##~## |
நண்பர் ஒருவர் தனது மகளின் திருமணத் திற்கு என்று திட்டமிட்டு பெருந்தொகையைச் சேர்த்திருந்தார். ஆனால், திருமணமோ தள்ளிப்போனதால் கையிலிருக்கும் பணத்தைச் சும்மா வைத்திருக்காமல், அசலுக்கு பாதிப்பு வராத வழிகளைத் தேடினார். எஃப்.டி. முதல் மியூச்சுவல் ஃபண்ட் வரை பல திட்டங்களை அலசினார். எல்லாவற்றிலும் ஏதோ ஒரு பிரச்னை இருந்தது. இதற்கு தீர்வு தேடி முதலீட்டு ஆலோசகரிடம் சென்றபோது, டைனமிக் பாண்ட் ஃபண்ட் வகையை சிபாரிசு செய்தார். டைனமிக் பாண்ட் ஃபண்டில் முதலீடு செய்த சில மாதங்களில் பணத்திற்கான தேவை வர, அசலுக்கு எந்தப் பங்கமும் வராமல், அதேநேரத்தில் சொற்ப லாபத்துடன் பணத்தை எடுத்தார்.
அது என்ன டைனமிக் பாண்ட் ஃபண்ட்..? என நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம், விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ரிஸ்க் குறைவு!
''அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத குறுகியகால முதலீட்டாளர்களுக்கு ஏற்றது டைனமிக் பாண்ட் ஃபண்டுகள். நமது முதலீடுகளைப் பாதுகாப்பான கடன் பத்திரங்களில் முதலீடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் லாபத்தைப் பகிர்ந்து தரும் ஒரு ஃபண்ட் வகைதான் டைனமிக் பாண்ட் ஃபண்டுகள்.

சந்தையின் ஏற்ற இறக்கங்கள் பெரிய அளவில் பாதிக்காத வகையில் இந்த வகை ஃபண்டுகள் உள்ளன. குறிப்பாக, சந்தை இறங்குமுகமாக இருந்தாலும், பாண்ட் ஃபண்டுகளில் செய்துள்ள முதலீட்டிற்கு பெரிய பாதகமிருக்காது. காரணம், இதில் செய்யப்படும் முதலீடு முழுவதும் கடன் சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. மேலும், அரசின் வட்டி விகித குறைப்பு நடவடிக்கைகள் நமது முதலீட்டிற்கு சாதகமான விஷயம். சமீப காலமாக வட்டி விகிதம் குறைந்துள்ளதால் இந்த ஃபண்டுகள் நல்ல வருமானம் தந்துள்ளன'' என்றவர், அதன் சிறப்பம்சங்களை பற்றி மேலும் எடுத்துச் சொன்னார்.

எஃப்.டி.யைவிட அதிக வருமானம்!
''மியூச்சுவல் ஃபண்டில் கடன் ஃபண்ட் வகையில் ஒன்றான டைனமிக் பாண்ட் ஃபண்டுகளின் வருமானம் நிலையாக இருக்காது. டைனமிக் பாண்ட் ஃபண்டுகளின் வருமானம் வட்டி விகிதம் குறைக்கப்படும்போது அதிகரிக்கும். வட்டி விகிதங்கள் அதிகரிக்கும்போது, வருமானம் குறையும்.

கடன் ஃபண்டுகளில் இன்னொரு வகையான இன்கம் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு லாக்-இன் பீரியட் உள்ளது. மேலும், இதன் வருமானமும் வங்கி எஃப்.டி.யைவிட சற்று கூடுதலாக இருக்கும். ஆனால், டைனமிக் பாண்ட் ஃபண்டுகளுக்கு லாக்-இன் பீரியட் இல்லை. எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். வெளியேறும் கட்டணமும் குறைவுதான்.
யாருக்குப் பொருத்தமானது?
ஒரு வருடம் அல்லது இரண்டு வருட கால முதலீட்டிற்கு ஏற்றது. எப்போது வேண்டுமானாலும் பணம் தேவை என்கிறவர்களுக்கு இந்த பாண்ட் ஃபண்டுகள் மிகவும் ஏற்றவை. மேலும், முதலீட்டிற்கு பாதிப்பு வரக்கூடாது என்று யோசிப்பவர்களுக்கும் இது ஏற்றது. அதிக ரிஸ்க் எடுத்தாலும் அதிக வருமானம் வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு இது ஏற்றதல்ல.
ரேட்டிங்!

டைனமிக் பாண்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அதன் தரக்குறியீட்டை (ரேட்டிங்) பார்ப்பது அவசியம். ஏஏஏ பாண்டுகள் அதிக பாதுகாப்பு கொண்டவை. கடந்த வருடங்களில் வட்டிவிகிதம் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக இந்தவகை பாண்ட் ஃபண்டுகள் நல்ல வருமானம் தந்திருக்கின்றன. குறிப்பாக, எஸ்.பி.ஐ., ரிலையன்ஸ், யூ.டி.ஐ., கனரா ராபிகோ போன்ற ஃபண்ட் நிறுவனங்களின் பாண்ட் ஃபண்டுகள் ஆண்டுக்கு 16 சதவிகிதம் வரை வருமானம் தந்திருக்கின்றன. நேரமும் செய்தியும் அறிந்து முதலீடு செய்கிறவர்களுக்கு பாண்ட் ஃபண்டுகள் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம்தான்'' என்று முடித்தார் சுரேஷ் பார்த்தசாரதி.
ரிஸ்க் குறைவான முதலீடு, ஓரளவுக்கு நல்ல வருமானம் வேண்டும் என்கிறவர்கள் இனி டைனமிக் பாண்ட் ஃபண்டுகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம்.