Published:Updated:

ஷேர்லக் - கரைந்துபோன 2 லட்சம் கோடி !

ஷேர்லக் - கரைந்துபோன 2 லட்சம் கோடி !

ஷேர்லக் - கரைந்துபோன 2 லட்சம் கோடி !

ஷேர்லக் - கரைந்துபோன 2 லட்சம் கோடி !

Published:Updated:
##~##

''காசு, பணம், துட்டு, மணி மணி'' - கானா பாலாவின் பாட்டை பாடியபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ''என்.எஸ்.இ.எல். பற்றி முதலில் பேசப் போகிறீர்கள், சரிதானே?'' என்று கேட்டபடி அவரை வரவேற்றோம்.

''நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் நடந்துள்ள பிரச்னையைத் தீர்த்து வைக்க பார்வேர்டு மார்க்கெட் கமிஷனுக்கு (எஃப்.எம்.சி.) மத்திய அரசு அதிகாரம் தந்துள்ளது. ஆனால், தன்னால் இந்தப் பிரச்னையை முழுமையாகத் தீர்த்து வைக்க முடியாது என  மத்திய நிதி அமைச்சகத்தின் உதவியைக் கேட்டிருக்கிறது எஃப்.எம்.சி. மேலும், இந்தப் பிரச்னை குறித்து அடுத்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவும் இருக்கிறது. வாரத்திற்கு சில நூறு கோடிகள் வீதம் தொடர்ந்து பல மாதங்களுக்கு பணத்தைத் தந்துவிடுவோம் என என்.எஸ்.இ.எல். சொன்னாலும், அது  நடக்குமா என்கிற சந்தேகத்தையும் பலர் எழுப்புகிறார்கள். முதலீட்டாளர்கள் போட்ட  பணம் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்க இறைவனைப் பிரார்த்திப்போம்!'' என்றார் ஷேர்லக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தொடர்ந்து நான்கு தினங்களாக உயர்ந்துவந்த நம் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி தினமான வெள்ளிக்கிழமை பயங்கரமாக காட்டிவிட்டதே?'' என்று விசாரித்தோம்.

''இந்த இறக்கம் என்பது கடந்த நான்கு ஆண்டு களில் இல்லாதது. ஒரே நாளில் சென்செக்ஸ் 769 புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 62-க்கு குறைந்ததே இதற்கு காரணம். மேலும் அமெரிக்காவில் பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை வாபஸ் பெறலாம் என்கிற செய்தியும் இந்த இறக்கத்திற்கு இன்னொரு முக்கிய காரணம். இந்த இறக்கத்தால் ஒரே நாளில் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் பங்குகளின்  மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் கரைந்து போயிருக்கிறது. குறிப்பாக, நுகர்வோர், ரியல் எஸ்டேட், வங்கிகள், உலோகத் துறை பங்குகள் அதிக எண்ணிக்கையில் விற்று தள்ளப்பட்டிருக்கிறது.

ஷேர்லக் - கரைந்துபோன 2 லட்சம் கோடி !

பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-ல் வர்த்தகமாகும் பங்குகளில் சுமார் 1,000 பங்குகளின் விலை, முக மதிப்புக்கும் கீழே வர்த்தகமாகி வருகிறது. விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக இந்தப் பங்குகளை யாரும் வாங்கிவிட வேண்டாம். அடுத்த வாரத்திலாவது சந்தை மீண்டும் மேல்நோக்கி செல்லவில்லை என்றால் இன்னும்கூட பெரிய அளவில் இறங்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் மும்பையில் உள்ள என் டெக்னிக்கல் அனலிஸ்ட் நண்பர்கள். எதற்கும் கொஞ்சம் பொறுத்திருந்து பின்பு முடிவு செய்வது நல்லது!'' என்று உஷார்படுத்தியவருக்கு சுடச்சுட டீ தந்தோம்.

''நம்மூர் நிறுவனமான ராம்கோ சிஸ்டம்ஸ் உரிமைப் பங்கு வெளியிடுவதன் மூலம் நிதி திரட்டப் போகிறதாமே?'' என்று கேட்டோம்.

''இன்றையச் சூழ்நிலையில் பங்குச் சந்தையின் மூலம் நிதி திரட்டுவதென்பது அவ்வளவு எளிதான விஷயமாக இல்லை. எனவே, ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம், உரிமைப் பங்கு வெளியிடுவதன் மூலம் 125 கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிட்டிருக்கிறது. அடுத்த சில மாதங்களில் இந்த உரிமைப் பங்குகளை வெளியிட இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. விற்பனையை அதிகரிப்பதற்காகவும், நிறுவனத்தின் தற்போதைய கடன் 320 கோடி ரூபாயைக் குறைப்பதற்காகவும் இந்த உரிமைப் பங்கு வெளியீட்டை மேற்கொள்கிறது'' என்றார்.

''அபராதம் கட்டாத நிறுவனங்கள் மீது செபி மீண்டும் வேகம் காட்டியிருக்கிறதே?'' என்றோம்.

''இதுநாள் வரை அபராதம் கட்டாமல் போக்கு காட்டிவந்த சுமார் 1,340 நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறது செபி.   கடந்த 13  ஆண்டுகளாக குறைந்தபட்சம் 15,000 ரூபாயி லிருந்து அதிகபட்சமாக லட்சக்கணக்கில் அபராதம் கட்டாமல் இருக்கின்றன இந்த நிறுவனங்கள். இந்த வகையில் 120 கோடி ரூபாய் செபிக்கு வசூலாக இருக்கிறது'' என்றவர் ஒரு ஃபாலோஅப் நியூஸைச் சொன்னார்.

ஷேர்லக் - கரைந்துபோன 2 லட்சம் கோடி !

''கடந்த வாரம்  ரியல் எஸ்டேட் நிறுவனமான, ஹெச்.டி.ஐ.எல்.-ன் புரமோட்டர்கள் இந்தியாபுல்ஸ் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் நிறுவனத்தில் வாங்கிய கடனுக்கான வட்டியைக் கட்டவில்லை என்று சொன்னேன். இந்த வாரம் அதை கட்டிவிட்டார்களாம்'' என்றார்.

''இந்த நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 14% குறைந்துள்ளதே?'' என்று வினவினோம்.

''வாராக்கடன்களை சரிக்கட்ட அதிகத் தொகையை ஒதுக்கீடு செய்ததால் லாபம் குறைந்தது என முதலில் சொன்னார்கள். இப்போது இன்னொரு விசித்திரமான காரணத்தைச் சொல்கிறார்கள். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை பார்க்கும் ஊழியர்களின் ஆயுட்காலம் கூடிவிட்டதாம். எஸ்.பி.ஐ. வங்கியில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுகிறவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 108 சதவிகிதம் அதிகரித்து 1,003 கோடி ரூபாயாக முதல் காலாண்டில் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இத்தொகை 481 கோடி ரூபாயாக இருந்தது. இதனால் லாபம் குறைந்துவிட்டதாம்.

எஸ்.பி.ஐ. நிலவரம் இப்படி என்றால், வாராக்கடன் அதிகரிப்பால் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 75 சதவிகிதம் வீழ்ச்சிக் கண்டுள்ளது. மோசமான கடன்களுக்காக இந்த வங்கி ரூ.556 கோடி ரூபாயை முதல் காலாண்டில் ஒதுக்கீடு செய்துள்ளது'' என்று சொன்னார்.

''இந்தியா சிமென்ட்ஸ் நிகர லாபம் முதல் காலாண்டில் 73% வீழ்ச்சிக் கண்டிருக்கிறதே..?'' என்று கேட்டோம் சற்று ஆச்சரியத்தோடு.

''ஐ.பி.எல். புகழ் சீனிவாசனை தலைவராக கொண்ட இந்நிறுவனத்தின் லாபம் குறைய, ரூபாய் மதிப்பு வீழ்ச்சிகண்டதே முக்கிய காரணம் என்கிறார்கள். அந்நியச் செலாவணி பரிமாற்றம் மூலம் இந்நிறுவனத்திற்கு 27 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தனக்கு தேவையான நிலக்கரியில் 60 சதவிகிதத்தை இறக்குமதி மூலம்தான் ஈடுகட்டி வருகிறது. இதற்கு வெளிநாட்டு கரன்சி தேவை என்பதால் 'ஹெட்ஜ்’ செய்யப்போக, நஷ்டம் கண்டிருக்கிறது. மற்றபடி அதன் ஃபண்டமென்ட்டலில் பெரிய பிரச்னை இருக்கிற மாதிரி தெரியவில்லை!'' என்றவர், ''சந்தையின் சென்டிமென்ட் மோசமாக இருப்பதால் நோ ஷேர் டிப்ஸ்'' என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென நடையைக் கட்டினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism