Published:Updated:

ஹோம் லோன் டாப் அப்...

வாங்குவது எப்படி?

ஹோம் லோன் டாப் அப்...

வாங்குவது எப்படி?

Published:Updated:

கேள்வி-பதில்

##~##

 ஹோம் லோன் டாப் அப்... வாங்குவது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 - எஸ். ஷாஜகான், உடுமலைப்பேட்டை.

பி.ரவீந்திரநாத், உதவி பொது மேலாளர், எஸ்.பி.ஐ. (வீட்டுக் கடன் பிரிவு).

''வீட்டுக் கடன் வாங்கி 12 மாதம் இ.எம்.ஐ. சரியாக கட்டியவர்கள், டாப் அப் லோன் வாங்க தகுதியானவர்கள். ஆனால், வீடு அவருடைய பெயரில் பதிவாகி அந்த பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி இருந்தால் மட்டும்தான் இது முடியும். குறைந்தபட்சம் 50,000 ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை டாப் அப் லோன் வாங்க முடியும். இதற்கான வட்டியானது, வீட்டுக் கடன் வட்டியைவிட ஒரு சதவிகிதம் அதிகம். டாப் அப் லோன் வாங்கும்போது வீட்டின் மதிப்பு உயர்ந்திருந்தால், அதன் மதிப்பில் ஏற்கெனவே செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையைக் கழித்துக்கொண்டு மீதமிருக்கும் தொகையைக் கடனாகப் பெறலாம். அதேபோல, கடனைத் திரும்பச் செலுத்தும் தகுதியும் உயர்ந்திருப்பது அவசியம். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், புதிதாக நிலம் வாங்க, வெளிநாடுகளுக்கு சுற்றுலாச் செல்ல, மருத்துவ செலவு என எதற்கு வேண்டுமானாலும் இந்தக் கடனை வாங்கலாம். ஊக வணிகம் செய்ய இந்தக் கடனை பெற முடியாது.''

என் வருமான உயர்வுக்கு ஏற்ற மாதிரி டேர்ம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகையை உயர்த்த முடியுமா?

 - மெஜஸ்டிக் மணி, ஈரோடு.

நிரஞ்சனா, பிராந்திய மேலாளர், எல்.ஐ.சி., சென்னை.

ஹோம் லோன் டாப் அப்...

''வயதின் அடிப்படையில்தான் இன்ஷூரன்ஸ் கவரேஜ் இருக்கும். உங்களுடைய வருமான உயர்வுக்கு ஏற்ப ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கவரேஜை உயர்த்த முடியாது. வேண்டுமானாலும் நீங்கள் இன்னொரு ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். அல்லது தனியாக ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்ளலாம்.''

பல நாடுகளுக்குச் செல்லும் கப்பலில் வேலை செய்கிறேன். மாதத்திற்கு 7,800 டாலர் சம்பளம் வாங்குகிறேன். இதற்கு நான் வருமான வரித் தாக்கல் செய்யவேண்டுமா? என்னுடன் பணிபுரிபவர்கள் சிலர் என்.ஆர்.ஐ. என வருமான வரியைத் தாக்கல் செய்கிறார்கள்!

 - ஆதிமூலம், செஞ்சி.

சத்தியநாராயணன், ஆடிட்டர்.

''ஒரு வருடத்தில் 182 நாட்களுக்கு மேல் இந்தியாவில் வசிப்பவர் இந்தியர் ஆவார். தவிர, உங்களுக்கு எந்த நாட்டை சேர்ந்த நிறுவனம் சம்பளம் தருகிறது என்பதைப் பார்க்கவேண்டும். இது ஒவ்வொரு வருடமும் மாறுபடும். சில ஆண்டில் 182 நாட்களுக்கு மேல் கப்பலில் இருப்பீர்கள். அந்த சமயத்தில் நீங்கள் என்.ஆர்.ஐ. கணக்கில் வந்துவிடுவீர்கள். மாதம் 7,800 டாலர் சம்பளம் வாங்குகிறீர்கள். இந்த சம்பளத்திற்கு நீங்கள் வரி கட்டத் தேவையில்லை. ஆனால், இந்தப் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து அதன்மூலமாக கிடைக்கும் வருமானத்திற்கு கட்டாயமாக வருமான வரிச் செலுத்தவேண்டும். ஃபிக்ஸட் டெபாசிட், சொத்து வாங்கி விற்பது, மியூச்சுவல் ஃபண்ட், பங்கு முதலீடு என எதுவாக இருந்தாலும், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வருமான வரி சட்டப்படி வரிச் செலுத்தவேண்டும்.''

என்னுடைய மனைவி அரசு பள்ளியில் பணிபுரிகிறார். திடீரென ஏற்பட்ட உடல் நல குறைவுக்காக அரசுப் பட்டியலில் இல்லாத மருத்துவமனை சிகிச்சை பெற்றார். இதற்கு க்ளைம் பெற முடியுமா?

 - ராஜன், திருநெல்வேலி.

சிவகுமார், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ்.

ஹோம் லோன் டாப் அப்...

''பட்டியலிடப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால்தான் அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் க்ளைம் பெற முடியும். மேலும், உங்கள் மனைவி வேலை பார்க்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பிரச்னையை விளக்கி ஒரு கடிதம் கொடுக்கவேண்டும். அதன் பிறகு அவர் பள்ளி கல்வி துறைக்கான இன்ஷூரன்ஸ் க்ளைம்களுக்கென தனியாக அதிகாரிகள் இருப்பார்கள். அவர்களின் முடிவுபடிதான் இன்ஷூரன்ஸ் க்ளைம் தரலாமா, வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும்.''

வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளேன். இதற்காக என் அப்பாவிடம் கடன் வாங்க உள்ளேன். அசலும் வட்டியும் திரும்பக் கட்டும்போது வரி விலக்கு பெற முடியுமா?

 - ரவி, மதுரை.

கோபாலகிருஷ்ண ராஜு, ஆடிட்டர்.

''வீடு வாங்குவதற்காக யாரிடம் கடன் வாங்கி அதற்கு வட்டி செலுத்தியிருந்தாலும், அந்தத் தொகைக்கு வரிச் சலுகை பெற முடியும். நீங்கள் கடன் வாங்கும் பரிவர்த்தனை காசோலை மூலம் நடக்கவேண்டும். அதேபோல, வட்டி தருவதும் காசோலை மூலமாகவே இருக்கவேண்டும். அப்போதுதான் வரிச் சலுகை பெற முடியும். அசலுக்கு வரிச் சலுகை பெற முடியாது. நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி இருந்தால் மட்டும்தான் அசலுக்கு வரி விலக்கு பெற முடியும்.''

பங்குச் சந்தை குறித்து டிப்ஸ் தருகிறேன் என்று ஒரு நிறுவனம் பணம் வாங்கிக்கொண்டு தந்த டிப்ஸில் நிறைய பணத்தை இழந்திருக்கிறேன். எங்கள் டிப்ஸ் சரி இல்லை என்றால் ரீஃபண்டு தருகிறேன் என்று சொல்லித்தான் பணத்தைத் வாங்கினார்கள். இப்போது அந்தப் பணத்தைத் தராமல் இழுத்தடித்து வருகிறார்கள். அவர்கள் மீது வழக்குத் தொடர முடியுமா?

@- மகேஷ்,  

''பங்குச் சந்தை குறித்த ஆலோசனை தருகிறவர்கள், நிச்சயம் லாபம் கிடைக்கும் என்று வாக்குறுதி தருவதே சட்டப்படி குற்றம். மேலும், இந்த நிறுவனம் செபியின் கீழ் பதிவு பெற்ற நிறுவனமாக இருக்கும்பட்சத்தில் நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும். இதற்கு நீங்கள் செபி அலுவலகத்திற்கு ஒரு புகார் கடிதம் எழுதி அனுப்பினால் போதும். அதன்பிறகு செபியின் அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். புகார் தருபவர்கள் அந்த நிறுவனம் தந்த வாக்குறுதிகளுக்கு தகுந்த ஆதாரம் வைத்திருப்பது அவசியம்.''

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி,
நாணயம் விகடன்,757,
அண்ணாசாலை,
சென்னை-2. nav@vikatan.com.

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 04466802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!