Published:Updated:

'பணவளக்கலை’

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் !

'பணவளக்கலை’

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர் !

Published:Updated:
##~##

ரிஸ்க் குறித்து இன்னும் கொஞ்சம் அதிகமாக நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஏற்கெனவே நான் சொன்னபடி, நாம் வாழும் உலகம் ரிஸ்க் மிகுந்ததாகவே எப்போதும் இருந்து வருகின்றது. அதேசமயம், நாற்பது, ஐம்பது வருடத்திற்கு முன் உலகில் இருந்த ரிஸ்க்குகள் பல இப்போது குறைந்து காணாமலே போய்விட்டது.

ஆதிகாலத்தில் இருந்ததைவிட சராசரி மனிதன் வாழும் வருடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும் கொள்ளை நோய்கள் பலவற்றை முற்றிலுமாக தடுக்க மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டது. மருந்துகள் கண்டுபிடிப்பு, மருத்துவ ஆராய்ச்சி, சுற்றுப்புற சூழல் சட்டங்கள் என பல்வேறு காரணிகள் இதற்கு பெருமளவில் உதவியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது ஒருபுறமிருக்க, புதிதாக பல ரிஸ்க்குகள் உருவாகி இருப்பதையும் நாம் பார்க்கத் தவறக் கூடாது. அனைவரையும் பயமுறுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள், ஓசோன் மண்டலத்தில் பிரச்னை என புதிதாகத் தோன்றிய பல ரிஸ்க்குகளைச் சொல்லி உங்களை பயமுறுத்த முடியும். ஆனால், என் நோக்கம் அதுவல்ல. அறிவியல் வளர்ச்சி நமக்கு பல உதவிகளைச் செய்து ரிஸ்க்குகளை குறைக்க உதவினாலும், பல புதிய ரிஸ்க்குகளை தந்திருக்கின்றது.

'பணவளக்கலை’

மேலே சொன்ன உதாரணங்களில் குறிப்பிட்டதைப்போல, மனிதன் தனது அறிவுத்திறத்தால் வந்த முன்னேற்றங்களும், அதனால் மனித வாழ்வில் குறைக்கப்பட்ட ரிஸ்க்குகளும், அதேசமயம் அதே அறிவுத்திறத்தால் பெறப்பட்ட புதிய பல ரிஸ்க்குகளும், பயங்களும் ஒரு மனிதனுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்கதையாகத் தொடரவே செய்யும்.

ஆனால், நம்மில் பலரோ பெரும்பாலான நேரங்களில் ஏதாவது ஒரு ரிஸ்க்கை நினைத்து பயப்படுகிறோம். உதாரணத்திற்கு, ஒவ்வொரு முறையும் செய்தித்தாள்களில் தீவிரவாதிகள் தாக்குதலோ, மழையினால் நடந்த நிலச்சரிவோ, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த வீட்டில் நடந்த திருட்டோ வரும்போது அந்த ரிஸ்க்கைப் பற்றி கொஞ்சம் சிந்தித்து பயந்து பின்னர் மறந்து போகின்றோம்.

ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி உள்ள ஊரில் 'சற்றுமுன் குண்டுவெடிப்பு’ என்று டிவி-யில் ஓடினாலும், ஒரு சின்ன ஊரில் ஆபீஸில் இருக்கும் உங்களுக்கு உங்கள் மனைவி போன் செய்து, 'ஜாக்கிரதையாக இருங்கள்’ என்கிறார்.  

நாம் அன்றாடம் சந்திக்கும் பெரும்பாலான விஷயங்களில் ரிஸ்க் என்று நினைப்பதைவிட மிக மிகக் குறைந்த அளவு ரிஸ்க்கோ அல்லது நாம் நினைப்பதைவிட மிக மிக அதிக அளவு ரிஸ்க்கோ இருக்கின்றது. அதாவது, எந்த ஒரு விஷயத்திலும் ரிஸ்க் குறித்த சரியான கேள்விகள் கேட்கப்பட்டு, நாம் புரிந்துகொண்டது நடக்காத காரணத்தால், இல்லாத ரிஸ்க்கை இருப்பதுபோலவும், இருக்கும் ரிஸ்க்கை இல்லாததுபோலவும் நாமாகவே கற்பனை செய்துகொண்டு வாழ்வதை வாடிக்கையாக ஆக்கிக்கொண்டிருக்கிறோம்.

'பணவளக்கலை’

அட, ஏன் இந்த ரிஸ்க்கைக் கண்டு பயப் படுகிறோம்? அதுவும் பணரீதியான ரிஸ்க் என்றால் கூடுதல் பயம்தானே! ஏனென்றால், ரிஸ்க்கானது நாம் பெரிது என நினைக்கும் சில விஷயங்களைப் பாதிப்பதைப்போல் பயம் காட்டுகிறது. நாம் பிறந்து வளர்ந்த விதத்தில் உள்ள சில விஷயங்களைப் பிரித்து ஆராய்ந்தால் இது தெளிவாகும்.

கைக்குழந்தையாக இருப்பதில் ஆரம்பித்து  நம் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் 'ட்ரையல் அண்ட் எரர்’ முறையிலேயே நாம் வளர்ந்து வருகிறோம். உதாரணத்திற்கு, தவழும் குழந்தை, ஒருமுறை தன் தலையைத் தரையில் பட்டெனப் போட்டு இடித்துக்கொண்ட பின்னர், தலையை மிகவும் கவனமாகவே கீழே போடத் தொடங்கும். அதேபோல், எழுந்து நிற்க முயற்சிக்கும்போது ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டு எழ முயற்சிக்கும். அந்தப் பொருள் சரிந்து தானும் கீழே விழுந்தால் அடுத்தமுறை எந்த பொருளை பற்றி எழும்போதும் சற்று ஜாக்கிரதையாகவே முயற்சிக்கும். இதை யாரும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில்லை. தானாகவே வரும் இயல்பு இது. இதுவும்  ரிஸ்க்கை ஹேண்டில் செய்யும் ஒரு முறைதானே! எனவேதான் குழந்தையிலிருந்து பெரியவர் வரை அனைவருமே ஒரு ரிஸ்க் எக்ஸ்பர்ட்டாகத் திகழ்கின்றனர்.

அட, அப்படியானால் ரிஸ்க்கை எல்லோராலும் ஹேண்டில் செய்ய முடியுமா? பிரச்னை, ரிஸ்க்கை ஹேண்டில் செய்வதில் இல்லை. ரிஸ்க்கை ஹேண்டில் செய்வதில் ஒருமுறை, ரிஸ்க்கைத் தவிர்ப்பதே. வயதாக ஆக, நாம் ரிஸ்க்கை ஹேண்டில் செய்வதற்கு பெரும்பாலான சமயம் கடைப்பிடிக்கும் முறை ரிஸ்க்கைத் தவிர்ப்பதே! சின்னப் பிள்ளையாக இருக்கும்போது ரிஸ்க்கை எடுத்து 'ட்ரையல் அண்ட் எரர்’ முறையில் நடைபோட்ட நாம், பெரிய மனிதனாக மாறியதும் அதை தவிர்க்கிறோம்? காரணம், உலகச் சூழல்தான்!

குழந்தை வளர வளர கத்தியை , நெருப்பை,   சூட்டை எப்படிக் கையாளவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறது.  பின்னர் சைக்கிளை எப்படி பேலன்ஸ் செய்து ஓட்ட வேண்டும் என்று கற்றுக்கொள்கிறது.  அடுத்து, தனக்குத் தேவையானவற்றை எப்படிக் கேட்டுப் பெறுவது என்பதைக் கற்றுக்கொள்கிறது. அம்மா அல்லது அப்பாவிடம் அடம், ஸ்கூலில் அனுசரிப்பு, நண்பர்களிடம் கெஞ்சல்/

கொஞ்சல் என பல்வேறு நடத்தைகள் மூலம் பல சூழ்நிலைகளை ஜெயிக்க கற்றுக்கொள்கிறது. இந்த காலகட்டத்தில் அடுத்தவர்களுடைய மூடைத் தெரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்கின்றது. கடைசியாக வாழ்க்கையின் பிரச்னைகளில் இருந்து பெரிய சிரமமில்லாமல் தப்பிப்பது எப்படி என்ற கலையை மட்டும் முழுமையாக கற்றுக்கொள்ள எந்த மனிதனாலும் (குழந்தை யிலிருந்து ஒரே பிராசஸில் டெவலப் ஆன) முடிவதில்லை.

தவழவும், எழுந்து நடக்கவும் முயலும் குழந்தை அபரிமிதமான உற்சாகத்துடன் செயல்படும்போதுகூட ஒருமுறை நெகட்டிவ்வான விஷயங்களை (கீழே விழுதல் போன்ற) சந்தித்துவிட்டால், அடுத்தமுறை ஒரு சிறிய பாதுகாப்பு வளையத்தை தானாகவே போட்டுக் கொள்கின்றன.  அடுத்து, சைக்கிள் ஓட்டுதல். கீழே விழாமல் சைக்கிள் ஓட்டாத ஆளே இல்லை எனலாம். ஆனாலும், நாம் அனைவரும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டுவிட்டோம். இதையே வேறு மாதிரியாக, கீழே விழும் ரிஸ்க்கை எடுத்து, அதை வெற்றிகரமாக மேனேஜ் செய்தோம் என்று சொல்லலாம் இல்லையா?!

'பணவளக்கலை’

கீழே விழுந்தால் அடிபடும், அடிபட்டால் வலிக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தும் சைக்கிள் ஓட்டுவதனால் கிடைக்கும் பலாபலன்களை கண்கூடாகப் பார்ப்பதால் நம்மால் சைக்கிளை பேலன்ஸ் செய்ய முடிகின்றது. கீழே விழாமல் சைக்கிள் கற்றுக்கொள்ள முடியாது என்பதை விதியாக வைத்துக்கொண்டே நாம் சைக்கிளை கற்றுக்கொள்கின்றோம்.

தனியாகச் சைக்கிள் ஓட்டும் சிறு பையனை ரோட்டில் பாருங்கள். அதில் உள்ள ரிஸ்க்கே தெரியாமல் கண்டபடி சைக்கிள் ஓட்டுவான். சிறுபிள்ளைகள் பெரியவர்களுடைய கண்காணிப்பில் வளர்க்கப்படுகிறார்கள். ஏனென்றால், பெரியவர்கள் பொறுப்பு மிக்கவர்கள். யாரோ ஒருவரின்  பொறுப்பில் இருக்கும்போது குழந்தைகள் ரப்பர் பந்து மாதிரி குதிக்கின்றன. வயதாக ஆக பொறுப்பு கைமாறுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக, 'தம்பி உனக்கு வயசாகுது. பொறுப்பா நடந்துக்கோ’ என்கிறோம்.

மகனோ, மகளோ சிறுவயதில் சைக்கிள் ஓட்டும்போது கண்கொத்திப்பாம்பாய் ரோட்டில் நின்று பார்க்கின்றோம். கல்லூரிக்குச் செல்லும்போது பல்சர் வாங்கித் தந்து தனியாக அனுப்புகின்றோம். பொறுப்பு அவரவர் இடத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதில் பொறுப்பு ஒப்படைப்பு என்பது எந்தவிதத்தில் நடக்கின்றது என்பதிலிருந்தே ரிஸ்க்கை புரிந்து கொள்ளும் திறனும், ரிஸ்க் எடுக்கும் திறனும் வளர்கின்றது.

இருபத்தாறு வயதில் மகன் டெல்லிக்கு வேலைக்குப் போகின்றான் என்றதும், கூடவே சென்று வீடு பார்த்து குடியமர்த்தித் திரும்பும் தகப்பனைக்கொண்ட மகன் (அதை விரும்பும் மகன்) பின்னாளில் எடுக்கும் ரிஸ்க் எந்த அளவில் இருக்கும் என்பதற்கும், 19 வயதில் மேற்படிப்புக்கு அயல்நாட்டுக்கு விமானம் ஏற்றிவிட்டுத் திரும்பும் தகப்பனைக்கொண்ட மகன் பின்னாளில் எடுக்கும் ரிஸ்க்கின் அளவும் நிச்சயமாக மாறுபடும்.

அடுத்தபடியாக, ரிஸ்க் குறித்த நம்முடைய படிப்பினைகள். நம்மைச் சுற்றி இருக்கும் தினசரி பேப்பர்கள் மற்றும் வார இதழ்களில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வியுற்றவர்கள் மட்டுமே பட்டியலிடப்படுகிறார்கள். ரிஸ்க் எடுத்து போராடி ஜெயித்தவர்கள் ஹீரோக் களாகிறார்கள். சாதாரணமாக, குறை இல்லாமல் வாழ்ந்தவர்களின் கதை என்றைக்கும் மீடியாவில் வந்ததேயில்லை.  

ஒரு கதை. அந்தக் கதையில், ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து, படித்து, கல்யாணம் செய்து, பேரன் பேத்தி எடுத்து மறைந்தான் என்று முடிந்தால் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. சஸ்பென்ஸ், பழிவாங்கல், டென்ஷன் என பல்வேறு ரிஸ்க் சார்ந்த விஷயங்களை உள்ளடக்கினால்தான் அந்தக் கதை வெற்றி பெறும்!

(கற்று தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism