கேள்வி-பதில்

##~##

ஆன்லைனில் விளம்பரம் செய்யப்படும் பழைய வீட்டை வாங்கத் திட்டமிட்டுள்ளேன். இப்படி வாங்கும்போது என்னென்ன ஆவணங்களை சரிபார்க்கவேண்டும்?

- திவ்யா, சென்னை.  ஆர்.ஜே.செல்வநாயகம், வழக்கறிஞர்.

''ஆன்லைன் என்பது ஒருவகையான விளம்பர உத்திதான். இதை நீங்கள் அப்படியே முழுமையாக நம்பிவிடக் கூடாது. எந்தப் பகுதியில் சொத்து வாங்க விரும்புகிறீர்களோ, அந்தப் பகுதிக்கு நேரில் சென்று சுற்றுவட்டாரத்தில் விலை நிலவரம் எப்படி உள்ளது, வீட்டின் தற்போதைய நிலை என்ன, ஆன்லைனில் குறிப்பிட்டிருந்த விலைக்குத் தகுதியான வீடுதானா என்பதைக் கவனிப்பது அவசியம். அத்துடன் அந்த வீட்டின் மீது ஏதாவது வழக்கு உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், இந்த விவரம் வில்லங்கச் சான்றிதழில் வராது. ஒருவேளை பில்டரிடம் வீடு வாங்குகிறீர்கள் என்றால், அவரைப் பற்றியும் விசாரித்துக்கொள்ளவேண்டும். மேலும், ஒரிஜினல்  ஆவணங்களை சரிபார்ப்பதும் நல்லது.''

ஆன்லைனில் வீடு வாங்கலாமா?

மியூச்சுவல் ஃபண்டுகளில் வீக்லி டிவிடெண்ட் ஆப்ஷன் யாருக்கு பயனுள்ளதாக இருக்கும்?

- வினோத், கடலூர். ஏ.முருகன், மண்டல மேலாளர், புளூசிப்
கார்ப்பரேட் இன்வெஸ்மென்ட் சென்டர் லிட்.

''வீக்லி டிவிடெண்ட் என்பது பெரும்பாலும் லிக்விட் ஃபண்டுகளில்தான் இருக்கும். அதிக வருமான வரி கட்டுபவர்கள், தாங்கள் கட்டும் வரியைக் குறைப்பதற்காக இந்தவகை ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள். அதாவது, கிடைக்கும் டிவிடெண்டுகளுக்கான வரியை நிறுவனமே செலுத்தி விடும். இதனால் டிவிடெண்ட் பெறுபவர்கள் தனியாக வரிச் செலுத்த தேவை யில்லை. மேலும், இதில் வருமானம் என்பது 6 முதல் 7 சதவிகிதமே இருக்கும்.''  

 எனக்கு சொந்தமாக 1,200 சதுர அடி வீட்டு மனை ஆவடியில் உள்ளது. இதை வங்கியில் அடமானமாக வைத்து கடன் பெற முடியுமா?

தரூண், ஆவடி. விஸ்வநாத் கிருஷ்ணன், இயக்குநர்,
கான்சர்ட்டியம் அட்வைஸரி சர்வீசஸ் பி.லிட்

''காலி மனையை அடமானமாக வைத்து கடன் பெற முடியாது. அந்த இடத்தில் வீடு கட்டதான் கடன் கிடைக்கும்.''  

 நான் தனிநபர் விபத்துக் காப்பீடு இன்ஷூரன்ஸ் பாலிசியைக் கடந்த ஆண்டு எடுத்தேன். தற்போது இந்த பாலிசியை அதே இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் புதுப்பித்தால் ஏதாவது போனஸ் கிடைக்குமா? புது பாலிசிதான் எடுக்கவேண்டுமா?

ஆன்லைனில் வீடு வாங்கலாமா?

- ஏ.ஆதிமூலம், செஞ்சி. டி.நாகலட்சுமி, முதன்மை
மேலாளர், யுனைடெட் இன்ஷூரன்ஸ், சென்னை.

''புதிய பாலிசி எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே இருக்கும் பாலிசியைப் புதுப்பித்தாலே போதும். பழைய இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சேவையில் ஏதாவது குறைபாடு இருந்தால் மட்டுமே நீங்கள் புதிய இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு செல்லலாம். தவிர, புதிய நிறுவனத்தில் போனஸ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான். ஏற்கெனவே இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் நிறுவனத்திலே பாலிசியைப் புதுப்பித்துக்கொண்டால் போனஸ் கிடைக்கும். குறைந்தபட்சம் 5 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை போனஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த வருடத்தில் எந்தவிதமான க்ளைமும் செய்யவில்லை என்றால் மட்டும்தான் இந்த போனஸ் கிடைக்கும். பிரீமியத்தில் எந்தவிதமான கழிவும் கிடைக்காது. இந்த போனஸ் உங்களின் கவரேஜ் தொகையைக் கூடுதலாக்கும். ஆனால், குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் போனஸ் கிடையாது.''

 ஐந்து வருடங்களுக்கு முன்பு வாங்கிய பங்கு இப்போது பங்குச் சந்தை பட்டியலில் இல்லை. எப்படி முதலீட்டைத் திரும்பப் பெறுவது?

- கோபால், தஞ்சை. எஸ்.லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்.

''நீங்கள் வாங்கிய பங்கு எந்த காரணத்திற்காக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு விதிமுறை களை பங்குச் சந்தை விதிக்கும். இந்த முறைகளை மீறும் நிறுவனங்கள் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படும். சில நிறுவனங்களில் அதிக நஷ்டம் ஏற்படும்போது, எந்தவிதமான விதிமுறைகளையும் நிறுவனம் சரிவர பின்பற்றாது. அந்தச் சமயத்தில் பட்டியலில் இருந்து நீக்கப்படும். மேலும், சில நிறுவனங்களின் உரிமையாளர்களே, அதிக பங்குகளை வைத்திருப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் நிறுவனங்களே முன்வந்து பட்டியலில் இருந்து தங்களின் நிறுவனப் பங்குகளை நீக்கிவிடுவார்கள். இதுபோன்ற நிறுவனங்களின் பங்குகளை வைத்திருந்தால், நீங்கள் முதலீடு செய்த பணத்தைத் திரும்ப பெறமுடியும். பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் இதற்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.''

ஆன்லைனில் வீடு வாங்கலாமா?

 என் இரு எண்டோவ்மென்ட் பாலிசிகளும் முதிர்வடைந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது அந்த பாலிசிகளில் முதிர்வுத் தொகை பெற முடியுமா?

செல்வம், திருச்செங்கோடு. வி.விஜயராகவன்,
மண்டல மேலாளர், வாடிக்கையாளர் சேவை பிரிவு, எல்.ஐ.சி.

''முதிர்வடைந்த பாலிசிக்கு எப்போது வேண்டுமானாலும் முதிர்வுத் தொகை பெறலாம். காலம் தாழ்த்தி முதிர்வுத் தொகை பெறும் பாலிசிகளுக்கென தனியாக விண்ணப்பம் இருக்கிறது. அதை பூர்த்தி செய்து, அதனுடன் பாலிசி பத்திரத்தின் ஒரிஜினலை இணைத்துத் தரவேண்டும். அத்துடன் உங்களின் வங்கிக் கணக்கு விவரத்தையும் தரவேண்டும். இப்படி தந்த சில நாட்களில் முதிர்வுத் தொகை உங்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.''

@ நான்கு மாதங்களுக்கு முன்பு பில்டரிடமிருந்து புதிதாக கட்டிய வீட்டை வாங்கினேன். இந்த வீட்டின் மின் இணைப்பு பழைய உரிமையாளரின் பெயரில் உள்ளது. இதை மாற்றி தரும்படி பில்டரிடம் கேட்டால் இழுத்துக்கொண்டே இருக்கிறார். மேலும், வீட்டில் பல இடங்களில் விரிசல் விழுந்துள்ளது. இதுகுறித்து யாரிடம் புகார் செய்வது?

- பாஸ்கர், சென்னை. சுரேஷ்பாபு, வழக்கறிஞர்.

''புதிதாக கட்டிய வீட்டில் விரிசல் என்பது இப்போது அதிகமாகி உள்ளது. இதற்கு தரக் குறைபாடு என்பதன் அடிப்படையில் நுகர்வோர் நீதிமன்றத்தில் உங்களின் பில்டரின் மீது வழக்குத் தொடரலாம். பில்டர் அக்ரிமென்டில் மின் இணைப்பை உங்களின் பெயருக்கு மாற்றித் தருகிறேன் என்று கூறி இருந்தால் மட்டுமே அதை செய்வார். இல்லை எனில், நீங்கள்தான் மின் இணைப்பை உங்களின் பெயருக்கு மாற்றிக்கொள்ளவேண்டும். இதற்கு உங்கள் பகுதியில் உள்ள மின் அலுவலகத்தில், இணைப்பை பெயர் மாற்றம் செய்து தரும்படி ஒரு கடிதம் தரவேண்டும். இதனுடன் வீடு வாங்கிய சொத்துப் பத்திரம், சொத்து வரிச் செலுத்திய ரசீது ஆகியவற்றை இணைத்துத் தந்தால் உங்கள் பெயருக்கு மின் இணைப்பு மாற்றித் தரப்படும்.''

ஆன்லைனில் வீடு வாங்கலாமா?

 என் ஆண்டு வருமானம் ரூ.6.5 லட்சம். வரிச் சேமிப்பிற்காக என்ன மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?

- இளங்கோவன், மயிலம். செந்தில், நிதி ஆலோசகர்,

''நீங்கள் இ.எல்.எஸ்.எஸ். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதில் வருமான வரி பிரிவு 80சி-யின் கீழ் வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டிற்கு மூன்று ஆண்டுகாலம் லாக் இன் பீரியட் இருக்கும். ஹெச்.டி.எஃப்.சி. டாக்ஸ் சேவர் ஃபண்ட், ஆக்ஸிஸ் லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மேலும், ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங் ஸ்கீம்-ன் கீழ்வரும் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.''

படங்கள்: பா.கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு