Published:Updated:

வங்கிப் பிரச்னைகள்...ஆன்லைன் உஷார்!

வங்கிப் பிரச்னைகள்...ஆன்லைன் உஷார்!

##~##

கணினி வழி வங்கி பணப் பரிமாற்றம் செய்யும்போது பின்பற்றவேண்டிய பாதுகாப்பான வழிமுறைகளை இந்த வாரம் பார்ப்போம். இன்றைய நிலையில் பெரும்பாலானவர்கள் பணத்தைப் பறிகொடுப்பது ஆன்லைன் பணப் பரிமாற்றத்தின்போதுதான். வங்கி விவரங்களைக் கேட்டுவரும் தேவையில்லாத மெயில்களுக்கு எல்லாம் அந்த விவரங்களை அனுப்பி ஏமாற்றத்தை சந்தித்தவர்கள் ஏராளம். இது குறித்து மட்டுமே அதிக புகார்கள் எங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னைகளில் சிக்காமல் இருக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றவேண்டும், எப்படி கையாளவேண்டும் என்பதை இனி பார்ப்போம்.

பாதுகாப்பு வழிமுறைகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1. பலபேர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் உள்ள இடங்களில், நெட் சென்டர்கள் போன்ற பொதுஇடங்களில் வங்கி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளக் கூடாது. வங்கி தொடர்பான விஷயங்களை பொது நூலகங்கள், பெட்டிக் கடைகள், காபி ஷாப்கள் என மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது.

2. இணையம் மூலம் வங்கி சார்ந்த நடவடிக்கைகளை செய்தவுடன் சரியான முறையில் கணினியை லாக் ஆஃப் செய்யவும், ப்ரௌசரையும் மூடிவிடவும்.

3. ஆட்டோ கம்ப்ளீட் எனும் பணியைச் செயலிழக்கச் செய்துவிடவேண்டும்.

வங்கிப் பிரச்னைகள்...ஆன்லைன் உஷார்!

4. இன்டர்நெட்டுக்கான பாஸ்வேர்டை முறையாக மாற்றி வரவும். யாரிடமும் அந்த பாஸ்வேர்டு பற்றி பகிர்ந்துகொள்ளக் கூடாது.

5.  எழுத்தும் எண்ணும் கலந்த பாஸ்வேர்டை எப்போதும் பயன்படுத்தவும். பலவிதமான கணக்குகளுக்கு வேறு வேறான பாஸ்வேர்டை பயன்படுத்தவும்.

வங்கிப் பிரச்னைகள்...ஆன்லைன் உஷார்!

6. ஆன்டி-வைரஸ் போடுவதன் மூலம் கணினியில் பணிபுரியும் திறனைப் பாதுகாத்திடவும்.

7. வங்கி தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் www.rbi.org.inஎன்கிற இணையதளத்தை அணுகவும். புகார்கள் இருப்பின் bochennai@rbi.org.in என்கிற இ-மெயில் ஐ.டி.க்கு அனுப்பவும்.

பாஸ்வேர்டை வங்கிகள் கேட்காது!

வங்கிகள் ஒருபோதும் உங்களது பாஸ்வேர்டை, டெபிட்/கிரெடிட் கார்டுகளின் எண்கள், வங்கிக் கணக்கு எண்கள் அல்லது மற்ற எந்தவொரு நிதி தொடர்பான விவரங்களையும் கேட்காது என்பதை உறுதியாகச் சொல்கிறேன். அப்படி ஏதாவது ஒரு தகவல் வங்கிகள் கேட்பதுபோல் அழைப்பு வந்தால், எப்போதும் பதில் தரவே வேண்டாம். வங்கியிடம் இதைப் பற்றி உடனடியாக புகார் தெரிவிப்பது அவசியம்.

பாஸ்வேர்டை பிறர் கண்டுபிடிக்க முடியாதபடி அமைக்கவும். பொதுவாக, ஒரு பாஸ்வேர்டை அமைக்கும்போது குறைந்தது ஆறு எழுத்துக்களால் அமைக்கவும். பாஸ்வேர்டில் கட்டாயம் ஒரு பெரிய எழுத்து, ஒரு எண் (0-9) சிறப்பு எழுத்து (@,#,$ போன்ற) கலந்து அமைந்தால் நல்லது. ஒரே பாஸ்வேர்டை எல்லா கணினி வழி கணக்கு வழக்குகளுக்கும் பயன்படுத்தாமல் இருப்பதே நன்மை பயக்கும்.

ஆன்லைன் பணப் பரிமாற்றம் குறித்த முக்கிய தகவல்களை அடுத்த வாரம் தொடர்ந்து பார்ப்போம்.

(இன்னும் சொல்கிறேன்)

வெளிநாட்டு நிறுவனங்களா? எச்சரிக்கை..!

சில வெளிநாட்டு நிறுவனங்கள், 'இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் பணம் அனுப்பி வைத்துள்ளோம். அதன்மூலம் பொது மக்களுக்கு மலிவான வட்டியில் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளோம்' என விளம்பரம் செய்து வரும் இ-மெயிலைக் கண்டு ஏமாறவேண்டாம். அந்த ஊர்பேர் தெரியாத வெளிநாட்டு நிறுவனங்கள் கேட்கும் பணத்தை அனுப்பி  ஏமாற்றத்திற்கு ஆளாகாதீர்கள்.  இந்த ஏமாற்று வேலை எப்படி நடைபெறுகிறது?

சில வெளிநாட்டு நிறுவனங்கள் / தனிநபர்கள், அவர்களின் பிரதிநிதிகளாக செயல்படும் சில இந்தியக் குடிமக்கள், இந்தியாவில் வாழ்கின்ற தனிநபர்களுக்கோ, பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களுக்கோ அவர்களது வாணிபம் மற்றும் செயல்திட்டங்களுக்கு பணஉதவி செய்ய முன்வருவது போன்று கடிதங்கள் (அ) மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி, அவர்களை நம்ப வைத்து தங்கள் வலையில் விழவைத்துவிடுவார்கள். அப்படி தொடர்பு ஏற்பட்ட பிறகு, தங்கள் ஏமாற்று வேலையைத் தொடங்கிவிடுவார்கள். இது தெரியாத மக்கள் அவர்களின் பேச்சை நம்பி,  கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணத்தை அனுப்பி வைத்து விடுவார்கள்.

சில வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள தனிநபர்கள்/ நிறுவனங்கள்/ அறக்கட்டளைகள் போன்றவற்றுக்கு குறைவான வட்டி விகிதத்தில் கடன் வழங்க பெரிய தொகையினை இந்திய ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாகவும், வங்கியின் அனுமதி கிடைத்தபின் அத்தொகை யினை மக்களுக்கு வழங்குவோம் என்று கூறி வருவதையும் மக்கள் நம்ப வேண்டாம்.