Published:Updated:

தங்கம் விலை: இன்னும் குறையுமா?

பானுமதி அருணாசலம்.

தங்கம் விலை: இன்னும் குறையுமா?

பானுமதி அருணாசலம்.

Published:Updated:
##~##

தங்கத்தின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சந்தையில் மிகவும் குறைந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலின்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,197 டாலர் என்கிற அளவுக்கு விலை குறைந்தது. இதனால், ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு 2,400 ரூபாய்க்கும் கீழே சென்றது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே குறைந்து வந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி 85 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்டுகளை விற்பனை செய்வதை வரும் ஆண்டு இறுதிக்குள் நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்தபின் டாலரின் மதிப்பு அதிகரித்து தங்கத்தின் விலை குறைந்தது. 2010 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஒரு அவுன்ஸ் 1,200 டாலருக்கு சென்ற வாரத்தில் சென்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நியூயார்க்கின் மிகப் பெரிய கோல்டு இ.டி.எஃப். நிறுவனமான எஸ்.பி.டி.ஆர். கோல்டு இ.டி.எஃப். ஃபண்ட் இந்த ஆண்டில் இதுவரை 381 டன் அளவுக்கு தங்கத்தை விற்பனை செய்துள்ளது. மேலும், தங்கத்தை அதிகமாக வாங்கும் சீனா மற்றும் இந்தியாவில் தேவை சமீபகாலமாக குறைந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைகள் மீது கடன் தருவதைக் குறைத்ததும், இறக்குமதி வரியை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளாலும், சீனாவில் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாலும் தங்கத்தின் மீதான தேவை குறைந்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன் தங்கம் விலை இறங்கியபோது நம் நாட்டில் பெருமளவிலானவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்கம் வாங்கினார்கள். ஆனால், இப்போது அதைவிட தங்கம் விலை குறைந்தபோதும் அதை வாங்குவதற்கான ஆர்வம் மக்களிடம் இல்லை. காரணம், தங்கம் இன்னும் குறையும் என்கிற எதிர்பார்ப்பும், இனி அதன் விலை பெரிதாக உயராது என்கிற எண்ணமும்தான். இதுகுறித்து பெஞ்ச்மார்க் அட்வைஸரி சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநர் சண்முகநாதன் நாகசுந்தரத்திடம் கேட்டோம்.

தங்கம் விலை:  இன்னும் குறையுமா?

''நாட்டுக்கு நாடு தங்கத்தை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு மாறுபடும். இதில் நிலையான விலை என்பது யாராலும் கூறமுடியவில்லை. ஃபெடரல் வங்கியானது அமெரிக்காவின் பொருளாதாரம் முன்னேறினால் மட்டுமே பாண்ட் வெளியிடும் திட்டம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது. ஆனால், இன்னும் அமெரிக்காவில் பொருளாதாரம் சொல்லிக் கொள்கிற அளவுக்கு முன்னேறிவிடவில்லை. எனவே, தங்கத்தின் விலை இனி உயரவே உயராது என்று சொல்லமுடியாது. டாலர் மதிப்பைப் பொறுத்து மட்டுமே தங்கத்தின் விலை இருக்கும். தற்போதிருக்கும் விலை குறைவு இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம். ஆனால், நீண்டகாலத்தில் பார்க்கும்போது தங்கத்தின் விலை அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது'' என்றார்.

தங்கம் விலை:  இன்னும் குறையுமா?

தற்போது ஏற்பட்டிருக்கும் விலை குறைவை பயன்படுத்தி உலகின் பல நாடுகள் தங்களது தங்க கையிருப்பை அதிகரித்து வருவதும், 1,250 டாலருக்கு குறைவாக வந்தால் கணிசமாக தங்கத்தை வாங்குவோம் என சீனா சொன்னதையும் கவனிக்கத் தவறக்கூடாது.

இது ஒருபக்கமிருக்க, கடந்த திங்கட் கிழமையன்று ஃபைனான்ஷியல் ஸ்டெபிலிட்டி அண்ட் டெவலப்மென்ட் கவுன்சில் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ், தங்கத் தின் இறக்குமதியைக் குறைக்க பல்வேறு வழிகளை ஆலோசனை செய்துள்ளார். காரணம், கடந்த ஏப்ரலில் மட்டும் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி 138 சதவிகிதம் அதிகரித்து, 7.5 பில்லியன் டாலராக உள்ளது. இதுவே, சென்ற ஆண்டில் இதே மாதத்தில் 3.1 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தங்கத்தின் இறக்குமதி அதிகரிப்பைத் தொடர்ந்து நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ஏப்ரல் மாதத்தில் 17.8 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் நடப்பு நிதிப் பற்றாக்குறையும் அதிகரிக்கலாம். இதனைத் தடுக்க, வங்கிகள் தங்க காயின்களை விற்க தடை விதிக்கலாமா என ஆர்.பி.ஐ. யோசித்து வருகிறது. இதுகுறித்தும் சண்முகநாதன் நாகசுந்தரத்திடம் கேட்டோம்.

''இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 800-1,000 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் வங்கிகள் மூலம் தங்கத்தை விற்பனை செய்வது என்பது சுமார் 1 - 2 டன் மட்டுமே இருக்கும். இந்த இரண்டு டன் தங்கத்தை விற்பனை செய்வதைத் தடை செய்வதால் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையை குறைக்க முடியும் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. பொதுவாக, நகைக் கடைகளைவிட அதிக விலைக்கே வங்கிகள் காயின்களை விற்கின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் வங்கியில் தங்கம் வாங்க விரும்புவது கிடையாது. இந்நிலையில் இந்த யோசனை எந்தளவிற்கு நடைமுறைக்குச் சாத்தியப்படும் என்பது கேள்விக்குறிதான்'' என்று சொன்னார்.

ஆக, நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைக்க, தங்கம் தவிர வேறு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பது பற்றியும் மத்திய அரசு ஆராய்வது நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism