பாரதி கண்ட புதுமைப் பெண்!

##~##

தமிழரசி. கரிய மெல்லிய உருவம். வறுமையைத் தேக்கிவைத்திருந்த முகம். கண்களில் ஒருவித மிரட்சி. தரையில் விடப்பட்ட மீன்போல, சென்னை மாநகரில் தவிக்கிற 'அக்மார்க்’ கிராமத்து வரவு. ஒரு 'வொர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டலி’ல் நான்குபேருடன் ஓர் அறையில் வாசம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவளுக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆறுதல், 'ரூம் மேட்’  சந்தியா. ஆந்திர மாநிலத்தில் படித்துவிட்டு சென்னையில் வேலை கிடைத்துவந்த எம்.பி.ஏ. பெண். ஏறத்தாழ ஒரேமாதிரியான 'வேவ் லெங்த்’தில் இருந்ததால், இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர். தமிழரசி இப்போது செய்யும் 'பகுதிநேர வேலை’கூட சந்தியா பார்த்து தந்ததுதான்.

மாதம் 4,000 ரூபாய் சம்பளம். காலை 9 மணி முதல் மதியம் 2 வரை. மாலை முழுவதும் 'ஃப்ரீ’ என்பதால் ஒப்புக்கொண்டாள். ஏதாவது ஒரு போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலைக்குப் போகணும் என்பதுதான் அவளது இலக்கு. அதற்கு இந்த 4,000 ரூபாய் வேலை உதவும் என்று நம்பினாள். எவரெஸ்ட் உச்சிக்குப் போவதாக இருந்தாலும் ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்துத்தானே போகவேண்டும்..?    

'அட்டெஸ்டேஷன்’ கேட்டு என் அறைக்கு வந்தாள்.

'சந்தியா அனுப்பிச்சாங்க...’

'சர்ட்டிஃபிகேட்டுக்குத்தான் அட்டெஸ்ட் பண்ணுவேன்... சந்தியாவுக்காக இல்ல...’

பொய்க் கோபம் காட்டினேன். 'சந்தியா சொன்னா நீங்க...’  

'அவ சொல்றதையெல்லாம் நம்பாதே... நிறைய பொய்ச் சொல்லுவா...’

கொஞ்சநேரம் தமிழரசியுடன் பேசிவிட்டு, அத்தனை சான்றிதழ்களுக்கும் அட்டெஸ்ட் செய்து தந்தேன். ''ரொம்ப தாங்க்ஸ் சார்...'' என்று சொல்லிவிட்டுப் போனார்.

எதிர்கொள் !

அதன்பிறகு அவ்வப்போது போன் செய்வார். என்ன புத்தகம் எங்கே கிடைக்கும், எந்த கோர்ஸ் எந்த இன்ஸ்டிடியூட்ல எடுக்கறாங்க... வழக்கமாக தமிழரசியின் கேள்விகள் இப்படித்தான் இருக்கும். மூன்று, நான்கு கேள்விகள்தான். பிறகு, இந்தி கிளாஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் இருக்கு என்று ஓடிவிடுவார். சிட்டியில் அவர் ஒரு கோர்ஸையும் விட்டுவைக்கலைபோல.  

காலையில ஆபீஸ்; மாலையில லைபரரி; இரவு முழுக்க எழுத்து, படிப்பு. சந்தியா சொன்னாள்: 'விடியற்காலையில 2 மணிக்குத் தான் தூங்கப் போவா... 6 மணிக்கு எழுந்துடுவா...அவ மனுஷியே இல்லை...’

'ஏன் இப்படி வெறித்தனமா படிக்கிறீங்க..?’ன்னு ஒருமுறை கேட்டேன். 'என்ன செய்ய..? இத்தனை நாளா எங்க ஜனங்க படிக்காம விட்டதையெல்லாம், படிச்சு முடிச்சாகணும் இல்ல..? இப்படி உழைச்சாதான் முடியும்...’ என்றாள்.

எந்த விஷயத்துலேயும் தமிழரசிக்கு 'ஸ்ட்ராங் ஒப்பீனியன்’ உண்டு. 'அதுதான் சரி’ என்பதில் தீவிரமாக இருப்பார். 'கண்ணை மூடிக்கிட்டு எதையும் ஆதரிக்கிறதோ, எதிர்க்கிறதோ கூடாது. சிலது, சிலருக்கு நல்லதாவும்; சிலருக்குத் தீயதாயும் இருக்கும். ஒட்டுமொத்த சமுதாயம், நாடு, உலகம்னு பார்த்துதான் எந்த விஷயமும் ஏற்புடையதா, இல்லையான்னு தீர்மானிக்கணும்.’ தெளிவான சிந்தனை, தீர்க்கமாக முடிவெடுக்கும் திறன் தமிழரசிக்கு.

'இவ்வளவு பேசுறீங்களே, நீங்க எந்த ஊரு?’ என்று கேட்டேன்.  

'எங்க ஊரைப் பத்திக் கேட்காதீங்க. அது ஒரு ஊரே இல்லை..’

'ஏன் உங்க ஊர் மேல அவ்வளவு கோபம்..?’

'கோபம் ஊர் மேல இல்ல, ஊர் மக்கள் மேலதான்..’

'அதுதான் ஏன்னு கேட்கறேன்...’

எதிர்கொள் !

'ஆமா... ஊர் முழுக்கவுமே ஊதாரிங்களா இருந்தா கோவம் வராதா பின்னே..? முன்ன எல்லாம் எங்க ஊர்ல படிச்சவங்களே இல்லை. இப்போ, நிறைய 'கிராஜுவேட்ஸ்’ வந்துட்டாங்க. யாரைக் கேட்டாலும் கம்ப்யூட்டர் கிராஜுவேட்டுங்கறான். என்ன பிரயோஜனம்..? ஒருத்தனுக்கும் இன்னும் நல்ல வேலை கிடைச்சு போனபாடில்லை.

ஆனா பாருங்க.., டூ வீலர்ல பறக்கணும், செல்போன்ல யார்கிட்டயாவது மொக்கையா பேசிக்கிட்டே இருக்கணும், சாயந்திரம் ஆனா, கையில பாட்டில் வேணும். அவங்க பேசறதெல்லாம், எப்படி 'கணக்கு’ பண்றது.., எப்படி 'கரெக்ட்’ பண்றது... இப்படித்தான் இருக்கும். பள்ளிக்கூடத்துல என்னோட படிச்ச பசங்கதான், ஆனா, இன்னைக்கு அவங்ககிட்ட 'ஹாய்’னு சொல்றதுக்குகூட கூச்சமா இருக்கு...’  

பேச்சில இவ்வளவு ஆவேசமான்னுக்கூட நினைச்சேன். உண்மையில் அது தமிழரசியின்  ஆதங்கத்தோட வெளிப்பாடுன்னு தெரிஞ்சப்ப என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை.

'ஏன் இவங்க இப்படி இருக்காங்க தெரியுமா..? இவங்களுக்கு நல்லதை எடுத்துச் சொல்ல, நல்லது இதுதான்னு காண்பிக்க யாரும் இல்ல.

நேத்தைக்கு ஒரு கூட்டத்துக்குப் போய் இருந்தேன் 'ராஜாஜி பொதுநல மையம்’னு ஒரு அமைப்பு நடத்திச்சு. 'யூனியன் பட்ஜெட்’ பத்தி ராஜரத்தினம்னு ஒரு சார் பேசினாரு. இன்கம்டாக்ஸ் ரிட்டையர்டு கமிஷனராம். அவ்வளவு அருமையா, ஒவ்வொரு பாயின்ட்டா எடுத்துச் சொன்னாரு. கொஞ்சம்கூட அரசியல் இல்லை, அநாவசியமான வார்த்தை இல்லை, 'இன்ட்டரஸ்டிங்கா’ யூஸ்ஃபுல்லா இருந்திச்சு.

எங்க ஊர்ல 'கிராஜுவேட்ஸ்’ மட்டுமே நூறு  பேருக்கு மேல இருக்காங்க. இந்த மாதிரி கூட்டம் அவங்களுக்கு நிச்சயமா உபயோகமா இருக்கும். ஆனா, யார் வந்து பேசுவாங்க..? யார் எடுத்து

எதிர்கொள் !

நடத்துவாங்க..? நான் நல்ல வேலைக்குப் போனா இதெல்லாம் செய்வேன், சார். சாராய வாடைக்கு மட்டுமே பழக்கப்பட்ட ஜனங்களுக்கு சந்தன மணத்தைப் புரிய வைக்கிற பொறுப்பு இருக்கு. அதை விட்டுட மாட்டேன். நிச்சயமாச் செய்வேன்.’

அவளுடைய வைராக்கியத்தைக் கண்டு உண்மையில மிரண்டு போனேன். பாரதி கண்ட புதுமைப்பெண் இவள்தான் என்று தோன்றியது.

சுமார் நான்கு மாதங்கள் கழித்து, என் ஆபீஸுக்கு வந்தாள். கையில் ஸ்வீட் பாக்ஸ். 'இந்தாங்க’ என்று நீட்டினாள் தமிழரசி.

'டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பாஸ் பண்ணிட்டேன். ஒரு மாசத்துல ஆர்டர் வந்துடும். மதுரை மாவட்டத்துல போஸ்டிங்...’

'வெரி குட்.. பட் திஸ் இஸ் நாட் தி எண்ட் ஆஃப் தி ரோட்..’ என்றேன்.

'யெஸ்.. ஜஸ்ட் அ பிகினிங்..’ என்று சொல்லி விட்டுச் சென்றாள்.

சென்ற வாரம் ஒரு நாள், போனில் பேசினாள்.

'எங்க ஊர்ல சின்னதா ஒரு ஃப்ரீ பிரைவேட் லைபரரி வச்சிருக்கேன். உங்ககிட்ட இருக்குற நல்ல புக்ஸை டொனேட் பண்ணுங்க’ என்று கேட்டாள்.

'பண்றேன்.. வேற எதுவும் எக்ஸாம் எழுதலியா..?’

'ஏன் இல்லாம..? பேங்க் எக்ஸாம் எழுதி முடிச்சுட்டேன். அடுத்து ஐ.ஏ.எஸ். 'ட்ரை’ பண்ணலாம்னு பார்க்கிறேன்...’

இதுதான் தமிழரசி. தன்னால் எதுவும் முடியும் என்கிற அசாத்திய தன்னம்பிக்கை. இன்னும் பல உயரங்களை எட்டிப் பிடிப்பார் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.

தமிழகத்தின் தென்கோடி கிராமத்தில் கல்வியறிவு இல்லாத குடும்பத்தில் பிறந்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்ட ஓர் இளைஞிக்கு, தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தவிர வேறு எதுவும் தேவைப்படவில்லை.

எல்லோருக்கும் ஏன் இது சாத்தியம் ஆவதில்லை..? அதுவும் சென்னை போன்ற மாநகரத்தில், மிகச் சிறந்த பள்ளியில் படித்தும் 'தன்னால் முடியும்’ என்கிற நம்பிக்கையுடன் பலரால் தாமாக ஏன் முன்னேற முடிவதில்லை..? இன்றைய இளைஞர்களிடம், ஏதோ ஒரு முக்கிய குணாம்சம் 'மிஸ்ஸிங்’ என்று தோன்றுகிறதே... என்ன அது..?

(தெளிவோம்)
படம்: ப.சரவணக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism