Published:Updated:

ஷேர்லக்: ரிலையன்ஸ், அபராதம், அதிர்ச்சி!

ஷேர்லக்: ரிலையன்ஸ், அபராதம், அதிர்ச்சி!

பிரீமியம் ஸ்டோரி
##~##

''இன்று ரம்ஜான். சந்தைக்கு விடுமுறை என்பதால், மதியமே உம்மை வந்து சந்திக்கிறேன்'' என்று வியாழன் அன்றே நம்முடைய டிவிட்டரில் டிவிட்டி இருந்தார் ஷேர்லக். ஓகே என்று நாமும்  டிவிட்டினோம். மதியம் வந்தவரிடம் நாம் கேட்ட முதல் கேள்வி.

 ''நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் பிரச்னை அந்தக் குழுமத்தைச் சேர்ந்த மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்-ன் பங்கை கண்டபடி பாதித்திருக்கிறதே..?''

''உண்மைதான்..! ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் குழுமத்தைச் சேர்ந்த நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச்-ன் பாதிப்பு எம்.சி.எக்ஸ்-க்கும் பரவி இருக்கிறது. இதன் பங்கின் விலை ஆகஸ்ட் 5-ம் தேதி 368 ரூபாயாக இருந்தது. இது ஆக-8-ல் 295 ரூபாய்க்கு குறைந்தது. வழக்கமாக எம்.சி.எக்ஸ்-ல் 1,000 கோடி ரூபாய்க்கு டிரேடிங் பொசிஷன் இருந்தால் 100 கோடி ரூபாய்க்கு புரோக்கர்கள் வங்கி உத்தரவாதம் அளிக்கவேண்டும். ஆனால், எம்.சி.எக்ஸ்-ல் வர்த்தகம் குறைந்து போனதால், புரோக்கர்கள், அவர்கள் தந்த வங்கி கேரன்டியை விலக்கிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி புதிது புதிதாக ஏதாவது ஒரு பிரச்னை கிளம்பி அந்த நிறுவனத்தினரின் தூக்கத்தைக் கெடுக்கிறது!'' என்றார்.

ஷேர்லக்: ரிலையன்ஸ், அபராதம், அதிர்ச்சி!

''ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் என்ன பிரச்னை? ஒரு பெரிய தொகையை அபராதமாக அந்த நிறுவனம் மீது விதிக்கப்பட்டு இருக்கிறதாமே?'' என்றோம்.

''ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கிருஷ்ணா - கோதாவரி படுகையில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிகக் குறைவாக இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில், இதன் கட்டுப்பாட்டு அமைப்பான டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ஹைட்ரோகார்பன்ஸ், ஆர்.ஐ.எல்-க்கு 1.80 பில்லியன் டாலர் (சுமார் 10,800 கோடி ரூபாய்) அபராதம் விதிக்க பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது. இது மிகப் பெரிய தொகை ஆச்சே என்று அதிர்ந்து போயிருக்கிறார்கள் முதலீட்டாளர்கள். இவ்வளவு பணத்தை ரிலையன்ஸ் கட்டுமா? இல்லை, வழக்குத் தொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்'' என்றார்.  

''ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்கை பல புரோக்கர்கள் விற்கச் சொல்லி இருக்கிறார்களே?'' என்று கேட்டோம்.

''கடந்த சில ஆண்டுகளாக முதலீட்டாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் ஆசைக்குரிய பங்காக ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு இருந்தது. ஆனால், அந்த நிலைமை இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் வருகிற காலாண்டுகளில் குறையும். தற்போதைய பங்கின் விலை நியாயமானதாக இல்லை என்று பங்கு தரகு நிறுவனங்கள் கருதுகின்றன. இதனால், 65.3% அனலிஸ்ட்கள் நிறுவனத்தின் பங்குகளை விற்றுவிடச் சொல்லி எச்சரித்திருக்கிறார்கள்'' என்றார்.

''ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தில் என்ன பிரச்னை?'' என்று விசாரித்தோம்.

''ஹெச்.டி.ஐ.எல்-ன் புரமோட்டர்கள் சாரங்க், ராகேஷ் வாத்வான், இந்தியாபுல்ஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தில்

ரூ.46 கோடி பெர்சனல் லோன் வாங்கி, அதற்கு கட்டவேண்டிய வட்டி ரூ.3.5 கோடி கடனை கட்டாமல் விட்ட தகவல் வெளியே தெரிந்ததும், பங்கின் விலை ஒரே நாளில் 12.2% குறைந்தது'' என்று விளக்கம் தந்தார்.

''ராயல்டி தொகை அதிகமாக வெளிநாடு களுக்குப் போவதால் நம் நாட்டு நிறுவனங் களுக்கு அதிக நஷ்டம் வரும்போல தெரிகிறதே?'' என்றோம்.

''வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அவற்றின் இந்திய நிறுவனங்கள் வழங்கும் தொழில்நுட்பங்களுக்கான ராயல்டி விஷயத்தில் சில நிபந்தனையை மத்திய அரசு கொஞ்சகாலத்துக்கு முன்பு தளர்த்தியது. இந்நிலையில், 2012-13-ல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் ராயல்டி தொகை 26,840 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீட்டு தொகையில் (எஃப்.டி.ஐ.) சுமார் 20%. இப்படி தாய் நிறுவங்களுக்கு ராயல்டியை அள்ளித் தருவதில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், மாருதி சுசூகி போன்ற நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இப்படி வெளிநாடுகளுக்கு அதிக தொகை செல்வதைக் கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் யோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது'' என்றார்.

''ரகுராம் ராஜனை ஆபீஸர் ஆன் ஸ்பெஷல் டுயூட்டியில் ஆர்.பி.ஐ.க்கு மத்திய அரசாங்கம் அனுப்பி இருக்கிறதே, என்ன காரணம்?'' என்று கேட்டோம்.

''ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவை வெறுப்பேற்றவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஆர்.பி.ஐ. அதிகாரிகள் நினைக்கிறார்களாம்'' என்று சொன்னவர், ''சந்தையின் போக்கு மோசமாகவே இருப்பதால், இப்போதைக்கு ஷேர் டிப்ஸ் தரும் நிலையில் நான் இல்லை. வாசகர்கள் கோபித்துக்கொள்ள வேண்டாம்'' என்று சொல்லிவிட்டு, நண்பரின் வீட்டுக்கு பிரியாணி சாப்பிடப் புறப்பட்டார் ஷேர்லக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு