Published:Updated:

பணவளக்கலை !

பணவளக்கலை !

பணவளக்கலை !

பணவளக்கலை !

Published:Updated:
பணவளக்கலை !

உங்களிடம் ஒரு கேள்வி? ஒருவர்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்சமயம் நிறையப் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். மற்றொருவரிடம் தற்சமயம் நிறையப் பணம் இருக்கிறது. இந்த இருவரில் நீங்கள் யாரை அதிகமாக மதிப்பீர்கள்?

ஒருவரை மதிப்பதற்கு பணத்தை ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என் றெல்லாம் சொல்லித் தப்பிக்க முயற்சிக் காதீர்கள். நாம் இப்போதே பணத்தைப் பற்றி தெரிந்துகொண்டு அதை வளப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறோம். இச்சூழலை மனதில் வைத்து மட்டுமே உங்கள் பதில் இருக்கவேண்டும்.

இந்தக் கேள்விக்கான பதில் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. அமெரிக்காவில் பணம் அதிகமாகச் சம்பாதிக்கிறவர்களுக்கு மதிப்பு அதிகமாக இருக்கிறதாம்.

அமெரிக்காவில் அதிகமாய்ச் சம்பாதித்தீர்கள் என்றால் நீங்கள் மூளைக்காரர். அதனால் மதிப்பு உயருகிறது. இதே பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளில் பணம் அதிகமாக வைத்திருப்

பணவளக்கலை !

பவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம் என்கிறது ஒரு தகவல். நீங்கள் எப்படி அமெரிக்கன் டைப்பா? பிரிட்டிஷ்/யூரோப்பியன் டைப்பா?

இது அந்தந்த நாட்டின் பழக்கவழக்கங்களை வெளிப்படுத்துகிற விஷயமாக இருக்கிறது. உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இந்த இரண்டுவிதமான நபர்களில் யாருக்கு மதிப்பு அதிகம் என்று விசாரித்து இந்தியாவில் எது நடைமுறையில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்!

பணம் கையில் கிடைத்துவிட்டால் மனிதர்களுடைய சுபாவம் மாறிப்போகிறது என்று நாம் எல்லோரும் நினைத்தும் பேசியும் பார்த்தும் இருக்கிறோம். இந்த சுபாவம் ஏன் மாறுகிறது? பணம் கையில் வந்த எல்லோருக்கும் இந்த சுபாவ மாற்றம் வந்துவிடுகிறதா? இல்லை சிலருக்குத்தான் பணத்துடன் சுபாவ மாற்றமும் வருகிறதா? என்ற கேள்வியும் இதனுடன் சேர்ந்தே கேட்கப்படவேண்டிய ஒன்று. அதற்கு முன்னால் ஒருவருக்கு எந்தெந்த விதங்களில் பண வசதிகள் வரும் என்று ஒரு கணக்கெடுத்துக்கொள்வோம். அப்போதுதான் எந்தெந்த விதத்திற்கு எந்தெந்த மாதிரியான சுபாவ மாற்றங்கள் வருகிறது என்று ஆராய முடியும்.

ஒரேநாளில் பணக்காரரானவர்கள் - லாட்டரி போன்ற அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டிய பணக்காரர்கள் (அதாவது, உழைப்பே இல்லாமல் கையில் பணம் கிடைத்தவர்கள் என்றும் இவர்களைச் சொல்லலாம் - பணக்காரர்களின் வாரிசுகள் இந்தப் பிரிவில் வரமாட்டார்கள்!); ஒரு தொழிலுக்குக் கிடைத்த மிகப் பெரும் வரவேற்பால் குறுகிய காலத்தில்  பணக்காரரானவர்கள்; நீண்ட நாள் பயணத்தில் கஷ்டம், நஷ்டம் எல்லாம் பார்த்து சேர்த்து பணக்காரரானவர்கள்; பணத்தைப் பிறவியிலேயே கொண்டவர்கள் என பணக்காரர்களை சில வகைகளாகப் பிரிக்கலாம்.

பணம் இவர்களின் குணத்தை எப்படி மாற்றுகிறது என்று பெரிய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. பணக்காரர்களிடம் இதுகுறித்து ஆராய முடியாவிட்டாலும், பணம் இல்லாதவர்களிடம் பணம் கிடைத்தால் என்னென்ன செய்வீர்கள் என்று ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. சில சுவையான ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

சாமான்யர்களிடம் நீங்கள் லாட்டரியில் பணம் விழுந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, ஒரு சிறு மலையை வாங்கி அதன் மேல் ஒரு சிறிய வீடு கட்டுவேன் என்பதிலிருந்து, பணத்தாலான கோட்டை ஒன்றை கட்டி அதற்குள் ஒளிந்துகொள்வேன் என்பது வரையிலான விநோதமான பதில்கள் எல்லாம் வந்துள்ளது. உழைப்பே இல்லாமல் பணம் கிடைப்பவர்கள் அந்த மாதிரி வரும் பணத்தை என்ன செய்வது என்பதற்கு திட்டமேதும் இல்லாமலேயே வாழ்கின்றனர். அதனாலேயேதான் மலையை வாங்குவேன், கடலை வாங்குவேன் என்ற பதில்கள் வருகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பணவளக்கலை !

இதற்கு அடுத்தபடியாக முதுகலை வகுப்பறையில் இருக்கும் மாணவர்களில் ஒரு பகுதியினருக்கு நிறைய போலி பணத்தைக் கையில் கொடுத்தும், மற்றொரு பகுதியினருக்கு போலி பணம் ஏதும் தராமலும் வகுப்பில் அமரச் செய்து கொஞ்ச நேரம் என்ன செய்வது என்பது பற்றி யோசியுங்கள் என்று சொல்லி நேரம் கொடுத்து, பின்னர் ஒவ்வொருவரிடமும் என்ன யோசித்தீர்கள் என்று கேட்டால், பணம் வாங்கியவர்கள் படித்து முடித்து வேலைக்குப் போய் என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றிய தொலைநோக்குத் திட்டங்களையும், பணம் பெறாதவர்கள் நாளைக்கு என்ன அசைன்மென்ட் தரவேண்டும், அதை முடிப்பது எப்படி என்பது பற்றியும் சிந்தித்ததாக கூறினார்களாம். எப்படியிருக்கிறது பார்த்தீர்களா?

இதில் இன்னுமொரு ஆய்வும் செய்யப் பட்டுள்ளது. அந்த வகுப்பறையில் மாணவர்கள் யோசனை செய்துகொண்டு அமர்ந்திருக்கும்போது மாணவர்களுக்கு நன்கு பரிட்சயமான ஒருவரை நிறையப் பேனாக் களுடன் உள்ளே அனுப்பி வேண்டுமென்றே அதைக் கீழே தவறவிடச் சொல்லியுள்ளனர். யார் அந்தப் பேனாக்களை தரையில் இருந்து எடுக்க உதவுகிறார்கள் என்று பார்த்தால் (போலி) பணம் பெற்றவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலும், (போலி) பணம் பெறாதவர்கள் மிக அதிகமான எண்ணிக்கை யிலும் உதவியுள்ளனர். போலிப் பணமே உதவி செய்யும் குணத்தைக் குறைக்கிறதே என்கிறீர்களா?

இன்னும் பார்ப்போம். பணத்தின் போட்டோவை ஒரு அறை முழுவதும் வைத்து அந்த அறைக்குள் செல்லும்முன் உங்களுக்கு இரண்டு சாய்ஸ் இருக்கிறது. ஒன்று, நண்பர்களுடன் டின்னர் போகலாம். இல்லை, சமையல் அல்லது இசையைக் கற்றுக்கொள்வது போன்ற வகுப்புகளுக்குப் போகலாம் என்று சொன்னார்களாம்.

பணத்தின் போட்டோ இருக்கும் அறைக்குள் செல்லும்முன் டின்னர் போகத் தயாரானவர்கள் பலரும் அந்த அறைக்குள் இருந்தபின்னர் சமையல் அல்லது இசையைக் கற்றுக்கொள்வது போன்ற தனித்தகுதியை வளர்த்துக்கொள்ளும் பயிற்சிகளுக்குச் செல்வதையே விரும்பினார்களாம். இந்த விருப்ப மாற்றம் பணம் படைத்தவர்கள் தங்களுக்கு அருகே ஆட்களை ஏன் அண்ட விடுவதில்லை என்பதைக் காண்பிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். பணம் அதிகரிக்க அதிகரிக்க இந்தப் பிரச்னை கொஞ்சம்

கொஞ்சமாக அதிகரிக்கிறது. அதனால்தான், தனியே ஒரு சிறு மலையை வாங்கி அதில் சிறிய வீடு கட்டி தனிமையில் வாழ்வேன் என்கிற பதிலைச் சொல்கிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். பணம் மனித மனதில் செய்யும் இந்த மாயைதான், 'ஒண்ணாத்தான் இருந்தோம். வசதி வாய்ப்பு வந்ததும் என்னை யாரும் மதிக்கிறதில்லை’ என்று அண்ணன்-தம்பி, அப்பா-மகன், உறவினர்கள், சகநண்பர்கள், பார்ட்னர்கள் என பலரும் சொல்லக் கேட்கிறோம்.

அடுத்தபடியாக, டபுள் சம்பளம். சம்பளம் வாங்கும் மனிதர்களிடம், சம்பளம் அதிகரித்தால் உங்கள் வாழ்க்கை எப்படியிருக்கும் என்ற கேள்வியை வைத்ததற்கு, சம்பளம் டபுளானால் மகிழ்ச்சியும் டபுளாகும் என்று சொல்லியுள்ளனர். அதே நபர்களை  ஃபாலோ செய்து, சம்பளம் டபுளானபிறகு மகிழ்ச்சி இப்போது டபுளாகி விட்டதா? என்று கேட்டதற்கு மகிழ்ச்சி ஐந்து சதவிகிதமே அதிகரித்துள்ளது என்று சொல்லியுள்ளனர். இதையும்விட முக்கியமான ஆய்வு முடிவு என்னவென்றால், ஓர் அளவுக்கு மேல் சம்பளம் போனபிறகு அன்றாட நிகழ்வில் மகிழ்ச்சியின் அளவில் மாற்றம் ஏதும் வருவதில்லை என்பதுதான்.

அது எப்படி பணம் வந்தால் மகிழ்ச்சி போகும் என்று நீங்கள் கேட்கலாம். பணம் இல்லாதபோது நம்மிடம் இருக்கும் ஒரே பிரச்னை நேரம்தான். நம்மிடம் இருக்கும் நேரத்தைக் கொடுத்து நாம் பணத்தைப் பெறுகிறோம். சாமானியனாக வாழும் நாம் அதிக நேரத்தைத் தந்து குறைந்த பணத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும்போது நமக்கென்று ஒதுக்க (எனக்குப் பிடித்ததைச் செய்ய) நேரமேயில்லையே என்று கவலைப்படுகிறோம்.

அதேசமயம், வசதி வாய்ப்பு வந்தால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நம்மிடம் பெரிய வசதியில்லை. பஸ்ஸில் போகிறோம். எந்த வேலைக்குப் போகும்போதும் அரை மணி  நேரம் முன்னால் கிளம்ப வேண்டியுள்ளது. கொஞ்சம் வளர்ந்து பைக் வாங்குகிறோம். போகவேண்டிய தூரத்தைச் சென்றடைய எவ்வளவு நேரமாகுமோ, அந்த அளவு நேரத்தை மட்டுமே அதற்கு ஒதுக்குகிறோம். ஆனால், மழை பெய்தால் கொஞ்சம் தாமதிக்கிறோம். இன்னும் கொஞ்சம் வசதி வருகிறது. கார் வாங்கிவிடுகிறோம். மழையோ, வெயிலோ போகவேண்டிய தூரத்திற்குண்டான நேரமிருந்தாலே போதுமானது. வசதி வரவர நம்மால் நேரத்தைக் கொஞ்சம் வாங்க முடிகிறது. நம் கையில் நாம் செலவிடும் நேரம் நிறைய இருந்தால் சந்தோஷம்தானே!

வேறொரு உதாரணத்தையும் பார்ப்போம். மாதச் சம்பளத்தில் இருக்கும் ஒருவர் தன் வீட்டு வேலைகளை தானே பார்க்கிறார். அவரே முதலாளியானதும் வீட்டைச் சுத்தம் செய்ய ஆள், தோட்டத்திற்கு ஆள் என ஒவ்வொன்றுக்கும் ஆளைப் போட முடிகிறது. அதாவது, அவர் இந்தக் காரியங்களுக்காக செலவிட்ட நேரத்தைப் பணத்தின் மூலம் தவிர்க்க முடிகிறது. அந்த நேரத்தை அவர் அவருடைய சந்தோஷத்திற்காக செலவு செய்கிறாரா என்றால் செய்வதில்லை!  அத்தனை நேரத்தையும் பணத்தைச் சம்பாதிப்பதிலேயே மறு முதலீடு செய்கிறார். அப்படிச் செய்வதன் மூலம் ஒரு நாளும் அவரால் அவருக்குப் பிடித்த வேலையைச் செய்ய முடிவதேயில்லை. இதுபோன்று செயல்படும் நபர்கள்தான் பணம் மகிழ்ச்சியைத் தருவதில்லை என்ற பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism