எஸ்தர் டீச்சரும் செல்வராஜ் சாரும்!

##~##

'கட்டுப்பாடு அற்ற சுதந்திரம் ஆபத்தானது’. பொதுவாகச் சொல்வதுதான். ஆனாலும், இளைஞர்களுக்கு இதுதான் முக்கியமான செய்தி. அவர்களுக்கும் இது தெரியும். ஆனால், 'வயது’, அடங்க மறுக்கிறது. 'கட்டுப்படு’ என்று சொன்னாலே கசக்கிறது. ஐந்தாரு வயதில் சொல்லி இருந்தால் அப்படியே ஏற்றுக்கொண்டிருப்பார்கள். 20, 25-ல் என்றால் எதிர்க்கிறார்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதனால்தான், 'அந்தக் கால’ ஆசிரியர்கள், பாடம் சொல்லித் தருவதற்கு முன்பாக, பண்புகளைக் கற்றுத் தந்தார்கள். 'அ’னா, 'ஆ’வன்னா எழுதுவதற்கு முன்பாக, பெரியவர்கள் வந்தால் எழுந்து நிற்கவேண்டும் என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.

'வள்ளி.. போய் இந்த 'டஸ்டரை’ நனைச்சிக்கிட்டு வா...’

(அழுக்குத் துணிக்கு பேருதான் இன்னும் பல பள்ளிகளில் 'டஸ்டர்’!)  

'முத்து.. போர்டை நல்லாத் துடை...’ (அவன்தான் 'ஒசந்த’ பையன்)

'லச்சுமி.. குடிக்கத் தண்ணி கொண்டுவந்து வையி..’

(ஒரு நாள்கூட எடுத்துக் குடிச்சதில்லை)

இதெல்லாம் கிளாஸுக்கு வரும்போது டீச்சரே செய்யலாமே..? ரொம்ப கரெக்ட். அவங்களே செஞ்சிருக்கலாம்தான். ஆனா, வேணுமுன்னேதான் அப்படி செய்யலை. ஏன்னா.., 'வேலை வாங்கறது’ அவங்க நோக்கம் இல்லை. வேலைக்குப் பழக்குறது... அதத்தான் செஞ்சாங்க. கிளாஸ் ரூமை சுத்தப்படுத்தறதுல இருந்து 'மானிட்டர்’ பண்ற வரைக்கும் எல்லா வேலையும் எல்லாரும் செய்யணும். எந்த வேலையைச் சொன்னாலும் உடனே சந்தோஷமா ஓடிப்போய்ச் செய்யறதுக்கு பழக்கப்படுத்தி வைச்சாங்க.

எதிர்கொள் !

தன்னம்பிக்கை ஊட்டுவதிலும் ஆசிரியர்களின் பங்கு மகத்தானதாக இருந்தது. சிறுவர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோருக்கும் இந்த நம்பிக்கை தேவைப்பட்டது. அதை அவர்கள் எப்படிச் செய்தார்கள்..?

எஸ்தர் டீச்சர் - வேலைக்குச் சேர்ந்ததுல இருந்து 'ரிட்டையர்டு’ ஆகும் வரை ஒண்ணாம் கிளாஸ் டீச்சராவே இருந்தவர். 1980-களில் ரிட்டையர்டு’ ஆகிவிட்ட அவருக்கு  தற்போது வயது எண்பதைத் தாண்டியிருக்கும்.

பஞ்சாயத்துப் பள்ளியின் மரத்தடியில் அவரை எல்லா நாட்களிலும் பார்க்கலாம். அவர் 'மார்க்’  போடுவதில் காட்டிய 'சாமர்த்தியம்’ பற்றி இன்றைக்கு நினைத்தாலும் மெய் சிலிர்க்கும். சில பேருக்கு மட்டும் கடைசியில் 9 வருவதாகத்தான் மார்க் போடுவார். 40 வந்தால், 39; 50 என்றால் 49; என்ன காரணம் என்று பிற்பாடு ஒருமுறை அவரை சந்தித்துக் கேட்டேன்.

''ஏழை மாணவ, மாணவிகளின் பெற்றோர் களுக்கு எழுத்தறிவு போதாது. 60 'மார்க்’ என்றால் அவர்களுக்கு அது சாதாரணமாகத் தெரியும். அதுவே, 'அம்பத்தொம்போது..’ என்று கொஞ்சம் இழுத்துச் சொன்னால் சந்தோஷப் படுவார்கள்! தன் குழந்தை நிறைய மார்க் வாங்கிவிட்டாள் என்று நினைத்து தொடர்ந்து படிக்க வைப்பார்கள்Ó என்றார். எது பெரிது, எது சிறிது என்பதுகூடத் தெரியாத அந்தப் பெற்றோரின் குழந்தைகள்தாம் இன்று பேராசிரியர்கள், உயர் அதிகாரிகளாக உயர்ந்திருக்கிறார்கள். எப்படி முடிந்தது..?

எஸ்தர் டீச்சர் போன்றவர்கள் அன்று எடுத்துக்கொண்ட சிரத்தையும் அவர்கள் ஊட்டிய தன்னம்பிக்கையும்தான் அதற்கான உந்து சக்தி. அதேபோன்று, அர்ப்பணிப்பு உணர்வும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட ஆசிரியர் வர்க்கம்தான் இன்றைக்கு தேவை. அவர்களால்தான் 'பீமீனீஷீரீக்ஷீணீஜீலீவீநீ பீவீஸ்வீபீமீஸீபீ’-ஐ பயனுள்ளதாக ஆக்க முடியும்.

எதிர்கொள் !

இளைஞர்களை இன்றைக்கு எந்த வழியில் கொண்டுசெல்லவேண்டும் என்பது ஆசிரியர்கள் பாடு, இளைஞர்கள் பாடு என்று நாம் சும்மா இருந்துவிட முடியுமா..? பெற்றோருக்கு இதிலே பங்கு இருக்கிறது.

பெரும்பாலான பெற்றோரும் படித்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பது சாதகமான அம்சம். தம் மகன், மகளுக்கு அவர்கள் 'நல்ல வழி’ காட்டுவது அவர்களின் குடும்பத்துக்கு மட்டுமல்ல, சமுதாயத்துக்கும் நாட்டுக்குமேகூட நல்லது.

சிறந்த பெற்றோர்தான் சிறந்த மகன்/மகளை உருவாக்க முடியும். அவர்களே சிறந்த குடும்பமாக விளங்கமுடியும். சிறந்த குடும்பம்தான் சிறந்த சமூகத்துக்கான ஆதார ஸ்ருதி. இவ்வாறாக, தனிமனிதன், குடும்பம், சமூகம் என்ற மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிற இந்த பந்தம்தான் நம் நாட்டின் அடையாளம், தனிச்சிறப்பு.

இல்லங்களில் ஆரோக்கியமான சூழல் நிலவ வேண்டும். அப்போதுதான் இளைஞர்களால் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கவும் செயல்படவும் முடியும். பத்திரிகைகள் படிப்பது, அறிவு சார்ந்த விவாதங்களில் ஈடுபடுவது, தாம் அறிந்த அறிஞர்கள், சான்றோர்களை வீட்டுக்கு வரவழைப்பது, அவர்களை குடும்பத்துடன் சென்று சந்திப்பது போன்ற பழக்கங்களை மேற்கொள்ளவேண்டும்.

செல்வராஜ் சார் பணி ஓய்வுபெற்ற

ஐ.ஆர்.எஸ். அதிகாரி. மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தவர். பணி நிமித்தம் அவரது வீட்டுக்கு போகவேண்டி வந்தது. இரவு சுமார் 8 மணி இருக்கும். 'வாங்க... வாங்க... நல்ல நேரத்துக்கு வந்தீங்க...’ என்று கணீர் குரலில் உள்ளே அழைத்தார்.

உள்ளே போய் உட்கார்ந்தேன். 'நல்ல நேரம்’ என்கிறாரே, ஸ்வீட், காரம் தரப் போகிறாரோ! என்று நினைத்துக்கொண்டேன். 'ஏதோ.. நல்ல நேரம்னு சொன்னீங்களே... என்ன சார்..?’ என்றேன்.

'ஆமா. நல்ல நேரத்துக்குத்தான் வந்தீங்க... பாருங்க, நியூஸ் ஆரம்பிக்கப் போகுது இல்லை..?’

சத்தியமா எனக்கு ஒண்ணும் புரியலை. 'ஊம்... வாங்கப்பா... டைம் ஆச்சு...’ என்றார்.

சில நொடிகளில், செல்வராஜ் சாரின் மனைவி,  அவரது மகன்கள் சோஃபாவைச் சுற்றி உட்கார்ந்தார்கள். ஒருவர் கையில ஒரு நோட்டு வேற! அடுத்த அரை மணி நேரம் யாரும் பேசிக்கவே இல்லை. செய்தி வாசிப்பு முடிந்தது.

''வாங்க, கை கழுவிக்குங்க. நீங்கதான் சார் இன்னைக்கு 'சீஃப் கெஸ்ட்'' என்றார் செல்வராஜ் சார்.

அவர் என்னைவிட பல படிகள் உயர்நிலையில் இருப்பவர். அவர் வீட்டில் அவர் முன்னிலையில் நான் எப்படி சீஃப் கெஸ்ட்-ஆக இருக்கமுடியும்..?

ஒரு டைனிங் டேபிள். அதைச் சுற்றி உட்கார்ந்துகொண்டோம்.

'நீங்கதான் ஆரம்பிக்கணும். இன்னைக்கு நியூஸ்ல எதைப் பத்தி எல்லாம் விவாதிக்கலாம்..?’

'சார்.. நீங்களே பேசுங்க.. நான் வேடிக்கை மட்டும் பார்க்கிறேன்..’

ஓஹோவென்று அட்டகாசமான அவரது டிரேட் மார்க் சிரிப்பைக் கொட்டினார்.

'ஊஹூம்.. இங்க அப்படியில்லை... எவ்வளவு பேசறீங்களோ, அதை வச்சிதான் இங்க சாப்பாடு கிடைக்கும்...’

என்ன ஒரு ஆரோக்கியமான பழக்கம் பாருங்கள்! செய்தித்தாள் வாசித்தல், புத்தகங்கள் குறித்த விவாதம், நாட்டுநடப்பு பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுதல் என்று அவர் வீட்டு 'டைனிங் டைம்’, அறிவுக்குரிய நேரமாக மாறியிருக்கிறது. சொல்லவே வேண்டாம், அவரது வாரிசுகள் இன்று மிகச் சிறந்த பணியில் இருக்கிறார்கள்.

'குறைந்தபட்சம் சாப்பாட்டின்போது மட்டுமாவது, இதுமாதிரியான உரையாடல்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவைன்னு நான் நினைக்கிறேன்.’ அன்று அவர் சொன்னது இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்..? இன்னொன்றையும் கவனித்தீர்களா..? அந்த நேரம் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு விவாதம்!

ஆனால், பல வீடுகளில் வெட்டிப் பேச்சும் வீண் அரட்டைதான். பிறகு எப்படி 'நல்ல’ இளைஞர்கள் கிடைப்பார்கள்..? நமக்கும் விவரம் தெரியும், நாமும் விவாதிக்கலாம் என்பதை தம் வீட்டில் நடைமுறைப்படுத்தியவர்கள் எத்தனை பேர்..? டிவி விவாதங்கள் போதும் என அறிவை சுருக்கிக்கொண்டவர்கள், வேலைக்குத் தகுதியற்றவர்கள் என்கிற நிலைமைக்குத் தள்ளப்படுவதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்..?  

நிறைய தெரிந்து கொள்ளவேண்டும்; தெரிந்துகொண்டதை பகிர்ந்து கொள்ளவேண்டும். அதற்கு நிறைய படிக்கவேண்டும். நடக்க நடக்கத்தான் தூரம் குறையும். படிக்க படிக்கத்தான் பார்வை விரியும்; அறிவு பெருகும்.

அகன்ற படிப்பு, ஆழமான அறிவு, விரிந்த பார்வை, வீர்யம் மிக்க செயல்பாடு இவைதாம் இளைஞர்களை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். இந்தக் குணங்கள் எல்லாம் இளைஞர்களுக்கு வாய்ப்பதற்கான வழிகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. இந்த வழியில் சென்று வெற்றி பெற்ற ஓர் இளைஞியை பற்றி சொல்கிறேன். அவள் பெயர், இளைய நிலா.

(தெளிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism