Published:Updated:

6 மாதம் வரவு... 12 மாதம் செலவு!

6 மாதம் வரவு... 12 மாதம் செலவு!

##~##

மூணு வருஷத்துக்கு முன்னாடி அனிதா, பிரகாஷை ஒரு கருத்தரங்கில் சந்தித்தேன். அந்த கருத்தரங்கு ஸ்பெஷல் தேவைகள் இருக்கும் குழந்தைகளுக்கானது. நான் அந்த நிகழ்ச்சிக்கு குடும்பத்தின் நம்பிக்கைங்கிற தலைப்பில் பேச போயிருந்தேன். நான் நிதி ஆலோசகருன்னு தெரிஞ்சுகிட்டு நிகழ்ச்சிக்கு பிறகு தனியா என்னை வந்து சந்திச்ச, பிரகாஷ§ம்  அனிதாவும் குடும்ப நிதி ஆலோசனை விஷயமாக என்னை நேருல சந்திக்கணும்னாங்க. சம்மதம் சொன்னதும் அடுத்த நாளே ஆர்வத்தோட என்னை வந்து சந்திச்சாங்க. 

கடன் அதிகம்!

பிரகாஷ§க்கு ஆறு மாதம் வீட்டுல, 6 மாதம் கடல்லங்கற மாதிரியான வணிகக் கடற்படையில வேலை. அனிதா வீட்ல இருந்து குழந்தைங்களையும் பிரகாஷ§டைய வயசான அம்மாவையும் பார்த்துக்கறாங்க. பிரகாஷ் தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைங்க. பெரியவ கீர்த்தனாவுக்கு 13 வயசு. மனவளர்ச்சி குறைவுங்குறதால, அவள கவனிக்கறதுல அதிக அக்கறைத் தேவைப்பட்டது. இரண்டாவது பொண்ணு பத்து வயதான பிரார்த்தனா.

6 மாதம் வரவு... 12 மாதம் செலவு!

கடற்படை வணிகத்துல வேலை பார்க்குறார்னா உடனே எல்லோரும் கை நிறைய லட்சக்கணக்குல சம்பளம்னுதானே நினைப்போம். நானும் அப்படிதான் நினைச்சேன். ஆனா, அது உண்மையில்லை.  

6 மாதம் வரவு... 12 மாதம் செலவு!

ஏகப்பட்ட கடன் வாங்கி வைத்திருந்தார். வருமானம் நிறைய இல்லாதப்ப, எப்படி இவ்வளவு கடனைச் சேர்த்து வெச்சாங்கன்னு எனக்கு ஆச்சர்யமா இருந்துது. எதுக்கு இவ்வளவு கடன் வாங்கி இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, செலவுகளைச் சம்மாளிக்கதான்னு பதில் சொன்னாங்க.

மெடிக்கல் செலவு அதிகம்!

மனவளர்ச்சி இல்லாதக் குழந்தையான கீர்த்தனாவுக்கு மெடிக்கல் செலவுகள் அதிகம் என்பது உண்மையான, சங்கடமான நிலைமைதான். சிறப்பு பள்ளி, தெரப்பி, மாத்திரை, மருந்து, டாக்டருக்கான செலவுன்னு மாதம் 10-15 ஆயிரம் ரூபாய் செலவாகுதுன்னு சொல்லி வருத்தப்பட்டாங்க.

சரி, வேறென்ன செலவாகுது அப்படீன்னு கேட்டா, வேற ஒண்ணும் பெரிசா செலவில்லை, எல்லாக் குடும்பத்திலேயும் இருக்கற சராசரி செலவுகள்தான்னு சொன்னாங்க. நான் எப்படியெல்லாமோ கூட்டிக்கழிச்சுப் பார்த்தாலும் கணக்கு சரியாவே வரலை. மாசக் கணக்கை எழுதி பார்க்கலாம்னு விரிவா செலவுக்கணக்குகளை ஆராய்ந்தோம். அதுக்கப்புறம்தான் விஷயம் எனக்கு விளங்க ஆரம்பிச்சுது. 'பிரகாஷ் 6 மாதம் கழிச்சு வீட்டுக்கு வரதால, வந்தா வீட்ல இருக்காம வெளியே டூர் கிளம்பிடுவோம். இதுக்கு மட்டும்தான் நாங்க கொஞ்சம் அதிகமா செலவு செய்யறோம்னு சொன்னாங்க. சரி, அதை தப்புன்னு சொல்ல மனசில்லாம அப்புறம்னு துருவிக் கேட்டேன். உறவினர்களுக்கெல்லாம் இல்லைன்னு சொல்ல முடியாம அவங்களுக்கு ஏதாவது செய்யணுங்கற கட்டாயம் வேற அப்படீன்னாங்க.

6 மாசம்தான் சம்பளம்!

தவிர, பிரகாஷ§க்கு சம்பளம் ஆறு மாசத்துக்கு மட்டுமேங்குறதைப் பத்தி

தெரிஞ்சுக்கிட்டப்போ எனக்கு ஷாக் ஆயிடுச்சு. ஆறு மாதச் சம்பளத்த 12 மாதம் செலவு பண்ணனும்னா  நிறையவே சாமர்த்தியமும், நிதித் திட்டமிடலும் தேவை. அதில்லாமதான் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கவேண்டி வந்திருக்கு இவங்களுக்கு.

ஏதாவது வழி சொல்லுங்க, எதிர்காலத்த நினைச்சா பயமா இருக்குன்னு சொன்னாங்க. சரி, நடந்தது நடந்தாச்சு. இனிமே என்ன பண்ணலாம்னு பேச ஆரம்பிச்சேன். இந்த வருஷம் வேலையிலிருந்து திரும்பிவந்து இருக்கற நாட்கள்ல கடன் வாங்கக் கூடாது அப்படீன்னு முடிவு செஞ்சாங்க. அதுதான் முதல் குறிக்கோள்.

ஒரு வருட ப்ளான்!

முதல்ல செய்யவேண்டியது, ஒரு குடும்ப செலவுக்கான திட்டத்தைத் தயாரிச்சு வருட செலவுக் கணக்கு போட்டுக்கொடுத்தேன். வருஷத்துக்கு இவ்வளவு வரவு, அதுக்குள்ள செலவு செய்யணும்னா எப்படி செலவுகளை சமாளிக்கலாம்னு அலசி ஆராய்ந்தோம். குழந்தைகளுக்கான செலவுகள்,  அடிப்படை வீட்டுச் செலவுகள், கடன் திருப்பித் தர இ.எம்.ஐ. அப்படீன்னு தனித்தனியா திட்டத்தைப் போட்டு அதுக்கான தொகையை மட்டும் மாதாமாதம் தனியா ஒரு வங்கிக் கணக்குல டிரான்ஸ்ஃபர் பண்ணி, அந்தக் கணக்குக்கான ஏ.டிஎம். கார்டை அனிதா கையில தந்தேன். ஒரு வருஷத்துக்குள்ள அவங்களுக்குத் தேவையான இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துத் தந்தேன். அவசர தேவைக்குன்னு தனியா மியூச்சுவல் ஃபண்ட்ல பணம் இருந்தது.

ஒரு வருஷம் முடியப் போகுது, கிட்டத்தட்ட திட்டம் போட்டபடியே செலவுகள் இருந்திருக்கு. அதுவரைக்கும் புதுசா கடன் எதுவும் வாங்காம சமாளிச்சதே பெரிய சாதனைதான். வாயக்கட்டி வயித்தக்கட்டி செலவுக் கணக்குகளை ஒரு வருஷம் நல்ல முறையில கடைப்பிடிச்சாங்க அனிதா.

சவாலை சந்திக்க நேர்ந்தது!

நிஜமாகவே நிறைய சவாலான வேலையா இருந்துச்சுங்க. கொஞ்சம் கொஞ்சமா கிரெடிட் கார்டு கடன், நண்பர்கள், உறவினர்கள்கிட்டேன்னு வாங்கி இருந்த கடனை முழுசா அடைக்க முடியலைன்னாலும், பெரும்பாலும் அடைச்சு குடுத்தேன். சில்லறை கடனை எல்லாம் முழுசா தீர்த்துக்கட்ட வச்சேன். ஆறு மாத இடைவெளியில குழந்தையைக் கவனிக்கறத பிரகாஷை செய்யச் சொல்லி, மனைவிக்கு பகுதி நேரமா ஒரு தொழிலை அமைச்சுக் குடுத்து, அதன்மூலம் வருமானத்துக்கு ப்ளான் செஞ்சோம்.  கிடைக்குற வருமானத்தைக் குழந்தைகளோட எதிர்கால தேவைகளுக்கு மியூச்சுவல் ஃபண்டுல முதலீடு செய்யச் சொன்னேன். இப்ப வரைக்கும் இரண்டு குழந்தைகளோட கல்வி மற்றும் கல்யாண செலவுகளுக்கு சேமிச்சுட்டு இருக்காங்க.

கடன்களை முழுசா முடிச்சுட்டு ஓய்வுக்காலத்துக்குன்னு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யச் சொல்லி இருக்கேன். இன்னும் இரண்டு வருஷத்துல பிரகாஷ் இந்த முதலீட்டை தொடங்கணும்ங்கறது கட்டாயம்.

இப்போ 80 சதவிகித சறுக்கல்ல இருந்து மீண்டு வந்திருக்காங்க. இன்னும் இன்னும் வளரணும்னு அவங்களை நான் வாழ்த்துறேன்!

தொகுப்பு: செ.கார்த்திகேயன்.

குறிப்பு: இந்தக் கட்டுரையில் வரும் குடும்ப நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு