Published:Updated:

பணவளக்கலை!

பணவளக்கலை!

பணவளக்கலை!

பணவளக்கலை!

Published:Updated:

 உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

##~##

பெரும்பாலானவர்கள் பணம் பண்ணுவது சரியான நேரத்தில் சரியான தொழிலில் இருந்ததனால் என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சரியான தொழில் எது?, சரியான சமயம் எது? என்று கொஞ்சம் சொல்லுங்களேன். அதை வைத்துக்கொண்டு நாங்களும் பணம் பண்ணிக்கொள்கிறோம் என்று பலரும் கேட்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லோரும் எல்லா சரியான தொழிலிலும் சரியான நேரத்தில் இருக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் சரியான நபர் அந்தந்த இடத்தில் இருந்தால் மட்டுமே பணம் பார்க்க முடியும். இதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

நாம் வாழும் உலகில் இரண்டு எல்லைகள் இருக்கும். இருட்டு:வெளிச்சம், வெப்பம்:குளிர், உள்ளே:வெளியே, வேகம்:மந்தம், ஏற்றம்:இறக்கம், இடது:வலது என இரண்டுவிதமான எதிர்மறை எல்லைக்குள் அடங்கியதுதான் நம் உலகச் செயல்பாடுகள். ஏற்றம் இருந்தால் நிச்சயம் இறக்கம் இருக்கும் என்பது உண்மை. ஏற்றம் இல்லாமல் இறக்கம் மட்டும் தனியாக இருக்கவே முடியாது. இருட்டு இல்லாமல் வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதே நமக்குத் தெரியாது.

அதேபோல்தான் பணத்திலும். நம் வெளி உலகத்தில் இருக்கும் பணம் பண்ணுவது குறித்த நுணுக்கங்கள்; நம்முள்ளே இருக்கும் பணம் பண்ணுவது குறித்த நுணுக்கங்கள் என இரு விஷயங்கள் பணம் சம்பாதிப்பதில் இருக்கிறது. எனவே, சரியான தொழிலில் சரியான நேரத்தில் நீங்கள் சரியான நபராக இருந்தால்தான் சம்பாதிக்க முடியும்.

பணவளக்கலை!

அது என்ன சரியான ஆள் என்கின்றீர்களா? கல்லும் உளியும் நாட்டில் நிறையவே கிடைக்கிறது. சிற்பிகள் சிலரே இருக்கிறார்கள். அதிலும் கண்ணில் காண்பதை/மனதில் இருப்பதை தத்ரூபமாகச் செதுக்கிக் காண்பிக்கிற சிற்பிகள் சிலரே இருக்கின்றனர். பல சிற்பிகளிடத்தில் உளிகள் பல இருந்தாலும் அதைச் சிறப்பாக உபயோகித்து தத்ரூபமான சிலையைச் செதுக்கச் சிலரால் மட்டுமே முடிகிறது. கல்லும், வகைவகையான உளியும் சுத்தியலும் மட்டுமே ஒருவரை தலைசிறந்த சிற்பியாக்க முடியாது. முழுஈடுபாட்டுடன் சிற்பவேலை செய்யும்போதே அற்புதமான சிலைகள் கிடைக்கின்றன.  முழுஈடுபாட்டுடன் இருப்பவரையே சரியான ஆள் என்கிறேன்.

நீங்கள் யார், என்ன நினைக்கிறீர்கள், உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்களுடைய தன்னம்பிக்கையின் அளவு என்ன, மற்றவர்களின் திறனோடு உங்கள் திறனை நீங்கள் எப்படி ஒப்பிடுகிறீர்கள், எவ்வளவு தூரம் நீங்கள் அடுத்தவர்களை நம்புகிறீர்கள், நீங்கள்  பணத்தை/சொத்துக்களை அடையத் தகுதியானவர் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா, பயம், பிரச்னை, இடர்பாடுகள் போன்றவற்றுடன் செயல்படும்போது உங்களால் எவ்வளவு திடமாகச் செயல்பட முடியும், உங்களுடைய மனநிலை ஈடுபாட்டுடன் (மூட்) இல்லாதபோதுகூட உங்களால் தெளிவாகச் செயல்பட முடியுமா? என்பதுபோன்ற பல்வேறு விஷயங்களே நீங்கள் சரியான ஆளா, இல்லையா என்று எடைபோடும் விஷயங்கள். இவையெல்லாம் மனம் சம்பந்தப்பட்டது. இவை அனைத்தையும் சரியான விதத்தில் செய்யும்போதே பணம் பண்ணுவது என்பது சாத்தியமாகிறது.

பணவளக்கலை!

சுருங்கச் சொன்னால், உங்கள் மனதின் சக்தியை வேண்டும்போது அதிகரிக்கச் செய்யத் தெரிந்துகொள்வதன் மூலம் இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் உங்களைத் தெரிந்துகொண்டு உங்களை நோக்கி வருவார்கள். அப்படி வரும்போது சம்பாதிக்க ஆரம்பியுங்கள் என்கின்றார் ஒரு புகழ்பெற்ற ஆய்வாளர். நினைவிருக்கட்டும், நீங்கள் எந்த அளவுக்கு வளர்கிறீர்களோ, அந்த அளவிற்கு மட்டுமே உங்கள் வருமானமும் வளரும்.

என்னிடம் எத்தனையோ ஐடியாக்கள் இருக்கிறது! அந்த ஐடியாக்களைச் செயல்படுத்தத் தேவையான பணம்தான் இல்லை. பணம் மட்டும் இருந்தால் நான் தொழிலைத் தொடங்கி செழித்து வளர்ந்துவிடுவேன் என்று மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கும் பலரை நம்மைச் சுற்றி பார்க்கிறோம்.

கடன் வாங்க மனமில்லை! நான் கடன் கேட்டால் ஒருத்தரும் தரமாட்டார்கள். யாரையாவது முதலீட்டுக்காக கூட்டுச் சேர்த்தால் தொழில் நன்றாகப் போகும்போது என்னை வெட்டிவிட்டுவிட்டால் என்ன செய்வது? அவமானமாய்ப் போய்விடுமே! என்றெல்லாம் மனதுக்குள் போட்டு குழப்பித் திரியும் நபர்கள் ஏராளம். இவர்களால் பணம் தேட முடியாததற்குக் காரணம், பெரிய அளவில் நம்மால் பணம் சேர்க்க முடியும் என்ற எண்ணம் அடி மனதில் இல்லாததுதான் எனலாம்.

இதற்கு எதிர்மறையாக எக்கச்சக்கமான பணத்தை வைத்திருந்தும் (பரம்பரை சொத்து விற்றது/ லாட்டரி என ஏதோ ஒரு வழியில் பெற்று) அதைத் தொலைத்துவிட்டு நிற்கிற பலரைப் பார்த்திருப்பீர்கள். அதிலும் நல்ல ஐடியாவைக்கொண்ட பிசினஸில் இறங்கி ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகப் போய் பின்னர் பிரச்னையில் சிக்கி சின்னாபின்னமானதைக் கூடப் பார்த்திருப்பீர்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால், அவர்கள் துரதிருஷ்டசாலிகள் போன்று படும்.  கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால், இந்த வகை மனிதர்களில் பெரும்பாலானோர் மனதளவில் பெரிய அளவிலான பணத்தைக் கையாளத் தயாராக இல்லாமல் இருந்திருப்பார்கள். அதிலும் லாட்டரி போன்ற விஷயத்தில் பெரிய பணத்தைப் பெற்றவர்கள், கொஞ்ச காலத்தில் வெற்றி பெறுவதற்கு முன்னர்

பணவளக்கலை!

இருந்த நிதிநிலைமைக்கே சென்றுவிடுவார்கள்.

இந்த இரண்டுவகை நபர்களையும் தாண்டி மற்றொருவகை நபர்கள் இருக்கிறார்கள். கடன் வாங்கியோ, கூட்டுச் சேர்ந்தோ தங்கள் ஐடியாவைத் தொழிலாக்கி வெற்றி பெற்றவர்கள். தவறான சில முடிவுகளால் திவாலானபோதும் மீண்டும் இவர்கள் முயற்சி செய்து மேலே வந்துவிடுவார்கள். டல்லான பொருளாதாரத்தின் காரணமாக கடன்காரர்கள் இவர்களை திவால் நிலைக்குத் தள்ளினாலும்கூட மீண்டும் பொருளாதாரம் மேலே போகும்போது ஒரு தொழிலதிபராக மிளிர்வார்கள். பார்ட்னர்கள் துரோகம் செய்து வெளியே துரத்தியபோதும் அதிலிருந்து மீண்டு தொழிலதிபர்களாக வலம் வருவார்கள்.

இதுபோன்ற நபர்களை நீங்கள் உங்கள் சுற்று வட்டாரத்தில் நிச்சயமாகப் பார்த்திருப்பீர்கள். சிலர் பலமுறை கீழே போய் மேலே வந்து கொண்டே இருப்பார்கள். எனவே, சரியான தொழிலில் சரியான நேரத்தில் சரியான நபர் இருந்தால் மட்டுமே பணம் பண்ண முடியும் என்ற கூற்று சரிதானே!

இதற்கு முதலில் உங்கள் மனதை தயார் செய்யவேண்டும். ஏன்? நீங்கள் ஒரு மாமரம் வளர்க்கிறீர்கள். அந்த மரத்தில் நல்ல சுவையான மாம்பழம் வரவேண்டும் என்பது உங்கள் ஆசை. நீங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே அது நடந்துவிடுமா? மாம்பழம் சூப்பராக வர என்ன செய்யவேண்டும்? நல்ல இயற்கை உரம் போட்டு, நீர் பாய்ச்சி வளர்க்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாத வேரைக் கவனித்தால்தானே கண்ணுக்குத் தெரியும் பழத்தில் மாற்றம் வரும்.

அதேபோலத்தான் பணமும். நீங்கள் கண்ணுக்குத் தெரியாத மனதை வளப்படுத் தினால்தான் கையில் கண்ணுக்குத் தெரியும் பணம் வந்துசேரும். நினைவிருக்கட்டும்! இன்று வேர்களுக்கு உரமும் தண்ணீரும் பாய்ச்சுவதன் மூலம் மரத்தில் தொங்கும் பழத்தின் குணாதிசயத்தை மாற்ற முடியாது. அடுத்த சீஸனில் வரப்போகும் பழத்தின் குணத்தை மாற்றத்தான் இன்றைக்கு உரமும் தண்ணீரும் பாய்ச்சப்படவேண்டும். ஏற்கெனவே சரியான தண்ணீரும் சரியான உரமும் போடப்படாததால்தான் கிளையில் ஏற்கெனவே இருக்கும் பழங்கள் சுவை இல்லாமல் இருக்கிறது. இன்றிலிருந்து ஆரம்பித்து இவற்றைத் தொடர்ந்து செய்தால் அடுத்த சீஸனில் டாப் கிளாஸ் பழங்கள் கிடைக்கும்.

இன்று நீங்கள் அந்த மரத்தின் பழத்தைப் போலவே பணத்தோடு இல்லை. எதிர்காலத்தில் சம்பாதிக்க கண்ணில் தெரியாத மனதினை நீங்கள் பண்படுத்தவேண்டியுள்ளது. ஆனால், மனதின் தன்மையை மாற்ற ஆரம்பித்த வுடனேயே பாக்கெட்டிலும் பேங்கிலும் பணம் நிரம்பிவிடாது. ஓர் உதாரணத்தோடு இதை பார்ப்போம்.

உடல் நலம் என்பது நல்ல உடற்பயிற்சிகளால் வரும் விளைவு. உடல் நலக்குறைவு என்பது உடற்பயிற்சியின்மையால் வரும் விளைவு. உங்கள் எடை என்பது உங்கள் உணவு மற்றும் பழக்கங்களால் வரும் விளைவு. அதேபோல் உங்கள் கையில் வரும் பணம் என்பது ஒரு தொழிலாலோ/ வேலையாலோ வரும் விளைவு. எந்த அளவுக்கு பயிற்சி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு உடல் பலம் பெருகும். உணவிலும் மற்ற விஷயங்களிலும் எந்த அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குதான் எடையும் இருக்கும்.

அதேபோல, எந்த அளவுக்கு உங்கள் பணம் தேடும் முயற்சிகளில் ஈடுபாடாக இருக்கிறீர்களோ, அந்த அளவு பணம் உங்கள் கைகளில் வந்துசேரும். மேலே சொன்ன மற்ற விஷயங்களைப்போல, பணம் சம்பாதிப்பதும் காரண-காரியம் சம்பந்தப்பட்ட ஒன்று. சரியான காரணத்துடன் சரியான காரியங்கள் செய்யப்படும்போது சரியான பணம், வரவு என்னும் விளைவு ஏற்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism