Published:Updated:

உற்சாகத்துடன் வந்த வாசகர்கள்!

உற்சாகத்துடன் வந்த வாசகர்கள்!

பிரீமியம் ஸ்டோரி

ஷேர் புரோக்கிங் நிறுவனமான ஏ.டி.எஸ்., இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தை பி.எஸ்.இ. மற்றும் டீமேட் கணக்குகளை பராமரித்துவரும் சி.டி.எஸ்.எல். ஆகிய மூன்று அமைப்புகளுடன் இணைந்து நாணயம் விகடன் நெல்லையில் பங்குச் சந்தை வாசகர்கள் விழிப்பு உணர்வு கூட்டமொன்றை நடத்தியது. 'ஏற்ற இறக்கச் சந்தை... எப்படி ஜெயிப்பது?’ என்கிற தலைப்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல நூறு வாசகர்கள் ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்டனர்.

 நெல்லையில் வசிக்கும் முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, தூத்துக்குடி, கோவில்பட்டி, ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி, மதுரை என தென்பகுதி நகரங்களில் பலவற்றிலிருந்தும் வாசகர்கள் வந்திருந்தனர்.

உற்சாகத்துடன் வந்த வாசகர்கள்!
##~##

இந்த நிகழ்ச்சியில் முதல் பேச்சாளராக டீமேட் கணக்கு மற்றும் அதன் பயன்களை பற்றி பேசினார் சி.டி.எஸ்.எல். நிறுவனத்தின் தமிழ்நாடு மேலாளர் ஏ.ஆர்.வாசுதேவன். பங்குகளை எளிதாக மற்றும் பாதுகாப்பாக வாங்குவதற்கும் விற்பதற்கும் டீமேட் கணக்கு ஒவ்வொருவருக்கும் தேவை என்றார் அவர்.

அவரைத் தொடர்ந்து பேசினார் மும்பை பங்குச் சந்தையின் பிராந்திய மேலாளர் விஷ்ணுவர்தன். ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தின் அடிப்படை, அதன் நெளிவு சுளிவுகளை பற்றி பேசிய அவர், அதனை எப்படி லாபகரமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது பற்றியும் எடுத்துச் சொன்னார்.

தேநீர் இடைவேளைக்கு பிறகு, சந்தை நிபுணர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன், பங்குச் சந்தையிலுள்ள ரிஸ்க்-ன் வகைகள், அவற்றை வென்று ஏற்ற இறக்கத்தோடு இருக்கும் இந்த சமயத்தில் என்ன மாதிரியான யுக்திகளை கடைப்பிடித்தால் லாபம் பார்க்க முடியும் என்பதை எடுத்துச் சொன்னார்.  

ஏ.டி.எஸ். நிறுவனம் முதலீட்டாளர்கள் மற்றும் புரோக்கர்களுக்கு வழங்கும் சேவைகள் குறித்து அதன் துணைத் தலைவர் பி.சுரேஷ் குமார் பட்டியலிட்டு பேசினார். கடைசியாக, கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களுக்கு இருந்த சந்தேகங்கள் பற்றி நிபுணர்களிடம் விளக்கம் கேட்டு தெளிவு பெற்றனர்.

'முதலீடு பற்றி பல விஷயங்களைத் தெரிந்துகொண்டோம். இதுபோன்ற பயனுள்ள கூட்டத்தை மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது நடத்துங்கள்’ என்ற கோரிக்கையை வைத்துவிட்டு உற்சாகமாக கிளம்பிப் போனார்கள் வாசகர்கள்.

சி.சரவணன்,

படங்கள்: எல்.ராஜேந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு