Published:Updated:

பணத்தை நிர்வகிக்கும் பக்குவம் இல்லை!

தொகுப்பு: செ.கார்த்திகேயன்.

பணத்தை நிர்வகிக்கும் பக்குவம் இல்லை!

தொகுப்பு: செ.கார்த்திகேயன்.

Published:Updated:
##~##

ஒருவரது நிதி நிலைமையை உள்ளது உள்ளபடி சொல்லி, அதைச் சார்ந்த திட்டங்களை வகுத்துத் தந்தால், அத்திட்டங்கள் நிலையான, நம்பத்தக்க பல நல்ல விளைவுகளைத் தரும். ஆனால், பலரும் தங்களுடைய நிதி சம்பந்தப்பட்ட விவரங்களை ஏன் நிதி ஆலோசகரிடம் சொல்லவேண்டும் என்று நினைத்து சில முக்கிய விஷயங்களைச் சொல்லாமலே விட்டு விடுகிறார்கள். இதனால் பாதிக்கப் படுவது நிதி ஆலோசகரல்ல,  வாடிக்கையாளர்களே. அப்படிப்பட்ட ஒருவர்தான், சரவணன்.  

சரவணனுக்கு நாற்பது வயது. தனியார் நிறுவனத்தில் வேலை. மனைவி, மல்லிகா குடும்பத் தலைவி; ராஜன்,  ப்ரீத்தி என இரு குழந்தைகள். சரவணனுக்கு மாத வருமானம் 1,10,000 ரூபாய். நல்ல வருமானம்தான் என்றாலும், குடும்பத்தை பொருளாதார ரீதியில் சிறப்பாக நடத்த அவருக்குத் தெரியவில்லை.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலுவலகத்தில் அவர் எப்படி என அவரது நண்பர்களிடம் விசாரித்தால், ஆஹா, ஓஹோவென்று புகழ்வார்கள். ஆனால், சொந்த வாழ்க்கையில்..? குடும்பப் பொருளாதாரம் சரியாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க தவறிவிட்டார். அலுவலகத்திலும், சொந்த வாழ்க்கையிலும் சரியாக திட்டமிட்டு செயல்படுபவர்களே வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள். சரவணன் செய்திருந்த தவறுகளை ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

பணத்தை நிர்வகிக்கும் பக்குவம் இல்லை!

ஹெல்த் மற்றும் இதர இன்ஷூரன்ஸ்!

பெரும்பாலானோர் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை அதன் தன்மை தெரியாமலே வாங்கிவிடுகின்றனர். பிறகு ஒரு ப்ளானரை அணுகி, அந்த பாலிசிகள் தனக்கு பொருத்தமானதா என்று ஆலோசனை கேட்கின்றனர். இதே தவறைத்தான் சரவணனும் செய்திருந்தார். இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது ஒரு நீண்டகால ஒப்பந்தம். அதை  வாங்கியபிறகு தொடராமல்  நிறுத்தினால் நஷ்டம் நமக்குத்தான். மேலும், பெற்றோருக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கும்போது சரவணன் அவற்றின் விலக்கல்களைக் (ணிஜ்நீறீusவீஷீஸீs) கவனிக்கவில்லை. விலக்கல்களில் விவரிக்கப்பட்ட நோய்களுக்கு காப்பீடு கிடைக்காது. எனவே, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்முன் தன் குடும்பத் தேவைகளை ஆலோசகரிடம் முழுமையாகப் பகிர்ந்து அவர் அறிவுரைப்படி நடப்பது நல்லது என்பதை சரவணனுக்குப் புரியவைத்தேன்.

காப்பீடா, முதலீடா?

முதலீடு வேறு; காப்பீடு வேறு. ஆனால், இரண்டுமே முக்கியம்தான். இது தெரியாமலேயே பலர் காப்பீடு என்று நினைத்து முதலீட்டில் ஈடுபடுவார்கள். சரவணனும் அதுபோலத்தான். 10 லட்சம் ரூபாய் கவரேஜுக்காக வருடம் ரூ.1,00,000 பிரீமியம் செலுத்துவதாகப் பெருமையாகச் சொன்னார். காரணம், அவர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியானது முதலீட்டுடன் இணைந்தது. ஒரு ப்ளானரைப் பொறுத்தவரை, பிரீமியம் எவ்வளவு என்பதைவிட, காப்பீடு எவ்வளவு என்பதே முக்கியம். ஒரு லட்சம் ரூபாயை பிரீமியமாக கட்டுவதைவிட, சுமார் 24,000 ரூபாயைச் செலுத்தி

50 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டு, மீதமுள்ள 76,000 ரூபாயைக் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால தேவைக்காக தனிப்பட்ட முறையில் முதலீடு செய்யவேண்டும் என்று சொன்னேன். முதலில் வேண்டா வெறுப்போடு கேட்டவர், அதிலிருக்கும் உண்மையைப் புரிந்துகொண்டபின் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.  

பொய் சொல்லக் கூடாது!

ஹெல்த் இன்ஷூரன்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான விஷயத்தை என்னிடம் மறைக்கவும் செய்தார் சரவணன். புகைபிடித்தல், மது அருந்துதல் சம்பந்தப்பட்ட விஷயங்களை நிதி ஆலோசகரிடம் சொன்னால்தான் அதன் அடிப்படையில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை அவரால் பரிந்துரை செய்ய முடியும். புகைபிடிப்பது, மது அருந்துவதை மறைத்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துவிட்டு, பின்னர் அதுபற்றி தெரியவரும்போது பாலிசியில் க்ளைம் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. சரவணன் இந்த முக்கியமான விஷயத்தை மறைத்ததால் அவர் பெற்ற சிகிச்சைக்கான இழப்பீட்டை க்ளைம் செய்ய முடியவில்லை. அந்த பிரச்னையை சமாளிக்க நான் பட்டபாடு எனக்கு மட்டுமே தெரியும்.

முதலீடு தரும் லாபம்!  

பணத்தை நிர்வகிக்கும் பக்குவம் இல்லை!

சரவணனின் மனைவி மல்லிகாவிற்கு அவரது பெற்றோரிடமிருந்து   பணம் கிடைத்தபோது அதை முதலீடு செய்ய நினைத்து, அதில் ஒரு சிறு தொகையை தனியார் நிறுவனத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் 13 சதவிகித வட்டிக்கு முதலீடு செய்திருந்தார். வட்டி அதிகம் என்றாலும், அந்த முதலீட்டில் உள்ள அபாயங்களை (ரிஸ்க்) பற்றி தெரிந்துகொள்ளவில்லை.   இதனால் முதலீட்டை இழக்க நேரிடலாம். இதை அவருக்குச் சொல்லி புரியவைக்க எனக்கு பல மாதகாலம் தேவைப்பட்டது.  

வருமான வரி அணுகுமுறை!

சரவணன் தனது போனஸ் தொகையை முதலீடு செய்ய விரும்பியபோது, பல திட்டங்களை நான் பரிந்துரை செய்ய, அவரோ வங்கி எஃப்.டி.யிலேயே முதலீடு செய்தார். அதே காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் குறைந்தபட்சம் 9 சதவிகிதம் வருமானம் அளித்தன. வங்கி எஃப்.டி சிறப்பானதுதான், ஆனால், வருமான வரி கட்டியபின் எவ்வளவு தொகை தங்கும் என்பதை பலர் அறிவதில்லை. உதாரணமாக, அவர் எஃப்.டி. மூலம் கிடைத்த வருமானத்துக்கு 30 சதவிகிதம் வரி கட்டியிருப்பார். (சரவணின் வருமான வரி வரம்பு 30%). ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் வரவில் அவர் வெறும் 10% மட்டுமே வரி கட்டியிருக்கக்கூடும்.

குறிப்பிட்ட முதலீட்டில் மோகம்!

சிலர் தங்கம் / வெள்ளி, சிலர் நிறுவனப் பங்குகள், சிலர் நிலத்தில், வேறு சிலர் எஃப்.டி. என குறிப்பிட்ட முதலீட்டிலேயே பணத்தைப் போடுவார்கள். ஒரே இடத்தில் அத்தனை முதலீடுகளையும் போடாமல் தேவைக்கு தக்க பிரித்து முதலிடுவது அவசியம். இன்றைய காலகட்டத்தில் பணவீக்கத்திற்கும் மேலாக வருமானம் வரவேண்டியது அவசியம் என்பதைப் புரியவைத்து, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற வரிக்குப் பின் அதிக வருமானம் அதிகம் கிடைக்கும் முதலீட்டுத் திட்டங்களை பயன்படுத்தச் சொன்னேன். நான் சொல்வதை அவர் ஏற்றுக்கொள்ள வைக்க எனக்கு பெரும் சவாலாக இருந்தது.

பணத்தைப் பற்றிய அணுகுமுறை!

இன்றைய நிலையில் எந்த தேவையையும் கடன் மூலமாக பூர்த்தி செய்துவிடலாம் என்ற எண்ணம் வலுத்துவிட்டது. தேவையா, இல்லையா என்பதைவிட கடன் கிடைக்கும் பட்சத்தில் எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்ற உந்துதல்தான் இருக்கிறது. சரவணனும் அதுபோலவே. பல கடனை நம்பியிருந்த அவரை, நிதித் திட்டமிடலுக்குப் பிறகு மனம் மாறி முதலீட்டில் இறங்கும் அளவுக்கு மாற்றினேன்.  

ஆக, நிதி ஆலோசகரிடம் எந்த விஷயத்தையும் மறைக்காமல் சொன்னால், சரியான குடும்ப நிதித் திட்டமிடலை குறைந்த காலத்தில் பெறமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

குறிப்பு : இந்தக் கட்டுரையில் வரும் குடும்ப நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism