இளைஞர்களை இன்டலிஜென்ட் ஆக்கும் தொடர்!

விக்கி பார்த்திராத பூசணிக்காய் !

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைகுந்திடமிருந்து போன் வந்தது.

''ஒரு சின்ன பிரச்னை...'' என்று இழுத்தார் வைகுந்த். ''என்ன பிரச்னை?'' என்று கேட்டேன்.

''வேறென்ன... விக்கிக்கு லாப்டாப் வாங்கிக் குடுத்தோம் இல்ல..? அங்கேதான் பிரச்னையே..?''

''அதுல என்ன பிரச்னை..?'' என்று கேட்டேன்.

''24 மணி நேரமும் அதுலயே உக்கார்ந்துகிட்டு இருக்கான்... வேற எந்த வேலையும் செய்யமாட்டேங்கறான்... எப்பப் பார்த்தாலும் 'நெட்’தான்; 'ஆக்டிவிட்டீஸ்’ஸே குறைஞ்சுபோச்சு...'' - புகார் பட்டியலை முழநீளத்துக்கு வாசித்தார் வைகுந்த்.

''முன்னமே உங்க வீட்டுல நெட் கனெக்ஷன் இருந்ததுதானே..?''

''இருந்தது; ஆனா, அது ஹால்ல இருந்த கம்ப்யூட்டர்லதானே இருந்தது..? இப்ப லாப்டாப் வந்ததும் 'தனியா’ அவனோட ரூம்லயே வச்சிக்கிறானா..? ரூமைவிட்டு வெளியிலேயே வரமாட்டேங்கறான். டிபன், சாப்பாடு எல்லாம்கூட ரூமுக்கே கொண்டுபோயிடறான். அந்தப் பாழாப்போன ஃபேஸ்புக்குல அப்படி என்னதான் இருக்கோ தெரியல... ஒழுங்காத் தூங்கறதுகூட இல்லை’ என்று மீண்டும் புலம்பினார்.  

''பதமா சொல்லிப் பார்க்கறதுதானே..?''

''எவ்வளவோ சொல்லிப்பார்த்தாச்சு...தீப்திகிட்டகூட நாலு வார்த்தைப் பேச மாட்டேங்கறான்...''

தீப்தி விக்கியின் தங்கை. அவனுக்கு

அஞ்சாறு வருஷம் இளையவள். பாட்டு, டான்ஸ்னு பிசியாகவே இருப்பா. ஆச்சரியமான விஷயம், தமிழில் அவளுக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட். தமிழில் விக்கிக்குத் தெரியாத வார்த்தைகள் எல்லாம்கூட அவளுக்குத் தெரியும்.

''இப்ப என்ன பண்ணலாம்..?'' - கவலையோடு கேட்டார் வைகுந்த். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் யோசித்தேன்.

''விக்கி வீட்ல இருக்கானா..?''

''காலேஜ் இருக்குன்னு சொல்லிட்டுப் போயிருக்கான்...''

'அப்படின்னா... காலேஜ் இல்லையா..?''

''காலேஜ்லாம் இருக்குதான்''

எதிர்கொள்- 4

''அப்ப காலேஜுக்குப் போயிருக்கான்னு சொல்லவேண்டியதுதானே..? அது என்ன, 'காலேஜ் இருக்குன்னு சொல்லிட்டுப் போயி ருக்கான்...?’ நீங்க அவனை சந்தேகப்பட்றீங்களா?''  

'இல்லேல்ல...’ என்று மீண்டும் இழுத்தார் வைகுந்த்.

''அடிப்படை இல்லாம தப்பு சொல்றதோ, சந்தேகப்படறதோ வேணாமே...'' என்றேன் நான்.

''ஹலோ... எனக்கு கவுன்சலிங் பண்ணச் சொல்லி நான் போன் பண்ணலை... எனக்கு வேண்டாம் உங்கள் ஆலோசனை, விக்கியை என்ன பண்ணலாம் சொல்லுங்க'' என்றார் வைகுந்த்.

''பட் யூ நோ..? பேரன்ட்ஸ் ஆல்சோ டு நீட் கவுன்சலிங். இன் ஃபேக்ட், தே நீட் மோர்...'' என்றேன் நான்.

விக்கியைப் பத்தி வைகுந்த் சொன்ன எந்த விஷயமும் 'பெக்யூலியர்’ இல்லை. இன்றைக்கு  சாதாரணமா ஒவ்வொரு இளைஞன்கிட்டேயும் இருக்கிற பிரச்னைதான். 'இன்டர்நெட்’ஐ எப்படியெல்லாம் நல்லவிதமா யூஸ் பண்ணலாம்னு இளைஞர்களுக்கு நல்லாவே தெரியும். ஆனாலும், 'ஃபேஸ்புக் சாட்டிங்’ல முழுகிடறாங்க.

தனிமைங்கறது ஒரு வரம். அந்தத் தனிமையை சரியா பயன்படுத்திக்கிட்டாலே, தனித்து நிற்க முடியும். தனிமையில் கிடைக்கிற ஒரு மணி நேரம் போதும். ஒரு வருஷத்துக்கு ஆனதை 'ப்ளான்’ பண்ணிக்கிடலாம். தனிமைதான் திட்டமிடலுக்கு மிகச் சிறந்த தருணம். திட்டமிட மட்டும் இல்லை; செயல்படவும் தனிமைதான் மிகச் சிறந்தது. விஞ்ஞானிகள் ஏன் தனிமையை விரும்பறாங்க..? சிந்தனையாளர்கள் ஏன் தனிமையைத் தேடிப்போறாங்க? முனிவர்கள், ஞானிகள் ஏன் தனிமையை சிலாகிச்சு சொல்றாங்க..? ஏன்னா.., அப்போதுதான் மனித மூளை சிறப்பாகச் செயல்படுது.

ஆனா, இன்னைக்கு அத்தனைபேரும் ஒரே 'ஹால்’லதான் வசிச்சாகணும்; இந்த லட்சணத்துல 'தனிமை’க்கு எங்கே போறது..? வீட்டுக்கு வெளியிலேயும்கூட எங்கே போனாலும் கூட்டம்தான். இன்றைய தலைமுறையினர் தனிமையின் ஏகாந்தத்தைத் தவற விட்டுவிட்டனர்.

விக்கிக்கு வீட்டிலே தனியே அவனுக்கென்று ஓர் அறை இருக்கின்றது; பல லட்சம் இளைஞர் களுக்கு வாய்க்காத வசதி அவனுக்கு வாய்த்திருக்கிறது என்பதை விக்கிக்குப் புரிய வைச்சாலே போதும். பிரச்னை தீர்ந்துடும்.

எதிர்கொள்- 4

ரெண்டு நாள் கழிச்சு விக்கிக்கு போன் பண்ணினேன்.

''விக்கி..., வர்ற ஞாயிற்றுக்கிழமை நீ ஃப்ரீயா..? ஊர் சுத்தலாம் வர்றீயா..?'' - ஊர் சுத்த எப்போது நான் கூப்பிட்டாலும் மறுக்காமல் வருவான் விக்கி. ''ஓகே அங்கிள்'' என்றான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை... விக்கியின் வீட்டுக்குப் போகவும் ''அங்கிள் நான் ரெடி'' என்று கிளம்பிவிட்டான். விக்கியை எங்கே அழைச்சுகிட்டு போறேன் தெரியுமா? ஒரு பூசணிக்காயைக் காட்டத்தான். என்னது, பூசணிக்காயான்னு பதறாதீங்க..!

ஒரு நாடு. அங்க என்ன 'விசேஷம்’னா.., அங்க விளையற பயிர்களிலேயே, சுண்டைக்காய்தான் ரொம்பப் பெருசு. மத்த எல்லா பயிருமே அளவுல அதைவிட சிறுசுதான். அந்த நாட்டுல ஒரு விழா நடக்குது. அதுல சிறப்பு அழைப்பினரா கலந்துக்கச் சொல்லி நம்ம நாட்டுல இருந்து ஒரு பெரிய மனுஷரைக் கூப்பிடறாங்க. இவரும் ஏத்துக்கிட்டுப் போறாரு. விழா மேடை. சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி ஒருத்தர் பேசறாரு. அநியாயத்துக்குப் பாராட்டி புகழ்ந்து தள்றாரு. முடிவா சொல்றாரு... 'ஒரே வார்த்தையில சொல்றதானா.., இவர் ஒரு சுண்டைக்காய்’.

'விருந்தினருக்கு’ முகம் சிவந்து போச்சு. தன்னை அவமானப்படுத்திட்டாங்கன்னு கோபமா மேடையைவிட்டு இறங்கிட்டாரு. அங்க இருந்தவங்களுக்கோ ஒண்ணும் புரியலை. அவரை சுத்தி நின்னுக்கிட்டு, கோபிச்சுக்காதீங்க, நீங்க சுண்டைக்காய்தான், சுண்டைக்காய்தான், சுண்டைக்காய்தான்’னு கோரஸா கத்த ஆரம்பிச்சுட்டாங்க.

அந்த நாட்டைப் பொறுத்தமட்டும் சுண்டைக்காய்தான் பெருசு. நம்ம நாட்டுல இருந்து போனவருக்கு, அது சிறுசுன்னு தெரியுது. ஏன்னா, இவரு அதைவிடப் பெருசா சுரைக்காய், பூசணிக்காய் எல்லாம் பார்த்திருக்காரு. அதனால, தன்னை யாராவது சுண்டைக்காய்னு சொன்னா கோபம் வருது. ஆனால், அந்த நாட்டுல சுண்டைக்காய்களை மட்டுமே பார்த்தவர்களுக்கு அது தவறாகத் தெரியவில்லை.  

நம் இளைஞர்கள் இன்று, சுண்டைக்காய் களைத்தான் மிகப் பெரிய பூசணிக்காய்களாக எண்ணி ஏமாந்து போகிறார்கள். அவர்களுக்கு 'பூசணிகளை’ அடையாளம் காட்டுவதுதான் நாம் செய்யவேண்டிய உடனடி பணி. நானும் அப்படி ஒரு பூசணியைக் காட்டத்தான் விக்கியை அழைத்துக்கொண்டு அடையாறு சென்றேன்.

வண்டியை மரத்தடியில் நிறுத்திவிட்டு விக்கியிடம் பெயர்ப் பலகையைக் காண்பித்தேன். B S Raghavan என்று மட்டுமே இருந்தது. படித்த, 'பெற்ற’ பட்டங்கள் எதுவும் இல்லை.

1952-ல் IAS, பாரதத்தின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட நேருவின் செயலாளராக 4 ஆண்டுகள்; தலைமைச் செயலாளர், ஐ.நா.வின் குழுக்களில் ஆலோசகர்; பொருளாதாரக் கட்டுரைகள் எழுதுதல் என்று அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருப்பவர். கதவைத் திறந்த பி.எஸ்.ஆர். 'வாங்க...’ என்று அழைக்க, விக்கி கேட்ட கேள்வியில் அதிர்ந்து போனேன்.

(தெளிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism