Published:Updated:

பணவளக்கலை !

பணவளக்கலை !

பணவளக்கலை !

பணவளக்கலை !

Published:Updated:

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

##~##

ரிஸ்க் பற்றி வெகு விரிவாகவே நாம் அலசிவிட்டோம். ரிஸ்க்கைப் பற்றி ஓரளவு புரிந்தும் கொண்டோம். இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி. ரிஸ்க்கை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓ, யெஸ். பார்த்திருக்கிறோமே! எத்தனை பேர் பணத்தை/கை, கால்களை/உயிரை இழந்திருக்கிறார்கள் என்கிறீர்களா? அப்படி யென்றால், ரிஸ்க் என்பது நஷ்டமா?, நஷ்டம்தான் ரிஸ்க் என்கின்றீர்களா?

நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு செயலிலும் ரிஸ்க் இருக்கிறது. ரிஸ்க் என்ற சொல் ஒரு செயலில் நஷ்டம் வருவதற்குண்டான வாய்ப்பைக் குறிப்பிட பயன்படுத்தப்படுவது. ஒரு செயலில் ரிஸ்க் இருப்பதனாலேயே அதைச் செய்யும் அனைவருக்கும் நிச்சயம் நஷ்டம் வந்தேயாகவேண்டும் என்று இல்லை.

உதாரணத்திற்கு, ரோட்டில் பைக் ஓட்டுவதை வைத்துக்கொள்வோம். நீங்களும் உங்கள் நண்பரும் ஒருவரை ஒருவர் பின்தொடர்ந்து (10 மீட்டர்!) 60 கி.மீ வேகத்தில் பைக் ஓட்டிச் செல்கிறீர்கள்.  இரண்டு பேருமே போகவேண்டிய இடத்திற்கு ஒரு சிறு பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேருவீர்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?

பணவளக்கலை !

நீங்கள் பக்காவாகப் போய்ச் சேர்ந்துவிடுகிறீர்கள். உங்கள் நண்பர் ஒரு சிறு ஆக்ஸிடெண்டில் சிக்கி கைகால்களை சிராய்த்துக்கொள்கிறார். அதெப்படி, இரண்டு பேரும் ஒரே ரோட்டில் கிட்டத்தட்ட ஒரே வேகத்தில் போனார்கள். ஒருவருக்கு மட்டும் ஆக்ஸிடெண்ட்! இன்னொருவருக்கு ஒன்றுமே இல்லை என்று ஆச்சரியப்படுவீர்களா என்ன? படமாட்டீர்கள்தானே? ஏனென்றால் உங்களுக்கு நன்றாகத் தெரியும் - சாலையில் பயணம் என்பது விநாடிக்கு விநாடி சூழ்நிலை மாறும் ஒரு விஷயம் என்று. ஏன் உங்கள் நண்பர் கீழே விழுந்து கைகால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது என்று பார்ப்போம்.

ஒரு வளைவில் எதிரே வரும் வண்டிக்கு வழிவிட ஒதுங்கும்போது உங்கள் நண்பர் ஸ்கிட் ஆகி கீழே விழுந்துவிடுகிறார். நீங்கள் அந்த வளைவில் திரும்பும்போது எதிரே வண்டி ஏதும் இல்லை. நீங்கள் திரும்பி பத்து விநாடிகளுக்குப் பின்னர் உங்கள் நண்பர் அந்த வளைவிற்கு வந்தார். அதற்குள் ஒரு வண்டி அந்தத் திருப்பத்தில் வந்து திரும்பிவிட்டது. நீங்கள் வரும்வேளையில் அந்த வண்டி வந்திருந்தால் நீங்களும் சுதாரிக்க முடியாமல் விழுந்திருக்கலாம். ஏனென்றால், இருவரும் உடனே சுதாரிக்க முடியாத வேகமான 60 கிலோ மீட்டரில் சொல்லிவைத்ததைப் போல் போகிறீர்கள்.

60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்போது வளைவில் சரியாகத் திரும்பாவிட்டால் கீழே விழும் ரிஸ்க் உங்களுக்கும் இருந்தது; உங்கள் நண்பருக்கும் இருந்தது. நீங்கள் போகும்போது எதிரே வண்டி வரவில்லை. சரியாகத் திரும்பினீர்கள். உங்கள் நண்பர் போகும்போது எதிரே வண்டி வந்தது. அவர் சரியாகத் திரும்பவில்லை. இதில் ரிஸ்க் என்பது சரியாகத் திரும்பாமல் கீழே விழுவதற்கான வாய்ப்பு. ஆனால், அந்த வாய்ப்பை விபத்தாக மாற்றி கீழே விழுந்து காயம் என்ற நஷ்டத்தைப் பெற வைப்பது எதிரே வண்டி வருவது என்ற துரதிர்ஷ்டம். அந்த துரதிர்ஷ்ட கெட்ட நிகழ்வு, விபத்து நடக்கும் வாய்ப்பை விபத்தாக மாற்றி நஷ்டத்தைக் கொண்டுவந்து விட்டுவிடுகிறது.

பணவளக்கலை !

தொழிலிலும், வேலையிலும், படிப்பிலும் ரிஸ்க் என்பது இதுதான். நஷ்டம் வருவதற்கான வாய்ப்பு எல்லாவற்றிலும் இருக்கிறது. துரதிர்ஷ்ட நிகழ்வு நீங்கள் அதைச் செய்யும்போது நடக்கிறதா, இல்லையா என்பதைப் பொறுத்துதான் நஷ்டமா, லாபமா என்பது தெரிய வருகிறது.  

இதனால்தான் ஒரே தொழிலைச் செய்யும் இருவரில் ஒருவர் வெற்றியையும் இன்னொருவர் நஷ்டத்தையும் அடைவதைப் பார்க்கிறோம். ஏன், அண்ணன், தம்பிகள்கூட ஒரே தொழிலை தனித்தனியாகச் செய்யும்போது ஒருவர் அதில் லாபம் பார்ப்பதும், மற்றொருவர் அதில் லாபம் பார்க்க முடியாமல் போவதும் இந்த துரதிர்ஷ்ட கெட்ட நிகழ்வால்தான்.

அட, அப்ப என்னதான் ரிஸ்க் எடுத்தாலும் அதிர்ஷ்டம் வேண்டும் என்று சொல்கிறீர்களா? என்று நீங்கள் கேட்கலாம். அதுகுறித்து பின்னர் விவாதிப்போம். துரதிர்ஷ்ட நிகழ்வு நிகழும் வாய்ப்பு எவ்வளவு இருக்கிறது என்பதைக் துல்லியமாக கணிக்க முடிபவர்களுக்கே வெற்றி கிடைக்கிறது. கணிக்க முடியாதவர்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள். சிலர் துல்லியமாக கணிக்க இயலாதவர்களாக இருந்தாலும் அவர்கள் அந்தச் செயலைச் செய்த நேரத்தில் அந்த துரதிர்ஷ்ட நிகழ்வு (வளைவில் எதிரில் வண்டி) நிகழாமல் போய்விட்டாலும்கூட வெற்றி கிட்டிவிடும். இதை நீங்கள் அதிர்ஷ்டம் என்று அழைத்துக்கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் கணிப்பில்லாமல் ஆரம்பித்து வெற்றி பெறுவது சாத்தியமல்ல என்பது உங்களுக்கே தெரியும்.

சரி, நாம் பணத்திற்கு வருவோம். பண ரீதியான முடிவுகளை எடுக்கும்போது நாம் அனைவரும் கணக்கிடவேண்டியது, இரண்டு விஷயங்களே. எதிர்பார்த்து வரக்கூடிய நஷ்டம், எதிர்பாராமல் வரக்கூடிய நஷ்டம். இதில் எதிர்பார்த்து வரக்கூடியது எனில் ஒரு தொழிலில், முடிவில், வேலையில் இறங்கும்போது இதில் என்னென்ன பாதகங்கள் வரக்கூடும் என்பதை முழுமையாக அலசி ஆராய்ந்து எதிர்பார்க்கக்கூடிய அனைத்து விஷயங்களையுமே அனுமானித்து செய்யவேண்டியது அவசியமாகிறது. முடிந்த அளவிற்கு அனைத்து பாதகங்களையும் அனுமானிப்பதில்தான் திறமையேயிருக்கின்றது.

பணவளக்கலை !

அனுமானிக்க முடிந்த அத்தனை பாதகங் களையும் வைத்துக்கொண்டு இதனால் எவ்வளவு நஷ்டம் வர வாய்ப்புள்ளது, அப்படி நஷ்டம் வந்தால் அதை நம்மால் தாங்க முடியுமா? அல்லது அதைத் தாங்கிக்கொள்வதற்கான வசதி வாய்ப்புகளை நம்மால் ஏற்படுத்திக்கொள்ள முடியுமா? என்பதை உறுதி செய்தபின்னர் அந்தக் காரியத்தில் இறங்குவதே நல்லது.

சரி சார், எல்லாவற்றையும் ஆராய்ந்து நம்மால் தாங்க முடியும் என்று தெரிந்துகொண்ட பின்னர் இறங்குகிறோம். அப்போது ஏதாவது எதிர்பாராதது நடந்துவிட்டால்..? என்பீர்கள்.

எதிர்பாராத கெட்ட நிகழ்வுகளால் வரக்கூடிய நஷ்டங்களைத் தாங்கவும் கொஞ்சம் தயாராக இருக்கும் அளவிற்கே நம்முடைய திட்டமிடல் இருக்கவேண்டும். எதிர்பார்க்கும் கெட்ட நிகழ்வுகள் - எதிர்பாராத கெட்ட நிகழ்வுகள் என்ற இரண்டிற்கும் நடுவே உள்ள ரேஷியோதான் ஒரு செயலில் பணரீதியான வெற்றிக்கு அடிகோலுகின்றன.

எதிர்பார்க்கக்கூடிய கெட்ட நிகழ்வுகளை அனுமானம் செய்யாமலும்; அதற்கான தாங்கும் சக்தியைக் கொண்டிருக்காமலும் நாம் செய்யும் பணரீதியான முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். மேலே சொன்ன பைக் ஓட்டும் உதாரணத்தில், போகும் வழியில் அந்த வளைவில் அடிக்கடி விபத்து நடக்குமிடம் - எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை - என்ற போர்டு இருப்பதையே மறந்து, அந்தப் பாதையில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயற்சிப்பது போன்றது இது. பெரும்பாலான  நபர்கள் தொழில் ரீதியாகவும்/வேலை ரீதியாகவும் சம்பாத்தியத்தில் தோற்றுப்போவது இதனால்தான்.

முழுக்க முழுக்க எதிர்பார்க்கும் கெட்ட நிகழ்வுகள் அனைத்தையுமே பட்டியலிட்டு பின்னர் இறங்கும் விஷயங்கள் சாமானியமாக தோற்பதில்லை. எதிர்பாராத நிகழ்வுகள் என்பது யாராலும் எதிர்பார்க்க முடியாததாக இருக்கவேண்டும். முன்னே சொன்ன பைக் உதாரணத்தில் உங்கள் பைக் முன்னே ஒருவர் வேண்டுமென்றெ வந்து குதித்து நிற்பதைப் போன்றது அது. சாதாரண சூழ்நிலையில் அதுபோன்ற விஷயம் நடக்காது எனலாம். எனவே, பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிர்பார்க்கக்கூடிய கெட்ட நிகழ்வுகள், எதிர்பார்க்க முடியாத கெட்ட நிகழ்வுகள் என ரொம்பவுமே டீடெய்லாக இனம் பிரித்துப் பார்க்க அனைவரும் பழகிக்கொள்ளவேண்டும்.

இந்த அளவு விரிவாகப் பார்க்க இயலாதவர் களும், பார்க்க முடியாத செயல்களிலும்/தொழில்களிலும்/முதலீடுகளிலும் பணரீதியான ரிஸ்க்கே எடுக்கக்கூடாது.

(கற்றுத் தேர்வோம்)

சரிந்தது சீனாவின் வளர்ச்சி!

உலக அளவில் மிகப் பெரிய வளர்ச்சி கண்டுவந்த சீனாவின் ஜி.டி.பி. இப்போது சரிய ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் சீனாவின் ஜி.டி.பி. வளர்ச்சி யானது 7.7 சதவிகிதமாக இருந்தது. அதுவே ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 7.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த 23 ஆண்டு காலத்தில் இந்த அளவுக்கு குறைவான ஜி.டி.பி. வளர்ச்சியை சீனா கண்டதே இல்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விஷயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism