Published:Updated:

'பணவளக்கலை’

'பணவளக்கலை’

'பணவளக்கலை’

'பணவளக்கலை’

Published:Updated:

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

##~##

பணவளக்கலையில் ரிஸ்க்கிற்கு ஏன் மிக அதிகமான அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு இந்நேரம் வந்திருக்கும். பணத்தை வளப்படுத்திக்கொள்ள முதலில் நாம் அனைவரும் செய்யவேண்டிய ஒரு விஷயம், ரிஸ்க் குறித்த புரிதலை ஏற்படுத்திக்கொண்டு, அதுகுறித்த பயங்களைக் குறைத்துக்கொள்வதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனைவருமே தேவைப்படும்போது ரிஸ்க் எடுக்கத்தான் செய்கிறோம். அந்தத் தேவை என்பது எப்படி உருவாகிறது என்பதுதான் முக்கியமான விஷயம்.

கடந்த மாதம் ஒருநாள், ஆபீஸிற்கு காலதாமதமாக கிளம்பியதால் பறந்தடித்துக்கொண்டு உங்கள் டூவீலரை/காரை ஓட்டிப்போனீர்களே, ஞாபகம் இருக்கிறதா? அது என்ன, ரிஸ்க் எடுப்பதுதானே?

ரிஸ்க்கை எடுத்தீர்கள். சரியான நேரத்தில் அலுவலகம் சென்று சேர்ந்தீர்கள். என்ன ஒரு ஸ்பீடு! எப்படியெல்லாம் கட் அடிச்சு வந்தோம் என்று நீங்களே உங்களைப் பாராட்டிக்கொண்டீர்கள் இல்லையா? ஏன் அந்த ரிஸ்க்கை எடுத்தீர்கள்? லேட்டாகப் போனால் உங்கள் பாஸ் உங்களைத் திட்டுவார். சில ஆபீஸ்கள் லீவ் மார்க் செய்யும். யாரோ ஒருவர் கேட்கிறார், திட்டுகிறார் என்பதற்காக பயந்து வேகத்தை அதிகப்படுத்தினீர்கள். அதாவது, ரிஸ்க் எடுத்தீர்கள். சாதாரணமாக அந்த வேகத்தில் ரோட்டில் பைக் ஓட்டிச் சென்றால் அது ஆக்ஸிடென்டில் முடியலாம் என்று உங்களுக்குத் தெரியும்தானே! இதில் சூப்பரான விஷயம் என்னவென்றால், வழக்கமாக போலீஸ்

'பணவளக்கலை’

நின்று ஸ்பீடு செக் பண்ணும் இடத்தில் நிதானித்து ஸ்பீடை குறைத்து பின்னர்தானே வேகமெடுத்தீர்கள்!

உங்களுக்குத் தேவைப்பட்டால் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ரிஸ்க் எடுப்பீர்கள். இதில் தேவை என்பது உங்கள் பாஸ் உங்களை கேள்வி கேட்பார் என்ற பயம். வண்டி ஓட்டிய வேகத்தில் நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கை பணம் சம்பாதிப்பதில் எடுப்பீர்களா? ஏன் எடுக்கமாட்டேன் என்கிறீர்கள்? நீங்கள் அதிகமாக சம்பாதிக்காவிட்டால், உங்களை கேள்வி கேட்டு நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் பொருந்திய ஆளில்லை.

எங்க சார் கேட்க ஆளில்லை. அப்பா கேட்கிறாரே! வீட்டில் மனைவி கேட்கிறாரே! என்பீர்கள். அவர்கள் கேட்பது லைட்டாகத்தான். சம்பாத்தியம் என்பது ஒருவரின் தனிப்பட்ட திறமை சார்ந்த விஷயமாக சமுதாயத்தில் கருதப்படுவதால், ரொம்பவும் வலியுறுத்திக் கேட்டால் அது அவர்களுடைய தன்மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்று நினைத்து வீட்டில் இருப்பவர்கள் யாரும் விரட்டி விரட்டி கேட்பதில்லை.

ஆபீஸில் டார்கெட்டை முடிக்கவில்லை என்றால், நாக்கைப் பிடுங்கிக்கொள்கிறமாதிரி பாஸ் கேள்வி கேட்கிறார்? மானம் கப்பல் என்ன, ஏரோப்ளேனில் பறந்துவிடுகிறது. அதனால்தான் பணம் சம்பாதிப்பதில் நடவடிக்கை எடுக்கக் கூடிய அதிகாரம் பொருந்திய ஆள் நமக்கு மேல் இல்லை என்று சொன்னேன். தனிமனித சம்பாத்தியத்தைப் பொறுத்தவரை, இப்படித் தட்டிக் கேட்க ஆளில்லாததால்தான் சம்பாதிப் பதற்கான ஊக்கம் கைவிட்டுப் போய்விடுகிறது. நம்மால் இதுதான் முடியும் என்ற தீர்மானமான முடிவுக்கு நாம் நம்மையே தள்ளிக்கொண்டு தொடர்ந்து கஷ்டப்படுவதும் இதனால்தான்.

அப்படியெல்லாம் இல்லை சார்! தேவைகள் அதிகமாகி கழுத்தை நெரிக்கிறது. கண்முழி பிதுங்குகின்றது என்பீர்கள். அதனாலேயே ஸ்ட்ரெஸ் அதிகமாகிறது என்பீர்கள். ஒன்றைப் (பணத்தைப்) பற்றி சதாசர்வ காலமும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தால் ஸ்ட்ரெஸ் வராமல் என்ன செய்யும்?

பணம் சம்பாதிக்க இந்தக் கவலை மட்டுமே போது மானதல்ல! நடவடிக்கை களும் செயல்பாடுகளும் மிக மிக முக்கியம். கேள்விகள் கேட்கப்படுவதாலும், நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயமிருப்பதாலும்தான் ஆபீஸில் சேல்ஸ் டார்கெட்டும், எக்கச்சக்கமான வேலைகளும் முடிக்கப்படுகின்றன. தனிமனித சம்பாத்தியத்தில் இதுபோல் ஏன் சம்பாதிக்கவில்லை என்ற கேள்வி கேட்கப் படாததால் சம்பாதிக்காததற்கான நடவடிக்கை இல்லாமலும், இல்லாத  சாக்குப்போக்குகளையும் சமாளிப்புகளையும் நமக்கு நாமே சொல்லிக் கொள்ள

'பணவளக்கலை’

முனைகின்றோம்.

பணம் சம்பாதிப்பதில் மட்டும் நமக்கு நாமே பாஸ். செய்யும் வேலையில்கூட எதற்கும் கவலைப்படாமல் இருக்கும் குணம் இருப்பவராக நாம் இருந்தால் வேலைக்குச் சேர்ந்த அலுவலகத்திலேயே, சேர்ந்த பதவியிலேயே நீங்கள் ரிட்டையர்டு ஆகலாம். இந்தக் காலத்தில் சிலசமயம் அதுகூட சாத்தியமில்லை. யார் இருக்கிறார் நம்மைக் கேட்பதற்கு? உத்தியோகம் புருஷ லட்சணம். அதனால் எனக்கும் ஒரு வேலை இருக்கிறது என்று சொல்லித் திரியலாமே! இப்படியும் ஒரு சாரார் இருப்பதை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.  

அடுத்ததாக, நம்மைச் சுற்றி இருப்பவர்களின் வளர்ச்சி. அது நம்மை சில சமயம் யோசிக்க வைக்கும். சில சமயம் பொறாமைப்படவைக்கும். வெகுசில சமயமே செயல்பட வைக்கும். 'அட, அவரும் என்னை மாதிரியேதானப்பா இருந்தாரு. என் கீழேதான் வேலை பார்த்தாரு! டக்குடக்குன்னு முடிவெடுத்து நாலு கம்பெனி மாறுனாரு! நாலு காசும் பார்த்தாரு’ என்று நல்லவிதமாகச் சொல்லிக்கொள்ளலாம். 'அவனுக்கு ஒண்ணுமே தெரியாதய்யா. ப்ளாப்பி டிஸ்க்கை தலைகீழா மெஷினில போட்டவன். இவனெல்லாம் இன்னைக்கு பெரிய மனுஷன். எல்லாம் டெக்னாலஜி பூமுல வந்த வினை. இன்னைக்கு முக்கா ட்ரவுசரைப் போட்டுக்கிட்டு ஹோண்டா காரில போறான்’ என்று புலம்பவும் செய்யலாம்.  

வாழ்க்கையில் முன்னேற நாம் என்ன செய்யவேண்டும்? அடுத்து, ஜெயிக்கப்போகும் துறை என்ன? என் பணம் சம்பாதிக்கும் தகுதியை எப்படி உயர்த்திக்கொள்வது? என்று சைலன்டாகத் திட்டமிட்டு அதைச் செயலாக்கவும் ஆரம்பிக்கலாம். பணமின்மையைப் பற்றி கவலைப்படவும் சாக்குப்போக்குகளைக் கண்டுபிடிக்கவும் வீணாகச் செலவிடப்படும் எனர்ஜியை பணம் சம்பாதிப்பதற்கு நீங்கள் செலவிடலாம். இந்த மாதச் செலவிற்கு பட்ஜெட் இடிக்குதே!, அடுத்த வருடம் அட்மிஷனுக்கு பணத்துக்கு எங்கே போவது?, ரிட்டையரானா மாச வருமானம் எதுவும் இருக்காதே? என்ற கவலையெல்லாம் உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கிடந்தால், அப்படி கவலைப்படுவதிலேயே கணிசமான எனர்ஜி செலவாகிவிடுகிறது.

மனிதர்களைப் பொறுத்தவரை அவர்கள் கையில் இருக்கும் நேரமும், எனர்ஜியும் அனைவருக்கும் ஒரேமாதிரியாகத் தரப்பட்டு உலகுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள்தான். நேரத்தையும்

'பணவளக்கலை’

எனர்ஜியையும் எப்படி, எந்தெந்தக் காரியங்களுக்காகச் செலவழிக்கிறோம் என்பதில்தான் சம்பாதிக்கும் திறன் நிர்ணயம் செய்யப்படுகிறது. பணம் சம்பாதிக்க முடியவில்லையே என்று நினைப்பதில் செலவிடப்படும் எனர்ஜியை பணம் சம்பாதிப் பதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதில் செலவிட்டால் நாம் இருக்கும் நிலையில் இருந்து சிறிதளவு முன்னேற்றத்தையாவது நாம் அடைவது நிச்சயம்.

ஆதிகால மனிதன் உணவு தேடிப்போனால் மிருகங்களுக்கு சிலசமயம் உணவாகிவிடுவான் என்ற நிலை இருந்தது. உணவு தேடிப்போனால் இறந்துபோவோமே என்று நினைத்து குகைகளில்  முடங்கிக்கிடந்தால், சாப்பிட எதுவும் கிடைக்காமல் பட்டினியாக சாகவேண்டியதுதான். அதனால்தான், மனிதன் குகையில் இருந்து கிளம்பி வெளியே சென்று உணவு சேகரிக்க ஆரம்பித்தான். ரிஸ்க் எடுத்த குகை மனிதனுக்கு உணவு கிடைத்தது. ரிஸ்க் எடுக்காதவனுக்கு உணவில்லாமல் போனது. அதே நிலைதான் இன்றும். ரிஸ்க் எடுத்தவனுக்கு பணம், ரிஸ்க் எடுக்காதவனைவிட அதிகமாக (சிறு அளவிலோ அல்லது பெரிய அளவிலோ) கிடைக்கிறது.

அப்படியானால் ரிஸ்க் எடுத்தால் உயிரே போய்விடுமா?, உயிர் போவதற்கு சமமான அளவுக்கு எல்லா விஷயத்திலும் ரிஸ்க் இருக்கிறதா? அப்படியென்றால் அது நமக்கு சரிப்படாது என்று உடனே சொல்ல முயல்வீர்கள்.

முதலாவதாக, எல்லா ரிஸ்க்கும் ஒரே மாதிரியானதல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இரண்டாவதாக, ஒரு விஷயம் ரிஸ்க்கா, இல்லையா? என்பதிலும் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு, உயரத்தில் பறக்கும் ப்ளேனிலிருந்து பாராசூட் இல்லாமல் குதிப்பது ரிஸ்க்கா? ஆம், ரிஸ்க்தான் என்று சொன்னால் அது தவறு. பாராசூட் இல்லாமல் குதித்தால் உயிரிழப்பது நிச்சயம். எனவே, அதில் ரிஸ்க் இல்லை. நஷ்டத்திற்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது.

ஒரு ஜாடிக்குள் சிவப்பு மற்றும் கறுப்பு பந்துகளைப் போட்டு வைத்துவிட்டு, உங்களை கையைவிட்டு ஒரு பந்தை எடுக்கச் சொல்லி அந்தப் பந்தின் கலரைப் பார்த்தால் அதில் ரிஸ்க் ஏதுமில்லை. அதேசமயம் ஒரு தொகையைப் பந்தயமாக கட்டச் சொல்லிவிட்டு, வெளியே எடுக்கும் பந்தின் நிறத்துக்கு ஏற்றாற்போல் பந்தயம் கட்டுபவருக்கு அதிகப் பணம் கிடைக்கவோ அல்லது கட்டிய பணத்தை இழக்கவோ நேரிடும் என்றால் அதில் ரிஸ்க் இருக்கிறது. ஏனென்றால், எந்த கலர் பந்து எந்த ஜாடிக்குள் இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. என்ன கலர் பந்து கையில் வந்தால் என்ன லாபம், என்ன நஷ்டம் என்பது மட்டுமே தெரியும். இதில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. எனவே, ரிஸ்க்கும் இருக்கிறது.

இந்த ஜாடி உதாரணத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக்குவோம். நீங்களும் இன்னொருவரும் இந்த ஜாடி விளையாட்டிற்கு பந்தயம் கட்டுகிறீர்கள். அந்த இன்னொருவருக்கு ஜாடிக்குள் ஒவ்வொரு மூன்று சிவப்பு பந்துகளுக்கும் ஒரு கறுப்பு என்ற விகிதத்தில் பந்துகள் இருக்கிறது என்பது தெரிந்திருந்தால் சிக்கல் அங்கேதான் ஆரம்பம்.

நீங்கள் கையை ஜாடிக்குள் கையைவிட்டு எடுக்கும்போது அந்தப் பந்து சிவப்பாகவோ, கறுப்பாகவோ இருப்பதற்கு 50:50 சான்ஸ் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு விளையாடுவீர்கள். ஆனால், மற்றொருவருக்கோ 50:50 இல்லை, 75:25 என்பது உறுதியாகத் தெரியும். அவருக்கு இந்த விளையாட்டில் ரிஸ்க் இருக்கிறது. அதே விளையாட்டில் உங்களுக்கு அறியாமைதான் இருக்கிறது, இல்லையா?

(கற்று தேர்வோம்)

உலகப் பட்டியலில் இந்திய நிறுவனங்கள்!

2013-ம் ஆண்டுக்கான ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எட்டு நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இதில் இந்தியன் ஆயில் (88), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (107), பாரத் பெட்ரோலியம் (229), இந்துஸ்தான் பெட்ரோலியம் (260), எஸ்.பி.ஐ. (298), டாடா மோட்டார்ஸ் (316), ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் (369), டாடா ஸ்டீல் (471) ஆகிய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இதில், இந்தியன் ஆயில் கடந்த ஆண்டு 83-வது இடத்திலும், ரிலையன்ஸ் நிறுவனம் 100-வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism