Published:Updated:

'பணவளக்கலை’

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

'பணவளக்கலை’

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:

 உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

##~##

ரிஸ்க்கைப் பற்றி நாம் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். நம்மைச் சுற்றிலும் ரிஸ்க் நிறைந்திருக்கின்றது. பணவளக்கலையைப் பொறுத்தமட்டில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம், பணத்தினை சம்பாதிக்கும் வாய்ப்பும், பணத்தினை இழக்கும் வாய்ப்பும் எங்கு இருந்தாலும் அங்கு அதில் ரிஸ்க் இருக்கின்றது என்பதைத்தான். ரிஸ்க் பற்றி புரிந்துகொள்ளாமலும், ரிஸ்க் தரும் வாய்ப்பை முழுமையாக உபயோகப்படுத்தாமலும் விட்டுவிட்டால், நாம் அதிலிருந்து கிடைக்கக் கூடிய பலாபலன்களைக் கைநழுவவிடுகின்றோம் என்றுதான் அர்த்தம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்னும் கூர்ந்து நோக்கினால், இந்த ரிஸ்க் என்பது மனிதர்களின் மனதில் பயத்தை உண்டுபண்ணும், எல்லா விஷயத்திலும் பயங்காட்டிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் ரிஸ்க். பரீட்சை, வேலைக்கான இன்டர்வியூ, பணியில் புரொமோஷனுக்கான இன்டர்வியூ, வேலை மாற்றத்திற்கான முயற்சி, வீடு வாங்கு வதற்கான முயற்சி, கடன் வாங்குதல் என மனிதனின் எல்லா நடவடிக்கைகளிலும் அந்த பயம் இருக்கிறது.

பயங்காட்டும் அந்தச் செயலை செய்ய முயலும் வரைதான் ரிஸ்க். அந்த செயலை செய்துவிட்டால் லாபமாகவோ/நஷ்டமாகவோ மாறி நம் கையில் தவழ ஆரம்பித்துவிடும். எப்போதுமே ஒரு செயலில் இருக்கும் நஷ்டம் கையில் வந்து விடுவதற்கான வாய்ப்பை பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து பயப்படக்கூடாது. ரிஸ்க் என்ற பயம் ஒரு காரியத்தைத் தொடங்கும் வரைதான். காரியத்தைத் தொடங்கும் வரை மனதில் பயமும், ஆரம்பித்துவிட்டால் கையில் பலாபலனும்தான் இருக்கும்.

இப்போது பணத்தின் செலவு ரீதியான ரிஸ்க் குறித்த சில உதாரணங்களைப் பார்ப்போம். நீங்கள் ஒரு ஐம்பத்தி ஐந்து இஞ்ச் எல்இடி டிவி வாங்குகிறீர்கள். 75,000 ரூபாய் விலை. எல்லா பேரங்களும் முடித்து பில் போடும்போது சேல்ஸ்மேன், ''சார், ஒரு எக்ஸ்டென்டட் வாரன்டி கான்ட்ராக்ட் இருக்கிறது. ஏற்கெனவே டிவிக்கு இருக்கும் ஒரு வருட வாரன்டியைத் தாண்டி இன்னும் ஒரு வருடத்திற்கு இது அப்ளையாகும். இரண்டாவது வருட முடிவிற்குள் டிவி ரிப்பேர் ஆனால் நீங்கள் இந்த டிவியைத் தந்துவிட்டு புது டிவி வாங்கிக்கொள்ளலாம்'' என்கின்றார்.

'பணவளக்கலை’

உடனடியாக நீங்கள் என்ன யோசிப்பீர்கள். டிவி மிகவும் விலை உயர்ந்தது. எதற்கு வம்பு? கான்ட்ராக்டை போட்டுவிடலாம் என்றுதானே? என்ன கேள்வியை நீங்கள் சேல்ஸ்மேனிடம் (ஒரு பேச்சுக்கு எப்போதும் உண்மையான பதிலையே அவர் சொல்வாரென்று வைத்துக்கொள்வோம்!) கேட்பீர்கள்?

வங்கியில் ஒரு ஃபிக்ஸட் டெபாசிட் வைத்திருக் கிறீர்கள். அதை புதுப்பிக்கச் செல்லும்போது மேனேஜர் உங்களிடம், ''எதுக்கு குறைந்த வட்டிக்கு பணத்தைப் போட்டிருக்கின்றீர்கள். நாங்கள் வெல்த் மேனேஜ்மென்ட் ஸ்கீம் வைத்திருக்கிறோம். அதில் போட்டால் வட்டி மாதிரி கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வரும்'' என்கிறார். நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்? என்ன கேள்வி கேட்பீர்கள்? (ஒரு பேச்சுக்கு (!) அவரும் உண்மையையே சொல்வார் என்று கொள்வோம்!).

டிவி உதாரணத்தில், நீங்கள் விலையை வைத்து முடிவெடுக்கக் கூடாது. முதல் வருட வாரன்டி ஆட்டோமேட்டிக். இரண்டாவது வருட வாரன்டி என்பதற்கு நீங்கள் பணம் தரவேண்டும். இரண்டாவது வருடத்தில் அந்த டிவி ரிப்பேராவதற்கு எந்த அளவு வாய்ப்பு இருக்கிறது என்பதை வைத்தே நீங்கள் வாரன்டியை காசு தந்து வாங்கவேண்டும். கடைக்காரர் 100 டிவியில் 2 டிவி ரிப்பேராகிறது என்று சொன்னால் ரிஸ்க் எடுக்கலாம். 100-ல் 40 ரிப்பேர் என்று சொன்னால்? அல்லது 60 என்று சொன்னால்? உங்கள் பாக்கெட்டின் வளமைக்கு ஏற்றாற்போல் வாரன்டியை வாங்கித்தான் ஆகவேண்டும்.

'பணவளக்கலை’

அதேபோல், வங்கி மேனேஜரிடம், ''சார் கிட்டத்தட்ட வட்டிக்கு டபுளாக வரும் என்கின்றீர்கள். வராமல்போக என்ன வாய்ப்பு இருக்கின்றது. குறைந்தால் வட்டியைவிட எவ்வளவு குறையும்? கடந்த பத்து ஆண்டுகளில் நிலைமை எப்படி இருந்தது? நம்முடைய அசல் பத்திரமாக இருக்குமா?'' என்ற கேள்வியைத் தானே கேட்கவேண்டும்.

இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்காமல் விலை உயர்ந்த டிவி - அதனால் எக்ஸ்டென்டட் வாரன்டி. எஃப்.டி.யைத் தவிர எல்லாமே ரிஸ்க்! அதனால், எப்போதுமே எஃப்.டி. என்று வாழ்ந்தால் நமக்கு கிடைக்கவேண்டியது கிடைக்காமலே போய்விடும் வாய்ப்பு அதிகமா கிறது. 'நமக்கு எதுக்குங்க ரிஸ்க்கு? பேசாம வாரன்டியைப் போட்டோமா ரிப்பேரானா மாத்தினோமான்னு இருக்காம!’ என்று சொல்லும் நீங்கள் குறைந்த அளவுத் தொகையை வாங்கிக்கொண்டு ஒரு நிறுவனம் இரண்டாம் வருட வாரன்டி தருகிறதென்றால், அதன் தயாரிப்பின் தரத்தில் மீதுள்ள நம்பிக்கைதானே அதை அப்படி செயல்பட வைக்கின்றது என்று சிந்திக்கவேண்டும். அதையும் தாண்டி நடப்பில் எத்தனை டிவி ஃபெயில் ஆகின்றது என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இதையெல்லாம் தவிர்க்கும்போது, எனக்கு இதெல்லாம் ஆகாது என்ற கோட்டை நம்மைச் சுற்றி நாம் போட்டுக்கொள்கிறோம்.

புரிந்துகொள்வதையும், மற்றவர்களிடம் இருந்து கேட்டுத் தெரிந்துகொள்வதையும் தவிர்க்க நினைக்கும் நாம் என்ன செய் கிறோம்? புரிந்துகொள்ளக்கூடிய விஷயங் களை புரிந்துகொள்ள மறுக்கின்றோம். புரியாதவற்றை அடுத்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற நிலைமைக்கும் முட்டுக்கட்டையைப் போட்டுக்கொள்கிறோம். இரண்டு வருடம் முடிந்து மூன்றாவது வருடத்தில் டிவி ரிப்பேரானால், அதைத் தாங்கிக் கொள்வோம் என்றால், ஏன் இரண்டாவது வருடம் தாங்கிக்கொள்ள முடியாது? என்பதை யோசிக்கவே மறுக்கிறோம். இதனால்தான், ஒவ்வொரு ரிஸ்க் உள்ள விஷயத்தையும் படித்து, கேட்டு, தெரிந்து, புரிந்து பின்னர் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்கின்றேன்.

பண ரீதியான ரிஸ்க்குகள் தென்படும் போது முதலாவதாக, அனுமானங்களில் செயல்படக்கூடாது.  ஏனென்றால், அனுமானங் கள் பல சமயம் நல்ல வாய்ப்புகளைத் தவிர்த்து தள்ளிப்போய்விடவும், மோசமான வாய்ப்புகளை துணிந்து தொடரவும் வைத்துவிடும். சரியான கேள்விகள் கேட்கப்படவேண்டும்! பதில்களைப் பெற்று ஆராய்ந்து அறிந்த பின்னரே முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.

உதாரணத்திற்கு, மிகவும் நம்பிக்கையானவர்கள் பார்ட்னர்ஷிப்பில் நல்லதொரு தொழில் வாய்ப்பு இருக்கின்றது என்று நம்மிடம் சொன்னால், உடனடியாக நம்முடைய கண் முன்னால் பல்வேறு பிரிந்த, ஏமாற்றப்பட்ட பார்ட்னர் களின் கதை வந்து நின்று, 'நமக்கு கூட்டு சரிப்பட்டு வராதுங்க’ என்று ஒதுங்கக்கூடாது. யார் கூட்டுக்கு அழைக்கிறார்கள், என்ன தொழில், அதில் என்னென்ன ரிஸ்க் இருக்கிறது என்பதை எடைபோட்ட பின்னரே முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.

இரண்டாவதாக, ரிஸ்க் என்றவுடனேயே மூளைக்குள் எரியும் பயம் என்ற பல்பை ப்யூஸ் போகச் செய்யவேண்டும். ஏனென்றால், ரிஸ்க் என்றாலே அது லாபத்திற்கான வாய்ப்பையும் நஷ்டத்திற்கான வாய்ப்பையும்கொண்டது என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும். லாபத்திற்கான வாய்ப்பும் அதில் அடங்கியிருப்பதால் பயம் கொள்ளத் தேவையில்லை என்று மூளைக்கு அவ்வப்போது நினைவூட்டவேண்டும். தொழில் ஏதும் செய்யலாம் என்று ஒருவர் சொன்னாலே கடந்த பொருளாதார மந்தநிலையில் மூடப்பட்ட தொழில்களை நினைத்து பயப்படக்கூடாது. வெற்றியுடன் வெகுநாட்களாகச் செயல்பட்டு வரும் தொழில்களையும் மனதில்கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுங்க என்று ஏதாவது சாக்குப்போக்கை தேடிக் கண்டுபிடித்துச் சொல்லி கும்பிட்டு ஒதுங்குவதைத் தவிர்க்கவேண்டும். ரிஸ்க்கைக் கண்டவுடன் சாக்குப்போக்கை கையில் எடுத்தாலும், பணம் நம்மைத் தேடி வரும் வாய்ப்பு மிகமிகக் குறைவாகிவிடும். இது நம்மில் பெரும்பாலானோர் செய்வது.

'பணவளக்கலை’

ரிஸ்க் என்றாலே ஒருவிதமான பதைபதைப்பு பற்றிக்கொண்டு இதெல்லாம் நம்மால் முடிகிற காரியமா என்று ஒரேயடியாக வெட்டிவிடுவது நல்லதேயல்ல! ஏன் இந்தப் பதைபதைப்பு வருகிறது? பணம் பதைபதைப்பைத் தரக்கூடியது என்று ஏற்கெனவே பார்த்தோமே, நினைவிருக்கிறதா? பாக்கெட்டில் பத்து ரூபாயை வைத்துக்கொண்டு பஸ்ஸில் போகும்போது இருக்கும் தைரியம் பாக்கெட்டில் பத்தாயிரமோ, லட்சமோ கொண்டுபோகும்போது இருப்பதில்லை. முழிக்கும் முழியிலேயே திருடன் நம்மை பணம் வைத்திருக்கின்றார் போல! என்று கண்டுபிடிக்கும் ரேஞ்சுக்கு நடந்துகொள்கின்றோம்.

நான்காவதாக, சிறு சிறு ரிஸ்க்குகளை எடுத்து, அதில் வெற்றி காணும்போது கொஞ்சம் கொஞ்சமாக பயத்தை மூளையிலிருந்து கழற்றிவிடப் பழகவேண்டும். எடுத்த ரிஸ்க்கில் கிடைத்த வெற்றியில் ஒரு பகுதியைப் பணயமாக வைத்து, அடுத்த ரிஸ்க்கை ஆய்ந்தறிந்து எடுக்க பழகவேண்டும். ஒரு சிறிய டீலிங் செய்து பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றீர்கள். அதில் ஐந்தாயிரத்தைப் பணயம் வைத்தாவது அடுத்த டீலிங்கிற்கு முயல வேண்டுமே தவிர, பத்தாயிரம் கிடைத்ததுதான் வாழ்க்கையின் கடைசிப் பணம் என்று தொழிலைவிட்டு ஒதுங்கக் கூடாது.

ரிஸ்க் எடுக்கும்போது டென்ஷன் வரும். ரிஸ்க் பணமாக மாறி கையில் வரும்போது சற்றே இளைப்பாறி அடுத்த லெவலுக்குப் போவதற்கான திட்டங்களைப் போடவேண்டும்.

(கற்று தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism