இளைஞர்களை இன்டலிஜென்ட் ஆக்கும் தொடர்!

மூளைச் சோம்பல்!                                    

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஞாயிற்றுகிழமை காலை, 11 மணி. கதவைத் திறந்த பி.எஸ்.ஆர். 'என்ன விக்கி, எப்படி இருக்கே..? டெஸ்ட்ல நான் பாஸா..?’ என்று கேட்ட கேள்வியில் நான் திகைத்துப் போனேன்.

'இது என்ன புதுசா இருக்கே..?’ என்று நினைத்துக்கொண்டிருக்க, விக்கியை சற்று அணைத்தபடி புன்னகையுடன் என்னைப் பார்த்தார் பி.எஸ்.ஆர். 'விக்கி, கம்ப்யூட்டர்ல பெரிய எக்ஸ்பர்ட்டா இருக்கானே.. நீ ஏன் என்கிட்ட சொல்லலே..?’ என்று என்னிடம் கேட்டார்.

'விக்கியா..? எக்ஸ்பர்ட்டா..?’ என்று நான் ஆச்சரியத்தோடு விக்கியைப் பார்த்தேன்.

'கம்ப்யூட்டர்ல எனக்கு நிறைய டவுட்ஸ் இருக்கு. விக்கிதான் கம்ப்யூட்டர்னா பைத்தியமா இருக்கானே, அவங்கிட்டயே கத்துக்கிட்டா என்னன்னு தோணிச்சு..  டெய்லி காலையில 10 நிமிஷம், ஈவினிங் 10 நிமிஷம்.. ஃபோன்லயே க்ளாஸ் எடுத்துக்கிட்டேன்..’

'ஐயயோ.. நான் க்ளாஸ் எல்லாம் எடுக்கலை’ - விக்கி அவசரமாக குறுக்கிட்டான்.  

'இந்த ஒரு வாரம் விக்கி சொன்னதை நான் சரியாப் புரிஞ்சுக்கிட் டேனான்னு சின்னதா ஒரு டெஸ்ட் வைக்கச் சொன்னேன்.. அதான்..’

சாதனையாளர்கள் சாமானியர்களிடம் சாதாரணமாகப் பழகுவதன் நோக்கமே அவர்களின் மனங்களில் நம்பிக்கையுணர்வைத் தோற்றுவிக்கத்தான். பேச்சிலும் எழுத்திலும் அறிவிலும் அனுபவத்திலும் வித்தகரான ஒருவர், இப்போதுதான் ப்ளஸ்டூ முடித்திருக்கிற ஒரு சிறுவனை 'டெஸ்ட்’ வைக்கச் சொல்லி 'நான் பாஸ் பண்ணிட்டேனா..’ என்று கேட்கிறார் என்றால்..? அதுதான் பாடம் கற்றுக்கொள்கிற மாதிரி நடித்து, பாடம் கற்றுத் தரும் 'விளையாட்டு!’

இளைஞர்களுக்கு எதிலே அதிக நாட்டமும் ஆர்வமும் இருக்கிறதோ, அதில் இருந்து அவர்களை திசை திருப்புவது மிகவும் கடினம்; அது முறையும் அல்ல. எதை நாம் கூடாது என்கிறோமோ, அதில்தான் அவர்கள் தீவிரம் காட்டுகிறார்கள். தடுக்க தடுக்கத்தான் திமிறி எழுகிறார்கள். அதுதான் இளமையின் இயல்பு.

எதிர்கொள்- 6

காட்டாற்று வெள்ளம் போன்றது இளைஞர்களின் ஆற்றல். அதற்கு அணை போடக்கூடாது.  வேறு என்னதான் செய்வது என்கிறீர்களா? வழி காட்டுங்கள். ஆற்று நீரை அணை போட்டுத் தடுக்காமல், அது போகிற போக்கிலேயே கொண்டுசென்று பயன் அடையலாம்.    

பாருங்களேன், இதற்கு முன்பும் விக்கி 'லேப்டாப்’பில்தான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான். இப்போதும் அதில்தான் உட்கார்ந்துகொண்டு இருக்கிறான். ஆனால், முன்புக்கும் இப்போதைக்கும் எத்தனை வித்தியாசம்..! காரணம், அதன் பயன்பாடு மாறியிருக்கிறது. வெறும் பொழுதுபோக்காகவும் காலவிரயமாகவும் இருந்த அதே பழக்கம் இன்று அறிவுக்குத் தீனி போடுகிற, ஆளுமையை

(personality) பெருக்குகிற பயிற்சியாக மாறிவிட்டது.  

'சார், ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் கம்ப்யூட்டர்ல வொர்க் பண்ணுவீங்க..?’ -  பி.எஸ்.ஆரிடம் பவ்வியமாக கேட்டான் விக்கி.

'ஒரு 5 அல்லது 6 அவர்ஸ்..’

'படிக்கறது..?’

'அதுவும் ஒரு 6 -லிருந்து 7 அவர்ஸ்..’

'வாவ்..! மோர் தென் 12 அவர்ஸ் ய டே..! எப்படி முடியுது சார்?’ - ஆச்சரியத்தோடு கேட்டான் விக்கி.

எதிர்கொள்- 6

'நாம பண்ற வேலையில ஒரு 'டிஸிப்ளின்’ இருந்தா போதும். அது மனசுக்குத் தெம்பு கொடுக்கும். மனசு 'ஹெல்த்தி’யா 'ஸ்ட்ராங்க’-ஆ இருந்தா, எந்த வேலையுமே கஷ்டம் இல்லை..’

அன்று, பி.எஸ்.ஆரிடம் பேசிவிட்டு விக்கியையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். தேங்கிவிட்ட சில வேலைகளை முடிக்க கம்ப்யூட்டர் முன் அமர்ந்தாலும்கூட மனசு வேலையில் ஒட்டவில்லை. விக்கியும் நிமிஷத்துக்கு ஒருமுறை பி.எஸ்.ஆர். பத்தி பேச, அவர் சொன்ன விஷயங்களையே மனம் அசை போட்டது.  

'டிஸிப்ளின் இருந்தா, தெம்பா வேலை பார்க்கலாம்’னு பி.எஸ்.ஆர். சொன்னது நூற்றுக்கு நூறு சரி. மனம்தான் மனிதனின் செயல்களைத் தீர்மானிக்கிறது. அமைதியான மனதில்தான் ஆரோக்கியமான சிந்தனைகள் உதிக்கும். ஆரோக்கியமான சிந்தனைகள் மட்டுமே ஆக்கபூர்வமான செயல்பாடுகளை சாத்தியமாக்கும். வேறு எவரையும்விட இளைஞர்களுக்குத்தான் அமைதியான மனநிலை மிக அதிகம் தேவை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இளமை என்றாலே இரைச்சல் என்றாகிவிட்டது. எப்போதும் சத்தங்களுக்கு நடுவே இருப்பதைத்தான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். வீடுகளில், திரையரங்கு, பேருந்து, கோயில், பூங்கா என்று பொதுஇடங்களில்கூட, இரைச்சலையே தமது அடையாளமாகக் காட்டிக்கொள்ளும்

இளைஞர்களைக் காண்கிறபோது, பெற்றோர்களுக்கு ஒருவிதக் கலக்கம் ஏற்படுவது இயற்கைதானே? இரைச்சல் விதை என்றால் எரிச்சல் அதிலிருந்து விளையும் பயிர்.

லட்சிய நோக்கம் கொண்ட இளைஞர்கள் இரைச்சலை விரும்பமாட்டார்கள். ஓர் இளைஞன், ஐ.ஏ.எஸ்.-க்குத் தேர்ச்சி பெற நினைத்தால் அல்லது வேறு ஏதேனும் துறையில் சாதனையாளனாக  ஆக நினைத்தால், அவன் அமைதியாகவே இருக்கவே விரும்புவான். காரணம்..? லட்சியம் என்கிற முனைப்பில் 'வாழ்வதை’யே அவன் மனம் விரும்பும்.

எதிர்கொள்- 6

ஊர் சுற்றுவதும் அரட்டை அடிப்பதும் தவறு என்பதல்ல; அளவுக்கு அதிகமாக வேண்டாம்.அளவுக்கு அதிகமாக சினிமா, ஃபேஸ்புக், டிவி என கேளிக்கைகளில் ஈடுபடும்போது, மூளைச் சோம்பல் ஏற்படவே செய்கிறது. அது என்ன.. 'மூளைச் சோம்பல்?’

இரண்டு மணி நேரம், குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் தொடர்ந்து எழுதவோ, படிக்கவோ இயலாத இளைஞர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். 30 நிமிடங்கள், 20 நிமிடங்கள் என்று நிமிடக் கணக்கில்தான் சேர்ந்தாற்போல் இவர்களால் இயங்க முடிகிறது. வெகு குறுகிய நேரத்திலேயே, இவர்களுக்கு மூளையில் மந்தத்தன்மை ஏற்பட்டுவிடுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்போல, இவர்கள் எழுதும்போதும், படிக்கும்போதும்     15 அல்லது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இவர்களுக்கு இடைவேளை தேவைப்படுகிறது. இரவு, பகல் பாகுபாடின்றி இடையறாது எழுதி, படித்து சாதிக்கவேண்டிய வயதில், ஏதோ மாலை நேரத்தில் பட்சணம் கொறிப்பது போல,  சிறிது சிறுதாகப் படித்து எப்போது விற்பன்னர் ஆவது..?

பொதுவாக, தொடர்ந்து எழுதுவது அல்லது படிப்பது தம் பிள்ளகளுக்கு எவ்வளவு தூரம் சாத்தியம் ஆகிறது என்பது பல பெற்றோருக்குத் தெரியவே தெரியாது. 'ராத்திரி முழுக்க பையன் படிக்கிறான்’,  'நாள் பூரா பொண்ணு படிக்கிறாரா’ என்கிற அளவுக்குத்தான் பெற்றோர் அறிந்து வைத்திருக்கிறர்கள்.

'புரிந்துகொள்ளுதல்’ என்பதற்கும் 'தொடர்ந்து படித்தல்’ என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.கடினமான பாடங்களை வாசிக்கும்போது நீண்ட நேரம் தொடர்ந்த வாசிப்பு கடினமானது தான். ஆனால் பத்திரிகைகள், புதினங்கள் ஆகியவற்றைப் படிக்கும்போதும் களைப்பு ஏற்படுமானால், அதனை உடனடியாகப் பெற்றோரிடம் எடுத்துச்சொல்ல வேண்டும்.

இதிலே நடைமுறைச் சிக்கல் என்னவென்றால், சம்பந்தப்பட்டவர்களேகூட இந்த 'மூளைச் சோம்பல்’ பாதிப்பை உணர்வதில்லை. இது சிறிது சிறிதாக வளர்ந்து, இயல்பாகவே தமக்கு தொடர்ந்து வாசிக்கும் திறன் இல்லை என்று நம்பத் தொடங்கிவிடுகின்றனர். இது ஒரு மாயை; ஆரோக்கியமான மன நிலையை வளர்த்துக் கொண்டால், 'மூளைச் சோம்பல்’ தானாக நீங்கிவிடும்.

உடல் ஆரோக்கியமாக இருப்பது எவ்வளவு இன்றியமையாததோ, அதற்குச் சற்றும் குறைவின்றி, மன ஆரோக்கியம் முக்கியமானது. அதனால், உணவுப் பழக்கவழக்கங்களையும் நாம் மிக முக்கியமாக கவனத்தில்கொள்ள வேண்டும்.

எதிர்கொள்- 6

நமது நாட்டு தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப திரவ உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நமக்கெல்லாம் சாப்பாடு என்றாலே வயிறு நிறைய சாப்பிடுவதுதான் வழக்கம். ஆனால்,  தண்ணீர் குடிப்பதில் மட்டும் 'கறாராக’ நடந்துகொள்கிறோம்! விக்கல் வரும்போது மட்டுமே தண்ணீர் குடிப்பது என்று இருப்பவர்கள் அதிகம்.

இவற்றில் எல்லாம்கூட இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அதனால்தான் பி.எஸ்.ஆர். போன்றவர்கள் இளைஞர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் உன்னிப்பாகக் கவனித்து எடுத்துச்சொல்லி வருகின்றனர். அதற்குக் காரணம் நமக்கு வாய்த்திருக்கிற demographic dividend ! அது என்ன 'டெமோக்ராபிக் டிவிடெண்ட்..?’

(தெளிவோம்)

 ஆர்.காமின் புதிய திட்டம்!

ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன் நிறுவனம் ரிலையன்ஸ் பிராப்பர்டீஸ் என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. புதிய நிறுவனம் ஆரம்பிக்க முக்கிய காரணம், ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன் நிறுவனத்தில் இருக்கும் எக்கச்சக்கமான கடன்தான். அந்த கடன் மதிப்பு மட்டுமே 38,864 கோடி ரூபாயாகும். இந்த கடனைக் குறைக்க மும்பை, டெல்லி போன்ற இடங்களில் உள்ள அசையா சொத்துகளை குடியிருப்புகளாகவும், வணிக மையங்களாகவும் மாற்றத் திட்டமிட்டுள்ளது. இப்படி செய்வதன் மூலமாக மட்டுமே

12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட முடியுமாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism