஜம்தானே! இதனால்தான் மனிதன் பணத்தை மிக முக்கியமான விஷயமாகக் கருதுகின்றான்.  கிட்டத்தட்ட வணங்கத்தகுந்த விஷயமாகவே மனிதர்கள் பணத்தைக் கையாளுகின்னர் என்று சொல்கின்றார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்.

நம்ப முடியவில்லை இல்லையா? ஒரு சின்ன பரீட்சை செய்து பார்ப்போம். கதவு மூடப்பட்ட அறையினுள் மேஜையின் மீதிருந்து ஒரு வெள்ளைத்தாளை பறக்கவிட்டுப் பாருங்கள். பிறகு அதே மேஜையில் இருந்து ஓர் ஆயிரம் ரூபாய் நோட்டை பறக்கவிடுங்கள். வெள்ளைத்தாள் பறக்கும்போது உங்கள் நாடித்துடிப்பு எப்படி இருந்தது? ஆயிரம் ரூபாய்த்தாள் பறக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? நன்றாகவே மாறுபட்டிருந்தது, இல்லையா?

பணவளக்கலை - 2


ஓவியங்கள்: ஹாசிப் கான்

இதுதான் பணத்தின் பிரச்னை. பணமானது வெவ்வேறு முகங்களைக்கொண்டது. பாதுகாப்பு, பிரச்னை, வலிமை மற்றும் உந்துசக்தி என மூன்று முக்கிய விஷயங்ளை நமக்குத் தருவதாக இருக்கிறது. எப்படி?  

நம்மிடம் பணம் இல்லாதபோது மட்டுமே இந்த உலகத்தின் குரூர முகத்தை நம்மால் முழுமையாகப் பார்க்க முடியும். பணம் இல்லையென்றால், நம் வாழ்க்கையை நம்மால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது. பணம் வைத்திருக்கும் யாரோ ஒருவர்தான் நம் வாழ்க்கையை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். பணம் இருந்தால் நாம் மற்றவர் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த முடியும். பணம் இருக்கும்போது பிரச்னை வந்தால், அந்தப் பணத்தை வைத்து பிரச்னையை சரிசெய்துகொள்ள முடியும்.  

பணம் நமக்கு பாதுகாப்பு, ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அது எப்படி பிரச்னை ஆகும்? பணம் என்றவுடனேயே அதிகமாக சம்பாதிப்பது எப்படி, சம்பாதித்ததைக் கைநழுவவிடாமல் காப்பது எப்படி போன்ற பிரச்னைகள் மனதில் குடிகொள்ள ஆரம்பித்துவிடும். இந்தப் பிரச்னைகள் நினைவுக்கு வருவதால்தான் பணம் என்றாலே பிரச்னை என்று நாம் நினைக்கிறோம்.  

அடுத்தது, வலிமை. நாம் வாழும் சமுதாயத்தில் பணம் வைத்திருப்பவர்களை பெரிய மனிதர்கள் என்று என்னும் எண்ணம் பெரிதாக வளர்ந்து நிற்கின்றது. இதைத்தான் வலிமை என்கின்றோம். நினைத்ததை வாங்க முடியும் என்ற நிலையும் பணம் வைத்திருப்பவருக்கு வலிமையைத் தருகின்றது. உங்களுக்கு நாளைக்கே பெரும் தொகை கையில் கிடைக்கின்றது. என்னென்ன செய்வீர்கள்? அந்தப் பழைய வாஷிங்மெஷினை மாற்றிவிடவேண்டும், பெரிய கார் வாங்க வேண்டும், பெரிய வீடு வாங்கவேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றதில்லையா!

பணவளக்கலை - 2

கடைசியாக, உந்துசக்தி. நம் சமுதாயத்தில் கிட்டத்தட்ட அனைத்து நிகழ்வுகளுமே பணம் சார்ந்ததாக இருக்கின்றது. பணம் என்பது உலகத்தில் இருக்கும் காற்று, நீர் போன்ற இன்னுமொரு விஷயம் என நினைக்காதீர்கள். நீங்கள் யார்?, என்ன செய்கின்றீர்கள் என்பதை முடிவு செய்வது உங்களிடம் இருக்கும் பணம்தான். உலகத்தில் அனைவருக்கும் தரப்பட்ட நேரம் 24 மணி நேரம்தான். இதில் நீங்கள் உழைப்பு என்ற எனர்ஜியை (சக்தி) தந்து சாப்பாட்டைத் தேடுகின்றீர்கள். சம்பாதிக்கும் பணத்தில் நீங்கள் மீதம் வைக்கும் பணம் என்பது உங்களுடைய எனர்ஜிதான். அதை சேமித்து வைக்கின்றீர்கள். பிற்காலத்தில் அதை உபயோகிக்கவும் செய்கின்றீர்கள். எந்த அளவுக்கு இந்த எனர்ஜியை சேமித்து வைக்கின்றீர்களோ, அந்த அளவுக்கு பவர்ஃபுல்லான ஆளாகின்றீர்கள்.

பாதுகாப்பு, பிரச்னை, வலிமை, உந்துசக்தி... இப்படி, பணம் என்னவாகவேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், நான் அதை நிறைய சம்பாதிக்கவேண்டும். நீங்கள் பணம் சம்பாதிக்கின்றீர்களோ இல்லையோ, அதுபற்றி கவலையே இல்லை - பணம் பண்ண நினைக்கும் மனிதர்களிடம் இருக்கும் அடிப்படை மனோபாவம் இது!

அனாவசியமாக அடுத்தவர்களைப் பணக்காரர்கள் ஆக்காதீர்கள் என்று சொல்வேன் நான். இது ஒரு சுயநலமான எண்ணம் என நீங்கள் நினைக்கலாம். பணத்தை தேவையற்ற காரணத்திற்காக நீங்கள் செலவிடும்போது உங்களை ஏழையாக்கி நீங்கள் செலவழிக்கும் பணத்தைப் பெறுகிறவரை பணக்காரர் ஆக்குகிறீர்கள். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் எனில், தேவையில்லாதப் பொருளை தேவையில்லாத நேரத்தில் வாங்குவதால், தேவையான பொருளை தேவையான நேரத்தில் வாங்க உங்களிடம் பணம் இல்லாது போகலாம்.  

அடுத்து நமக்கு அடிக்கடி மனதில் தோன்றும் கேள்வி, பணம் மகிழ்ச்சியைத் தருகின்றதா? இது ஒரு மிகப் பெரிய கேள்வி. பணம் இல்லாவிட்டால் மகிழ்ச்சி எங்கிருந்து வரும் என்று பணம் இல்லாதவர்களும், நிறையப் பணம் இருக் கின்றது; மகிழ்ச்சி என்பது எள்ளளவும் இல்லை என்று ஒரு சாராரும் சொல்லக் கேட்கின்றோம்.

பணம் இருப்பவரோ இல்லாதவரோ, அவரவருக்கு உரிய எல்லைகளைத் தாண்ட நினைக்கும்போது மகிழ்ச்சி மறைந்துபோகின்றது. பணம் என்பது மனிதனுடைய தேவைகளில் தலையாயதாக இருக்கின்றது. இதில் ஒரே ஒரு பிரச்னை, பணமும் வாழ்க்கையில் உள்ள இன்னபிற விஷயங்களும் ஒன்றாக இருக்கும்போதுதான் மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு கிடைக்கின்றது. தேவைக்காக பணம் சம்பாதிக்க முயலும்போதும் சரி, தேவைக்கு அதிகமாக பணம் சம்பாதிக்க முயலும்போதும் சரி, நாம் நம் குடும்பம், நண்பர்கள், ஏன் நம்மையே மறக்கும்போது பிரச்னைகள் பூதாகாரமாக ஆகிவிடுகின்றது. நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மறந்து நாம் பணம் சம்பாதிப்பதில் லயிக்கும்போது பணம் வரவாகவும், மகிழ்ச்சி பற்றாகவும் மாறி பற்றாக்குறையில் தவிக்க ஆரம்பிக்கின்றோம்.

பணவளக்கலை - 2

இந்த உலகில் பணம் தந்து வாங்கக்கூடியவை சில. பணம் தந்து வாங்க முடியாதவை சில. மனித வாழ்விற்கு இந்த இரண்டும் ஒரு சீரான அளவில் சேர்ந்த கலவையாகத் தேவைப்படுகின்றது. பணம் நம் உணவில் உப்பைப் போன்றது. பணமும் சரி, அதைத் தேடுவதற்கான முயற்சியும் சரி, அளவாக இருக்கும்வரை வாழ்க்கை என்ற உணவு சுவையாக இருக்கின்றது. அது அளவுக்கு அதிகமாகப் போகும்போது சுவை குறைய ஆரம்பித்து, ஓர் அளவைத் தாண்டும்போது வாயில் வைக்க முடியாத அளவுக்கு கெட்டுப் போய்விடுகின்றது.

பெரும் பணம் செலவு செய்து ஓர் உயர்தர வெளிநாட்டு நாயை வாங்கினாலும்கூட, அது நம்மைப் பார்த்து வாலாட்ட கொஞ்ச நேரம் அதனுடன் செலவு செய்யவேண்டும். பெரும் பணம் தந்து நம்மை வாங்கியுள்ளாரே நம் எஜமான் என்று அதற்கு தெரியாது. நேரத்துக்கு சோறு வைத்து, வாஞ்சையாக தடவித் தந்தால்தான் வாலை ஆட்டி வளைய வரும்.  

ஆகவே, வருமானத்தைத் தேடுங்கள். கட்டாயமாய்ச் செலவுகளைக் குறையுங்கள். சேமிப்பை அதிகமாக்குங்கள்.  நஷ்டமடைவதைத் தவிருங்கள். லாபகரமாக முதலீடுகளைச் செய்யுங்கள். எதிர்கால வருமானத்தை உறுதி செய்துகொள்ளுங்கள். உங்கள் வருமானம் தொடர்ந்து அதிகரிக்கிறதா என்று கவனியுங்கள்.

இந்தப் பணவிதிகள்தான் எல்லோருக்கும் எக்காலத்திலும் பொருந்துவது. விதிகள் சுலபமாக இருந்தாலும் அதற்கு விளக்கங்கள் நிறையவே தேவைப்படுகின்றது. அந்த விளக்கங்களைத் தருவதுதான் பணவளக்கலையின் முக்கிய நோக்கம்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism